எனது சுற்றுலா அனுபவங்கள் - மகாவலி மஹா சயா (கொத்மலை விஹாரை) kothmale mahaweli maha seya

திட்டமிடாமல் திடீர் என சென்ற பயணம் மகாவலி மஹா சயா (கொத்மலை விஹாரை) :- நிரஞ்சனி தினேஷ்

Mar 25, 2023 - 08:06
Feb 4, 2025 - 13:45
 0  90
எனது சுற்றுலா அனுபவங்கள் - மகாவலி மஹா சயா (கொத்மலை விஹாரை) kothmale mahaweli maha seya

 பலரது வாழ்க்கை மாறியதற்கு பயணங்களையே காரணம் என்று சொல்வர். பயணத்தின் போக்கு, அதில் சந்தித்த மனிதர்கள், நடந்த ஏதாவது ஒரு நிகழ்வு, அவரது வாழ்க்கை பற்றிய புரிதலையே மாற்றி விடும்.இலக்கியங்களில் ஸ்ரீ ராமர், ஹனுமன் இலங்கைக்கு பயணித்த பயணம், விவேகானந்தரின் அறிவை தேடிய பயணம், சிந்துபாத்தின் சாகச கடல் பயணம்,கிறித்தோபர் கொலம்பஸ்சின் நாடு காண் பயணம் என பயணங்கள் சென்றவர்களுக்கும் அதே வேளை அந்த பயணங்களை பற்றி படித்தவர்களுக்கும் பல வாழ்வியல் மாற்றங்கள் நிகழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. பயணங்கள் வாழ்க்கையை நாம் பார்க்கும் பார்வை அப்படியே தலைகீழாக கூட மாறிவிடும்.

வீட்டில் இருந்து அலுவலகம் செல்வதும் ஒரு பயணம் தான். வீட்டிலிருந்து அண்டார்டிகா செல்வதும் பயணம் தான். பூமியில் இருந்து பால்வெளி  தாண்டி போவதும் பயணம் தான். தூரம் எதுவாக இருந்தாலும் அதில் இருந்து நாம் கற்கும் பாடங்கள் தான் நம் பயணத்தை மதிப்பானதாக மாற்றுகிறது.

  முதல் தடவையாக திட்டமிடாமல் திடீர் என சென்ற பயணம் மகாவலி மஹா சயா (கொத்மலை விஹாரை ). எனது நெருங்கிய நண்பி தனது பிறந்தநாளைக்காக சிறப்பு வழிபாடு ஒன்று கொத்மலை விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், என்னையும் கூட வருமாறு அழைத்தாள்.

நான் உடனே சரி என்று முப்பது நிமிடங்களில் தயாராகி விட்டேன். கொத்மலை பிரதேசம் அழகானது, பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று என்றெல்லாம் அப் பிரேதேசத்தை பற்றி கேள்வி படிருக்கிறேன் நிறைய. அதிலும் கொத்மலை அணைக்கட்டினை பார்த்தாக வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு.

 கொத்மலைக்கு நுவரெலியா வழியாகவும் செல்லலாம் கண்டி -கம்பலை -உலப்பனை ஊடகவும் செல்ல முடியும்.

கண்டியில் இருந்து கொத்மலைக்கு 50கிலோமீட்டர் மட்டுமே .காலை பத்து மணி நானும் எனது நண்பியும் ஆட்டோவில் செல்ல தயாராகினோம். கம்பலைநகரில் இருந்துகொத்மலைக்கு காலை, மாலை என இரண்டு தடவைகள் பஸ் உள்ளதாம். இது ன நண்பியின் தனிபட்ட பயணம் என்பதால் முச்க்கரவண்டியில் செல்வதாக தீர்மானித்தோம்.

  A5 வீதியில் சென்று தெல்பிட்டிய என்ற ஊரின் இடையில் ஆரம்பமாகிறது கொத்மலைக்கு செல்வதற்கான பாதை அமைதியான அழகான பாதை.வீதி இருப்பாக்கத்திலும் சிவப்பு நிற பூக்களை கொண்ட மரங்கள்.என்ன மரம் என்று பெயர் தெரியவில்லை. மாகவலி நீர்திட்த்தில் கட்டபட்ட வீதி சுமார் 20-25வருடங்களுக்கு முன் நடப்பட்ட மரங்கள்.

தார் வீதியில் அந்த சிவப்பு நிற மலர்கள் விழுந்து இருப்பது.வித்தியாசமான ஒரு அழகை கண்களுக்கு தந்தது என்றே கூற வேண்டும்.பெரிய அளவில் வாகனங்கள் அந்த பாதையில் இல்லை. 

முப்பது நிமிட பயணத்தின் பின்னர் குமிழி வடிவத்துடன் பிரகாசமான வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் மகாவலி மஹா சயா, பாதையில் இருந்து பார்க்கும் போதே எமக்கு கண்களை கவர்ந்தது.

 மகாவலி கங்கையானது சிவனொளிபாத மலையிலிருந்து ஊற்றெடுக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. ஹோர்ட்டன் சமவெளியில் உள்ள கிரிகாலப்பொத்தை மற்றும் தொட்டுப்பொல மலைப்பகுதியில் இருந்துதான் மகாவலி கங்கை ஊற்றெடுக்கிறது என்பதே சரியானது.மகாவலி கங்கையின் நீர் செல்லுமிடமெல்லாம் வளப்படுத்தும் என்பது உண்மை என தான் தோன்றியது எனக்கு.   .

மகாவலி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாதை அருகில் ஆங்காங்கே இருந்த ஹோட்டல்கள் மனதில் ஏதோ ஒரு அமைதியை ஏற்படுத்தியது.

 கொத்மலை பள்ளத்தாக்கின் இயற்கை எழில் சூழ்ந்துள்ள சூழலுக்கு விபரிக்க முடியாத  அழகை சேர்த்தது . கொத்மலை மகா விஹாரைக்கு ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தந்து வழிபடுகின்றனர் என்பது எமக்கு அந்த விஹாரை பூமியில் காலடி வைக்கும் போதே  அங்கு இருந்த டுவரிசிட் பஸ்கள், பைக் வண்டிகள்  என்பன மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.வீதி ஓரங்களில் அமைக்க படிருந்த கடைகள் அதில் விலைகள் டாலர்களில் குறிப்பிடபட்டிருந்து  காட்டில் பறித்த மலர்கள் உட்பட இவை அனைத்தும் வெளிநாட்டு பயணிகளை எதிர்பார்த்து அமைக்கப்பட்டிருந்தது.

 வெளிநாட்டடவர்கள் வருகை நம் நாட்டிற்குதருவது  அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறது. உள்நாட்டுச் சுற்றுலா வருவாய் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. மேலும் அதிக வேலை வாய்ப்பினை ஏற்படுத்துகிறது. இதனால் குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. அதிக வருமானம் கிடைப்பதால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது.

நம் உள்நாட்டு மொழி, வரலாறு தெரியாமல் வருபவர்களை சரியான முறையில் வழிநடத்துதல் அவசியமாகும். ஆனால் இங்கும் சரி நான் பார்த்த பல சுற்றுலாதளங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்களிடம் அதிகவிலையில் பொருட்களை விற்பனை செய்வது சாதாரனமான ஒரு செயலாக மாறிவிட்டது.

 நானும்  என் நண்பியும் வெள்ளை நிற  அரளி பூத்தட்டு ஒன்றினை வாங்கி கொண்டு படிகளில் ஏறினோம்.

கொத்மலை விஹாரை  மத்திய மலைப்பகுதியில் உள்ள கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அப்பால் கட்டப்பட்ட ஒரு பெரிய ஸ்தூபியாகும்.கொத்மலை அணைக்கட்டு நிர்மாணத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தினால் கோவில்கள், கிராமங்கள் மற்றும் சொத்துக்களை கைவிட்டுச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாம் ஆகவே பொது மக்களின் நலனுக்காக மகாவலி திட்டத்தின் கீழ் இந்த ஸ்தூபி நிர்மாணிக்கப்பட்டது. கடடோரா கோவில்,  திஸ்பனே ஆலயம், மொரப்பே ஆலயம், மெதகொட ஆலயம் உள்ளிட்ட பல விகாரைகளும் மகாவலி திட்டத்தினால் முற்றாக நீரில் முழ்கிய விஹாரைகளாகும்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜெ. ஆர். திரு.ஜெயவர்தனவின் பரிந்துரையின் படி , மகாவலி மகா சாயியின் நிர்மாணப் பணிகள் மார்ச் 20, 1983 இல் ஆரம்பிக்கப்பட்டு, ஸ்தூபியின் நிர்மாணப் பணிகள் 1991 ஆம் ஆண்டளவில் நிறைவடைந்தன. . இந்த பிரமாண்டமான ஸ்தூபியின் முழுமையான கட்டுமானப் பணிகள் ஜூன் 2016 இல் நிறைவடைந்து, அன்றிலிருந்து பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

 மகாவலி ஆற்றின் நீர் மட்டம் அசாதாரணமாக உயரும் பட்சத்தில், ஸ்தூபி நீரில் மூழ்குவதைத் தடுக்க, இந்த அடித்தளத்தின் அடிக்கல் ஏற்கனவே இருக்கும் கல்லிலிருந்து சுமார் 100 அடி உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது. மகாவலி மகா சயாவை வடிவமைத்தவர்கள் முப்பத்திரண்டு உயரமான கல் தூண்களின் மூலம் ஸ்தூபியின் நிறையை சமச்சீராக இருக்கும் வகையில் இதை கட்டிஇருப்பது நமது நாட்டின் கட்டிடகலைக்கு ஒரு

மைல்கல் ஆக இருக்கிறது . அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலி சாயாவிற்கு அடுத்தபடியாக கொத்மலை மகாவெலி மஹா விஹாரை கருதப்படுகிறது இதன் உயரம் 289 அடியாகும்.

இந்த ஸ்தூபியும் மற்றும் மையத்தில் மற்றொரு சிறிய ஸ்தூபி உள்ளது. இந்த ஸ்தூபியில் நான்கு திசைகளை நோக்கிய நான்கு புத்தர் சிலைகள் உள்ளன. ஒவ்வொரு நுழைவாயிலிலும் நன்கு செதுக்கப்பட்ட நிலவுக்கல், காவல் கற்கள், கோரவக் கற்கள் உள்ளிட்ட அழகான பாரம்பரிய நுழைவாயில் உள்ளது.அமைதியான சூழலில் பௌத்த "பிரித்"(பௌத்த மதத்தவர்களால் உச்சாடனம் செய்க்கூடிய ஜபம் )ஒலித்து கொண்டிருந்தது.

 நானும், எனது நண்பியும் மெதுவாக பேசுவது  கூட அந்த பிரமாண்டாமான ஸ்தூபியில் எல்லா இடங்களிளும்  எதிரொலித்தது. கருங்கற்களினால் கட்டப்பட்டிருந்ததால் காற்று வீசும் போதெல்லாம் சத்தமும் குளிரும் வேறு விதமான ஆனந்தத்தை தந்தது

தனிமனிதனின் மனநிறைவில் தான் சுற்றுலா இன்பமானதாக அமைகிறது. இன்பமாக பொழுது போக்கவேண்டும் என்பது மனிதனின் விருப்பமாகும்.இந்த இன்பம் நபருக்கு நபர் வேறுபடும்.ஒருவருக்கு பயணங்கள் மூலம் இன்பம் வரலாம் வேறு ஒருவருக்கு எங்கும் செல்லாமல் வீட்டோடு இருப்பதால் இன்பம் வரலாம்.

 சென்ற வழியில் இல்லாமல் வேறு ஒரு வாயில் வழியாக வெளியில் வந்தோம் நாம். எதிர்காலத்தில் ஸ்தூபியின் உள்ளே சுவரோவியங்களை உருவாக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாம் . நூலகங்கள், ஆராய்ச்சி வசதிகள்  கூட  ஏற்படுத்த திட்டமிடபட்டு வருகிறார்களாம். இவ்வாறான திட்டங்கள் நடைமுறை படுத்தபட்டால் எதிர்காலத்தில் இலங்கையில் பிரசித்தமான பௌத்த மையமாக இருக்கும், பல்வேறு செயல்பாடுகளை ஒன்றிணைக்கும்.

 நாம் சென்ற பயணங்களையும் எமது கைபேசியில் புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டோம்.எம்மை போலவே அங்கு வந்தவர்கள் பலர் புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். அந்த ரம்யமான சூழல் புகைப்படங்களுக்கு மேலதிக வனப்பை  தந்தது.சிலர் அங்கு வந்தும் தொலைபேசியில் வேறு வேளைகளில் இருந்தார்கள்.சுற்றுலா செல்வதே இயற்கையை ரசித்தபடி, நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ நேரத்தை அழகாக செலவிடத் தான். ஆனால், அப்போதும் கையில் போனை வைத்துக் கொண்டு, விளையாடுவது, அலுவலக விசயமாக முழு நேரத்தை அதில் செலவிடுவதை தவிர்த்துவிடலாமே என தோன்றியது எனக்கு.

   அடுத்து அங்கிருந்த கடைகளுக்கு சென்றோம் மஸ்கட், தொதல், எள்ருண்டை என வகை வகையான இனிப்பு வகைகளும்

முறுக்கு, மிக்ஸ்சர் என கார வகைகளும். அங்கிருந்த காரசாரமான, எண்ணெய் வழியும் பதார்த்தங்களைப் பார்க்கும்போது மனதில் சாப்பிட வேண்டும் என்ற சபலம் ஏற்பட்டது. ஆனால் சுகாதாரமும், சுற்றுலா சுகமாய் அமைய வயிறும் முக்கியம் என்பதை உணர்ந்து என் மனதை கட்டுப் படுத்திக்கொண்டேன்.

ஆனாலும் என் நண்பி இருவருக்கும் "எழப்ப"-குரக்கன் மா, தேங்காய் பூ, கருப்பட்டி கலந்து இலையில் வைத்து நீராவியில் அவித்து எடுக்கும் கொலுகட்டை போன்றது. குடிக்க வில்வபழ மர பூ அவித்த  பானமும் கொண்டு வந்தாள்.

கடைக்கு வெளியே இருந்த மரக்குற்றிகளில் அமர்ந்த படி எமது உணவை சாப்பிட்டோம்.

 கடைகளுக்கு வெளியே குறவர்கள் ஊதுவர்த்தி, மஞ்சள், வேறு சில மூலிகை பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை காண முடிந்தது. அதில் ஒரு குறபெண் ஓலைசுவடி போல் கையில் எடுத்து கொண்டு. கைரேகை சாத்திரம் கூற எம்மை அழைத்தார். நாம் தயங்கி தயங்கி இருக்கும் போது வெளியில் நின்று கொண்டிருந்த பெண் தானாகவே முன் வந்து தன் கையை நீட்டி குறி கேட்டு கொண்டிருந்தார்.

  குறவர்கள் - இலங்கையில் கவனிக்கப்படாத ஒரு சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.கிறிஸ்துவுக்கு முன்னர் மூன்றாம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்தவர்களே - இலங்கையில் இப்போது வாழும் வனக் குறவர்கள் என்று கூறப்படுகிறது.

 குறவர்கள் எப்போதும் காட்டிலும், காட்டை அண்டிய பிரதேசங்களிலுமே வாழ்கின்றனர். பாம்பு பிடித்தல், உடும்பு பிடித்தல், நாய்களைக் கொண்டு மிருகங்களை வேட்டையாடுவதில் இவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள். மீன்பிடித்தல், சேனைப் பயிர்ச் செய்கைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.இவர்கள் பேசும் மொழி தமிழ் தெலுங்கு போன்றதொரு மொழியாக இருக்கிறது. ஆனால், தமிழையும் இவர்கள் மிக நன்றாகப் பேசுகின்றனர். இருந்தபோதும், இவர்கள் தமக்கிடையில் அவர்களுடைய தாய் மொழியிலேயே உரையாடிக் கொள்கின்றார்கள். இதில் கவனிக்கத்தக்க ஒரு விடயம் என்னவென்றால், இவர்கள் பேசும் மொழிக்கு எழுத்து வடிவமில்லையாம்.

  நான் வீட்டில் உள்ளவர்களுக்கு சில இனிப்பு பட்சணங்களை வாங்கி கொண்டு. ஆட்டோவில் ஏறினோம். அந்த விஹாரைக்கு கீழ சிறிய மண்டபம் போன்ற ஒரு இடம் அதில் பல நாய்களும், நாய்க்குட்டிகளும் சுமார் பத்து நாய்கள் ஐந்து அல்லது ஆறு பிறந்து ஒரு மாதமான குட்டிகள். ஓடி திரியும் நான்கு குட்டிகள் எனது நண்பி ஆட்டோவை மண்டபத்திற்கு அருகில் நிறுத்தி வீட்டில் இருந்தே அனைத்து நாய்களுக்கும் கொண்டு வந்த உணவுகளை பகிர்ந்தாள். ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளிற்காக  இந்த விஹாரைக்கு வந்து உணவளிப்பதை என் நண்பி வழமையாக வைத்துள்ளார் என்பதை நாம் வந்த ஆட்டோ டிரைவர் கூறிய போதும். எனக்கு ஆச்சரியமாக இருந்து. நண்பி ஆட்டோவில் ஏறி கொத்மலை அணையை (kothmale dam)பார்த்து விட்டு வீட்டிற்கு போவாம் என்று தீர்மானித்தோம் ஆனாலும் மழைக்கு மேகங்கள் தயாராகி, தூறல் ஆரம்பமாகி இருந்தது. எனவே ஆட்டோவில் இருந்ததப்படியே அழகான கொத்மலை அணையை பார்த்துவிட்டு, அடுத்த தடவை கண்டிப்பாக வர வேண்டும் என்று எண்ணியப்படியே வீட்டிற்க்கு வந்து சேர்ந்தோம்.

 

நிரஞ்சனி தினேஷ்