கானானியப் பெண்ணின் நம்பிக்கை

Mar 20, 2023 - 23:56
Feb 4, 2025 - 15:08
 0  74
கானானியப் பெண்ணின் நம்பிக்கை


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறையரசின் பெறுமதியை தெளிவாக எடுத்துக்காட்டும் மத்தேயு மற்றும் மாத்கு நற்செய்திகளாவன பிற இன கிறிஸ்தவர்களையும் யூதக் கிறிஸ்தவர்களையும் கலாபணைக் காலத்தில் திடப்படுத்துவதற்காகவும் அவர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கவும், இயேசு கிறிஸ்துவே வரவிருந்த மெசியா என்பதையும் தெளிவுபடுத்த எழுதப்பட்டிருந்தாலும் இன்றைக்கு எல்லோருக்கும் பொருந்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது சாலச்சிறந்த ஒன்றாகும்.

இயேசு தனது எடுத்துக்காட்டான வாழ்க்கையின் ஊடாக எல்லோருக்கும் முன் மாதிரிகையாக வாழ்ந்தார். தனது மூன்று வருட பணி வாழ்வில் புதுமைகள் வாயிலாகவும், உவமைகள் வாயிலாகவும் இறைவனையும், இறை அரசை மையப்படுத்தியும் போதித்தார்.

இயேசு வழங்கிய போதனைகளும் அவர் ஆற்றிய புதுமைகளும் மக்களை ஆச்சரியப்படுத்தியிருப்பதை நற்செய்திகளில் காண்கின்றோம். எனினும் இயேசுவைப் பொறுத்தவரையில் அவர் ஆற்றிய புதுமையைக் காட்டிலும் அப்புதுமை நிகழ்வதற்கு காரணமான மக்களின் நம்பிக்கை இயேசுவிற்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் உருவாக்கியது

என்பதையும் நற்செய்தி தெளிவுபடுததியது. வெளிப்புறத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களைவிட உட்புற மாற்றத்தையே இயேசு காண்கிறார். ஒவ்வொரு புதுமையிலும் இது வெளிப்படுவதை அவதானிக்க முடிகிறது. படைக்கப்பட்ட இயற்கை ஒழுங்கு முழுவதற்கும் தனிப்பட்ட விதமாய் இறைவனின் வல்லமையினால் மாத்திரமே நடைபெறும் அதிசய நிகழ்ச்சி அல்லது அற்புதமே புதுமை என்கிறோம் இது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்த நம்பிக்கை கானாணியப் பெண்ணிடத்தில் காணமுடிகிறது.


கானான் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் கானாணியர் எனப்பட்டனர். இப்பிரதேசமானது தெற்கில் சாக்கடலையும், வடக்கே ஏர்மோன் மலையையும், கிழக்கே யோர்தான் நதியையும், மேற்கே மத்திய தரைக்கடலையும் கொண்ட அழகிய நாடு, இதுவே இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட நாடுமாகும். இஸ்ரேல் மக்கள் அந்நாட்டில் குடியேறச் சென்றபோது அம்மண்ணிண் மயிந்தர்களுடன் போராடியதால் பல போர்களை நிகழ்த்தி கானாணியரை தீர், சீதோன் ஆகிய நகரங்களில் தள்ளிரன்.

இந்நகரங்கள் இன்று லெபனானில் உள்ளது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரயேலர் என அழைக்கப்பட்ட  மக்களே புதிய ஏற்பாட்டில் யூதர்கள் எனப்படுகின்றனர். இந்த யூதமரபில் வந்தவர்களான இயேசு கிறிஸ்துவின் காலத்தில் சில பெண்கள் நற்யெ;தியில் இடம்பெறுகின்றனர். உதாரணமாக மகதலமரியா, சமாரியப் பெண். இவர்களுள் கானாணியப் பெண்ணும் ஒருவராவார்.

அவரிடமிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை அவர்மேல் எம்பார்வையைத் திருப்புகிறது. கானாணியப் பெணிணின் நம்பிக்கை எனும் பகுதியானது மத்தேயு 15:21-28 வரையான பகுதிகளிலும், மாத்கு 7:24-30 வரையான பகுதிகளிலும் காணப்படுகிறது. இங்கு உறுதியான நம்பிக்கை பற்றியே ஆசிரியர் கூறவிளைவதை அவதானிக்கலாம். ஒரு தாயின் விடாமுயற்சி உடனான தாழ்ச்சியான வேண்டுதலையும், இறுதியில் அவர் வெற்றிபெற்றதனையும் காணமுடிகிறது.

மேலும் இயேசுவால் தனது மகளை குணமாக்க முடியுமென்ற தளராத நம்பிக்கையையும், அந்த நம்பிக்கையின் பயனாய் அவளது மகள் குணமடைந்ததையும் காட்டும் ஆசிரியர் இயேசுவின் மௌனம் அப்பெண்ணின் நம்பிக்கையை சோதிக்கும் காலமாகவே காட்டுகிறார். அத்துடன் மீட்பு என்பது கடவுளின் பிள்ளைகளுக்கு மாத்திரமே என்ற எண்ணத்தைக் களைந்து மீட்பு அனைவருக்கும் உண்டு என்பதை தெளிவாக விளக்குகின்றார்.


வரலாற்றின் தொடக்கத்திலேயே இஸ்ரயேல் மக்கள் பல்வேறு காலகட்டங்களில் எகிப்தியர், பபிலோனியர், அசேரியர், பாரசீகர், கிறேக்கர், உரோமையர், கானாணியர் என்று பலரால் துன்புறுத்தப்பட்டனர்.

அதேவேளை அவர்களால் அடிமைகளாகவும் ஆக்கப்பட்டனர். இதனால் யூதர்கள் இவர்களை வெறுத்தொதிக்கினர்; பிற இனத்தவர்களாக கருதினர். அதேவேளையில் கலப்புத்திருமணம் செய்தவர்களையும் (உதாரணம் : சமாரியர்) வெறுத்தனர். இங்கு யூதர் அல்லாதோர் பிற இனத்தவர்களாகக் கருதப்பட்டனர்.

இவர்களை இருவிதமாகக் கூறுகையில் ஒருவர் இஸ்ரயேல் மக்கள் மத்தியில் நிரந்தர சட்டத்தை ஏற்றுக்கொண்டு அச்சட்டத்தால் பாதுகாக்கப் படுவர், மற்றவர் கானாணியர் அல்லது வேறு பெயரால் அழைக்கப்பட்டனர்.

யூதர்கள் பிற இனத்தவர்களை பாவிகளாகவும், சபிக்ப்பட்டவர்களாகவும் கருதி அவர்களுடன் பழகுவதைத் தவிர்த்தனர், மேலும் தங்களை கடவுளின் பிள்ளைகள் என்றும் பிற இனத்தாரை நாய்களாகவும் அழைத்தனர்.

இவர்கள் கானாணியப் பெண்களை ஞானம் இல்லாதவர்களாக கருதிய வேளையிலும் யூதப் பெண்களை அடிமைகளாகவும், குற்றப் பளியினை சுமப்பவளாகவும் நடாத்தியதுடன் அவர்களுடைய திருமண வாழ்க்கை ஒரு சிறைக் கூடமாகவே அமைந்தது.


இயேசுவின் மீட்புப் பணிவாழ்க்கையில் பெண்களும் முக்கிய பணி வகிக்கின்றனர். தான் ஒரு யூதனாகவும் இருந்தாலும் தனது வாழ்க்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார் இயேசு. பலரது பாவ வாழ்க்கையை மாற்றுகிறார். உதாரணமாக விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் சமாரியப் பெண் போன்றோரைக் குறிப்பிடலாம்.

மேலும் ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலமரியா, யோவன்ணா, சூசன்ணா போன்றோர் பெண் சீடர்களாகவும் இருந்தனர். அத்துடன் தனது உவமையிலும் பெண்களைக் குறித்து பேசுகின்ற அதேவேளையில் புதுமையிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதனைக் காணமுடிகிறது.

அந்தவகையில் கானாவூர் தருமண நிகழ்வில் தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். ஊனமுற்ற பெண், நையிண் ஊர் கைம்பெண்ணின் மகள், பேதுருவின் மாமியார், இரத்தப் போக்குடைய பெண் என்று யூதப் பெண்களுக்கு மீட்பை பெற்றுக் கொடுத்தாலும், கானாணிய பெண்ணின் மகளை குணமாக்கியதோடு பிற இனத்தாருக்கு மீட்பு உண்டு என்பதை வெளிப்படுத்துகிறார்.

யூதர்கள் ஒரு காலத்தில் நாடோடிகளாக இருந்து பின்பே கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். இவர்கள் தங்களது கடந்த கால அனுபவத்தை அடிப்படையாக வைத்து பிற இனத்தாரை வெறுத்தாலும், இயேசு அவர்களை ஒதுக்கவில்லை என்பது கானாணியப் பெண்ணின் நம்பிக்கைப் பகுதி வெளிப்படுத்துகிறது.

யூதர்களின் விசுவாசத்தை விட கானாணியப் பெண்ணின் விசுவாசம் பெரியது என்பதை விளக்க கானாணியப் பெண் கிறிஸ்து மேல் கொண்ட உயரிய நம்பிக்கையால் நாயைப் போல தன்னை தாழ்த்திக் கொள்ள தயங்கவில்லை என்பதை தம் சீடர்களுக்கு புலப்படுத்தவே அந்த வார்த்தையை (மத்தேயு 15:26) பயன்படுத்துகிறார். இதனூடாக கிறிஸ்து தரும் மீட்பு ஒரு சாராரை சார்ந்தது மட்டுமல்ல அனைவருக்குமானது என்பது புலனாகிறது.


இயேசு கூறிய பழமொழியை அந்தப் பெண் பலமுறை கேட்டிருந்தாலும் இயேசுவின் வாயிலிருந்து புதிய தாக்கத்துடன் வெளிப்படுவதை உணர்கிறார். இயேசுவினுடைய வார்த்தைக்கு புது விளக்கம் தருகின்றார். அதாவது எந்தவொரு வீட்டிலும் பிள்ளைகளும் நாய்க்குட்டியும் ஒன்றாகத் தான் உண்கின்றன என்கிறார். அதாவது பிள்ளைகள் சிந்தும் உணவுகளை நாய்க்குட்டியும் அந்நேரமே உண்டு மகிழ்கின்றது.

கடவுளின் மீட்பை முதனில் பெற்றவர்கள் யூதர்களாக இருப்பினும், அவர்கள் மீட்புப் பெறும் வரை ஏனையவர் காத்திருக்கத் தேவையில்லை என்பதை நாய்க்குட்டிகள் பாணியில் தாங்களும் மீட்பு என்கின்ற வாழ்வு தரும் உணவை சேர்ந்து பெற்றுக் கொள்ளலாமே என்பதை தனது வார்த்தை சாதுர்யத்துடன் மூலம் இயேசுவிடம் உதவியை நாடுகிறாள்.

இப் பெண் ஆரம்பத்திலேயே ‘ஐயா, தாவீதின் மகனே எனக்கு இரங்கும்’ என்று கூறி எம் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த வகையில் இயேசு தாவீதின் வழித்தோன்றல், ஆபிரகாமின் வழித்தோன்றல் என்பதை மத்தேயு 1:1 ‘தாவீதின் மகனும், ஆபிரகாமின் மகனுமான…’ குறிப்பிட்டுள்ளார்.

இந்த இயேசு தாவீதின் வழித்தோன்றல் என்பதற்கு வரலாற்றுக் கண்னோட்டம் போதுமானது. ஆனால் தாவீதின் மகன் என்ற அடைமொழி வழியே அவரை மீட்பராகவும், மெசியாவாகவும் ஏற்றுக்கொள்ள நம்பிக்கை கண்ணோட்டத்தை இப்பெண் பயன்படுத்தி இருப்பது எம்மை சிந்திக்க தோன்றுகின்றது. மேலும் கானாவூர் திருமண நிகழ்வில் மரியாளின் வேண்டுதலைப் போலவே இந்த கானாவூர் பெண்ணின் வேண்டுதலும் காணப்படுகிறது.

அதாவது தனது விண்ணப்பத்தைத் தெரிவிக்காமல் தனது மகளின் குறையை மட்டுமே எடுத்துரைக்கின்றார். இத்தகைய வேண்டுதலுக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்க வேண்டும். அன்று மரியாளிடம் காணப்பட்ட நம்பிக்கை இந்த கானாணியப் பெண்ணிடம் காணப்பட்டது என்பது தெளிவாகின்றது.

ஆரம்ப உரையாடலில் நாய்க் குட்டியாக உருவகிக்கப்பட்டவள் உறுதியான நம்பிக்கையால் அம்மா என்று அழைக்கும் நிலைக்கு ‘அம்மா உமது நம்பிக்கை பெரிது, நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்’ (மத்தேயு 15:28) உயர்த்தப்பட்டாள். அவது வேண்டுதலும் விண்ணப்பமும் நிறைவேற்றப்பட்டு அவளின் மகளின் நிலை சீராகி அந்நேரமே மகள் நலம் பெறுகின்றாள். இப்போது பந்தியில் பிந்தியதை அல்ல மாறாக தந்தையின் விண்ணகப் பந்தியில் ஆசீரைப் பெற்றுக் கொள்கின்றார்.


விசுவாசமே மலைகளை அசைக்கும் அதே போல விசுவாசமே இயேசுவின் இதயத்தையும் அசைக்கக்கூடியது. ஏனெனில் விசுவாசம் என்பது அன்பு மட்டுமல்ல ; நம்பிக்கை மட்டுமல்ல மாறாக அன்புடன் கூடிய நம்பிக்கையாகும்.

இந்த நம்பிக்கை ஆபிரகாம் முதல் இன்றைய திருச்சபை வரையிலும் காணப்படுகிறது. இறைவன் மீது கொண்ட நம்பிக்கையால் ஆபிரகாம் இன்றும் விசுவாசத்தின் தந்தையாய் போற்றப் படுகின்றார். இவரைப் போலவே நீதித்தலைவர்கள், இறை வாக்கினர்கள் என பலரும் இறைவனில் உறுதியான விசுவாசம் கொண்டிருந்தனர்.

இவ் விசுவாசம் ஆனது பழைய ஏற்பாட்டுடன் முடிவுறவில்லை நம் இயேசு கிறிஸ்து அவ் விசுவாசத்தினட ஊடாக கடவுளின் மீட்பை பெற்றுத் தருகிறார். இவரது பணி வாழ்வில் நம்பிக்கையின் வெளிப்படுத்தல்கள் ஏராளம். அந்த வகையில் இயேசுமிது மனிதர்கள் வைக்கும் விசுவாசத்தை வைத்தே அவர் பல புதுமைகளை மக்கள் மத்தியில் ஆற்றுகிறார்.

கானாணியப் பெண்ணின் நம்பிக்கை எனும் பகுதியில் எமக்கு எப்படி செபிக்க வேண்டும் என்பதை கற்பிக்கிறது. அதாவது எமது விண்ணப்பத்தை எழுப்பாமல் எமது குறைகளை மாத்திரமே கூற வேண்டும் உள்ளத்தை திறந்து வைப்பதும், உண்மைகளை சொல்லுவதுமே அழகான செபம் ஆகும்.

ஆனால் இத்தகைய செபத்தை செபிக்க ஆள்ந்த நம்பிக்கையும் மனத் துணிவும் அவசியம். மேலும் இயேசுவின் மௌனம் எமது விசுவாசத்தை சோதிக்கும் காலம் என்பதை உணர்ந்து மனந்தளர்ந்து போகாமல் இறைவன் மீதான நம்பிக்கையையும், உறவையும் வலுப்படுத்த வேண்டும்.
தாழ்ச்சி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். கானாணியப் பெண்ணிடம் காணப்பட்ட மற்றுமொரு முக்கிய பண்பு இது.

இதற்கு சிறந்த ஒரு எடுத்துக் காட்டாக பரிசேயனும், ஆயட் காரணும் எனும் உவமையைக் குறிப்பிடலாம். ஏனெனில் எம் ஒவ்வொருவருக்கும் தாழ்ச்சி மிக அவசியமான ஒன்று. ‘எமது ஆடையின் நுனியைத் தொட்டார் நலம் பெறுவேன’; என்ற இரத்தப் போக்குடைய பெண்ணின் பணிவும், ‘ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் மகன் நலமடைவான்’ என்ற நூற்றுவத் தலைவனின் பணிவும் எம்மில் இருக்கின்றதா? சிந்திப்போம், செயற்படுவோம். ஒரு செபத்தில் நம்பிக்கை, விடா முயற்சி, பணிவு, தாழ்ச்சி என்பன கட்டாயம் காணப்பட வேண்டிய ஒன்றாகும். இவை இருக்குமே ஆனால் எமது செபமும் இயேசுகிறிஸ்துவால் அங்கிகரிக்கப்படும் என்பதே கானாணியப் பெண்ணின் நம்பிக்கை வெளிப்படுத்துகிறது. இயேசு என்கின்ற வாழ்வு தரும் உணர்வு அவரது பிள்ளை என்ற உரிமையை எமக்குத் தந்துள்ளது.

இயேசு கிறிஸ்துவின் கொடியில் கிளைகளாக இணைந்துள்ள நாம் எமது வாழ்க்கையும் விசுவாசமும் எப்படி இருக்கின்றது என்பதைப் பற்றி ஆராய வேண்டும். இயேசுவால் மட்டுமே மீட்பை தரமுடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையையும் தன்னையே தாழ்த்திக்கொள்ள தயங்காத மனநிலையும் இடைவிடாமல் செபிக்கும் உள்ளமும் எம்மில் இருக்க வேண்டும்.  எமது வாழ்க்கை எப்போதுமே செபத்தின் ஊடாக இறைவனில் ஒன்றித்திருக்க வேண்டும்.