மகாபாரதம் கதை வடிவில் பாகம்-1
சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

சிறுவர்களுக்கான மகாபாரதம்
பரராச மகரிஷியின் புதல்வரான வேதவியாசர்
வேதங்களைத் தொகுத்த பின்பு மகாபாரதம் என்னும் இதிகாசத்தை எழுத விரும்பி, பிரம்ம தேவரைத் தியானித்தார். பிரம்மதேவர் அவரின் முன்பு தோன்றினார். உடனே
"பகவானே, இதிகாச நூலான மகாபாரதம் எனது மனதில் தோன்றியுள்ளது. இதை என்னால் எழுதமுடியவில்லை. நான் சொல்லச் சொல்ல எழுதக் கூடிய எவரும் இப் பூமியில் இல்லை. அதை எழுதுவதற்குத் துணை செய்தருளல் வேண்டும்" என்று மனமுருகித் தொழுதார்.
"வேதவியாசரே, உம்முடைய மனதில் தோன்றிய அரிய நூலை விநாயகப்பெருமானைத் தவிர எழுதவல்லோர் எவருமில்லை. அதனால் விநாயகப் பெருமானை மனமுருகி வழிபட வேண்டும்" என்று கூறிவிட்டு மறைந்தார். வேதவியாசர் மனமுருகி விநாயகரைத் தொழுதார்.
உடனே வியாசர் முன்பு தோன்றிய விநாயகர்; "வியாசரே, உமதுள்ளத்தில் தோன்றிய மகாபாரதக் கதையை நாம் அறிவோம். அதை நீர் சொல்லச் சொல்ல நான் எழுத வேண்டும் என்பதே உமது விருப்பம் ஆகும். ஆனால் ஒரு நிபந்தனை, அதை ஏற்றுக்கொண்டால் தான் உமது விருப்பம் பூர்த்தியாகும்." என்றார் விநாயகர்.
"உமது நிபந்தனைப்படி நடக்கின்றேன். நிபந்தனையைச் சொல்லுங்கள்" என்று வணங்கினார் வியாசர்.
"வியாசரே எழுதத்தொடங்கினால் எனது எழுது கோல் நிற்காது. அதனால் நீர் விரைந்து நிற்காது சொல்லுதல் வேண்டும்" என்றார்.
'அப்படியே ஆகட்டும் சுவாமி. நான் சொல்வதன் பொருளை உணர்ந்த பின்பே தாம் எழுதுதல் வேண்டும்." என்று வேண்டினார் வியாசர்.
அதற்கு விநாயகர் உடன்பட்டார். வேதவியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுதிமுடித்தார்.
பாகம்-1
ஒரு நாள் சந்தனு மகாராஜா கங்கை நதிக் கரையில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது சந்தனுமகாராஜா அத்தினாபுரத்தை ஆண்டுவந்தார். அவர் நல்ல அழகன், அத்துடன் சகல போர்ப் பயிற்சிகளையும் பெற்றவர். பெரும் வீரர். அயல் நாட்டு மன்னர்கள் பலர் திரை செலுத்திக் கொண்டிருந்தனர். அவருக்குப் பயந்து
மாலைவேளை இளந்தென்றல் மெதுவாக வீசிக் கொண்டிருந்தது. அவ்வேளையில் கங்கை அழகிய பெண்ணுருவில் கரையில் உலாவிக்கொண்டிருந்தாள். அவளின் அழகின் மெய்மறந்த சந்தனுமகாராஜா அவளின் அருகே வந்து; "பெண்ணே, உனதுபேரழகு என்னை மெய்மறக்கச் செய்துள்ளது. நான் அத்தினா புரத்து அரசன். நீ எனது நாட்டின் பட்டத்தரசியாதல் வேண்டும். உனக்கு எனது நாட்டையே பரிசாகத் தருகிறேன்'' என்றான்.
அவனைப் பார்த்த கங்காதேவியானவள்; "அரசே, உமது விருப்பத்தைப் பூர்த்தி செய்ய நான் தயாராக இருக்கின்றேன்.
ஆனால் நீயோ, அன்றி உனது குலத்தாரோ என்னைப் பற்றி விசாரிக்கக் கூடாது. எதுவும் கேட்கவும் கூடாது. நான் செய்யும் செயல்களை அறிந்திருக்கவும் கூடாது. இவற்றை மீறி நடந்தால் அன்றே உன்னை விட்டுச் சென்று விடுவேன். இதற்குச் சம்மதிக்கிறாயா?" என்று கேட்டாள்.
காதல் மயக்கத்தில் இருந்த சந்தனுமகாராஜா எதையும் சிந்திக்காது அவளின்கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டான்.
கங்காதேவி சந்தனுமகாராஜாவுடன் இல்லறம் நடத்தினாள். அவள் மகாராஜாவுக்கு எந்தக்குறையும் வைக்கவில்லை. அன்பை அள்ளி அள்ளிக் கொடுத்தாள். மாகராஜாவும் அவள் காட்டிய அன்பில் மயங்கிப் போனார்.
கங்காதேவிக்குப் குழந்தைகள் பல குழந்தைகளை அவள் பிறந்தன. பிறந்த கொண்டு சென்று கங்கையாற்றில் போட்டுவிட்டு மகிழ்வுடன் வந்தாள்.
அதனால் சந்தனுமகாராஜாவுக்குப் பெரும்மனக் கவலை உண்டானது. எனினும் அதற்குக் கராணம் கேட்டால் அவள் தன்னை விட்டுச் சென்று விடுவாள் என்று பயந்தான். இவ்வாறு தான் பெற்ற ஏழு குழந்தைகளைக் கொண்டு சென்று அவள் கங்கையில் போட்டாள். இது மகாராஜாவுக்குப் பெருந்துன்பத்தைக் கொடுத்தது.
எட்டாவது குழந்தை பிறந்தபோது கங்காதேவி அதைத்தூக்கிக் கொண்டு கங்கை நதியை நோக்கிச் சென்றாள். அதைப் பொறுக்க முடியாத சந்தனுமகாராஜா; “பெண்ணே, இந்தப் பாவமான செயலை ஏன் செய்கிறாய்? உனக்குத் தாய்மை உணர்வு
இல்லையா?' எனக் கோபத்துடன் கேட்டான்.
"மகாராஜா, நீ எனது கோரிக்கையை மறந்து என்னை விசாரித்து விட்டாய், அதனால் இனி நான் உன்னுடன் வாழமாட்டேன். எட்டாவதாகப் பிறந்த இந்த மகனை நான் கொல்லவில்லை. மன்னவனே, நான் கங்கா நதியாவேன். வசிட்டரின் சாபத்தால் இந் நிலையை அடைந்தேன். நான் பெற்ற குழந்தைகள் தான் அட்ட வசுக்கள். அவர்களுக்கு நான் தாயாகவும், நீ தந்தையாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. அட்டவசுக்களின் தந்தையான நீ பெரும்பேற்றை அடைவாய். இக் குழந்தையை நான் வளர்த்து உரிய காலம் வந்ததும் உன்னிடம் ஒப்படைப்பேன். அவன்தான் பீஷ்மன்."என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.
கங்காதேவி இப்படி நடப்பதற்கான ஒரு சாபம் உள்ளது. ஒரு நாள் அட்டவசுக்கள் தமது மனைவி மார்களுடன் வசிட்டமுனிவர் தவம் செய்துகொண்டிருந்த ஆச்சிரமத்தின் அருகே வந்து ஆடிப்பாடிக் குதூகலித்திருந்தனர்.
அப்போது அவர்களில் ஒருவன் வசிட்டமுனிவர் வளர்த்துவந்த காமதேனு என்ற பசுவின் மீது ஆசை கொண்டான். அதன் அழகு அவனை வெகுவாகக் கவர்ந்தது. அதன் அழகில் மெய்மறந்த அவன் அதைத் தனது மனைவிக்குக் காட்டினான். அவளையும் அப் பசு வெகுவாகக் கவர்ந்தது. அதனால் அவள் தன்னுடன் வந்தவர்களை அழைத்துப் பசுவைக் காட்டினாள். அவர்கள் எல்லோரும் காமதேனுவைப் பார்த்து அதிசயித்தனர்.
"காமதேனுவைத் தேவர்களின் உலகத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்" என்று அட்டவசுக்களின் ஒருவனான பிரபாசன் என்பவனின் மனைவி பிடிவாதம் பிடித்தாள். அவளின் பிடிவாதத்திற்காகப் பிரபாசன் காமதேனுவையும் கன்றையும் தேவலோகத்திற்குக் கொண்டுசென்றான்.
வேறிடம் சென்ற வசிட்ட முனிவர் ஆச்சிரமத்திற்குத் திரும்பிவந்து நடந்ததை அறிந்து கோபங்கொண்டு; "அட்டவசுக்கள் எட்டுப்பேரும் மனித உலகில் பிறந்து கஷ்டப்படவேண்டும்" எனச் சபித்தார். சபித்ததும் அச்சாபம் அட்டவசுக்களைப் பற்றிப்பிடித்தது.
சாபத்தால் பீடிக்கப்பட்ட அட்டவசுக்கள் ஆச்சிரமத்திற்கு வந்து தம்மை மன்னிக்குமாறு இரந்தனார். வசிட்டரின் "சாபத்தை மாற்ற முடியாது. பசுவைக்கொண்டு சென்ற பிரபாசன் நீண்ட காலம் பூவுலகில் புகழுடன் வாழ்வான். பின் தேவருலகை அடைவான். ஏனைய வசுக்கள் பூமியில் பிறந்ததும் சாபவிமோசன மடைவார்கள். இதை மாற்ற முடியாது" என்றார் வசிட்டர்.
அதனால் கவலை கொண்ட வசுக்கள் கங்காதேவியிடம் சென்று தமது நிலையைக் கூறி, கங்கையைத் தமக்குத் தாயாகும் படி இரந்து வேண்டினர்.
அவர்களுக்காகப் பரிதாபப்பட்ட கங்காதேவி பெண்ணுருக்கொண்டு கங்கைக்கரையில் உலாவியபோது சந்தனுமகாராஜாவைக் கண்டு மணம் செய்து எட்டுக் குழந்தைகளைப் பெற்றாள். சாபப்படி ஏழு குழந்தைகளை அவள் ஈன்றெடுத்தும் கங்கையில் போட்டு அவர்களுக்குச் சாப விமோசனம் அளித்தாள். எட்டாவதாக ஈன்ற பிராபாசன் என்பவன் நீண்ட காலம் சாபப்படி பூமியில் வாழவேண்டியிருந்ததால் சந்தனுமகாராஜா அவளின் நிபந்தனைகளை மீறக் கங்காதேவியானவள் எட்டாவது குழந்தையுடன் மறைந்து விட்டாள்.
மிகுந்த மனவேதனையடைந்த சந்தனுமகாராஜா முன்பு போலக் கங்கைக் கரையில் தினமும் உலாவி வந்தார். ஒரு நாள் உலாவும்போது ஓர் அழகான பலசாலியான இளைஞன் ஒருவன் அம்புகளை எய்து கங்கையின் வேகத்தைத் தடுத்துக் கொண்டிருந்தான். அவனருகில் ஒரு பெண் நின்று அவ்விளைஞனைக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டு நின்றாள். அவள் சந்தனுமகாராஜாவைக் கண்டதும் அருகில்வந்து; . "மகாராஜாவே, நான் பெற்றெடுத்த எட்டாவது புதல்வன் இவன். இவன் எல்லாக் கலைகளையும் கற்று மாவீரனாகி விட்டான். வசிட்டரும் சுக்கிராச்சாரியாருமே இவனது குருமார். யுத்தம் செய்வதில் பரசுராமனுக்குச் சமமானவன். இவனை நான் மிகச் சிறந்த முறையில் கல்வியும் போர்ப்பயிற்சியும் கொடுத்து வளர்த்துள்ளேன். இவனை யாராலும் வெல்லமுடியாது. இவனுக்கு நானிட்ட பெயர் தேவவிரதன். இவன்பின் நாளில் பீஷ்மன் எனப்போற்றப்படுவான். இப்போது நீ இவனை அழைத்துச்செல்' என்று கூறி மறைந்தாள் கங்காதேவி.
தொடரும்...
பின்குறிப்பு:- சிறுவர்கள் வாசித்து பயன்பெறும் வகையில் மிகவும் எளிய வடிவில் முழு மகாபாரதமும் சுருக்கப்பட்டு இங்கே எழுதப்படுகிறது.
உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
பாகம் 2 பதிவேற்றப்பட்டுள்ளது அதனை படிக்க Click to See more பட்டனை கிளிக் செய்யுங்கள்