மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 20 (யட்சனும் தருமனும்)

சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

Mar 27, 2023 - 20:24
Mar 27, 2023 - 20:29
 0  68
மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 20 (யட்சனும் தருமனும்)

ஒரு நாள் துருவாச முனிவர் தனது சீடர்களுடன் அத்தினாபுரத்திற்கு வந்தார். கோபசுபாவமுள்ள அந்த முனிவரைத் துரியோதனன் நல்ல முறையில் கவனித்தான்.

அவரது ஏவல்களை ஏற்றுத் தானே சேவகம் செய்தான். அதனால் மகிழ்ந்த துருவாச முனிவர்; "துரியோதனா, உனது மனப்பூர்வமான சேவையை நினைத்து நான் ஆனந்தப்படுகின்றேன். முனிவர்கள் சபைக்கு வந்தால் அரசரின் வேலையாட்கள் தான் அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்வார்கள். ஆனால் இங்கே எல்லாச்சேவைகளையும் அரசனான நீயே செய்தாய். அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதனால் நீவேண்டிய வரத்தைக்கேள்” என்றார்.

"சுவாமி நீங்கள் எமது அரண்மனைக்கு வந்து தங்கி மகிழ்ந்து எம்மை ஆசீர்வதித்தது போல எமது சகோதரர்களான பாண்டவர்களினது இருப்பிடத்திற்கும் சென்று தங்கி அவர்களை ஆசீர்வதித்தல் வேண்டும்" என்றான்.

"துருவாசமுனிவர் மிக்ககோபம் கொண்டவர். தனக்குப் பிடிக்காத சிறிய செயலைச் செய்தாலும் செய்தவனை உடனே சபித்துவிடுவார். தற்போதய நிலையில் பாண்டவர்களால் அதிதிகளை வரவேற்று உணவளிக்க முடியாது. அதனால் அவர்கள் முனிவரால் சபிக்கப்படுவார்கள்" என எண்ணி மகிழ்ந்தான் துரியோதனன்.

துரியோதனன், தான் என்னிடம் ஆசி பெற்றதைப்போல பாண்டவர்களும் என்னிடம் ஆசி பெற வேண்டும் என்ற  நல்லெண்ணம் உடையதனால் தான்  அப்படி சொன்னானெனத் துருவாசமுனிவர் நினைத்து மகிழ்ந்து பாண்டவர்கள் தங்கியிருந்த வனத்திற்குச்   சென்றார்.  துருவாசமுனிவரையும் அவரது சீடர்களையும்  கண்ட தருமன்  மிகவும் மகிழ்ந்து; "தங்களின்  வரவால்  நாம் புனிதமடைந்தோம். கங்கையில் நீராடிவிட்டு வாருங்கள் உணவருந்தலாம்”. என்றான்.

வனவாச ஆரம்பத்தில் தருமனின் தவத்தால் மனமகிழ்ந்த சூரிய பகவான் நேரில் தோன்றி ஓர் அக்ஷய பாத்திரத்தைத் தருமனுக்குக் கொடுத்து; தருமா, இதைப் பெற்றுக்கொள், உங்களின் வனவாசம் முடியும் வரை திரௌபதி சிறிதளவு சமைத்து இப்பாத்திரத்தில் இட்டாளேயானால் அவ் அன்னம் பெருகி அன்று முழுவதும் உங்களை

நாடி வருபவர்களுக்குக் குறைவில்லாத அன்னம் அளிக்கும். எல்லோரும் உண்ட பின் திரௌபதி உண்டு விட்டு இப்பாத்திரத்தை கழுவி வைத்தால். அதன் பின் அது தனது சக்தியை இழந்து விடும். பின் மறுநாள் நான் கூறியபடி அன்னமிடல் வேண்டும்" என்று சொன்னான்.

அதை நம்பித் தான் தருமன் துருவாசமுனிவரிடம் அப்படி கூறினான். ஆனால் அவன் தான் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பிய போது திரௌபதி பாத்திரத்தைக் கழுவி வைத்து விட்டாள்.அதனால் கலக்கமடைந்த திரௌபதி கிருஷ்ணனை வணங்கினாள் ; கண்ணா, கேட்டதெல்லாம் கொடுப்பவன் நீ, இன்று நான் உண்டு முடிந்ததும் பாத்திரத்தைக் கழுவி வைத்து விட்டேன். துருவாசமுனிவரும் சீடர்களும் வந்துவிட்டனர். அவர் மிகுந்த கோபம் உள்ளவர். உடனே என்னைச் சபித்து விடுவார். பயமாக இருக்கிறது. என்னை காப்பாற்று" என அழுதாள்.

அப்போது கிருஷ்ணன்;" எனக்கும் பசிக்கிறது உணவு தா” என்றான். செய்வதறியாது திரௌபதி கலங்கினாள் ; "போய்க் கழுவிய பாத்திரத்தை எடுத்துப்பார்” என்றான் கிருஷ்ணன்.

திரௌபதி பாத்திரத்தை எடுத்துப் பார்த்த போது அதன் விளிம்பில் ஒரு சோற்றுப் பருக்கையும் கீரையும் ஒட்டிக்கொண்டிருந்தது. அப் பாத்திரத்தை எடுத்து வந்து கிருஷ்ணனிடம் கொடுத்தாள். கிருஷ்ணன் அச் சோற்றுப் பருக்ககையையும் கீரையையும் எடுத்து உண்டான். உண்ணும் போது; இது எனது பசியைப் போக்கட்டும்" என்று நினைத்தான்.

சோற்றுப் பருக்கையை உண்ட கிருஷ்ணன் வெளியே சென்று வீமனைப் பார்த்து; "வீமா, ஆற்றுக்கு நீராடச் சென்ற முனிவரையும் சீடர்களையும் அழைத்து வா” என்றான்.

வீமன் ஆற்றங்கரைக்குச் சென்று முனிவரையும் அவரது சீடர்களையும் உண்ண வருமாறு அழைத்தான்; குருவே எமது வயிறு நிறைந்திருக்கிறது. அதனால் எமக்கு உணவு வேண்டாம்” என்றனர் சீடர்கள்.

"எனக்கும் வயிறு நிறைந்து விட்டது என்னாலும் உணவு உண்ணமுடியாதென்று தருமனுக்குக் கூறு" என்று கூறிவிட்டுத் துருவாச முனிவர் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.




பாண்டவர்கள் வனவாசம் செல்லும்போது ஒரு நாள் ஓர் ஏழைப்பிராமணனது ஆச்சிரமத்துக்குச் சென்ற மானின் கொம்பில் அப்பிராமணன் நெருப்பு மூட்டும் அரணிக்கட்டை கொழுவிக்கொண்டது. அதனால் வெருண்ட மான் வேகமாக ஓடியது. அதைத் துரத்திப் பிடிக்க முடியாத அப் பிராமணன் பாண்டவர்களிடம் சென்று முறையிட்டான். பாண்டவர்கள் அம்மானைத் துரத்தினார். அது மிகவும் வேகமாக ஓடி மறைந்தது. மானைத் துரத்திக் கொண்டு வந்த பாண்டவர்கள் களைத்து

விட்டனர். அவர்களது தொண்டை வரண்டுவிட்டது. அவர்கள் இருந்த இடத்தில் இருந்து பார்த்த போது சிறிது தூரத்தில் ஒரு பொய்கை இருப்பது தெரிந்தது. உடனே நகுலன் அப்பொய்கை அருகே சென்றான். கைகளால் நீரை அள்ளிக் குடிக்கப் போனான். அப்போது; "மகனே, இது நான் காவல் செய்யும் பொய்கை. அதனால் நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டு

நீரைக்குடி. இல்லாவிட்டால் மரணமடைவாய்". என்று ஒரு குரல் ஒலித்தது.

நகுலன் சுற்றிவரப்பார்த்தான். யாரையும் காணவில்லை; "நான் தாகத்தால் மிகவும் வருந்துகிறேன்" என்று கூறியவாறு நீரைக் குடித்தான். மரணமானான். உடனேயே அவன் மயங்கி விழுந்து

நீர் எடுக்கச்சென்ற நகுலனைக் காணாமையால் தருமன் சகாதேவனை அழைத்து; "சகோதரா, நீர் எடுகக்கச் சென்ற நகுலனைக் காணவில்லை நீ சென்று பார்த்து வா” என்றான்.

நகுலனைத் தேடிச் சென்ற சகாதேவன் குளக்கரையில் நகுலன் இறந்து கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினான். எனினும் தாக மேலீட்டால் நீரைக் குடிக்கச் சென்றான். சென்றபோது முன்போல அசரீரி கேட்டது. அதைக் கவனிக்காது சகாதேவன் நீரைக் குடித்தான். உடனே அவனும் மரணமானான்.

நகுலனும் சகாதேவனும் திரும்பிவராததைக் கண்ட தருமன் அர்ச்சுனனை அழைத்து அவர்களைத் தேடி அழைத்து வருமாறு பணித்தான்.

அர்ச்சுனன் பொய்கைக் கரைக்கு வந்த போது நகுலனும் சகாதேவனும் இறந்திருந்தனர். அதனால் கோபங்கொண்ட அர்ச்சுனன் அவர்களைக் கொன்றவர்களைத் தேடினான்.

யாரையும் காணவில்லை. அதனால் நீரைக்குடித்து விட்டுத் தேடலாம் என்று நினைத்து குளத்தில் இறங்கினான். அப்போது அந்த அசரீரி ஒலித்தது. அப்போது அர்ச்சுனன்; "நீயார்? துணிவிருந்தால் எதிரே வா" என்று கோபத்துடன் கத்தினான். எதிரில் யாரும் வராமையால் வில்லை எடுத்து நானேற்றி நாலாதிசைகளிலும் அம்பை எய்தான். அதனால் களைப்புற்ற அர்ச்சுனன் நீரைக் கைகளால் அள்ளிக் குடித்தான். சிறிதுநேரத்தில் அவனும் மரணமானனான்.

சகோதர்கள் மூவரையும் வெகுநேரமாகக் காணாமையால் துயரங் கொண்ட தருமன் வீமனை அழைத்து; "வீமா, நீரைத் தேடிச்சென்ற எமது சகோதரர்கள் மூவரையும் வெகுநேரமாகக் காணவில்லை. நீ சென்று அவர்களை அழைத்து வா" என்றான்.

சகோதரர்களைத் தேடிச்சென்ற வீமன், சகோதரர்கள் மூவரும் பொய்கைக் கரையில் இறந்து கிடப்பதைக் கண்டு தாங்கமுடியாத துயரத்துடன் சுற்றிப் பார்த்தான். யாரையும் காணவில்லை. அதனால் இது யட்சகர்களுடைய வேலையாகத் தான் இருக்கும் என நினைத்து அவர்களைப் போருக்கு அழைத்தான். அதற்கு முன் தாகத்தை த் தணிப்பதற்காகப் பொய்கையில் இறங்கித் தண்ணீரை கைகளால் அள்ளினான்.

அப்போது அவ் அசரீரி மீண்டும் ஒலித்தது; "நீ யார் என்னைத் தண்ணீர்குடிக்க வேண்டாம் என்று தடுப்பதற்கு? தைரிய மிருந்தால் என்னுடன் போர் புரிய வா" என்று போர் முழக்கம் செய்தான். யாரும் வராமையால் வீமன் தண்ணீரைக் குடித்தான். அதனால் அவனும் உடனே இறந்துபோனான்.

நீர் தேடச் சென்ற நான்கு சகோதரர்களும் திரும்பிவராமையால் பெருந்துன்பம் அடைந்த தருமன் அவர்களைத் தேடிச் சென்றான். பொய்கைக் கரையில் நால்வரும் இறந்து கிடந்தனர். அதனால் பெருந்துன்பமடைந்த தருமன் பலத்தகுரலில் அழுதான். பின்பு இதில் ஏதோ மாயம் இருக்கிறது என்று உணர்ந்து என்ன செய்யலாம் என்று யோசித்த படி நீரைக் குடிக்கப் பொய்கையில் இறங்கினான். அப்போது; "தருமா, உனது தம்பிமார் நால்வரும் எனது சொல்லைக்கேளாது தண்ணீர் அருந்தியமையால் தான் இறந்தனர். அந்தத் தவறை நீயும் செய்யாதே. நான் கேட்கும் வினாக்களுக்கு விடையளித்து விட்டு நீரை அருந்து" என்று ஓர் அசரீரி ஒலித்தது.

தருமன் இது யாரோ ஒரு யக்சனின் வாக்கு எனப் புரிந்தது கொண்டு; ''சரி, உனது விடையளிக்கின்றேன்" என்றான். கேள்விகளை கேள். நான்

எது தினமும் சூரியனை உதிக்கச் செய்வது'

“பிரம்மம்”

"மனிதன் எதனால் எப்போதும் துணையுள்ளவனாகிறான்''

"தைரியத்தால் தான் மனிதன் துனணயுள்ளவனாகிறான்"

"எந்தச் சாத்திரத்தைப் படித்து மனிதன் புத்திமானாகிறான்''

"சாத்திரத்தால் மனிதன் புத்திமானாவதில்லை, பெரியோர்களின் துணையால் தான்  மனிதன்புத்திமானாகின்றான்".

"பூமியை விடக் கனமானது எது" 

"மக்களைச் சுமக்கும் தாய்'

"ஆகாயத்தை விட உயர்ந்தது எது"

"தந்தை"

"காற்றை விட வேகமானது எது?'

"மனிதமனம்"

"புல்லிலும் அற்பமானது எது?"

“கவலை’

"தேசாந்திரம் செல்பவனுக்குத் துணையார்?'

"வித்தையே துணை"

"வீட்டில் இருப்பவனுக்குத் துணையார்?'

அவனது மனைவி”

'சாகப்போபவனின் துணை யார்?'

“அவன் செய்த தருமம்"

"பாத்திரங்களுள் பெரியது எது?'

"பூமி"

'சுகம் எது?'

"நல்லொழுக்கமே நிறைவான சுகம்''

“எதைப் பிரிந்தால் மனிதன் எல்லோருக்கும் பிரியமானவனாவான்?”

"கர்வத்தை விட்டவனே அனைவருக்கும் பிரியமானவனாவான்"

"எதை இழப்பதால் துயரம் ஏற்படுவதில்லை?'

"கோபத்தை இழப்பதால் துயரம் உண்டாகாது''

"எதை இழந்தால் மனிதன் தனவானாவான்?'

“ஆசையைவிட்டவனே தனவான்"

“பிராமணனது சிறப்பு எதில் தங்கியுள்ளது? குலத்திலா? ஒழுக்கத்திலா,? கல்வியிலா?”

"குலமும் கல்வியும் சிறப்பைத் தராது. ஒழுக்கமே சகல ஐஸ்வர்யங்களையும் தரும்".

"உலகத்தில் எது ஆச்சரியமானது?"

"தினமும் உயிர்கள் மரணமடைவதைக் கண்டும் பலர் தாம் நிலையாக வாழ்வோம் என நினைப்பதே ஆச்சரியமானது"

யக்சன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலை அளித்த தருமனைப் பாராட்டிய யக்சன்; "தருமா, உனது சகோதரர்களில் ஒருவனுக்கு உயிர்ப்பிச்சையளிக்கின்றேன். நீ விரும்பிய ஒருவன் உயிர்தெழுவான்" என்றான்.

சில நிமிடங்கள் யோசித்த தருமன்; "நகுலன் உயிருடன் எழுந்திருக்கட்டும்" என்றான். அப்போது யக்சன் தருமன் முன் வந்து "தருமா, பெரும்பலசாலியான வீமனை விரும்பாது ஏன் நகுலனை விரும்பினாய்?" என்று கேட்டான்.

"யக்சனே, மனிதனைப் பாதுகாப்பது தர்மம். தர்மவழியில் செல்வோர் கடவுளால் காப்பாற்றப்படுவர். எனது தந்தைக்கு இருமனைவிகள். குந்திக்கு நான் உயிரோடு இருக்கிறேன். அதுபோல எனது சிற்றனையாகிய மாத்திரிக்கும் ஒரு புத்திரன்தேவை. அதனாலேயே அவன் உயிர் பெறவேண்டுமென நினைத்தேன்" என்றான் தருமன்.

அதைக்கேட்டு மகிழ்ந்த யக்சனாக வந்த தருமதேவதை தருமனின் குணத்தை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டு அவனை ஆரத்தழுவி அவனது சகோதரர்கள் நால்வரையும் உயிர்த்தெழச் செய்தது.