ஆய்வு முயற்சிகளில் தெளிவத்தை ஜோசப்.

ஈழத்தின் சிறுகதையாளரும், நாவலாசிரியரும், இலக்கிய ஆய்வாளருமான மறைந்த தெளிவத்தை ஜோசப் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் தொகுப்பு கட்டுரை

Mar 14, 2023 - 21:28
Mar 15, 2023 - 20:54
 0  236
ஆய்வு முயற்சிகளில் தெளிவத்தை ஜோசப்.

 நன்றி :- திரு. அ . லெட்சுமணன்

லையகம் என்பதில் தெரிகின்ற புவியியல் நோக்கில் மட்டும் அர்த்தம் கொள்கின்ற போது இது ஒரு குறுகிய பிரதேச வாதமாகப்படலாம். ஆனால் குறிப்பிட்ட எல்லையை அன்றிப் பெருந்தோட்டத்துறை என்னும் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையைச் சார்ந்து வாழ்கின்ற ஒரு மக்கள் குழுவின் இருத்தலை; அவர்தம் சமூக உணர்வு பிரங்ஞையை ஒரு தேசிய சிறுபான்மை இனத்தின் எழுச்சியையே மலையகம் எனும் இப்பதம் குறிக்கிறது.   'உழைக்கப்பிறந்தவர்கள்' சிறுகதைத் தொகுப்பு முன்னுரையில் தெளிவத்தை ஜோசப்.

மேற்குறித்த உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் தன் படைப்பார்வத்தை சமூகம்சார் உந்துதலோடு இலக்கியம் படைத்த மலையகத்தின் முன்னோடி ஆளுமையாக தெளிவத்தை ஜோசப் கொள்ளப்படுகிறார். இவர் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக மலையக இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளதை அறிய முடிகிறது. இவருடைய எழுத்துக்கள் சிறுகதை, குறுநாவல் என்ற புனைவுகளோடும் விமர்சனம் மற்றும் திரைப்படம், தொலைக்காட்சி என்ற வகையில் தன் எழுத்துக்களை நிலைப்பெற செய்துள்ளார். பத்தி எழுத்துக்கள் வாயிலாக பல இதழ்களின் கனதியை உருவாக்குவதில் இவரது பங்கு சிறப்பிற்குறியதாகும். 'ஜோசப்பின் சமூக நிலைப்பட்ட, ஆள் நிலைப்பட்ட பண்புகள் இவரது பண்புகள் இவரது பார்வையை கூர்மையாக்கியுள்ளன. அதாவது அந்த பண்பாட்டு வட்டத்தினுள் அதன் சிசுவாக வாழுகின்றவொருவர் அந்த பண்பாட்டின் அதன் அடிநிலைப் பண்பாட்டின் இயல்புகளை இனங்காண்பது சுலபமாயிற்று. இதனால் தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துக்கள் மலையகத்தின் உள்ளக வாழ்க்கை நிலையில் ஏற்படும் உயிர்ப்புகளையும் மேல் நிலைப்பாட்டு அசைவியக்கித்தையும் நன்கு விளக்குகின்றன.' என்பார் பேராசிரியர் கா.சிவத்தம்பி.

சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர் மேடைப்பேச்சாளர் என்று பரவலாக அறியப்பட்ட அளவிற்கு ஆய்வாளர், இரசனைக் கட்டுரையாளர் என்று தெளிவத்தை ஜோசப் அறியப்பட்டமை குறைவே, என பேராசிரியர் செ.யோகராசா அவர்களின் ஆதங்க வரிகளும் கவனிக்கதக்கதாகும்.

படைப்புலகில் படைப்பாளியாக முனைப்பு பெறுகின்ற தெளிவத்தை ஜோசப் அவர்கள்; ஏனைய படைப்புகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்தும், ஆராய்ந்தறியும் ஈடுபாட்டோடும் தன் எழுத்துலகை வியாபகம் செய்துள்ளமை குறிப்பிடதக்கது. இவ் ஆய்வு முயற்சிகளை தன் சமூகம் சார்ந்த வரலாற்று தடங்களோடும் ஒப்பிட்டும் நகர்த்தியுள்ளமையை அறிய முடிகிறது. இவ்வாறமைந்த அவரது ஆய்வு முயற்சிகள் தொடர்பில் அவரது பங்குபற்றலையும் ஆவணப்படுத்தும் வகையிலேயே அக் கட்டுரையின் உள்ளடக்கம் அமையப்பெற்றுள்;து. மலையக இலக்கியத்தின் எழுச்சிக் காலமான அறுபதுகளுக்கு முன்பே எழுத்துலக வாழ்வில் தானும் உள்நுழைந்தவர். அன்று தொடக்கம் இன்று வரையில் படைப்பாளி என்பதற்கப்பால் கலை இலக்கிய செயற்பாட்டாளர் என்ற பரிமானம் குறித்த அவர் மீதான கவனத்தையும் இக் கட்டுரை தொடர்ந்து பேச விளையும். படைப்புகள் பற்றியும், படைப்பாளர்கள் பற்றியும் ஆய்வு நோக்கோடு ஆவணப்படுத்தும் அன்னாரின் முயற்சி மலையக இலக்கிய செல்நெறியில் மிக முக்கியத்துவம் பெறுகிறது எனலாம்.

அறுபது தொடக்கம் மூன்று தசாப்த காலங்களாக படைப்புகளுக்குள் முழுதாய் கவனத்தை செலுத்திய ஜோசப் அவர்கள் தொன்னூறுகளின் பிற்பகுதியில் இருந்து தன்னை ஓர் இலக்கிய ஆய்வாளராக பரினமித்துக்கொள்கிறார். குறிப்பாக மலையகம் தன்னை ஆய்வுத்துறையில் ஆழப்பதிந்துக்கொள்ள எண்பதுகளில் தொடங்கிய நிலையில் தொண்ணூறுகளின் பின்பே பொருத்தமான காலச்சூழ்நிலை அமைந்தது எனலாம். குறிப்பாக சாரல் நாடன், மு.நித்தியானந்தன், சாந்திக்குமார், ஜோதிக்குமார் ஆகியோரது ஆய்வு ரீதியான முயற்சிகள் குறிப்பிடத்தக்கவைகளாகும். தொடர்ந்து தொண்ணூறுகளின் பிற்பகுதியில் (1997) மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சராகவிருந்த  திரு. வீ.புத்திரசிகாமணி தலைமையில் இடம்பெற்ற மலையக தமிழாராய்ச்சி மாநாட்டு முயற்சி, ஆய்வுத்துறையில் மலையகம் மேலும் தடம்பதித்துக்கொள்வதற்கு உந்துசக்கியாக அமைந்தது எனலாம்.

மலையக தமிழாராய்ச்சி மாநாட்டு முன்னோடி நிகழ்வாக மலையகத்தில் கண்டி,  மாத்தளை, அட்டன், நாவலப்பிட்டி ஆகிய நகரங்களில் ஆய்வரங்குகள் இடம்பெற்றன. அவ் ஆய்வரங்குகள் மலையக கலை, இலக்கிய தடயங்களை மீட்டிப் பார்க்கும் அரங்குகளாக அமைந்தமை சிறப்பம்சமாகும். அவ் அரங்கொன்றில் தெளிவத்தை ஜோசப் அவர்களின் ஆய்வு முகத்தை தரிசிக்க முடிந்தமை குறிப்பிடதக்கதாகும். 'மலையக இலக்கியத்திற்கு கிறிஸ்த்தவர்களின் பங்களிப்பு எனும் தலைப்பில் தனது ஆய்வுரையை நிகழ்த்தினார். கிறிஸ்தவ வாதத்தோடு தலைப்பு தொடங்குகிறதே என்ற விமர்சனத்தோடு அரங்கினுள் நுழைந்தவர்கள், தெளிவத்தை ஜோசப் அவர்களின் உரையின் பின்னர் தெளிந்த முடிவோடு அரங்கை விட்டுச் சென்றிருப்பார்கள் என்பது திண்ணம். 'செந்தமிழ் கற்றோம்பிய சீர்சால் கிறிஸ்த்தவர்கள் பைபிளைத் தமிழில் மொழிப்பெயர்த்து இந்தத் தமிழ் மொழிக்கு எத்தனை சக்தி இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டினார்கள்.' என்பார் தெளிவத்தையார். உலக வரலாற்றில் மறுமலர்ச்சி காலம், அச்சு  இயந்திர கண்டுப்பிடிப்பு காலத்தோடு உலக மொழிகளின் வளர்ச்சியில் எத்தனை தாக்கம் செலுத்தி அவற்றின் வளர்ச்சியில் எத்துனை தாக்கம் செலுத்தி அவற்றின் வளர்ச்சியில் உறுதுணையாக இருந்திருக்கிறது என ஆழமான வாதத்தோடு அவருடைய முன்வைப்புகள் தொடர்கின்றன. இது உலக மொழிகளின் ஆற்றுகையை நிரூபணம் செய்கின்ற முனைப்புகளுடன் மேலும் கருத்துக்கள் பகிரப்பட்டன. தமிழிலே செய்யுள் வடிவங்கள் உரைநடையாக மாறுகின்ற நிலைப்பற்றி ஆழமாகவே இவரின் பார்வை அமைந்திருந்தது.

1860 களில் இலங்கையின் முதலாவது மலையக எழுத்தாவணமாக ஆப்ரகாம் ஜோசப்பின் 'கோப்பிக்காட்டுக்கும்மி' கொள்ளப்படுகிறது. இது பெருந்தோட்டப் பொறிமுறையில் முதலாளிகளின் பக்கம் சார்ந்த பரப்புரையாக அமைந்தாலும் கூட இதுவே முதல் பதிவாக அறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நூலில் ஆப்ரகாம் ஜோசப்

ஓ கோப்பி பயிரே

உலகின் விந்தை நீ

உனக்குறிய எசமானர்களை நாடி

பொற்குவை மிகுந்தோரைக்

கொணர்ந்திங்கு சேர்த்தாய்

ஓ கோப்பிப் பயிரே

சின்னஞ்சிறு......எனத் தொடங்கி கோப்பியின் சிறப்பையும், உழைப்பவர்களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தொடக்க பாடல்களில் அறியலாம். இவ்வாறே மலையகத்தின் முதலாவது நாவலாக மலையகத்தின் சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி முப்பதுகளில் வெளிவருகிறது. அதனை எழுதியவர் ஏ.போல் கிறிஸ்தவரே. தொடர்ந்து இன்று வரை கிறிஸ்தவ இலக்கிய ஆளுமைகளை பதிவு செய்வதையும் நோக்காகக்கொண்டதாகவே அவ் ஆய்வு முயற்சி அமைந்தமை குறிப்பிடதக்கது.

மலையக இலக்கியப் பரப்பினுள் துரைவியினுடைய பிரசன்னம் தெளிவத்தை ஜோசப்பினுடைய ஆய்வு முயற்சிகளுக்கு தூண்டுதலை ஏற்படுத்தியதனை அறிய முடிகிறது. மலையக இலக்கியம் வெளியீட்டுத்துறையில் துரை விஸ்வநாதன் அவர்களின் பிரவேசம் எண்பதுகளில் படைப்புகளை நூலாக்கும் பணி தொன்னூறுகளில் தீவிரமடைகிறது. தொன்னூறுகளின் இறுதியில் மலையக சிறுகதைகள் இரண்டு நூல்களாக தொகுக்கப்படுகின்றன.

  1. மலையக சிறுகதைகள்
  2. உழைக்கப் பிறந்தவர்கள்

இந்த இரு நூல்களின் தொகுப்பிற்கு பிரதான செயற்பாட்டளராக துரை விஸ்வநாதன் அவர்களால் தெளிவத்தை ஜோசப் தெரிவு செய்யப்படுகிறார். உண்மையிலும் இந்தப் பணிக்கு பொருத்தமான ஒருவராக தெளிவத்தை ஜோசப் அவர்களை தெரிவு செய்திருக்காவிட்டால் இப்பணி இவ்வாறு ஒரு முழுமையை அடைந்திருக்குமா? என்பது சந்தேகமே! இத்தொகுப்பினுள் கால அடிப்படையில் சகல பிரதேசங்களையும் அறிந்து மலையகம் பற்றி பேசுபொருளாக அமைந்த கதைகள், கதை அமைத்தவர்கள் அடையாளமாக ஆவணப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இந்த அனுபவங்களோடு மலையக சிறுகதை வரலாற்றை ஆய்விற்குட்படுத்தி ஆவணமாக்குகின்ற பணி மிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வரலாற்றை ஆவணப்படுத்தும் முனைப்பில் தினகரன் வாரமஞ்சரியில் தொடராக எழுதி வந்துள்ளார். பின்னாளில் இதன் தொகுப்பாகவே 'மலையக சிறுகதை வரலாறு' எனும் நூல் துரைவி வெளியீட்டகத்தின் வெளியீடாக வெளிவந்தது. இந்த ஆய்வு தொடர் பற்றி தினகரன் பிரதம ஆசிரியராக தொழிற்பட்ட ராஜ ஸ்ரீPகாந்தனின் பின்வரும் வரிகள் குறிப்பிடத்தக்கதாகும். 'ஓர் இனம் இன்றேல் இனக்குழுமம் தனது வரலாற்றைத் தானே எழுதும் போது மட்டுந்தான் வரலாற்று வழுக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். இந்த வகையில் தெளிவத்தை ஜோசப் அவர்களால் எழுதப்பட்ட மலையக சிறுகதை வரலாறு பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்தியுள்ளது. இது வெறுமனே ஓர் வரட்டுத்தனமான வரலாறாக அமையாது. நடைமுறை நிகழ்வுகளோடு கூடிய நெகிழ்ச்சியான வாசிப்பதற்கு சுவையான படைப்பாக அமைந்துள்ளது. இந்த சிரமமான பணியினைப்  பூர்த்தி செய்வதற்கு இவர் பல்வேறு தேடல்களையும் ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.'

மலையக சிறுகதைகளின் ஆரம்ப காலம்,  1920 – 1969 இடைப்பட்ட முன்னோடிகளின் காலம், அறுபதுகளின் பின் என்றவாறு மலையக சிறுகதைகளை கால அடிப்படையில் வரலாற்றை பதிந்திருப்பதைக் காணலாம். ஆய்வு நெறியியலுக்குறிய முறைகளுடன் ஒப்பிடும் போது அந்த நெறிமுறைகளுக்கு உட்படாது வாக்குமூலமாக அமைந்துவிடுகின்றன. அவ் வாக்குமூலங்கள் சான்றுகளுடன்; உள்ளடக்கப்படுவதுதான் இவரின் தனித்துவமாக விளங்குகிறது.. பின்னாளில் மலையக சிறுகதைகள் தொடர்பில் பல ஆய்வுகள் வெளிவந்திருந்தாலும் கூட இவரின் பார்வையை விடுத்து அல்லது தவிர்த்து எதுவும் எழுதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மலையக சிறுகதைகளை ஆய்வு செய்வதற்கு துணியும் போது இவரின் பதிவுகளை விடுத்து இவ் ஆய்வை மேற்கொள்ள முடியாது என்பதை திண்ணமாக கூறலாம்.

'தெளிவத்தை ஜோசப் பத்தி எழுத்துக்களிலேயே அதிக ஆர்வம் காட்டியவராகவும், அதன் பரிமானமாகவே அவரை பார்க்க முடியும் என இவரின் பத்தி எழுத்துக்கள் பற்றிய பார்வையை செலுத்திய மல்லிகைப்பூ சந்தி திலகரின் கூற்று கவனிக்கதக்கது. படைப்பிலக்கியத்தில் தான் ஈடுபாடு கொண்ட துறை மீது அவர் கொண்டிருந்த ஈடுபாட்டின் சாட்சியங்களாகவே அவரது வாக்குமூலங்கள் அமைந்துள்ளமை தக்க சான்றாகும். உலகில் உரை நடையின் தோற்றம் வளர்ச்சி, தமிழ் மொழியில் வளர்ச்சி என துள்ளியமான புரிதலுடன் மலையக சிறுகதைகள் சார்ந்து தன்னை அணுகச் செய்த அந்த அணுகுமுறை சிறப்பானதாகும்.

புனைவுகளில் நாவல் தொடர்பிலான அவரது ஈடுபாடடின் விளைவாக 'காலங்கள் சாவதில்லை' நாவலூடாகவே தன் முதல் பிரசவத்தை நிகழ்த்தியிருந்தார். பின்னர் பாலாயி தொகுப்போடு வந்த மூன்று நாவல்களோடு 'குடை நிழல்' 'நாங்கள் பாவிகளாக இருக்கின்றோம் அல்லது 1983' நாவல்களை பிரசவிக்கிறார். இவருடைய நாவல்கள் இலங்கையின் பிரதான இதழ்களில் பிரசவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நாவல் துறை பங்களிப்போடு நாவல் இலக்கிய வளர்ச்சி குறித்த தேடலில் பெற்ற தரவுகளை ஆய்வுப் பார்வையில் பதிய முனைகிறார். இதன் விளைவாக 2005 துரைவி நினைவுரையில் நாவல் பற்றிய பார்வை செலுத்துகிறார்.

1876 வேதநாயகம் பிள்ளையின் ' பிரதாப முதலியார் சரித்திரம்' தமிழில் தோன்றிய முதல் நாவலாகக் கொள்ளப்படுகிறது. 1885இல் உருவான சித்திலெவ்வையின் ' அசன்பே சரித்திரம்' இலங்கையின் முதல் நாவலாக கொள்ளப்படுகிறது. இலங்கையிலிருந்து வெளியான 'காவலப்பன்' நாவலே முதல் நாவலென 'செங்கை ஆழியான் நிறுவ விளைந்தார். மலையக நாவல் துறையின் முன்னோடிகளாக ஏ.போல், நெல்லையா, நடேசய்யர் போன்றோர் விளங்குகிறார்கள், 1924 தொடக்கம் 2010 வருடம் வரையில் 51 மலையக நாவல்களை பட்டியல் படுத்தி அவற்றின் படிமுறை வளர்ச்சியினை நோக்குகின்ற வகையில் இவரது இத்துறை ஆய்வுகள் கணதி பெறுவதைக் காணலாம். மலையக நாவல்கள் தொடர்பில் பேராசிரியர் க.அருணாசலம், பேராசிரியர் செ.யோகராசா ஆகியோரின் பார்வைகள் குறிப்பிடத்தக்கவைகளாகும். நாவல் இலக்கியம் தொடர்பில் பொதுப் பார்வையில் விஞ்சி நிற்கின்ற பேராசிரியர் கைலாசபதியின் அணுகுமுறையோடு ஒப்பிடுகின்ற தன்மையையும் இவரது எழுத்துக்களில் உணர முடிகிறது.

புனைவுகளில் நாவல், சிறுகதைகள் அச்சேறுகிறகின்ற இதழ்கள் பற்றிய கவனத்தை தெளிவத்தை ஜோசப் பதிவு செய்ய விரும்பியதன் பின்னணியில் இதழியல் பற்றிய அவரது எழுத்துருவாக்கங்களைக் காணலாம். இதழியல் பற்றிய அவரது  எழுத்துக்களை பின்வரும் அடிப்படையில் நோக்கலாம்.

  1. மலையக இலக்கியமும் இதழியலும்.
  2. இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும்.

மலையக இலக்கியமும் இதழியலும்.

மலையகத்திலிருந்து வெளிவந்த இதழ்களில் முதலாவது இதழாக லாரி கிருஸ்ணாவினுடைய ஜனமித்ரனே தொடங்கியது என சாரல் நாடன் குறிப்பிடுவார். அதைத் தொடர்ந்து 1960 வரையில் 85ற்கு மேற்பட்ட இதழ்கள் மலையகம் என்ற பிற்புலத்திலிருந்து வெளிவந்துள்ளன. இவற்றில் 'தேசநேசன்' 'தேசபக்தன்' போன்ற நடேசய்யரின் இதழ்களும் குறிப்பிடத்தக்கவைகளாகும். மலையக நாவல் இலக்கியத்திலும் முன்னோடியாக இனங்காணப்பட்ட எச். நெல்லையாவின் 'ஜனநீதிகள்' (1928) இதழும் குறிப்பிடத்தக்கது. பின்னர் 1930இல் எச். நல்லையா அவர்களைக் கொண்டே வீரகேசரி தனது பயணத்தை ஆரம்பித்தது. அவ்வாறே தினகரன் இதழ் மயில்;வாகனம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு தனது பயணத்தை 1932இல் தொடங்குகிறது. மலையக இதழ்களை பட்டியல் படுத்தும் பொறுப்பில் சாரல் நாடன் அவர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவ்வாறே ' மலையக தமிழ் சஞ்சிகைகள்' எனும் தலைப்பில் இரா.சர்மிளாதேவியின் ஆய்வுத் தொகுப்பு நூல் குறிப்பிடத்தக்கதாகும். மலையக இதழியல் துறையில் முக்கிய ஆவணமாக திகழும்  இந் நூலில் ஈழத்து இதழியல் தொடர்பிலான பதிவுகளையும் உள்ளடக்கியிருப்பது சிறப்பம்சமாகும். தெளிவத்தை ஜோசப் அவர்கள் இதழ்களை பட்டியல் படுத்தும் அதே வேளை 60களின் பின்னர் மலையக இலக்கியத்தின் எழுச்சிக்கு துணை நின்ற இதழ்கள் மீது அதீத கவனம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த இதழ்களோடு தான் கொண்டிருந்த தொடர்புகளை அனுபவ பதிவுகளாக்கியிருப்பதை அறிய முடிகிறது. இதில் இலங்கையின் தேசிய இதழ்களான வீரகேசரி தோட்ட மஞ்சரி, குறிஞ்சி பரல்கள் என்றவாறு பக்கங்களை ஒதுக்கியும், பின்னாளில் தினகரன் இதழ் மலையகம் குறித்து வழங்கிய முக்கியத்துவத்தையும் இவரது வாக்குமூல வரிகள் சான்றுகளாகின்றன. மலையக புனைக்கதை வளர்ச்சியில் 'மலைமுரசு' இதழின் வருகை பங்களிப்பு தொடர்பில் மிக முனைப்பாக இவரது எழுத்துக்கள் பேசுகின்றன. 'மல்லிகை' இதழின் மலையகம் குறித்த நேசப்பார்வை 'ஞானம்' இதழின் மலையகம் குறித்த அனுபவ பார்வைகளை தொடர்பிலான பதிவுகளை காணலாம். 'தாய்வீடு' இதழின் ஊடாக இப் பதிவுகளை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும்.

இலங்கையின் இலக்கிய வளர்ச்சியில் இதழ்களின் பங்குபற்றல் குறித்து நீண்ட பதிவை தெளிவத்தை ஜோசப் பதிகிறார். கதைச்சொல்லி என்பதற்கப்பால் வரலாற்று சொல்லியாக ஆய்வுப் பார்வையில் முன்வைக்கத் தெரிந்த லாவகம் இவரில் சிறப்பம்சமாகும். ' இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும்' எனும் தலைப்பில் நூலாக்கும் முயற்சியில் மூன்றாவது மனிதன் என்ற அமைப்பு ஈடுபடுகின்றமையும் தெளிவத்தையியலாளர்களுக்கு மகிழ்வைத்தருகின்ற விடயமாகும். நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், பருவகால இதழ்கள், சிறப்பிதழ்கள், என்ற வகையில்  இலக்கியத்திற்கு இவ் இதழ்களின் பங்களிப்புகள் தொடர்பான பதிவுகள் தொடர்கின்றன. அவ்வாறே அண்மைக்கால தினக்குரல், நவமணி போன்ற இதழ்களின் பங்களிப்புகள் குறித்தும் விதந்து பேசுகிறார். இத் தொடரை எழுத நிறுத்தியதன் பின்னர் அண்மைய இதழியல் பதிவுகளுக்குறிய ஆவணப்படுத்தல் பதிவில் வெற்றிடத்தை உணரமுடிகிறது.

புனைவுகள், இதழ்கள் தொடர்பிலான ஈடுபாட்டின் காரணமாக இத் துறைசார் நிபுணத்துவத்தை தான் வளர்த்துக்கொள்கிறார். இதன் விளைவாக இத் துறைகளோடு தொடர்புபட்ட இவரது கட்டுரைகள், உரைகள் மிகக் கவனத்தை பெறுகின்றன.

  1. அமரர் இரா.சிவலிங்கம் அவர்களின் நினைவுப் பேருரையாக அமைந்த ' மலையகம் எனும் அடையாளம்- மலையக இலக்கியத்தின் வகிபங்கு'.
  2. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 (இலங்கை) சிற்றிதழ்   அரங்கில்,  இலங்கையில் சிற்றிதழ்கள் வரலாறும் வளர்ச்சியும்';
  3. காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம் - இந்தியா, அவுஸ்;திரேலிய தமிழ் எழுத்தாளர் சங்கம் - சிட்னி, மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் - இலங்கை இணைந்து நடாத்திய இலங்கை மலையகத் தமிழ் இலக்கியங்களும் கலைப் பண்பாட்டு வடிவங்களும்' பன்னாட்டு கருத்தரங்கின் மலையக சிறுகதை அரங்கில் ' மலையக புனைக்கதை   இலக்கியத்தின் செல்நெறிகள்'
  4. 2017 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை ' சிறுகதை, நாவல் பரவலான இலக்கியங்கள் எனும் தலைப்பில் ஆற்றிய ஆய்வுரை.
  5. 'இலக்கிய சந்திப்பு 47' பன்னாட்டு நிகழ்வில் இதழியல் அரங்கில் தலைமையுரை
  6. 2003 காலச்சுவடு தமிழினி மாநாடு - இந்திய விஜய உரை
  7. 2013 விஸ்னுபுரம் விருது பெற்றுக்கொண்ட அரங்கில் உரை
  8. 2000ம் வருடம் கனடா, லண்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இலக்கிய அரங்குகளில் உரை
  9. நீர்வை பொன்னையன் 'விபவி' நிகழ்வில் மலையக எழுத்தாளர்களின் பங்கு எனும்  தலைப்பிலான உரை

மேற்குறித்த உரைகள் தெளிவத்தையாரின் ஆய்வு முகத்திற்கு தக்க சான்றான ஆதாரங்களாகும். அவ்வாறே இவ் விடயங்களை ஒட்டியவாறு இதழ்களில் வெளிவந்த

  1. டொமினிக் ஜீவாவும் மலையக இலக்கியமும்
  2. ஞானம் 10 இதழ்கள் ஓர் பார்வை
  3. ஞானம் 100வது இதழில் மலையக இலக்கியம் எனும் கட்டுரை
  4. கனடாவில் வாழும் தமிழ் (300)
  5. நானும் ஜீவாவும் போன்ற எழுத்துருக்கள் கவனிக்கதக்க பதிவுகளாகும்.

அறுபதுகளில் எழுத்துலக பிரவேசித்து தெளிவத்தை ஜோசப் அவர்கள் தன்னை படைப்பாளியாக, பத்தி எழுத்தாளராக, ஆய்வாளராக தகவம் அமைத்துக் கொண்டதன் வரிசையில் தன்னை இலக்கிய செயற்பாட்டாளராகவும் நிலைநிறுத்திக்கொள்கிறார். அதன் வாயிலாக தன் இலக்கிய பணியை, இலக்கிய ஆளுமையை வாசகர்களிடத்தில் ஊடுகடத்துவதில் லாவகத்தை உணர்கிறார். அந்த வகையில் பல அமைப்புகளோடு தொடர்பை பேணுவதிலும் நிர்வாகியாக அமைப்பு சார் தொழிற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் வாய்ப்புகள் அமைந்தன எனலாம். இதழியல் நண்பர்களுடன் கொண்டிருந்த நேச நட்பு சமகால இலக்கிய நட்புகளுடனும் விரிவடைந்த நிலையில் வயதுகள் கடந்து, இனங்கள் கடந்து, நாடுகள் கடந்து நேச நட்பு வட்டாரத்தை கட்டியெழுப்பியுள்ளமை வியதகு விடயமாக உள்ளமை கவனிக்கதக்கது. மிக நீண்ட காலமாக மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை அலங்கரித்த அன்னார் தான்  இறக்கும் வரையில் இப் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1967இல அம் மன்றத்தின் செயலாளராக பதவியிலிருந்த போது கண்டி செய்தி நாகலிங்கம் தலைவராக செயற்பட்டுள்ளார். இக் காலத்தில் கண்டியில் புதுமைப்பித்தன் விழாவை முன்னின்று நடத்தினார். இந் நிகழ்வில் சிறுகதையாளர் கு. அழகிரிசாமி கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே எழுத்தாளர் சங்கத்துடனான தொடர்பு, மலையக கலை இலக்கிய பேரவையுடனான தொடர்பு என்பவற்றை குறிப்பிட்டு கூறலாம். அவ்வாறே கொடகே நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதும் தமிழ், சிங்கள எழுத்தாளர்களுடன் இணைந்த செயற்பாடுகளும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

மலையக சேவை, லக்கிலேண்ட் முத்தையா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டி, துரைவி – தினகரன் சிறுகதைப் போட்டி போன்றவற்றின் பிரதான நடுவராக கடமையாற்றி சிறுகதை ஆளுமைகளை இனங் காட்டிய அந்த பணி இவரது இலக்கிய செயற்பாடுகளில் மிக முக்கிய மைல்கல்லாகும். கடல் கடந்த நாடுகளில் புலம் பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்படும் அமைப்புகளுடனான தொடர்புகளும் குறிப்பாக தாய் வீடு, மூன்றாவது மனிதன் போன்றவற்றுடனான தொடர்புகளும் குறிப்பிடதக்கவைகளாகும்.

சமகாலத்து எழுத்தாளர்களையும், வளர்ந்துவரும் எழுத்தாளர்களையும் தன்னுடைய முன்னுரை, அணிந்துரை எழுத்துக்கள் ஊடாக தூண்டிய அந்தப் பணியும் மிக முக்கியத்துவம் பெற்றதாகும். அவ் எழுத்தாளர்களின் நம்பிக்கையை விரிவுப்படுத்த, பக்குவப்படுத்த, வலிமைப்படுத்;த, சீர்படுத்த அமைந்த எழுத்துக்கள் நாற்பத்தைந்துக்கு மேற்பட்ட நூல்களில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவ் முன்னுரை, அணிந்துரை வரிகள் ஆய்வார்ந்த நோக்கில் அமையப்பெற்றிருப்பதும் சிறப்பம்சமாகும். சிறுகதை, நாவல், இதழியல் ஆகிய துறைகளோடு கவிதை, பத்தி, வரலாறு, சிறுவர் இலக்கியம், மொழிப்பெயர்ப்பு போன்ற நூல்களுக்கு வழங்கிய அணிந்துரை வரிகள் அத்துறைகளில் அத்துறை சார்ந்து அவர் கொண்டுள்ள ஈடுபாட்டையும், புலமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அவ்வாறான நூல்களில் சி.வே.ராவின் 'மலைமேகம்' கனிவுமதியின் 'அப்புறமென்ன' ஆகிய கவிதைத் தொகுப்புகள், அகளங்கனின் 'முற்றத்து கரடி' சிறுவர் இலக்கியம், லெனின் மதிவானத்தின் திறனாய்வு கட்டுரைத் தொகுப்பான 'ஊற்றுக்களும் ஓடங்களும்' தமிழகனின் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பான 'மலையகமும் மறுவாழ்வும்' வரலாற்று மொழிப்பெயர்ப்பு நூலான 'கசந்த கோப்பி' திக்குவலை கமால் மொழிப்பெயர்த்த சுனில் சாந்தவின் சிறுகதைகள் 'சுடுமணல்' பியதாச வெளிக்கண்னகேயின் மூலத்தில் உருவான 'அவன் ஒரு அபூர்வ சிறுவன்' மலரன்பனின் மொழிப்பெயர்பு நாவல், வடபுலத்து எழுத்தாளர்களான இராஜநாயகத்தின் 'சொந்தமண்' இரத்தினவேலோனின் 'புதிய பயணம்' 'நிலாக்காலம்' இஸ்லாமிய எழுத்தாளர்களான ஜின்னா சரீபுதீனின் 'கருகாத பசுமை' அஸ்ரப் சிகாப்தீனின் 'விரல்களின் பிரார்த்தனை' அல் அஸ்மத்தின் 'அறுவடைக் கனவுகள்' போன்ற நூல்களுக்கான அணிந்துரை வரிகள் இலக்கிய உலகில் அன்னார் ஆழத்தடம் பதித்துள்ளமையை உணர முடிகிறது. பத்தி எழுத்து நூல்களான மல்லியப்பூ சந்தி திலகரின் 'மலைகளைப் பேச விடுங்கள்' ஜீவா சதாசிவத்தின் 'அலசல்' போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

தெளிவத்தை ஜோசப் மலையக இலக்கியத்தின் செல்நெறியை அதன் கனதியை அளவிடுவதற்கு ஏற்றாற் போல் அதனை ஆவணப்படுத்தியிருக்கிறார். அவருடைய எழுத்துக்கள் ஆய்வு நெறிமுறைகளை ஒத்ததாகவோ, ஆய்வு நியமத்துக்கு அனுசரித்ததாகவோ இல்லாமை குறித்து இத் துறை விமர்சகர்களால் பலவீனப்படுத்தி பார்க்கலாம். ஆனால் நியமத்தின் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்கின்ற நியம ஆய்வாளர்கள் இவரது எழுத்துக்களை தவிர்த்து எந்த முடிவினையும் வரலாற்று பிழையில்லாமல் பெற முடியாது என்பது திண்னமே. ஆய்வுத்துறையும் வளர்ச்சியடைந்து வரும் துறை என்ற வகையில் அதன் படிமுறையில் பல்வேறு மாறுதல்களை கட்டமைத்து வந்துள்ளன. அந்த கட்டமைப்புக்கு ஏற்ப இவரது நுட்பமும் எதிர்காலத்தில் சிபாரிசு செய்யப்படலாம். வழக்கு விசாரணை ஒன்றில் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட நேரடி சாட்சியங்களின் வாக்குமூலங்கள் வழக்கின் தீர்ப்பை நிர்ணயம் செய்து விடுகிறது. அவ்வாறே புனைவில் ஆழத்தடம் பதித்த தெளிவத்தை ஜோசப் அவர்களின் எழுத்து உள்ளதை உள்ளவாறு பதிந்ததில் நிகரற்றவொருவராக நிமிர்ந்து நிற்கிறார். அவரது ஆய்வார்ந்த பார்வையில் உருவான எழுத்துக்கள் சில மாத்திரம் நூலுருவம் பெற்றுள்ளன. அவரது உரைகள், இதழ்களில் வந்துள்ள எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு நூல்களாக்கப்படல் வேண்டும். அதனூடாக மலையக இலக்கியம், சமூகம் தொடர்பிலான ஆய்வு செல்நெறியை இலகுப்படுத்தி அணுகவும், வலிமைப்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமையும் எனலாம்.

உசாத்துணை நூல்கள்:

  1. துரை விஸ்வநாதன். (1997) உழகை;கப் பிறந்தவர்கள். துரைவி வெளியீட்டகம்.
  2. துரை விஸவநாதன். (1997) மலையக சிறுகதைகள். துரைவி வெளியீட்டகம்.
  3. துரைவி நினைவு பேருரைகள் (2016) துரைவி வெளியீட்டகம்.
  4. தெளிவத்தை ஜோசப். (2000) மலையக சிறுகதை வரலாறு. துரைவி வெளியீட்டகம்.
  5. தை.தனராஜ் (2017) மலையகம் பல்பக்க பார்வை, அமரர் இரா.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு.
  6. அருணாசலம். க (1990) மலையக தமிழ் நாவல்கள். குமரன் புத்தக இல்லம்.
  7. மலையக தமிழாராய்ச்சி மாநாடு ஆய்வுக்கட்டுரைகள், (1997) இந்து கலாசார தமிழ்க் கல்வி அமைச்சு. மத்திய மாகாணம். கண்டி.
  8. சாரல் நாடன் (1990) மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும், சாரல் வெளியீட்டகம்.
  9. மதிவானம் லெனின் (2012) ஊற்றுக்களும் ஓடங்களும். பாக்கியா பதிப்பகம்.
  10. முரளிதரன். சு (2000) மலையக இலக்கிய தளங்கள். சாரல் வெளியீட்டகம்.
  11. நித்தியானந்தன். மு (2014) கூலித்தமிழ், க்ரியா பதிப்பகம்.
  12. ஞானசேகரன். தி (2008) ஞானம் 100வது சஞசிகை.       

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow