ஆசிரியர் தின கட்டுரை

வெற்றிகரமான ஆசிரியர் பணியை நோக்கி........

ஆசிரியர் தின கட்டுரை

வெற்றிகரமான ஆசிரியர் பணியை நோக்கி........

ஆசிரியத் தொழில் என்பது உலகில் காணப்படும் ஓர் உன்னத சேவை ஆகும். உலகில் இரண்டு புனிதமான இடங்கள் காணப்படுகின்றன. ஒன்று தாயின் கருவறை. இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப் பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவைப் பெறுகிறான். 

ஆசிரியத்துவம் பற்றி பேசும் போது கூறப்படும் ஒரு பிரபல கூற்றே "வகுப்பறையில் நுழையும் அனைவருமே ஆசிரியர்கள் கிடையாது. மாறாக மாணவர்களின் இதயங்களில் நுழைபவர்களே ஆசிரியர்கள் ".

ஒரு பிள்ளை பிறந்து வளர்ந்து சமூகத்திற்குள் உள்வாங்கப்படுவதன் ஆரம்ப அடிப்படை பாடசாலைகளிலேயே இடப்படுகின்றன. இப்பணியை பாடசாலையில் ஆசிரியர்களே முன்னெடுக்கின்றனர். எனவே ஒரு சமூகத்தை கட்டமைக்கும் ஆரம்ப அடிப்படையை இடுபவர்கள் இவ்வாசிரியர்களே. எனவே சமூகத்தை கட்டமைக்கும் பாரிய பொறுப்பை தம் கைகளில் சுமந்து நிற்கும் ஆசிரியர்கள் எப்போதும் ஒரு வெற்றிகரமான ஆசிரியராக தம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இன்றேல் முழு சமுதாயமுமே ஒருநாள் கைசேதப்பட வேண்டிய ஒரு துரதிஷ்டம், ஏற்படும் என்பது நிச்சயம். 

ஒரு வெற்றிகரமான ஆசிரியர் தன்னகத்தே சில பண்புகளை கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக தமது ஆளுமையை சிறந்த முறையில் வெளிக்கொணர்ந்து மாணவர்களை கவர்வதற்கு இப்பண்புகள் இவர்களுக்கு துணை புரியும். அவற்றை பின்வருமாறு நோக்கலாம்.

ஆசிரியர் தொழிலில் நுழையும் ஒருவர் முதன்முதலாக அறிய வேண்டிய விடயம் தான் இறுதிவரை எவ்வாறு மாணவர்களை வெற்றிகரமாக வழி நடத்தலாம் என்பதை ஆகும் .அதாவது வெவ்வேறுபட்ட திறன்களுடனும் திறமைகளுடனும் ஆசிரியப் பணிக்குள் நுழையும் ஒருவர் கால ஓட்டத்தில் தமது திறமைகளையும் திறன்களையும வெறுமனே வீணாக மழுங்கிப் போய் விடாது நவீன தொழில்நுட்பு உலகுடன் எவ்வாறு தன்னை பொருந்தச் செய்து வெற்றிகரமாக நடை போடலாம் என்பதை அறிந்து அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றேல் துரித மாற்றங்களுக்கு உட்பட்டு வரும் நவீன தலைமுறையினருக்கு மத்தியில் காலாவதியான ஒரு ஆசிரியராக அடையாளம் இழந்து போகும் அவலம் ஏற்படும். எனவே ஆசிரியர்கள் வெற்றிகரமான முறையில் தமது பணியை முன்னெடுக்க வெவ்வேறு உபாயங்களின் ஊடாக தம்மை தயார்படுத்திக் கொள்வது அவசியம். அதில் பிரதானமானது ஆசிரியர்கள் எப்போதும் வாழ்நாள் முழுவதும் கற்பவராக இருக்க வேண்டும் .அதாவது கற்றல் என்பது ஒரு கட்டத்துடன் நிறைவடைய கூடிய ஒன்றல்ல. கல்விக்கு எல்லையே கிடையாது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகை பொருத்தவரை அறிவு என்பது தாராளமாக ஊற்றெடுக்கும் யுகமாக காணப்படுகின்றது. தகவல் பரிமாற்றம் நொடிப்பொழுதில் இடம் பெறுகிறது. எதையும் விரல் நுனியில் கற்றுக் கொள்ளும் வசதி காணப்படுகின்றது. நேற்றைய அறிவு இன்று காலாவதியாகிவிடும் நிலை காணப்படுகின்றது. ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் புதுப்புது அறிவுகளும் தொழில்நுட்பமும் அறிவியல் உலகை ஆக்கிரமித்த வண்ணம் உள்ளது. இத்தகைய ஒரு அசுர வேக வளர்ச்சியில் செல்லும் ஒரு தலைமுறையினருக்கே நாம் இன்று கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் மனதில் கொண்டு செயல்படுவது முக்கியமாகும். ஒவ்வொரு நாளும் இற்றைப் படுத்தப்படும் அறிவை ஆசிரியர்கள் ஏதோ ஒரு வழியில் பெற்று தம்மையும் தினமும் இற்றைப் படுத்திக் கொள்ள வேண்டும் .இதன் பொருட்டு நவீன தொழில்நுட்ப சாதனங்களை தாராளமாக அணுகக்கூடிய அறிவுடையவராக ஒரு ஆசிரியர் மாற வேண்டும். எடுத்துக்காட்டாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் கற்றல் கற்பித்தலில் ஏற்பட்ட உடனடி மாற்றத்தை இதற்கு குறிப்பிடலாம். விரும்பியோ விரும்பாமலோ கற்றல் கற்பித்தலுக்கு நவீன தொழில்நுட்பத்தின் துணையை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதன்போது இத்தொழிநுட்பங்களை வெற்றிகரமாக பயன்படுத்தும் அறிவை பெற்றிருந்த ஆசிரியர்கள் வெற்றிகரமாக தமது கற்பித்தல் பணியை முன்னெடுத்தனர். எனவே மாறிவரும் உலகிற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்வது ஆசிரியர்களின் கட்டாய கடமை எனலாம். 

நவீன தொழில்நுட்ப சாதனங்கள் ஆசிரியர்களுக்கு தங்களின் கற்பித்தல் முறைகளை மாற்றி அமைக்க உதவும். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் கருத்துப்படி தகவல் தொடர்பு சாதனங்களின் சிறந்த பயன்பாடு என்பது தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் மாணவர்களின் புரிதல் மற்றும் சிந்தனையை முழு வகுப்பு அல்லது சிறு குழு விவாதங்கள் மூலம் சீர்படுத்துவதாகும்.. அதாவது இம்முறை மூலம் கற்பித்தல் என்பது ஆசிரியரை மையப்படுத்திய முறையில் இருந்து மாற்றம் பெற்று கற்பவரை மையப்படுத்திய முறைக்கு மாற்றுகிறது. அது மட்டுமின்றி ஒரு சிறந்த ஆசிரியர் தகவல் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி கற்பிக்கும் போது மாணவர்கள் கடினமான பாடங்களை கூட இலகுவாகவும் எளிதாகவும் புரிந்து கொள்வர் .ஆசிரியர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பங்களை கற்பித்தல் பயன்பாட்டில் சிறப்பாக ஒருங்கிணைக்க அவற்றை பயன்படுத்த தேவையான திறன்கள் பற்றி  மட்டும் அறிவது போதாது. மாறாக சரியான வளங்களை தேர்ந்தெடுக்க மற்றும் மதிப்பிட ஆசிரியர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பற்றிய விரிவான தொடர் பயிற்சிகள் அவசியம். அத்துடன் கற்பித்தல் முறைகளை மேம்படுத்த அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதில் அதிக கவனம் எடுப்பது அவசியம். 

அதேபோல் ஒரு வெற்றிகரமான ஆசிரியர் எப்போதும் மாணவர்கள் மத்தியில் நேர் மனப்பாங்குகளையும், சுதந்திர உணர்வையும், கற்றல் தொடர்பான ஆர்வத்தையும் தூண்டக்கூடியவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் என்பவர்கள் அனைவரும் ஒரே மனநிலையுடன் பாடசாலைக்கு சமுகம் தருவது கிடையாது. மகிழ்ச்சியான மனநிலையில் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் இருப்பது போல் உளநெறுக்கீடுகளுக்கு உட்பட்ட நிலையில் பாடசாலைக்கு வரும் மாணவர்களும் ஏராளமானவர்கள் காணப்படுகின்றனர். குடும்பச் சூழல் சார்பான பிரச்சினைகள்,  பொருளாதார ரீதியான பிரச்சினைகள் ,நோய் நிலைமைகள் என்பன இதற்குப் பின்னணிக் காரணங்களாக அமையலாம். எனவே ஒரு வெற்றிகரமான ஆசிரியர் இம்மானவர்களை சரியாக இனம் கண்டு அவர்களுக்கு ஏற்ற விதத்தில் சிறந்த வழிகாட்டல்களை வழங்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். 

அதேபோல் ஒரு ஆசிரியர் எப்போதும் போதனா இலக்குகள், குறிக்கோள்களை விளங்கி அதற்கேற்ற விதத்தில் தனது போதனையை வடிவமைத்து கொள்பவராக காணப்படுவர். மாணவர்களை ஆக்கபூர்வமான சிந்தனையாளர்களாக மாற்றுவதற்கும் அவர்களை முன்னேற்றுவதற்கும் உரிய சூழலை உருவாக்குவதற்கு பல்வேறு வகையான போதனா அணுகுமுறைகளை பயன்படுத்துவர். போதனா வினைத்திறன் பற்றி நோக்கும் போது மூன்று முக்கிய வகிபாகங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

  1. கடத்தல் வகிபாகம்
  2. கொடுக்கல் வாங்கல் வகிபாகம் 
  3. நிலை மாற்று வழிப்பாகம்

 இம்மூன்று அம்சங்களிலும் நிலை மாற்று வழிப்பாகம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். காரணம் இன்றைய கல்விச் சமூகம் எதிர்பார்க்கும் தேர்ச்சியினை மாணவர்களிடையே ஏற்படுத்துவதற்கும் நவீன மற்றும் பின்னவீனத்துவ தேவைகளை நிறைவு செய்வதற்கும் நிலைமாற்று வகிபாகம் முக்கியத்துவம் உடையதாகும். எனவே எதிர்கால தேவைகளை நிறைவு செய்யும் வகையிலான மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் பாரிய பொறுப்பை ஏற்றுள்ள ஆசிரியர்கள் புதிய நிலைமாற்று வகிபாகத்தை நன்கு விளங்கி அதனை வெற்றிகரமாகக் கொண்டு நடத்துவதற்கு தமது போதனா வினைத்திறனை விருத்தி செய்வது அவசியம்

அதேபோல் ஒரு வெற்றிகரமான ஆசிரியரிடம் காணப்படும் பிறிதொரு முக்கிய பண்பு அவர் ஒரு சிறந்த ஆலோசகராக ,உளவளத் துணையாளராக செயல்படலாகும். அதாவது பாடசாலைக்கு வரும் பிள்ளைகள் எப்போதும் ஒரு பெரியவரில் தங்கி இருப்பவர்கள் ஆவர். பெரும்பாலும் இவர்கள் பெற்றோரின் அன்பையும், அரவணைப்பையும் ஆதரவையும் நாடி நிற்பவர்கள். எனினும் தம் வாழ்வில் எதிர்கொள்ளும் ஒரு சில சவால்களை அல்லது சிக்கல்களை பெற்றோரிடமோ உறவினரிடமோ பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள் . சில வேளை சில மாணவர்களுக்கு தமது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ள பொருத்தமான நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உளநெறுக்கீடுகளால் பாதிக்கப்படும் ஒரு சில மாணவர்கள் அதனை பகிர்ந்து கொள்ள யாரும் இன்றி தனக்குத்தானே துன்பப்பட்டு தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்கக்கூட தயங்காத நிலைக்கு மாறி விடுகின்றனர். இத்தகைய நிலையில் ஒரு ஆசிரியர் தன்னிடம் கற்கும் மாணவர்களிடம் நெருங்கி பழகும் போதே குறித்த மாணவர்களை இலகுவாக இனங்காணக் கூடியவராக இருக்க வேண்டும் .தமது பிரச்சினைகளை ஆசிரியருடன் பகிர்ந்து கொள்ள மாணவர்களை தூண்ட வேண்டும். இந்நிலையில் வெற்றிகரமான ஒரு ஆசிரியர் எப்போதும் இத்தகைய நிலைமைகளை வெற்றிகரமாகவும் விவேகமாகவும் அணுகக் கூடியவராக இருந்து குறித்த மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வுகளை வழங்கக்கூடியவர்களாக தேவையான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கக் கூடியவராக மாற வேண்டும். ஒரு ஆசிரியர் இவ்வாறு செயல்படும் போது உள நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள ஏராளமான மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் தீர்ந்துவிடும். அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு இது ஒரு அடித்தளமாக அமையும்.

 ஒரு வெற்றிகரமான ஆசிரியரின் பிறிதொரு முக்கிய பண்பாக பொறுமை , நிதானம் தூரநோக்குடன் செயல்படும் தன்மை என்பவற்றை குறிப்பிட முடியும். அதாவது ஒரு ஆசிரியரை பொறுத்தவரை இரண்டு தளங்களில் பணிபுரிபவர் ஆவார். மாணவர்களுடனான இடைவினையைப்  போலவே முகாமைத்துவத்துடனான இடைவினைக்கும் உட்பட்டவராகவே ஒரு ஆசிரியர் செயல்பட வேண்டி இருக்கிறார். பாடசாலை முகாமைத்துவத்தை பொருத்தவரை ஆசிரியர்களின் பங்களிப்பே முகாமைத்துவத்தின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மாணிக்கும் காரணி என்னலாம்.  பாடசாலை முகாமை துவத்துடன் ஒரு ஆசிரியர் முரண்பட்ட போக்கை கையாளும் போது பாடசாலையில் ஒரு ஆரோக்கியமற்ற சூழல் உருவாகும் .இதனால் மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு முழுச் சமுதாயத்திற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். வெற்றிகரமான ஒரு ஆசிரியர் ஒருபோதும் இத்தகைய ஒரு நிலைக்கு அடித்தளம் இடமாட்டார். பாடசாலை வளாகத்திற்கும் தனக்கும் ஏற்படும் எந்த ஒரு பிரச்சினையையும் சவாலையும் விவேகமாக எதிர்கொண்டு அதன் மூலம் தனக்கும் பாடசாலை சமூகத்திற்கு மாணவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை எப்போதும் சிந்திப்பார். அவ்வாறு தூரநோக்குடன் சிந்தித்து நிதானமாக செயல்பட்டு முன்மாதிரிமிக்க சமுதாயம் ஒன்றைக் கட்டி எழுப்ப பாடுபடுவார்.

அதேபோல் வெற்றிகரமான ஒரு ஆசிரியர் எப்போதும் நேர முகாமைத்துவம் பேணக்கூடியவராக விளங்குவார். அதாவது பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு சமுகமளித்தல் , உரிய நேரத்திற்கு தன் பணிகளை முன்னெடுத்தல், பாடத்திட்டங்களை உரிய நேரத்துக்கு முடித்தல் போன்ற தன் பணியுடன் தொடர்புபட்ட அனைத்து காரியங்களையும் ஒரு நேர முகாமைத்துவத்தின் கீழ் மேற்கொள்வார். அத்தோடு நின்று விடாது தன்னிடம் கற்கும் மாணவர்களுக்கும் சிறு வயது முதலே நேர முகாமைத்துவத்தின் அவசியத்தையும் அதற்கான வழிமுறைகளையும் பயிற்றுவிப்பார். நேர முகாமைத்துவத்தை சரியாகப் பேணும் ஒருவர் எப்போதும் தான் சார்ந்து உள்ளவர்களையும் அதற்கேற்ப வழி நடத்துவதில் வெற்றி பெறுவார்.

 எனவே ஒரு சிறந்த வினைத்திறன் மிக்க சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்ப முனையும் ஆசிரியர்கள் எப்போதும் தன்னைத்தானே வளப்படுத்திக் கொள்பவராக இருக்க வேண்டும் .காரணம் இற்றைப் படுத்தப்படாத தகவல்கள் இன்றைய வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தினருக்கு எந்த வகையிலும் பொருத்தம் அற்றது. பெற்றோருக்கு அடுத்தபடியாக பிள்ளைகளின் உள்ளங்கள் நாடும் முன்மாதிரிகள் ஆசிரியர்களே என்ற அடிப்படையில் பிள்ளைகளுக்கு சிறந்த முன்மாதிரியை வழங்கும் ஆசிரியர்களே வெற்றிகரமான ஆசிரியர்களாக கணிக்கப்படுவர்.

எனவே புனிதமான இந்த ஆசிரியப் பணியில் இணையும் அனைவரும் வெற்றிகரமான ஒரு ஆசிரியராக மாற முயற்சி செய்வோம்.