“பெண்ணான நீ....” - ஒரு பக்க கதை

சிறுகதை

“பெண்ணான நீ....”  - ஒரு பக்க கதை

“பெண்ணான நீ....”
எங்கும் அவள் வருகைக்காக காத்திருக்கும் கண்கள். மேடை, கெளரவ மாலைகள் ஏந்திய கைகள், நிகழ்ச்சிகளுக்காக ஒப்பனை செய்யும் மாணவ மாணவிகள் என நெல்லூர் முழுவதும் தடல் புடலாக காட்சியளிக்க ஒரு சிலர் கண்களில் ஏனோ வன்மத்துடனான வருத்தம் காணப்பட்டது. ஊர் முழுவதும் திரண்டு மைதானத்தில் கூட மைதானமே விழாக் கோலம் பூண்டு இருக்க கதிர்வேலன் கண்கள் மட்டும் வெட்கத்தால் நாணி வருத்தத்தால் நொந்து கொண்டிருந்தது.


                    மைதானம் செல்ல அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. தனது வீட்டு ஓடுகளின் மேல் தனது கடந்த காலம் எனும் திரைப்படத்தை ஓடச் செய்து கண்களை மூடி சிந்திக்க தலைப்பட்டான். அது தொண்ணூறுகளின் ஆரம்பம் கதிர்வேலன் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனது நண்பர்களுடன் பருவ போதையில் ஊர் சுற்றி தனது வயதிற்கே உரிய சேட்டைகள் பல செய்து ஊரவர் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருக்க அந்த ஊரிலே ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் உயர் தரம் வரை சிறப்பாக கற்றவள் என கூறப்பட்டவள் தான் கண்ணகி. பெயருக்கேற்றால் போல் அழகிலும், குணத்திலும் சிறந்தவளாக காணப்பட்ட இவள் ஆசிரிய நியமனத்துக்காக காத்திருந்தாள். இவள் இலட்சிய பாதை கொண்ட பெண்ணாக இருந்து கல்வி துறையில் பெரிய சாதனைகள் புரிய வேண்டும் என கனவுகளுடன் தினப்பொழுதை கழித்தாள்.கண்ணகிக்கு மூன்று சகோதரர்கள். அவளது தாய் தான் தந்தையின் மறைவுக்கு பின் அவர்களை பாடுபட்டு வளர்த்தாள்.


                    கண்ணகி மூத்த பிள்ளை என்பதால் அவளும் பொறுப்புணர்ந்து செயற்பட்டாள். அகவை இருபத்தி மூன்று ஆகியும் கண்ணகிக்கு நியமனம் கிடைக்கவில்லை. ஊராரும் வழக்கம் போல அடுத்தவர் பானையில் எத்தனை குடம் தண்ணீர் என எண்ணத்துவங்க கண்ணகிக்கு எப்போது திருமணம் எனும் பேச்சு ஊரார் பத்திரிகைக்கு தலைப்பு செய்தியாக மாறியது.பெண்ணாக நீ என்ன செய்ய போகிறாய்? எனும் கேள்வி கண்ணகி காதுகளில் முதல் தடவை ஒலித்தது. ஒரு பக்கம் ஊர் தலைவரின் மகனாகிய கதிர்வேலன் கெட்டு அழிந்து போய் கொண்டிருக்க அவனுக்கு கண்ணகியை மனம் முடிக்க யோசித்திருந்தார் ஊர் தலைவர். இதற்கெல்லாம் காரணம் கண்ணகி குடும்பத்தின் வறுமை. ஊர்தலைவர் வீட்டில் வீட்டு வேலை செய்த காரணத்தினால் கண்ணகி தாயார் மறுக்க மாட்டார் என்பது ஊர் தலைவர் எண்ணமாக இருந்தது.
                    அவரும் பேசும் விதத்தில் பேசி கண்ணகி குடும்ப நிலையை எடுத்துக்காட்டி திருமணத்திற்கு கண்ணகி தாயாரை சம்மதிக்க வைத்தார் ஊர் தலைவர்.அவளுக்கும் உலகறிவு அற்ற காரணத்தால் தலையாட்டி பொம்மையானாள். கண்ணகி எவ்வளவு போராடியும் அவளாலும் இந்த திருமணத்தை தடுக்க முடியவில்லை. பெண்ணான நீ என்ன செய்யப் போகிறாய்? எனும் கேள்வி அவளை துரத்த இறுதியில் இருட்டின் கைப்பிடியில் சீக்கிக் கொண்டாள். திருமணம் எனும் சிறையில் துருப்பிடித்த கம்பி போன்ற தனது பொறுப்பற்ற கணவனுடன் காலங்கள் கழித்தாள். அடி, உதை, என இரண்டு வருடங்கள் உருண்டோட ஒரு பெண் குழந்தையுடன் அவலப்பட்டாள். கதிர்வேலன் குடும்பமும் அவனை கை கழுவ வாழ்க்கை சிரமப்பட்டது கண்ணகிக்கு, இதற்கிடையில் வேறு ஒரு பெண்ணை அழைத்து வந்து கண்ணகி முன் நிறுத்த கண்ணகி நிர்மூலமானாள். கதிர்வேலனும் “பெண்ணான நீ என்ன செய்யப் போகிறாய்????” என கேலியாக கேட்க, அவள் தனது மொத்த கோபத்தையும் அடக்கிக் கொண்டு அன்று அந்த ஊரை விட்டு அவள் தாயைக் கூட பார்க்காமல் வெளியேறினாள்.


                இருபதுவருடங்கள் கழித்து இன்று கண்ணகி நாமம் ஒலிக்கக் காரணம், அவள் வென்ற “பெண்ணியம் போற்றும் எழுத்தாளர் ”  எனும் விருது. இது தேசிய விருது. இன்று நெல்லூர் மக்களுக்கு கண்ணகி பெயர் மீண்டும் ஞாபகம் வந்தது. உணர்வு வரப் பெற்றவனாய் எழுந்த கதிர்வேலன் தனது மேற்சட்டையை உதறி விட்டு அதை அணிந்து கண்ணகியை பார்க்க ஓடிச் சென்றான். கண்ணகி தனது மகள் பத்மப்பிரியாவுடன் மாலை, மரியாதை என மேடை ஏறிக்கொண்டிருந்த நேரம் கதிர்வேலன் மைதான மூலையில் திராணியற்று நின்று கொண்டிருக்க கண்ணகியின் புகழ் ஆரங்கள் முடிந்து கண்ணகி பேசும் நேரம் வந்தது. இருபது வருடங்கள் கேட்காத அந்த குரலை கேட்க கதிர்வேலன் நிமிர்ந்தான். அப்போது கண்ணகி “என் வாழ்வு ஆரம்பித்த இம் மண்ணுக்கு வணக்கம். என் வாழ்க்கை ஆரம்பிக்க காரணமான அனைவருக்கும் வணக்கம். பெண் என்பவள் திருமணத்திற்காக தயார் செய்யப்பட்ட பாவை அல்ல இதை இந்த சமூகம் உணர வேண்டும்.

இங்கிருந்து சென்ற நான் என் வன்மத்தை என் வளர்ச்சி பாதையை செப்பம் செய்ய ஆயுதமாக்கினேன். இன்று உங்கள் முன் சாதனை புரிந்தவளாய் நிற்கிறேன். என் மகள் பத்மா இன்று ஒரு வைத்தியராய் அவள் கனவுப் பாதையில் நிற்கிறாள். பெண்களின் உணர்வுகள் மதிக்கத்தக்கவை அவற்றை மதிக்காவிட்டாலும் அவளை கனவு காண அனுமதியுங்கள். பெண்களே உங்கள் கனவுகளை நானவாக்க உழையுங்கள். அது தான் உங்கள் அடையாளம்.... பெண்ணான நான் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன் ” என்று கூற அவளை பார்த்துக் கொண்டிருந்த கதிர்வேலன் தன் தவறை உணர்ந்தான்.

அவன் தற்போது தனித்து விடப்பட்டவனான். காரணம் அவன் புற்றுநோயினால் பாதிக்கப்படிருக்க இதை அறிந்த அனைவரும் அவனை அனாதாரவாக விட்டுச் சென்றிருந்தனர். கண்ணகியின் தாய் கூட்டத்தில் அழ ஆரம்பிக்க, கண்ணகி அனைவரையும் சந்தித்த பின் அவள் தாயையும் சகோதரர்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல தீர்மானித்து தனது வாகனத்தில் ஏறும் அந்த கணத்தில் அவள் பார்வை கதிர்வேலன் மீது படர அவள் அவனை நோக்கி நடந்தாள். அவன் கால்களோ நிற்க கூட திராணியற்று நடுங்கிக் கொண்டிருக்க அவள் அவனை தோள்களில் தட்டிக் கொடுத்துவாகனத்தில் ஏற்றினாள் ஒன்றும் பேசாமல் மௌனத்தின் பாதையில் அவர்கள் வாகனம் பயணிக்க தொடங்கியது. “காலங்கள் மாறி வரும் ” எனும் பாடல் வாகனத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.
          

<<<<இவற்றையும் மிஸ் பண்ணாம படியுங்கள் >>>>>


HTML5 Icon


HTML5 Icon


HTML5 Icon


HTML5 Icon