எனது சுற்றுலா அனுபவங்கள் - ரம்பொட நீர்வீழ்ச்சி (Ramboda water falls)
பைக்வண்டியில் ரம்பொட நீர்வீழ்ச்சிக்கு ஒரு பயணம் ;- நிரஞ்சனி தினேஷ்

பைக்வண்டியில் ரம்பொட நீர்வீழ்ச்சிக்கு ஒரு பயணம்..
சில மாதங்களுக்கு முன் ஒரு வலைத்தளதில் கண்ட வாசகம் என்னை மிகவும் பாதித்தது "சிலநாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் உறங்கி, ஒரே இடத்தில் எழுந்து ஒரே டீயை பருகுவது மிகவும் சலிப்பானது”. ஒரே இடத்தில இருக்கமுடிவதில்லை, மனம் பயணம்பயணம் என்றுஏங்குகிறது. நோய்த்தொற்றுகாலத்தின் கட்டுப்பாட்டின் காரணமாக நீண்ட பயணங்கள் இல்லாமலாகிவிட்டன. வழமை போல் என் தோழிகளுக்கு தொலைபேசியில் "எங்காவது போய் வரலாமா?"என்று கேட்க என்னை விட ஆர்வமானார்கள் அவர்கள். போக்குவரத்து கட்டுப்பாடு, செலவு என்பவற்றை கருத்தில் கொண்டு சிக்னமான முறையில் இத்தடவை பயணத்தினை பைக் வண்டியில் செல்ல தீர்மானித்தோம்.எனக்கு பைக் அல்ல சைக்கிள் ஒட்டிய அனுபவம் கூட இல்லை.நண்பியின் பைக்கில் செல்வதே எனது தீர்மானம். போவது என்று முடிவாகிவிட்டது இடத்தை தீர்மானிக்க வேண்டுமே... வெகுதூரம் போகமல் அருகில் உள்ள இடத்தை தெரிவு செய்ய வேண்டும் அதே நேரம் நல்ல ஒரு அனுபவத்தை தர வேண்டும். அனைவரும் சேர்ந்து கலந்தாலோசித்தன் விளைவாக ரம்பொட நீர்வீழ்ச்சி (Ramboda falls) செல்வோம் என தீர்மானிக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் ரம்பொட பகுதியில் அமைந்துள்ள ரம்பொடா நீர்வீழ்ச்சி இலங்கையின் மற்றொரு பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். ரம்பொட நீர்வீழ்ச்சியானது இஹல ரம்பொட ஓயா எல்ல (மேல் ரம்பொட ஓயா வீழ்ச்சி), ரம்பொட ஓயா மெட எல்லா (மத்திய வீழ்ச்சி) மற்றும் பஹல ரம்பொட ஓயா எல்லா (கீழ் ரம்பொட ஓயா நீர்வீழ்ச்சி) என 3 பகுதிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறான தகவல்களை தெரிந்து கொண்டு. காலை ஆறு மணிக்கு எங்கள் பயணம் ஆரம்பமானது.எட்டு பைக்வண்டிகள் நான் எனது நண்பியின் வண்டியில் பின்னாடி அமர்ந்து கொண்டேன்.
கண்டியில் இருந்து நுவரேலியா செல்லும் A5 பாதை வண்டி வேகமாக செல்ல தொடங்கியது.
"ஓகே கண்மணி" படதில் "மன மன மெண்டல் மனதில் " பார்த்த காலத்தில் இருந்து பைக் பயணம் என் கனவாக இருந்து. இன்று அக்கனவு நிறைவேறுகிறது என்று எண்னும் போதும் ஆனந்தமாக இருக்கிறது.நுவரெலிய செல்லும் பிரதான பாதை என்பதால்இ வெளிநாட்டு பயணிகளின் பஸ்கள் பல எம்மை கடந்து சென்றது. புசல்லாவ நகரை அடைந்து விட்டோம். இன்னும் ஒரு மணித்தியாலத்தில் ரம்பொட நீர்வீழ்ச்சியை அடைந்து விட முடியும். இவ்வளவு நேரம்
குறைந்தளவு வளைவுகள் மட்டுமே எதிர் கொண்டோம் ... ஆனால் இப்பொழுது சாலைகள் முழுவதும் பனிமூட்டமாகவும்
சாலைகள் வளைவுகள் நிறைந்ததாகவும் சாலை இருபக்கமும் காடுகள் மரங்கள் நிறைந்து எங்கும் பச்சையாக இருந்தது. பைக்கின் பின் உட்கார்ந்து வரும் எனக்கு ஓரே குஷி, பாவம் என் நண்பி தான்.. நான் ஏதேதோ கதைத்து கொண்டும், பாடி கொண்டும் பயணித்து கொண்டிருந்தேன் நண்பியோ கவனமாக சென்று வந்து விட வேண்டும் என்ற நிதானத்தில் வண்டியை ஓட்டிகொண்டிருந்தாள்.
இடையில் சென்று கொண்டிருக்கும் போது எம்முடன் வந்த நண்பர் ஒருவர் ரம்பொட ஹனுமான் கோவிலை தரிசனம் செய்வோம் என்று கூறி வண்டிகளை ஆலயத்திற்கு திருப்பினார் அவரை தொடர்ந்து நாமும் ஆலயத்திற்கு சென்றோம்.
பக்த ஹனுமான் கோவில். இது ரம்பொட ஹனுமான் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ பக்த ஹனுமான் கோயில் இலங்கை சின்மயா மிஷனால் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகிறது. கண்டி-நுவரேலியா சாலையில், வேவன்டன் மலையில் அமைந்துள்ளது கொழும்பில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது. கண்டி நுவெரெலிய நெடுஞ்சாலை மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 100 முதல் 150 அடி உயரத்தில் உள்ளது. வேவன்டன் ஹில்ஸின் பள்ளத்தாக்குகள் மற்றும் டேல்களின் அழகிய அழகு இணையற்றது. பள்ளத்தாக்கு காட்சி மற்றும் கொத்மலை நீர்த்தேக்கம் ப்ப்பா பார்த்து கொண்டே இருக்கலாம் மைதானம் மற்றும் தோட்டங்கள் அழகாக பராமரிக்கப்படுகின்றன. எங்கள் வருகையின் போது ரோஜாக்கள் பூத்துக் குலுங்கியது கண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஜெட் பிளாக் கிரானைட்டால் செய்யப்பட்ட அனுமன் சிலை 16 அடி உயரம். சிலையை புகைப்படம் எடுக்க எங்களுக்கு அனுமதி இல்லை. கோவிலின் விளம்பரப் பலகையில் வைக்கப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தை புகைப்படம் எடுத்தேன். சுத்தம் இயற்கை அழகு மற்றும் அமைதியான சூழ்நிலைக்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்.பூஜை நிறைவடைந்தது பிரசாதம் வழங்கப்பட்டது. காலையில் இருந்து யாரும் எதுமே சாப்பிட்டிருக்கவில்லை. அங்கு எமக்கு கிடைத்த பொங்கலும், வடையும் புதுதெம்பினை தந்து இந்த பொங்கல் வடையுடன் தேனீர் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் உள்மனம் புலம்பியது. இந்த பொல்லாத மனம் எப்போதும் இப்படி தான் கிடைத்த விடயங்களை விட கிடைக்காத ஒன்றை நினைத்து புலம்பும்.
picture source :- Google image
அனைவரும் தங்கள் தங்களது பைக்கில் ஏறி கொண்டோம். பயணம் தொடர்ந்தது. புதிய உற்றசாகம் மனதில். நாம் அனைவர்க்கும் மனதில் உற்சாகம் முக்கியம். எல்லா நாளும் உற்சாக நாளாக எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.சில நாட்களில் நாமே நம்மை உற்சாகபடுத்தி கொள்வது அவசியம்.பல நாட்கள் பிறர் எம்மை உற்சாக படுத்தியது உண்டு சில சந்தர்பங்களில் பிடித்த பாடல் பிடித்தவர்களின் வார்த்தை, திரைப்படங்கள் கூட எம்மை ஊற்சாகப்படுத்த கூடும். எந்த வழியிலாவது மனதை தெம்பாக வைத்து கொண்டால் போதும் எந்த சவாலையும் சமாளித்து விடலாம்.நான் சோர்வாகி
உற்சாகம் குறையும் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும்.. ... <<<< ஓ உற்சாகம் கூடியதும் என் பயண விபரிப்பயே மறந்து விட்டேன்....>>>
சரி நமது பயணத்திற்றகு வருவோம், நாம் இப்பொழுது ரம்பொடையை கடந்து தவலந்தனை என்ற இடத்தில் பயணித்து கொண்டிருந்தோம். பாதை ஓரங்களில் கித்துல் பாணி, கருப்பட்டி, ஆணைகொய்யா என எங்கள் பகுதிகளில் எளிதில் கிடைக்காத பொருட்கள் காண கூடியதாக இருந்து. இதை விட வாகனங்கள் கழுவும் இடங்கள், இவ் வாகனங்கள் கழுவும் இடங்களுக்கு இயற்கை நீரோடையில் இருந்தே நீரை பெற்று கொள்கிறார்கள்.
நாம் போய்கொண்டிருக்கும் போதே தூரத்தில் ரம்பொட நீர்வீழ்ச்சி.. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கே இவ்ளவு அழகு என்றால் அருகில் சென்று பார்க்கும் போது எவ்ளவு அழகாக இருக்கும் என்று மனதில் குதுகலம் பொங்க ரம்பொட சுரங்க பாதயை அடைந்து விட்டோம்.ஆம் இச் சுரங்கபாதை யை ஒட்டியதாகவே நீர்வீழ்ச்சி அமைந்தள்ளது. எனவே சுரங்க பாதையை பற்றி அறிந்து கொள்வதும் அவசியம்.
ரம்பொட சுரங்கப்பாதை பார்ப்பதேற்க அற்புதமாக இருந்தது அந்த ரம்போடா சுரங்கப்பாதையின் மேல் பகுதிகளில் மலையும், மரமும், மணலும் காணப்படும் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட இந்த ரம்பொட சுரங்கபாதை இலங்கைத் தாயின் மிகவும் பிரபலமான ஒரு அழகிய சுரங்கபாதையாக பார்க்கப்படுகின்றது.சுரங்க வயிலுக்கே வந்து விட்டோம் கொஞ்சம் உள்ள சென்று பார்த்துவிட்டே வருவோம் என்று பைக்கில் உள்ளே சென்றோம். பாறையை குடைந்து செய்த சுரங்கம் ஆகையால் கடும் இருட்டு.அந்த இருள் நிலையை சுரங்க சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த பல்புகள் அகற்றி கொண்டிருந்தது.
2006 ஆம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாம் பிறகு 2008ம் ஆண்டு முடிவுக்கும் வந்ததாம் அதோடு இந்த சுரங்காபாதையின் கட்டுமான பணிக்காக ஜப்பான் அரசாங்கமும் நிதி உதவி அளித்து உள்ளது. இவ் சுரங்கப்பதையின் ஓவியமும் 2011ஆம் ஆண்டில் ஆச்சிடப்பட்ட ஆயிரம் ரூபா நாணயதாள்களில் காணலாம்.
நாம் திட்டமிட்டு வந்தது நீர்வீழ்ச்சி மட்டுமே ஆனால் எதிர்பாராமல் ஹனுமன் ஆலயம், சுரங்கபாதை என்பவற்றையும் கண்டு
களித்தோம். சரி நீர்வீழ்ச்சிக்கு வருவோம்.நாம் அனைவரும் பைக் வண்டிகளை விட்டு இறங்கி நீர்வீழ்ச்சிக்கு சென்றோம்.
முற்காலத்தில் இது புனா நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்பட்டது. மேல் ரம்பொட நீர்வீழ்ச்சி மற்றும் கீழ் ரம்போடா நீர்வீழ்ச்சி என்று இரண்டு பகுதிகள் உள்ளன. நுவரெலியா வீதியில் இருந்து பார்க்கும்போது நீர்வீழ்ச்சியின் நடுப்பகுதி மற்றும் கீழ்ப்பகுதி மட்டுமே தெரியும். இவை இரண்டிற்கும் அழகாய் இருக்கும் மேல்பகுதியை பார்க்க வேண்டுமானால் அருவிக்கு அருகில் மேற்பகுதியைப் பார்க்க வேண்டுமானால் அருவியின் அருகே மேலே செல்லும் நடைபாதையில் சுமார் 750 மீட்டர்கள் செல்ல வேண்டும். இரண்டையும் பார்க்க மெயின் ரோட்டில் இருந்து சிறிது தூரம் ஏறி இறங்க வேண்டும். மேலே செல்லும் பாதை படிக்கட்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஆனால் நாம் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பல்கலைகழக மாணவர் ஒருவர் தவறி விழுந்து விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார் எனவே எம்மை அங்கு இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. அதிக மழை காலங்களில் இவ் நீர்வீழ்ச்சியை பார்வையிட செல்வது அவ்வளவு
பாதுகாப்பானது இல்லை. அதிலும் நீர்வீழ்ச்சியில் சென்று சாகசமான முறையில் புகைப்படம் எடுக்க முயற்சிப்பது இன்னும் ஆபத்துக்களையே தரும்.
picture source :- Google image
ரம்பொட நீர்வீழ்ச்சியின் அழகில் மெய்மறந்திருந்த எமக்கு அருகில் இருந்த ஹோட்டலில் கொத்து ரொட்டியின் சத்தம் வயிற்றில் பசியை தூண்டி விட்டது. கொஞ்சம் கூட தாமதிக்காது நாம் ஒன்பது பேரும் ஹோட்டலில் சென்று சாப்பிடுவோம், என்று தீர்மானித்தோம்.
நிறைய ஹோட்டகள் நீர்வீழ்ச்சிக்கு அருகிலேயே இருந்தது.வெளிமடை, நுவரேலியா போன்ற இடங்களில் இருந்து வரும் பயணிகளும் இருந்து வரும் பயணிகளுக்கு சரி கண்டியில் இருந்து வரும் பயணிகளும் சரி இந்த இடத்தில் தமது வாகனங்களை நிறுத்தி உணவு உண்டு விட்டு செல்கிறார்கள் அதனால் அப்பகுதியில் ஹோட்ள்களுக்கும், சிறிய உணவு கடைகளுக்கும் குறைவில்லை. பயணங்கள் என்று கூறும் போது உணவும் இப்பயணங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிகம் கொழுப்பு தன்மை வாய்ந்த உணவுகள், பால் கலந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். குளிர் உயரமான மலை பிரதேசங்களுக்கு பயணிக்கும் போது இலகுவாக செரிமானம் அடைய கூடிய உணவுகளையே எடுத்தல் வேண்டும்.
உணவு நமது வாழ்வின் மையப் பகுதியாகும். நாம் புதிதாகப் பிறந்தபோது, நம் தாய் ஊட்டிய தாய்பால் தொடங்கி . உணவு என்பது வெறுமனே வாழ்வாதாரம், ஊட்டச்சத்து சார்ந்த விஷயமில்லை, அதில் கதகதப்பு, அன்பு, இணைப்பும் இருக்கிறது. படிப்படியாக, நாம் வளர்ந்தோம், உணவு அதிகத் தேவைகளை நிறைவுசெய்தது. நாம் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் உண்ணும்போது, அவர்களுடன் வலுவான பிணைப்பை உருவாக்குகிறோம்; நாம் உணவைத் தயாரிக்கும்போது, அது நமக்கு உணர்ச்சிகரமான மகிழ்ச்சிகளைத் தருகிறது; நாம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சிறப்பு நிகழ்வுகளில் சாப்பிடும்போது, உணவு கொண்டாட்டத்தின் பொருளாகிறது.
சில நேரங்களில், நாம் பதற்றமாக, சோர்வாக, வருத்தமாக அல்லது தளர்வாக உணரும்போது, உணவுகளை கொண்டு உணர்வுகளை கையாண்டு இருப்போம் . சுட சுட கொத்து ரொட்டி சுவையாக இருந்து என்று கூறுவதை பார்க்கிலும் காரமாகவும், தாராளமாகவும் இருந்து.
உணவுகளை தயார் படுத்தும் நபர்கள் கூட நம் உணர்வுகளின் தாக்கம் செய்யகிறார்கள் என்றே கூற வேண்டும். அம்மா கையில் ஒரு பிடி சோறு போதும் எவ்வளவு பெரிய சவாலையும் சமாளித்து விடும் திடம் வரும், அப்பா பிசைந்து ஊட்டிவிடும் போது ஏற்படும் அந்த பாதுகாப்பு உணர்வாக இருக்கட்டும், மனதிற்கு மிகவும் நெருங்கிய அன்பானவர் கையால் குடிக்கும் ஒரு கப் தேனீர் என உணவும் உணர்வுகளும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிபிணைந்துள்ளது.
நாம் ஓடர் கொடுத்த கொத்து ரொட்டி நம் மேசையை வந்தடைந்தது சுட சுட கொத்து அந்த குளிர் காலநிலைக்கு கொத்து ரொட்டியின் காரமும், சூடும் மிக இதமாக இருந்தது.சுவையாக இருந்தது என்று சான்றிதழ் வழங்க முடியாது ஆனால் நாம் செலுத்திய விலைக்கு நியாமானதாக இருந்தது.காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகிய எமது பயணம் தொலைபேசியை பொழுது நேரம் மூன்று மணி. இப்போதான் செல்ல தயாராகினால் தான் மாலை ஆறுமணிக்கு முன்பு வீடுகளுக்கு செல்ல முடியும் என்ற தீர்மானத்துடன் பைக் வண்டிகளில் ஏறினோம்.
போகும் போது மற்ற நண்பரின் வண்டியில் ஏறிக்கொண்டேன்.யாருமற்ற முடிவில்லாத நீண்ட பாதையில் பயணிக்கையில் இந்த உலகத்திலேயே நாம் இல்லை என்று தோன்றும். என்னக்கும் அது தோன்றியது
"பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு…
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு"
என்ற பாடல் எமக்கு பின்னால் ஒலிப்பது போல் ஒரு பிரமை.அடுத்த பயணத்திற்கு எப்படி தயாராவது என்ற மனதிடங்களுடன் வீடுகளை அடைந்தோம்.
நிரஞ்சனி தினேஷ்