மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 19 (அனுமார் தரிசனம்)

சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

Mar 26, 2023 - 16:34
 0  45
மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 19 (அனுமார் தரிசனம்)

ஒருநாள் அவர்கள் காட்டு வழியாகச் செல்லும்போது பலமான காற்று வீசியது. அப்போது வீசிய காற்றில் அடிக்கப்பட்டு வந்த மலரொன்று திரௌபதையின் அருகில் விழுந்தது. அதை எடுத்துப் பார்த்த திரௌபதை அதன் அழகிலும் நறுமணத்திலும் பெரு விருப்பம் கொண்டாள். அவளுக்கருகில் அப்போது இருந்த வீமனைப் பார்த்து; எவ்வளவு அழகான மலர் இது. இதன் நறுமணம் எனது மூக்கைத் துளைக்கிறது. இந்த அரிய மலர் இக் காட்டுப் பிரதேசத்தில் தான் உள்ளது. நீங்கள் சென்று இவ் அரிய மலர்கள் சிலவற்றையும் இதன் செடியையும் கொண்டு வாருங்கள். எமது பூந்தோட்டத்தில் அதை நட வேண்டும்" என்றாள்.

திரௌபதையின் விருப்பத்தை நிறைவேற்ற வீமன் அச்செடியைத் தேடிக் காட்டுச் சென்றான். வெகுதூரம் சென்று ஒரு சோலையை அடைந்தான். சோலை வழியாகச் செல்லும் பாதையில் ஒரு குரங்கு படுத்திருந்தது.

"வானரமே, நான் நீண்ட தூரம் செல்லவேண்டும். அதற்கு வால் தடையாக உள்ளது. அதைத்தூக்கி வீதியின் உனது கரையில் வை. நான் அதைக் கடந்து செல்வது முறையல்ல" என்றான் வீமன்.

"மனிதா, நீ யார்? இதற்கு மேல் யாரும் இவ்வழியால் செல்லமுடியாது. இது தேவலோகத்திற்குச் செல்லும் பாதை. மனிதர்கள் அங்கு செல்ல முடியாது" என்றது குரங்கு.



'குரங்கே நீ யார்? நான் பலம் பொருந்திய வீமன். அரச வம்சத்தவன். பாண்டவர்களில் ஒருவன். அதனால் வழியை விடு" என்றான் வீமன்.

இந்த வழியால் இதற்கு மேல் செல்லமுடியாது. சென்றால் தீமைகள் தான் வரும். திரும்பிப்போ" என்றது குரங்கு.

"நீ எனக்கு ஆலோசனை வழங்கவேண்டாம். நான் தீமையடைந்தால் உனக்கென்ன? வழியை விடு” என்று கோபமாகச் சொன்னான் வீமன்.

"வீமா, என்னால் எழுந்திருக்கமுடியவில்லை. அவசியம் செல்லவேண்டுமானால் தாண்டிச்செல் நகர்த்திவிட்டுச்செல்" என்றது குரங்கு. . இல்லாவிட்டால் வாலை

வேறுவழியின்றி வீமன் குரங்கின் வாலை நகர்த்துவதற்காக அதைத்தூக்கினான். அதை அசைக்கமுடியவில்லை. பலமுறை முயன்றும் வால் அசையக் கூடவில்லை.

"தாங்கள் யார்? பலசாலியான என்னால் உமது வாலை அசைக்கமுடியவில்லை. அதனால் நீர் சகல வல்லமையும் பெற்ற தேவனா? தயவு செய்து கூறும்” என்று வணங்கினான் வீமன்.

'வீமா, வாயுவின் புத்திரனான அனுமான் நான் தான். உனக்கு உதவுவதற்காகவே இவ்விடம் வந்தேன். இப் பாதையால் யாரும் செல்லக்கூடாது. நீதேடி வந்த மலரும் செடியும் அந்த ஆற்றங்கரையில் உள்ளன. சென்று பறித்துச்செல்'.

'வாயுபத்திரனே, உம்மைப்பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் கண்டதில்லை. உமது கடல் தாண்டிய வடிவத்தைக் காண விரும்புகின்றேன். காட்சி தாரும்" என வணங்கினான் வீமன். 

உடனே அனுமான் தனது கடல் தாண்டிய உருவத்தை வீமனுக்கு காட்டி அவனை ஆரத்தழுவி ஆசீர்வதித்தான். பின் ; "வீமா, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்றான் அனுமான். “வானர சிரேஷ்டரே, உம்மைக்கண்ட நான் பாக்கியசாலி. ஆரத்தழுவியதால் எனது பலம் இருமடங்காக உம்மை அதிகரித்தது. எமது சத்துருக்களை வெல்ல வழி சொல்லுங்கள்.'' என்றான். வீமன்.

"வீமா நீயுத்தத்தின் போது சிம்மநாதம் செய்வாய் அல்லவா. அப்போது எனது குரலும் உனது குரலோடு சேர்ந்து ஒலித்துப் பகைவர்களை நடுநடுங்க வைக்கும். அத்துடன் அர்ச்சுனனின் வெற்றிக் கொடியில் நான் அமர்ந்திருப்பேன்” என்றான் அனுமான்.

அதன்பின் திரௌபதி விரும்பிய மலர்களையும் செடியையும் பறித்துக் கொண்டு வீமன் திரும்பிச் சென்றான்.

வனத்திற்குச் சென்று பாண்டவர்களைப் பார்த்துவிட்டு வந்த பிராமணன் ஒருவன் அவர்கள்படும் துன்பத்தைக் கண்டு வருந்தி, அவர்கள்படும் துன்பத்தைப் பற்றித் திருதராட்டினனுக்குக் கூறினான். பாண்டவர்கள் படும் துன்பங்களைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி கொண்ட துரியோதனனும், கர்ணனும், சகுனியும் அவர்கள் படும் துன்பங்களை நேரில் பார்த்து மகிழ விரும்பினார். அதற்குத் திருதராட்டினன் அனுமதியளிக்கவில்லை.

"பாண்டவர்கள் வாழும் வனத்திற்கு அருகே உள்ள துவைதவனம் எமது ஆட்சிக்குட்பட்டது. அங்குபல இடைச்சேரிகள் உள்ளன. அங்குள்ள பசுக்கூட்டங்களை வருடத்திற்கு ஒருமுறை எண்ணிக் கணக்கிடுவது வழக்கம்.

இவ்வருடம் கணக்கெடுக்கப்படவில்லை.அதைக் கணக்கெடுக்கச் செல்வதுபோலச் சென்று பாண்டவர்களின் துயரங்களைப் பார்ப்போம்” என்று கர்ணன் கூற அதைக்கேட்டுத் துரியோதனன் மிக்க மகிழ்வுடன் தந்தையிடம் சென்று விபரத்தைக் கூறி அனுமதி பெற்றான்.

பாண்டவர்களின் துன்ப துயரங்களைக் காணத் துரியோதனனும் கர்ணனும் சகுனியும் தமது சேனைகளுடன் சென்று துவைதவனத்திற்குச் சிறிது தூரத்தில் கூடாரமமைத்துத் தங்கினார்கள்.

மந்தைகளைக் கணக்கெடுத்து முடிந்த பின்பு அவர்கள் பாண்டவர்களின் ஆச்சிரமத்திற்கு அருகே இருந்த குளக்கரையில் தங்கினார்கள். அத் தடாகத்திற்கு அருகே காந்தர்வராஜன் சித்திரசேனனும் அவனது பரிவாரங்களும் தங்கியிருந்தனர். அவர்கள் துரியோதனனது வீரர்களை அங்கு தங்கவிடாது துரத்தி விட்டனர்.

அதைக்கேள்விப்பட்ட துரியோதனன் தன்னுடன் வந்த வீரர்களை அழைத்துக்கொண்டு வந்து சித்திரசேனனுடன் யுத்தம் செய்தான். சித்திரசேனனது படையைத் துரியோதனானல் வெல்லமுடியவில்லை. சித்திரசேனன், துரியோதனனைப் பிடித்துத் தனது தேர்க்காலில் கட்டினான். படைவீரர்கள் சிதறி ஓடினர். சிலர் பாண்டவர்களது ஆச்சிரமத்திற்குச் சென்று நடந்தவற்றைக் கூறினார்.

அதைக்கேட்ட வீமன் மிக்க மகிழ்ச்சியடைந்தான்; “எமக்குச்  செய்த கொடுமைகளுக்கான தண்டணை துரியோதனனுக்குக் கிடைத்துவிட்டது” என மகிழ்ந்தான்.

அதைக்கேட்ட தருமனுக்கு வேதனையாக இருந்தது; “தம்பி எமது சகோதரனான துரியோதனன் அடிமைப்பட்டதை எமது சகோதரன் வீமா, நினைத்து மகிழ்ச்சி கொள்ளாதே. அவன் ஆகையால் அவனை மீட்பது எமது கடமை. ஆகையால் அங்கு சென்று அவனை மீட்டு வா" என்றான்.

வீமனுக்குத் தருமனின் சொற்கள் தாங்க முடியாத வேதனையைக் கொடுத்தன; எத்தனை துன்பங்களைச் செய்தார்கள்.ஒரு பெண்ணைச் சபை நடுவே துகிலுரிந்தார்கள். அதைப் பொறுக்க முடியுமா?" என்று கவலையோடு சொன்னான்.

அப்போது துரியோதனனது அவலக்குரல் கேட்டது. அதைக்கேட்ட தருமன்;. சகோதரர்களே, உடனே சென்று துரியோதனனை மீட்டு வாருங்கள்" என்று கட்டளையிட்டான்.




தருமனது கட்டளையை மீறமுடியாத வீமனும் அர்ச்சுனனும்  சித்திரசேனனுடன் போர்செய்யப் புறப்பட்டனர். 



வீமனையும் அர்ச்சுனனையும் கண்ட சித்திரசேனன் ; "நண்பா ; துரியோதனனுக்குப் பாடங் கற்பிக்கவே அவனைக் கைது செய்து தேர்க்காலுடன் கட்டினேன்.  நீங்கள் வந்தபடியால் அவனை விடுதலை செய்கிறேன்" என்று கூறித்துரியோதனனை விடுதலை செய்தான். துரியோதனன் விடுவிக்கப்பட்டான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட தப்பி ஓடிய சகுனியும் கர்ணனும் துரியோதனனிடம் வந்தனர்.

"பாண்டவர்களின் ஏவுதலால் தான் சித்திரசேனன் உன்னைக் கைது செய்தான். எனவே பாண்டவர்களை அழித்தே தீரவேண்டும்" என்றான் சகுனி. அதைக்கர்ணன் ஆமோதித்தான்.

சகுனியின் பேச்சைக்கேட்டதும் துரியோதனனின் நெஞ்சில்பொறாமை அதிகரித்தது. எப்படியாவது பாண்டவர்களை அழிக்க வேண்டும் என்று நினைத்தான்.


..... தொடரும்.....






பின்குறிப்பு:- சிறுவர்கள் வாசித்து பயன்பெறும் வகையில் மிகவும் எளிய வடிவில் முழு மகாபாரதமும் சுருக்கப்பட்டு இங்கே எழுதப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன