மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 04 (விதுரன் பிறப்பு)
சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

பாகம்-4 (விதுரன் பிறப்பு)
மாண்டவ்வியர் என்ற முனிவர் ஊரின் அருகே உள்ள வனத்ததில் ஆச்சிரமம் அமைத்துத் தவம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவர் நிஷ்டையில் இருந்தபோது சில திருடர்கள் முனிவரின் ஆச்சிரமத்திற்கு வந்தார்கள். அவர்கள் அரண்மனையில் திருடிக்கொண்டிருந்த போது காவலர்கள் அவர்களைக் கண்டு விட்டார்கள். திருடிய பொருட்களுடன் தப்பி ஓடிய திருடர்களை அரண்மனைக் காவலர் துரத்திவந்தனர்.
காவலர்கள் தம்மைத் துரத்தி வருவதை அறிந்த திருடர்கள் ஆச்சிரமத்திற்குள் புகுந்து மறைந்து கொண்டனர். வெளியே மரத்தின் கீழ் நிஷ்டையில் இருந்த மாண்டவ்வியரைப் பார்த்துக் காவலர்களின் தலைவன்; “இப்பக்கமாக யாராவது திருடர்கள் ஓடி வந்தார்களா?" என்று கேட்டான். மாண்டவ்வியருக்கு வெளியே நடைபெற்ற எதுவும் தெரியவில்லை. அதனால் கோபங்கொண்ட போர்வீரன்; "அதோ ஒரு குடிசை தென்படுகிறது. அதைச் சோதனையிடுங்கள்" என்றான்.
குடிசையின் உள்ளே சென்ற காவலாளிகள் அங்கே திருடப்பட்ட பொருட்கள் இருப்பதைக்கண்டு தமது தலைவனுக்கு அறிவித்தனர். அவன் வந்து பார்த்து விட்டு மாண்டவ்வியர் தான் திருடர்களின் தலைவர் என நினைத்து அவரைக் கைதுசெய்து கொண்டு சென்று அந்நாட்டு அரசன் முன் நிறுத்தினான்.
நாட்டில் பல காலமாகத் திருட்டுக்கள் நடைபெற்று வந்தன. அவற்றிற்குக் காரணம் மாண்டவ்வியர் என்று அரசன் முடிவு செய்து; “உடனே அவரைச் சூலத்தில் ஏற்றுங்கள்" எனக் கட்டளையிட்டான்.
படைவீரர் மாண்டவ்வியரை இழுத்துச்சென்று சூலத்தில் ஏற்றினர்.
சூலத்தில் ஏற்றப்பட்ட மாண்டவ்வியர் பலநாட்கள் சென்றும் இறக்கவில்லை. இதையறிந்த முனிவர்கள் பலர் அவ்விடத்திற்கு வந்து மாண்டவ்வியர் படும் வேதனையைக் கண்டு துடிதுடித்தனர்.
முனிவர்கள் வந்து கூடியதைச் சேவகர்கள் மூலம் அறிந்துகொண்ட அவ்வூர் மன்னன், திகைத்துத் திகிலடைந்து அவ்விடத்திற்குச் ஓடோடி வந்தான். முனிவர் சூலத்தில் ஏற்றப்பட்டுப் பல நாட்கள் கழிந்தும் உயிரோடு இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்து அவரைச் சூலத்திலிருந்து இறக்கி, அவரின் காலில் விழுந்து மன்னிப்புக்கோரினான்.
மாண்டவ்வியர் அரசனின் மீது கோபம் கொள்ளாது அவனை மன்னித்துவிட்டுத் தனக்கேன் இத்துன்பம் வந்ததெனக் கேட்கத் தரும தேவதையிடம் சென்றார்.
"மாண்டவ்வியாரே, நீர் சிறுவனாக இருக்கும் காலத்தில் பறவைகளையும், வண்டுகளையும் பிடித்துச் சித்திரவதை செய்து விளையாடினீர். சிறுவனாக இருந்தாலும் செய்த பாவத்திற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். அது உமக்குத் தெரியாததல்ல" என்றது தருமதேவதை.
அதைக்கேட்ட மாண்டவ்வியர்; "தருமதேவதையே, அறியாப்பருவத்தில் நான் செய்த குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? இது தகாது. இதற்காக நீ மனிதப் பிறப்பெடுப்பாய்'' என்று சபித்தார்.
இவ்வாறு மாண்டவ்வியரால் சபிக்கப்பட்ட தருமதேவதை விசித்திர வீரியனின் மனைவி அம்பாலிகையின் வேலைக்காரியின் கருவில் உற்பத்தியாகி வேலைக்காரியின் புதல்வன் விதுரனாகப் பூமியில் பிறந்தது.
தர்ம தேவதையின் அவதாரமான விதுரன் சிறந்த தர்மவானாகவும் நீதிமானாகவும் எதிர்காலத்தில் நடப்பவற்றை உணர்ந்தவனாகவும் இருந்தான். விதுரனைத் திருதராட்டின மகாராஜாவுக்கு முதல் மந்திரியாகப் பீஷ்மர் நியமித்தார். அதனால்விதுரனிடம் ஆலோசனை பெற்றே திருதராடின மன்னன் அரசாட்சி செய்து வந்தான்.
தொடரும்....
பாகம் 5 பதிவேற்றப்பட்டுள்ளது அதனை படிக்க
Click to See more பட்டனை கிளிக் செய்யுங்கள்
பின்குறிப்பு:- சிறுவர்கள் வாசித்து பயன்பெறும் வகையில் மிகவும் எளிய வடிவில் முழு மகாபாரதமும் சுருக்கப்பட்டு இங்கே எழுதப்படுகிறது.
உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன