What we should learn from the life of the prophet Jonah | யோனா வாழ்க்கை வரலாறு

இறைவாக்கினர் யோனாவில் வாழ்விலிருந்து நாம்  கற்றுக் கொள்ளவேண்டியவை

Apr 5, 2023 - 20:54
Feb 4, 2025 - 15:10
 0  45
What we should learn from the life of the prophet Jonah | யோனா வாழ்க்கை வரலாறு

இறைவாக்கினர் யோனாவில் வாழ்விலிருந்து நாம்  கற்றுக் கொள்ளவேண்டியவை


இறைவாக்கினர்கள் நூலானது முற்கால இறைவாக்கினர்கள், பிற்கால இiறாக்கினர்கள் என்று இரு பிரிவுகளாக காணப்படுகின்றனர். இன்றைய விவிலிய வல்லுனர்கள் முற்கால இறைவாக்கினர்கள் நூல்களை வரலாற்று நூல்கள் என்று அழைக்கின்றனர். இந் நூலானது இறைவாக்கினர்கள் பற்றியும் அவர்கள் மக்களுக்கு ஆற்றிய பணி, இறை செய்தி, மீட்புத் திட்டம், என்பவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இறைவனின் வார்த்தையை பேசுபவர்கள் அல்லது  இறை வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைப்பவர்கள் இறைவாக்கினர்கள் எனப்படுவர். இவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட அல்லது தெய்வீகத் தன்மை கொண்ட பண்பு கொண்டவர்கள். மேலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட இடத்தில் இருந்து புதிதாகப் பெற்ற அறிவை அல்லது செய்தியை மக்களுக்கு வழங்குபவர்கள் என்றும் பலவிதமாக விபரிக்கப்படுகின்றனர். நீதித்தலைவர்கள் காலத்திற்குப் பின் தோன்றிய இவர்கள் அரசர்களுக்கு அஞ்சாது கடவுளுக்கு மட்டும் அஞ்சி வாழ்ந்தனர். பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய இவர்கள் இஸ்ரயேல் மக்களின் தவறுகளை சுட்டிக்காட்டி மக்களை கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ அறிவுரைகள் வழங்கி நல்வழிப்படுத்தி கடவுளிடமிருந்து வரும் ஆசீரையும், தீய வழியில் நடந்தால் கடவுள் தரும் தண்டனையையும், இறைவனின் மீட்புத் திட்டத்தையும் (இயேசுவின் பிறப்பு, பணி வாழ்வு, மரணம், உயிர்ப்பு) பற்றியும் மக்களுக்கு எடுத்துரைத்தனர். இவர்கள் நபி (1சாமு 10:10), கடவுளின் ஊழியர் (ஆமோ 3:7), இறையடியார் (1அர 13:1), காவலர் (எசா 62:6), ஆயர்கள் (எரே 17:6) என்று வெவ்வேறு பெயர்களினால் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கடவுளால் அழைக்கப்பட்டவர்கள். இவர்களிடையே தம் பெயரில் நூல் எழுதாத இறைவாக்கினர்கள், பெரிய இறைவாக்கினர்கள், சிறிய இறைவாக்கினர்கள் என்று மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

அந்தவகையில் எசாயா, எரேமியா, எசேக்கியல் போன்ற நூல்களை பெரிய இறைவாக்கினர்கள் நூல்கள் எனலாம். இது அதிகமான அதிகாரங்களைக் கொண்டமைந்ததால் பெரிய இறைவாக்கினர்கள் நூல் என்று அழைக்கப்படுகின்றது. (உதாரணம்: எசாயா 66 அதிகாரங்கள்) இதைப் போன்றே சிறிய அதிகாரங்களைக் கொண்ட நூல்களை சிறிய இறைவாக்கினர் நூல் என்று கூறுகின்றனர். இவர்கள் வழங்கிய போதனைகள் சுருக்கமாக தரப்பட்டுள்ளமையே அதன் காரணமாகும். ‘கடுகு சிறிதானாலும் காரம் பெரிது’ எனும் பழமொழிக்கு ஏற்ப இவர்கள் குறைவாகப் பேசினாலும் அவர்களது சிந்தனையும் செய்தியும் காரம் குறையாத போதனைகள் ஆகும். அந்தவகையில் ஒசேயா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீக்கா, நாகூம், அபகூக்கு, செப்பனியா, ஆகாய், செக்கரியா, மலாக்கி ஆகிய பன்னிருவரும் சிறிய இறைவாக்கினர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்களில் இறைவாக்கினர் யோனா பற்றி நோக்குகையில்,


இரண்டாம் ஏரோபவாம் யூதாவை ஆண்ட காலத்தில் ஒரேபில் அமைந்திருந்த கேத் எனும் ஊரில் வாழ்ந்து வந்த அமித்தா என்பவரின் மகனான யோனா பன்னிரு இறைவாக்கினருள் ஐந்தாம் இடத்தில் விளங்குகின்றார். யோனா என்றால் புறா என்று பொருள்படும். ‘புறா’ இஸ்ரயேலின் சின்னமாகும். ‘எரோபாமுக்கு ஏமாத் முதல் பாலைவனக் கடல்வரை இஸ்ரேயலின் அரசாகும்’ என்ற இனிய இறைவாக்கினை உரைத்தவரான யோனா கடவுளின் அன்பும், இரக்கமும் இஸ்ரயேல் மக்களிடத்தில் மட்டுமே இருக்க வேண்டும், இஸ்ரயேலைத் துன்புறுத்தும் மற்ற இனத்து நாடுகள் அனைத்தும் கடவுளின் தண்டனைக்கு ஆளாகி அழிய வேண்டும் என்ற குறுகிய மனப்பாங்கு உடையவர். இவர் ஒரு சாதாரண பேச்சாளராக இருக்க வேண்டும். இவர் கடவுளின் கட்டளைக்கு தப்பிச் செல்பவராக யோனா நூலில் காட்டப்படும் அதேவேளை, இறைவனின் தீர்ப்பை மக்களுக்கு துணிவுடன் போதிப்பவராகவும் விளங்குகின்றார். சுமார் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த இறைவாக்கினர் என்று சித்தரிக்கப்படும் யோனா நெறிகெட்டோராய் வாழ்ந்து பாவச் சேற்றில் உளர்ந்து கொண்டிருந்த நினிவே நகர மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க அழைக்கப்பட்ட இறைவாக்கினர் ஆவார். இவரைப் பற்றி இயேசு கிறிஸ்து (மத்தேயு 12:39-41) வசனங்களில் குறிப்பிடுகின்றார். யோனாவாலேயே நினிவே மக்கள் மனம் திரும்பினர் என்பது வரலாற்றில் இருந்து கண்டறியப்படுகின்றது. மேலும் ‘நினிவே அழியப் போகின்றது’ என்று அந்நகர மக்களுக்குப் போதித்தும் கடவுள் நினிவேவை அழிக்காமையால் இறைவன் மீது சினமுற்றவராக இருந்தாலும், இறைவன் அவர் மீது கருணை கொண்டு தன் இயல்பை வெளிப்படுத்துகிறார். 


நினிவே எனும் மாநகரம் தைகீரீஸ் எனும் நதிக்கரையின் மேல் அமைந்துள்ள நகரமாகும். இது அசீரியாவின் தலைநகரமாகவும் விளங்கியது. இது 5மஅ நீளமும், 2மஅ அகலமும், 1800 ஏக்கர் நிலப்பரப்பும் கொண்டது. இதனைக் கடக்க மூன்று நாட்கள் தேவைப்படும். ‘நினிவே’ என்றாலே ‘நான் இருக்கின்றேன், எனக்கு யாரும் நிகரில்லை’ எனும் ஆணவம், பொய்கள், கொள்ளைகள், ஒழுக்கக் கேடுகள், பொய் தேவதைகளை வணங்கும் தீய செயல்கள் மலிந்த தீமைகளின் பிறப்பிடமாகக் காணப்பட்டது. இத்தகைய நாட்டிற்குச் சென்று இறைவாக்கு உரைப்பதற்காகவே இறைவாக்கினர் யோனா அழைக்கப்படுகின்றார். பொதுவாக இறைக்கினர்கள் நினிவே போன்ற தீமை நிறைந்த நாடுகளை அல்லது நகரங்களை பாவத்தின் பொருட்டு தண்டிப்பதற்காகவே அழைக்கப்பட்டாலும் இறைவாக்கினர் யோனா மக்களை மனம் திருப்புவதற்காக இறைவனால் அழைக்கப்பட்டவரல்ல. மாறாக அனுப்பப்பட்டவர் ஆவார். ‘நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப்  போய் அதற்கு அழிவு வரப்போகின்றது என்று அங்குள்வருக்கு அறிவி. அங்கு அவர்கள் செய்யும் தீமைகள் எம் முன்னே குவிகின்றன’ (யோனா 1:2) என்று கூறி இறைவன் யோனாவை அழைத்தார். இப்பணியில் இருந்து யோனா தப்பிக்க முயல்கின்றார். ஏனெனில் பாவம் நிறைந்த அந்நகரில் மனம் மாறும்படி போதிக்கும் போது மக்கள் மனம் மாறினால் இறைவன் அந்நகரை அழிக்காமல் விட்டுவிடுவார் என நினைத்தார். அவர் அதனை நினைத்தாலும் அவரால் அது முடியாமல் போகின்றது. இறைவனின் விருப்பமே இங்கு நிறைவேறியது. யோனா நினிவேக்கு இறைவாக்குப் பணிக்கு செல்ல வேண்டும் என்பது இறை விருப்பமாகும். அதனால் முதல் முறை அழைப்பில் இருந்து தப்பித்துப் போக முயன்றால் மீண்டும் இரண்டாம் முறையாக யோனாவை அழைக்கிறார். ‘நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய் நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி’ (யோனா 3:23) இதனால் பல துன்பசூழ்நிலைகளில் இருந்து அவரைக் காப்பாற்றி கொடுக்கப்பட்ட தூதுரைப்பணியை நிறைவேற்ற வைக்கின்றார். அவரும் ‘இன்னும் நாற்பது நாட்களில் நினிவே அழிக்கப்படும்’ (யோனா 3:4) எனும் கசப்பான செய்தியை துணிச்சலுடன் திரும்பத் திரும்ப அறிவிக்கின்றார். இவ்வாறாக யேனாவின் அழைப்புக் காணப்படுகிறது.

 
நினிவே சென்று நற்செய்தி அறிவிக்குமாறு அழைத்த இறைவார்த்தைக்கு செவிமடுக்காமல் தர்சீசுக்கு தப்பித்து போக முயல்கிறார். இருப்பினும் அது அவரால் முடியாமல் போகிறது. அதாவது கிழக்கு நோக்கி பயணம் செய்ய வேண்டியவர் மேற்கு நோக்கி பயணிக்க எத்தனித்த போது கடவுள் கடலில் பெரும் புயலை உருவாக்கி கப்பலில் இருந்தவர்கள் அவரரவர் தெய்வத்தை நோக்கி வேண்டினர். கப்பலில் இருந்த சரக்குகளையும் கப்பலின் பாரத்தைக் குறைக்கும் பொருட்டு கடலில் வீசினார். செய்வதறியாது இருந்த பயணிகள் இதற்கு காரணம் யார் என அறிய சீட்டுக் குலுக்கிய போது யோனாவின் பெயர் வரவே யோனா தான் யார் என தன்னை வெளிப்படுத்தியதுடன் கடவுளின் அழைப்பையும் கூறி தன்னாலே இவை இடம்பெறுகின்றது என உணர்ந்து தன்னை கடலில் வீசும்படி கூற கப்பலில் இருந்தவர்கள் கரை சேர முயற்சித்தும் அது முடியாமல் போனதால் யோனாவை கடலில் வீசினர். கடலில் வீசப்பட்டவரை திமிங்கிலம் மூன்று நாட்கள் இரவும் பகலும்  அதன் வயிற்றுக்குள் வைத்திருந்த வேளையில் தன் தவறினை உணர்ந்து இறைவனிடம் செபிக்கின்றார். இறைவன் அவர் மீது இரக்கம் கொள்கின்றார். திமிங்கிலம் அவரை நினிவேயில் கரை சேர்க்கின்றது. இரக்கம் கொண்ட இறைவனது செய்தியை துணிவுடன் அறிவித்தார். ‘இன்னும் நாற்பது நாட்களில் நினிவே எனும் நாடு அழிக்கப்படும்’ என்ற செய்தியை உரத்த குரலில் அறிவித்ததை முன்னிட்டு நினிவே நகர அரசன் முதல் அனைத்து மக்களும் சாக்கு உடை உடுத்தி தம் தீய வழிகளையும், கொடும் செயல்களையும் விட்டொழித்து உணவுகளை சுவைக்காது சாம்பல் மீது உட்காந்து கடவுளை நோக்கி தவம் இருந்தனர். இதனால் இரக்கம் கொண்ட இறைவன் அவர்களை மன்னித்து வரவிருந்த அழிவைத் தடுத்தார். அனைவரும் அழிவிலிருந்து தப்பித்துக் கொண்டனர். இதனால் கோபமுற்ற யோனா கடவுள் மீது சினமுற்றார். இதனால் தனது உயிரையே எடுத்துக் கொள்ளுமாறு இறைவனிடம் வேண்டுகிறார். நினிவே நகரிலிருந்து வெளியேறி அதன் கிழக்கே பந்தல் அமைத்து  உட்காந்து நினிவேக்கு நிகழவிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தார். அங்கு வளர்ந்த ஆமணக்குச் செடி அழிந்து போனதை முன்னிட்டு மீண்டும் கோபம் கொண்டு தான் சாவதே மேல் எனக் கூறி கோபம் கொள்கின்றார். அதற்கு கடவுளாம் இறைவன் ‘ஆமணக்குச் செடிபற்றி பேசி மக்கள் மீது கொண்ட இரக்கத்தை வெளிப்படுத்துகிறார்.’ (யோனா 4:9-11) இவ்வாறாக யோனாவிற்கு பதில் அளிக்கிறார். யோனாவின் இறைசெய்தி நிகழாது இருப்பினும் கடவுளின் பார்வையில் யோனாவின் தூதுரைப்பணி வெற்றி பெற்றது என்பது தெளிவாகிறது.


யோனாவின் வாழ்க்கையானது இன்றைய சமூகத்தில் எம்மை இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ எத்தணிக்கிறது. அந்தவகையில் கடவுள் எம்மிடம் கேட்கும் கடினமானதாய், ஏன் எம்மால் செய்ய முடியாத ஒன்றாக கூட இருக்கலாம். கடவுளின் இறையரசைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பது கூட நமக்கு ஒரு சவாலாக அமையலாம். ஆனால் இயேசு கிறிஸ்து சொன்ன கருத்துக்களான ‘எல்லாமே கடவுளால் முடியும்’ (மாற் 10:27) என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. இறைவனால் முடியாதது என்று இவ்வுலகில் எதுவுமில்லை என்பதை நாம் மறக்க, மறுக்க முடியாத உண்மையாகும். இறைபணியில் இருந்து தப்பிச் செல்வதற்காக கப்பலேறிய யோனா தன்னாலே எல்லோரும் சாகப்போகிறார்கள் என்பதை உணர்ந்து தானாக முன்வந்து தன்னை கடலில் வீசும்படி கூறுகிறார். இங்கு யோனாவின் தைரியம், தன்னலமற்ற மனப்பான்மை, இறைவன் மீது கொண்ட அசைக்க முடியாத விசுவாசம் என்பன வெளிப்படுத்துகிறது. நாமும் இத்தகைய குணவியல்பை கொண்டிருக்க வேண்டும் என்பதை இறைவன் விரும்புகிறார். ஆரம்பத்தில் இறைவார்த்தைக்கு செவி கொடுக்காமல் தன் விருப்பப்படி செயற்பட்டாலும் இறைவிருப்பத்தை உணர்ந்ததுடன் தன் தவறையும் உணர்ந்து மனம் நொந்து வருந்துகிறார்.

இன்றைய நவநாகரீக உலகில் தாம் செய்வது தவறு என்று கூட வருந்தி உணர முடியாத நிலை தவறில்லை எனும் போது ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும், அவர்கள் செய்ததிற்கே நான் செய்தேன் என்ற பழிக்குப் பழி போன்ற உணர்வுகள் மலிந்து காணப்படுகிறது. இத்தகைய உணர்வுகளில் இருந்து வெளியேற முற்படுகின்றோமா? இன்று எம் சமூகத்தில் பல சமுதாய சீர்கேடுகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இத்தகைய சமுதாய சீர்கேடுகளை  துணிச்சலுடன் தட்டிக் கேட்கின்றோமா?  பாதிக்கப்பட்டவர்களை கரிசணையுடன் பாதுகாத்து பராமரிக்கின்றோமா? உயிருள்ள கிறிஸ்து ஆண்டவரை பின்பற்ற ஆயத்தமாக உள்ளோமா? இன்றைய இளைஞர், யுவதிகள் ஏன் சிறுவர்கள் கூட புலனம், கணனி விளையாட்டு, முகப்புத்தகம், தொலைக்காட்சி நாடகம், கீச்சகம் போன்ற சமூக வலைதளங்களுக்குள் சிக்கி தம் வாழ்க்கையை சீர்குலைத்து பயனுள்ள நேரங்களை தேவையற்ற விதமாக செலவிடுகின்றனர். ‘ஞாயிறு தினங்களிலும், கடன் திரு நாட்களிலும் முழுத் திருப்பலி காண்பாயாக’ என்பது திருச்சபையின் முதற்கட்டளையாக உள்ளபோதும் இதை அனைத்து கிறிஸ்தவர்களும் கடைப்பிடிக்கின்றனரா? கல்வாரிப் பலி, வெறும் கடமைப் பலியாக மாறுகின்ற நிலை காணப்படுகிறது. இவற்றையெல்லாம் சிந்திக்க முற்படுகின்றோமா? மனிதர்கள் பலவீனமானவர்கள் என்பது நாம் அறிந்த உண்மையாகும். அவர்களுடைய வாழ்க்கையில் கோபம், பொறாமை, வஞ்சகம், எரிச்சல், களவு போன்ற தீய எண்ணங்களும் அவனை ஆட்கொள்கின்றது. ஆகவே அனைத்து மனிதர்களும் தவறுகள் செய்யலாம். இருப்பினும் அதை உணர்ந்து திருந்தி கடவுளுக்கு ஏற்றவர்களாக வாழ்வது எமது கடமையாகும். இதையே யோனாவின் அனுபவம் எமக்கு கற்றுத் தருகின்றது.

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எந்த நபரையும் இறைவனால் மீட்க முடியும். கதி கலங்கி நிற்போரை கூட கண்ணோக்கிப் பார்க்க கூடியவர் இறைவன். அவராலேயே நாம் சுவாசிக்கின்றோம், வாழ்கின்றோம், அவருக்கு கீழ்ப்படிந்து நடப்பது எமது கடமையாகும். கீழ்ப்படிவதன் மூலம் இறைவனுக்கு நன்றி செலுத்த முடியும். எச் சந்தர்ப்பத்திலும் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையை இழக்கக் கூடாது. அவர் விருப்பத்திற்கு செவி கொடுத்து நடக்க வேண்டும். இறைவன் எமக்குத் தந்துள்ள பொறுப்புகளை அறிந்து இறைவிசுவாசத்துடன்  அதை கடைப்பிடித்து வாழ வேண்டும். கடவுள் நியாயமானவர், இரக்கமுள்ளவர், வளைந்து கொடுப்பவர், மக்கள் மனந்திருந்தி நல்வழியில் நடக்க ஆவலாய் இருப்பார். அனைவரிடத்திலும் அன்பு கொண்டுள்ளார். அடித்தலை விட அணைத்தலே அவரது இயல்பாகும். பாவிகளின் அழிவையல்ல அவர்களது மன மாற்றத்தையே விரும்புகிறார். அனைவரையும் சமமாகக் கருதுகிறார். மனிதர்களாகிய நாம் ஏழைகள், பணக்காரர்கள், பலவீனர்கள், தைரியசாலிகள், பெரியர், சிறியர், அதிகாரம் கொண்டோர், அதிகாரம் அற்றோர் என்ற வேறுபாடுகளைக் களைந்து இறைவனின் பார்வையில் அனைவரும் சமமானவர்கள் என்பதை உணர வேண்டும். வழிதவறிய ஆட்டையே நல்லாயன் தேடுவதைப் போல வழி தவறி நடப்போர் மனந்திருந்தி நல்வழியில் நடக்க வேண்டும் என்பதையே நம்  ஆண்டவர் விரும்புகிறார்.