மந்திரப் புத்தகம் - சிறுவர் சிறுகதை

அறிவியலின் ஆழம் வரை பயணிக்க புத்தகம் ஒரு கருவி அப்பா அதை ஆழமாக நம்புறார். ஆனா என் அறிவு அதைக் கேக்குதில்லையே, எப்போ பாரு பேப்பர் படி, புத்தகம் வாசி, கட்டுரைக்கள் வாசினு அப்பா சொல்லிக் கொண்டே இருப்பார். அத்தோட நில்லாமல் ஒவ்வொரு வார இறுதியிலும் நூலகத்திற்கு கூட்டிச்சென்றுவிடுவார்.
நானும் தம்பியும் வேறு வழி இன்றி நூலகம் முழுவதும் நடந்து திரிவோம். சிறுவர் புத்தகங்களின் பக்கங்களில் உள்ள படங்களைப் பார்த்து இரசிப்போம். புத்தகங்களில் உள்ள படங்கள் எல்லாம் மிகவும் அழகாக இருந்தன. சிறுவர்களுக்கு ஏற்றால் போல் படங்கள் வெவ்வேறு நிறங்களில் மிகவும் அழகாக இருந்தது பூக்கள், மரங்கள், வானவில், வானம், முகில்கள், யானை, எலி, சிங்கம், புலி, நரியின் கதை, பாட்டி வடை சுட்ட கதை என எக்கச்சக்க கதைகளும் படங்களுமாக புத்தகங்கள் இருந்தன.
அடிக்கடி இங்கு வருவதனால் நூலகரும் நன்கு பழக்கமாகி இருந்ததார் நாங்கள் அவரை தாத்தா என்று தான் அழைப்போம். நானும் தம்பியும் அங்குள்ள புத்தகங்களை எல்லாம் பார்த்துவிட்டு தாத்தாவுடன் பேசிக் கொண்டிருப்போம்.
அவர் எங்களுக்கு நிறையக் கதைகள் கூறுவார் புத்தகங்களையும் பரிந்துரை செய்வார். அம்மா எங்களுடன் நூலகத்திற்கு வருவதில்லை. அம்மாக்கு வீட்டில் நிறைய வேலை இருந்தது சமைப்பது ஆடைகளைத் துவைப்பது எங்களை பார்த்துக் கொள்வது என்று.
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை வழமை போல் நான், அப்பா, தம்பி மூவரும் நூலகத்திற்கு சென்றோம். நூலகம் வெறுமையாகவே இருக்கிறது யாரும் பெரிதாக அங்கு இருப்பதில்லை புத்தகங்களும் தாத்தாவும் இன்னும் சில சிறுவர்களும் மட்டுமே இருப்பார்கள். வழமை போல தான் அன்றும்.
நூலகத்தில் உள்ள பெரும்பாலான புத்தகங்களை பார்த்து விட்டோம். சிறுவர் பகுதியிலிருந்து அனேகமான புத்தகங்களை முடித்துவிட்டோம் அதனால் வேறு பகுதிக்கு செல்லலாம் என்று நானும் தம்பியும் முடிவெடுத்தோம். இன்று வேறு சில நூலகங்களில் இருந்து புத்தகங்கள் வந்துள்ளன நீங்கள் வேண்டுமென்றால் அதைப் பாருங்கள் என்று தாத்தா கூறினார். நானும் தம்பியும் புதிதாகக் கொண்டு வந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தோம். எல்லாம் மிகவும் பழைய புத்தகங்களாக இருந்தது.
அழகிய மயிலின் படம் போட்டு பொன்நிறப் புத்தகம் ஒன்று எங்கள் கண்களில் தென்பட்டது. அந்த மயில் மிகவும் வசீகரமாக இருந்தது. அழகிய நீண்ட தோகை வானின் நீலத்தை எடுத்து பூசியது போன்ற உடல். அந்த மயிலின் அழகில் நான் சொக்கிப் போய் நின்றேன். என் கண்களுக்கு அந்த மயில் இமைப்பது போன்றே தோன்றியது. ஏதோ ஒரு ஈர்ப்பு அந்த புத்தகத்தில் இருந்தது நானும் தம்பியும் அதை எடுத்துக் கொண்டு மேசைக்கு வந்தோம்.
அந்தப் புத்தகத்தின் ஓரங்கள் எல்லாம் மிகவும் அழகாக வரிசை வரிசையாக வரையப்பட்டிருந்தது. புத்தகத்தின் வலது பக்க கீழ் மூலையில் உங்கள் ஆசை எனது விருப்பம் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வசனம் புத்தகத்தின் மீதான எனது ஆவலை இன்னும் அதிகமாக்கியது.
புத்தகத்தை திறந்து முதலாவது பக்கத்தை பார்த்த போது அது வெறுமனே இருந்தது. சரி அடுத்த பக்கங்களை பார்ப்போம் என்றால் எல்லா பக்கங்களுமே வெறுமையாக இருந்தது.
எப்படி ஒரு நூலகத்திற்கு வந்த புத்தகத்தில் எல்லா பக்கங்களும் வெறுமையாக இருக்க முடியும். ஒருவேளை இது புது புத்தகமோ? இன்னும் அச்சுப்பதிப்பு செய்யவில்லையோ?. சரி எதற்கும் தாத்தாட்ட கேட்டுப் பார்ப்போம் என்று கூற தம்பியும் உடன்பட்டுக் கொண்டான்.
நானும் தம்பியும் தாத்தாவிடம் சென்றோம், தாத்தா "மயில் படம் போட்ட புத்தகம் ஒன்று பார்த்த நாங்கள் அதுக்குள்ள ஒரு எழுத்தும் இல்ல படமும் இல்ல" எந்த பெட்டிக்குள்ள இருந்த புத்தகம் அது என்று தாத்தா கேட்டார். நீங்கள் காட்டியது தான் தாத்தா அந்த மூன்ம் நம்பர் பெட்டியில் இருந்த புத்தகம் என்று தம்பி சொன்னான் . எங்க புத்தகத்தை பார்ப்பம் என்று கொண்டு தாத்தா வந்தார்.
இருந்த மேசைக்கு தாத்தாவை அழைத்துக் கொண்டு சென்றோம் அங்கு புத்தகத்தைக் காணவில்லை. நானும் தம்பியும் இந்த மேசையில் தான் புத்தகத்தை வைத்து விட்டு வந்தோம். புத்தகத்த காணல தாத்தா என்றதும் தாத்தா சொன்னார் வாங்கோ அந்த பெட்டிக்குள்ள நீங்க பார்த்துட்டு வச்சுட்டு வந்தீங்களோ தெரியல என்று.
அதே மூன்றாம் நம்பர் பெட்டிக்குள்ள நீல கலர் மயல்படம் போட்ட புத்தகம் ஒன்று இருந்தது. பார்க்க அதே புத்தகம் போல் இருந்தது நானும் தம்பியும் தாத்தா இதுதான் தாத்தா இதுதான் என்று புத்தகத்தை கண்டதும் கத்தினோம். உஷ்... நூலகத்தில சத்தம் போடக்கூடாது என்று செல்லமாக அதட்டி விட்டு, தாத்தா புத்தகத்தைத் திறந்து பார்த்தார். புத்தகம் முழுவதும் அழகிய மயில் வண்ணத்துப்பூச்சி அடர்ந்த காடுகள் என்று படங்களாக இருந்தது. நானும் தம்பியும் குழம்பிப் போய் விட்டோம்.
இந்தப் புத்தகத்தை தான் பார்த்தீர்களா? இதுதானே அந்த மயில் படம் போட்ட புத்தகம் என்று தாத்தா கேட்டார். ஆம் தாத்தா இதுதான் அந்த புத்தகம் என்று தம்பி சொன்னான். சுட்டி பயலூகளே வாலுத் தனம் காட்டாமல் புத்தகத்தை பாருங்கோ என்று சொல்லிவிட்டு தாத்தா தன் வேலைய பார்க்க சென்று விட்டார்.
எங்களுக்கு புரியவே இல்லை அப்படி என்ன நடந்தது என்று. உண்மையாகவே நாங்கள் பார்த்த போது அந்த புத்தகத்தில் எந்தப் படமோ எழுதோ இருக்கவில்லை. இப்போது எப்படி வந்திருக்க கூடும்?
மீண்டும் நானும் தம்பியும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய் வாசிப்பறையில் அமர்ந்தோம். அந்தப் புத்தகத்தை நாங்கள் திறந்து வாசித்த போது அதிசயப் பயணம் என்ற தலைப்பில் கதை ஒன்று இருந்தது. அண்ணா இந்த புத்தகத்தை வையுங்கோ ஏதோ மாய மந்திரம் இருக்கு வேணாம் எங்களுக்கு இந்த புத்தகம் என்று குழைந்தான். இளங்கன்று பயமறியாது என்றத உண்மையாக்கிற வயசு எல்லோ இது.
நான் தைரியமாக கதையை வாசிக்க தொடங்கினேன். அது ஒரு அடர்ந்த காடு வான் உயர்ந்த மரங்கள், குருவிகளின் ஆரவாரம், அழகிய வண்ண வண்ண நிறப் பூக்கள், பூக்களில் தேன் அருந்துகின்ற வண்ணத்துப்பூச்சிகள், மரங்களில் ஊர்ந்து திரிகின்ற நத்தைகள், அருகிலே ஒரு சிறிய அருவி, அருவி நீர் வடிந்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது, அந்த ஆற்றிலே நிறைய மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன. அனைத்தையும் நேரில் பார்ப்பது போன்று உணர்வு எனக்கு. அங்கே வீசுகின்ற குளிர்ந்த தென்றலைக் கூட என்னால் உணர முடிந்தது.
நான் புத்தகத்திலிருந்து எனது கண்களை அகற்றிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். என் கைகளில் அந்த புத்தகம் அப்படியே இருக்க நானும் தம்பியும் அந்தக் காட்டில் நின்று கொண்டிருந்தோம். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்ல. நானும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்த படி இயற்கை காட்சிகளையும் ரசித்தபடி நடந்து கொண்டிருந்தோம். எப்படி உள்ளே வந்தோம்? எப்படி வெளியே செல்வது? உண்மையாகவே கனவில் இருக்கிறேனா? இல்லை நிஜம் தானா? என்று குழப்பத்தின் மத்தியில் இருந்தேன்.
இனி என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ள புத்தகத்தை மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். புத்தகத்தில் கதை அத்தோடு நின்று விட்டிருந்தது மீதம் அனைத்தும் வெறும் வெள்ளைத் தாள்களாக இருந்தது. நானும் தம்பியும் திகைத்துப் போனோம். ஒருவரை ஒருவர் மீண்டும் கண்களை கசக்கி கொண்டு பார்த்தோம். எந்த மாற்றமுமே இல்லை, நானும் தம்பியும் அந்த கதைக்குள் தான் இருந்தோம்.
அந்தப் பாதை வழியே நடந்து சென்று கொண்டிருந்தோம். எனக்கும் தம்பிக்கும் பயம் பசி எல்லாம் கூடிக் கொண்டிருந்தது. சற்றுத் தொலைவில் படிக்கட்டுகள் செல்வது தெரிந்தது. அந்தப் பாதை வழியில் நடந்து படிக்கட்டுகளில் ஏறிச்சென்றோம்.
தாகம் எடுத்தது சுற்றிலும் தண்ணீர் எங்கும் இல்லை அருவியில் இருந்தும் தூரமாக வந்திருந்தோம். இதற்கு மேல் நடப்பதற்கான சக்தியும் இல்லை, தம்பி மிகவும் பயந்து போயிருந்தான். காட்டில் மிக அருகாமையில் உறுமல் சத்தம் ஒன்று கேட்டுக் கொண்டிருந்தது.
பய பீதியில் நானும் தம்பியும் வேகமாக ஓடி ஓடிப் படி ஏறினோம். அந்த உறுமல் சத்தம் மிகவும் அருகில் கேட்டது. குகை போல ஏதோ ஒன்று தென்பட்டது நானும் தம்பியும் விரிவாகச் சென்று ஒளிந்து கொண்டோம். சிறிது நேரத்தில் அந்த சத்தம் நின்று விட்டது.
நாங்கள் இருந்த குகை ஒரு வீடு போல தென்பட்டது. அங்கே ஒரு குடத்தில் நிறைய தண்ணீர் இருந்தது. ஆனால் என்ன சாப்பிடுவதற்குத்தான் எதுவும் இருக்கவில்லை. நானும் தம்பியும் தண்ணீரை குடித்து நன்கு வயிற்றை நிரப்பிக் கொண்டோம்.
அந்த வீட்டின் மூலையில் ஒரு மேசை இருந்தது. அதன் மேலே ஒரு ஒளி விளக்கும் அருகிலே ஒரு புத்தகம் திறந்தபடியும் இருந்தது. நானும் தம்பியும் மெல்ல அருகில் சென்று பார்த்தோம். என்ன ஆச்சரியம் இதுவும் அதே மாதிரி மயில் படம் போட்ட புத்தகம் ஒன்றுஅந்தப் புத்தகம் எழுதிய படி இருந்தது, அதற்கு அருகிலே ஒரு பேனையும் இருந்தது மீதி பக்கங்கள் நிரப்பப்படவில்லை .
அந்தப் புத்தகத்திலும் எங்கள் புத்தகத்தைப் போல தான் கதை ஒரே போலவே இருந்தது அந்த காடு வரை வந்த பின் நின்று விட்டிருந்தது அதன்பின் பேனாவால் தொடர்ந்து கதை எழுதப்பட்டிருந்தது. வாசித்தோம் ஆனால் அந்தப் புத்தகத்தின் இறுதி வரிகள் இரு சிறுவர்கள் மந்திரப் புத்தகத்துடன் காட்டிக்குள் நுழைந்தார்கள் என்று இருந்தது.
நாங்கள் இருவரும் தான் அந்த சிறுவர்களோ என்று அச்சம் தோன்றியது. ஒருவேளை நாங்கள் நிரப்புகின்ற கதைதான் நமக்கு நிஜத்தில் நடக்குமோ? சந்தேகத்துடன் நானும் தம்பியும் அந்த பேனையை எடுத்து எங்கள் புத்தகத்தில் "சிறுவர்கள் வந்த குகைக்குள்ளே சாப்பாட்டு மேசையில் நிறைய சாப்பாடு இருந்தது" என்று எழுதினோம்.
என்ன ஆச்சரியம் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு ஒரு மேசையும் அது நிறைய சாப்பாடும் வந்துவிட்டது. நாங்கள் தான் தண்ணீரைக் குடித்து வைத்த நிரப்பி விட்டோமே எல்லா உணவைகளும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டோம், மிகவும் சுவையாக இருந்தது ஐஸ்கிரீம், பழ வகைகள், குளிர் பானங்கள், கேக் வகைகள் என கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் வாய்க்கு இதமாகவும் இருந்தது. களைப்பில் மறந்து தூங்கி விட்டோம்.
தடக் தடக் என்று யாரோ நடந்து வரும் காலடி சத்தம் கேட்டது. நானும் தம்பியும் திடுக்கிட்டு கண் முழித்துப் பார்த்தோம். காலடிச் சத்தம் நாங்கள் இருந்த திசையை நோக்கி வருவது தெரிந்தது. யாராக இருக்கும்? "இப்படியான காடுகளில் தானே சூனியக்காரர்கள் இருப்பார்களாம் அண்ணா, நாம் மாட்டிக் கொண்டு விட்டோமா?" தம்பி என் பயத்தை மேலும் அதிகமாக்கினான். டேய் கொஞ்ச நேரம் வாயை மூடி கொண்டு இருடா நான் தம்பியை ஏசி விட்டு யோசிக்கத் தொடங்கினேன்.
வேறு வழி இல்லை மீண்டும் நாம் அந்த புத்தகத்தில் தப்பிப்பதற்கு ஏதாவது எழுத வேண்டும், காலடி சத்தம் மிக அருகில் கேட்டது. "சிறுவர்கள் இருவரும் அவர்களுடைய அப்பாவுடன் நூலகத்திற்குச் சென்றார்கள்" என்று எழுதினேன். மறுநிமிடமே நான் அப்பா தம்பி மூவரும் நூலகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தோம்.
நான் தம்பியை மிக அவலாக இழுத்துக் கொண்டு நாங்கள் புத்தகம் படித்துக் கொண்டிருந்த மேசைக்கு வந்தேன் . அங்கு அந்த புத்தகத்தை காணவில்லை. மூன்றாம் நம்பர் பெட்டிப் பக்கம் ஓடினேன் அங்கும் அந்த புத்தகத்தை தேடுகிறேன் காணவில்லை.
தம்பிக்கு எதுவுமே புரியவில்லை அவன் என்னை திகைத்துப் பார்த்தபடி இருந்தான். அவனிடம் நடந்ததை எல்லாம் ஞாபகப்படுத்த முயற்சித்தேன். என்ன அண்ணா கனவு கண்டுட்டு கதைக்கிறியளா? எனக்குப் பதில் சொல்ல இயலவில்லை. ஆனால் அது நிஜம் ஏன் அவனுக்கு மட்டும் ஞாபகம் இல்லை.
ஒரு புத்தகம், நாம் எழுதுவது முழுவதுமே நடக்கிறது எப்படி இருக்கும்? எங்களுக்கு என்ன தேவையோ, என்ன விருப்பமோ அனைத்தையுமே எழுதிப் பெற்றுக்கொள்ள முடியும். அந்த புத்தகத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
இப்போதெல்லாம் அப்பா வரவில்லை வேலை இருக்கிறது என்று சொன்னாலுமே நான் விடுவதில்லை ஒவ்வொரு கிழமையும் தவறாமல் நூலகத்திற்குச் சென்று விடுவேன். கண்ணில் தென்படுகிற புத்தகத்தை எல்லாம் எடுத்து வாசிக்கத் தொடங்கி விடுவேன் என்றாவது ஒரு நாள் அந்த மந்திரப் புத்தகத்தை மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்.
Whats Your Reaction?






