மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 13 ( திரௌபதி சுயம்வரம் )
சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

ஏக சக்கர புரத்தில் தாம் யாரென வெளிப்படுத்தாது பிராமண வேடம் பூண்டு பாண்டவர்கள் வாழும்போது பாஞ்சால அரசன் துருபதன் தனது மகளான திரௌபதிக்குச் சுயம்வரம் நடைபெறவிருப்பதாகச் சகல தேசத்தரசர்களுக்கும் அறிவித்தான். தருமன் தன் தம்பிகளோடு பிராமண வேடந்தரித்து சுயம்வரத்திற்குச்சென்றான்.
சுயம்வர மண்டபம்அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அரசகுமாரர்களும், பிராமணர்களும், முனிவர்களும், விருந்தினர்களும், பார்வையாளர்களும் அமர்வதற்காகத் தனித்தனியாக இருக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.
சுயம்வர மண்டபத்தில் ஒருவில் கட்டப்பட்டிருந்தது. அவ் வில்லை வளைத்து நாணை அதில் பூட்டி அம்பு எய்து மேலே கண்களுக்குத் தெரியாத உயரத்தில் வைக்கப்பட்டிருக்கும் பொருளை, அதன் கீழ்வைக்கப்பட்டிருக்கும் ஒரு சுழலும் சக்கரத்தின் துவாரத்தின் ஊடாக அடித்து விழுத்து பவனே எனது மகளான திரௌபதியை மணக்கலாம் என்று துருபதன் அறிவித்தான்.
வில்லை எடுத்து நாண்பூட்ட முடியாது வெட்கத்துடனும் பெரும்பெரும் வீரர்களான அரசகுமாரர்கள் பலர் சென்று அவமானத்துடனும் திரும்பிவந்து தமது ஆசனங்களில் அமர்ந்தனர். அதன்பின் துரியோதனனும் பின் கர்ணனும் வில்லை எடுத்து நாண்பூட்டி எய்ய முடியாது திரும்பினார். எந்த நாட்டு அரசர்களாலும் வில்லில் நாண்பூட்ட முடியவில்லை.
இறுதியாகப் பிராமண வேடந் தரித்து வந்த அர்ச்சுனன் எழுந்து சென்று துருபதனின் மகனின் அருகே சென்று; “எல்லா அரசகுமாரர்களும் போட்டியில் கலந்து தோல்வியடைந்து விட்டனர். நான் பிராமணன் நான் இப்போட்டியில் கலந்து கொள்ளலாமா?' என்று கேட்டான்.
"இது எல்லோருக்குமான திறந்தபோட்டி, யாரும் கொள்ளலாம்" என்றான் துருபதனின் மகன் திருஷ்டத்யும்மன்.
அதன் பின் அர்ச்சுனன் வில்லை எடுத்து கண்ணனை வணங்கிவிட்டுச் சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்தின்
துவாரத்தினூடாக அம்பைச் செலுத்தி இலக்கை அடித்து நிலத்தில் வீழ்த்தினான்.
சபை ஆர்ப்பரித்தது. ஆனால் இராஜகுமாரர்கள் சண்டையிலீடுபட்டனர். அவர்களைக் கிருஷ்ணரும் பலராமனும் சமாதானப்படுத்தினர். திரௌபதி அர்ச்சுனனுக்கு மாலை சூடினாள். அர்ச்சுனன் திரௌபதியை அழைத்துக் கொண்டு தாயாரிடம் வந்தான். தாயாரின் விருப்பப்படி ஐவரும் திரௌபதியை மணந்தனர். திரௌபதியை மணம் புரிந்தவன் அர்ச்சுனன் என்று அறிந்த துருபதன் தனது இலட்சியம் நிறைவேறியமையால் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.
Whats Your Reaction?






