சுற்றுலாவின் முக்கியத்துவம் என்ன? - மக்கள் ஏன் சுற்றுலாவை அதிகம் வீரும்புகின்றார்கள்?
சுற்றுலாவின் முக்கியத்துவம்

“யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ”எனும் கணியன் பூங்குன்றனாரின் கூறல் ஒன்றுள்ளது.அதாவது உலகின் அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானவை. உலக மக்கள் யாவரும் நமது உறவினர்கள் என்பது இதன் பொருள். சுற்றுலா என்பது இவ் ஊர்களையும் எம் எண்ணிலடங்கா உறவினர்களையும் கண்டு மகிழும் அழகிய தருணம் சுற்றுலா எனக் கூறுவது சாலப் பொருந்தும்.
மனிதர்கள் என்பவர்கள் சமூகப் பிராணிகள். இவர்கள் குறித்தவொரு சமூகத்தில் பிறந்து இசைவுற்று அச் சூழலில் கல்வி,தொழில் என்பவற்றை வடிவமைத்து காலத்தின் ஓட்டத்துடன் தாங்களும் ஓடி இறுதியில் மனச்சோர்வு, தனிமை என தங்கள் முதுமை பருவத்தை கழித்து இறுதியில் திருப்தியற்றவர்களாக தங்கள் வாழ்வினை முடித்து கொள்கின்றனர். ஒரு சிறிய வட்டத்தினுள் உள்ளடக்கப்பட்ட இத்தகைய வாழ்க்கையில் நாம் காணப்போகும் பயன் தான் என்ன??? நாம் வாழும் காலத்திற்கு தான் என்ன பயன்??? பணம் எனும் காகிதத்தையே வாழ்வாக்கி இறுதியில் முதுமை பருவத்தை தனிமையுடன் கழிக்கிறோம்! இது வியப்பிற்குரியதல்லவா?
இவ்வாறு உலகம் தெரியாது வாழ்ந்து இறப்பதால் பயன் என்ன? இந்த வினாவிற்கான பதில் தான் நாம் செல்லும் சுற்றுலாக்கள். சுற்றுலா என்பது மனிதனொருவன் தனக்கு சௌகரியமான ,பழக்கமான தனது இருப்பிடத்தை விட்டு புதிய இடங்கள், மனிதர்களுடன் உறவுகளை ஏற்படுத்தி தன்னை அர்த்தமமுள்ளவனாக உணரும் ஒரு அற்புத தருணமே சுற்றுலாக்களாகும். இதன் மூலம் மனிதர்களின் வேலை பழுவினால் ஏற்படும் சோர்வு, உளப் பிரச்சினைகள், உலகறியாமை போன்றன நீங்கப் பெறுகின்றன.
இவ்வுலகம் உண்மையில் அழகிய படைப்புகளையும், அதிசயங்களையும் கொண்டதாகவே காணப்படுகின்றது.எனினும் எம்மில் பலரால் இன்றைய காலவோட்டத்தின் கதியில் செல்வதால் இவற்றை காணவோ, காண்பதை இரசிக்கவோ நேரம் கிடைப்பதில்லை என்பது தான் நிதர்சன உண்மை. இத்தகைய நாம் எமக்காகவும் எம் உள, உணர்வு சமநிலைக்காகவும் இத்தகைய சுற்றுலாக்கள் செல்வது முக்கியமானதொன்றாகும். அண்மைகால சுகாதார துறையினரின் தரவுகளின் படி உலக மக்களில் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டோர் தொகை கடந்த நான்கு வருடங்களில் 15% இலிருந்து 65% ஆக உயர்ந்துள்ளமை கண்டறியப்பட்டது. இதற்கெல்லாம் முக்கியமான காரணங்களில் ஒன்று மனிதவாழ்வு ஒரு குறித்த இடத்தினுள் முடக்கபட்டமையே ஆகும் எனவும் கூறப்பட்டது. இதற்கான தீர்வு புதிய இடங்களில், புதிய மனிதர்களுடன் புத்தம்புது அனுபவங்களை பெற்று உண்மையான மன ஆளுமை, மன மகிழ்வை பெறலாகும்.இன்றைய காலகட்டத்தில் முக்கிய சவாலாக காணப்படும் உள ரீதியான அனைத்து நோய்களுக்குமான தீர்வாகவும் இது காணப்படும் என்பதிலும் துளியும் ஐயமில்லை.
இவை தவிர குறித்த நாட்டினுள்ளே உள்ள பெறுமதி மிகப் பெற்ற இடங்கள் கூட அந்தந்த நாட்டிலுள்ளோருக்கு தெரிவதில்லை. இந்த அறியாமைக்கும் சிறந்த தீர்வு சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதே ஆகும். இதனால் தான் கல்வி கற்கும் மாணவர்களுக்கு களப்பயணம் செல்வது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் கல்வி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது போலும். அறியாமை என்பதை முளையிலே கிள்ளி எறிந்து மாணவர்களுக்கு தாங்கள் வாழும் இடம் தொடர்பான சிறந்த அறிவு கற்கும் பருவத்திலேயே வழங்கப்பபடுகிறது.சுற்றுலா தலங்கள் குறித்த நாட்டின் அல்லது பிரதேசத்தின் கலாசார பெறுமதி, வரலாற்று பெறுமதி, அழகியல் பெறுமதிகள் என பலவற்றை காண்பிக்கும் கண்ணாடி போன்றன.
இதுபோல் சுற்றுலா துறை என்பது குறித்தவொரு நாட்டின் பொருளாதார துறையிலும் கணிசமானளவு பங்கினை ஆற்றுகிறது. அந்நிய செலாவணி என்பது ஒரு நாட்டின் பொருளாதார விஸ்திர நிலையை அளவிடும் அளவு கோலாகும். இதற்கான சிறந்த உதாரணம் எம் இலங்கை தேசம். 2019 ஆம் ஆண்டு வரை பொருளாதாரத்தில் நிலையாய் நின்ற எம் தேசம் இன்று அந்நிய செலாவணி இன்மையால் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது என்றால் மறுக்க முடியாது. இது சுற்றுலாத் துறையின் முக்கியத்துவங்களில் ஒன்றாகும்.
ஒரு நாட்டின் பெறுமதியையும் அதன் மதிப்பையும் நாம் உணர்வது அங்குள்ள பெறுமதி மிக்க சுற்றுலா தலங்களை பார்வையிடுவதன் மூலமேயாகும். இலங்கையை எடுத்துக்காட்டினால் பிரசித்தமான திருகோணமலை இயற்கை துறைமுகம், சீகிரிய குகை ஓவியம், பாரம்பரிய கல்வெட்டுக்கள், மனதிற்கு இதமான துன்கிந்த நீர்வீழ்ச்சி, வானளவு உயர்ந்துள்ள சிவனொளிபாதமலை என சுற்றுலா தலங்களின் பட்டியல் நீள்கிறது. இவ்வாறு உலகளவில் பைசா சாய்ந்த கோபுரம், பபீலோனிய தொங்கு தோட்டம், இன்றுவரை எம்மவரை கவர்ந்துள்ள ஈபிள் கோபுரம் என எண்ணிலடங்கா எத்தனையோ அதிசயங்களை கொண்டுள்ளது இப் பூமி என்றால் மறுக்க முடியாது. பல படைப்புகள் அதிசயிக்க தக்க வகையிலும், மனத்திற்கு களிப்பூட்டும் வகையிலும் காணப்படுகின்றமை சிறப்பிற்குரியது.
அண்மைய உலக வங்கித் தரவுகளின் படி பிரான்ஸ் நாடு அதிக சுற்றுலா பயணிகளை கவர்ந்த தேசம் எனும் பட்டியலில் முதல் இடம் பிடித்தது. இதற்கு காரணம் அங்குள்ள ஈபிள் கோபுரம் ஆகும். இன்று எம்மில் பலரின் வாழ்க்கை இலட்சியம் இவ் இடத்தை ஒரு தடவையேனும் சுற்றி பார்க்க வேண்டும் என்பதாகும். இதன் மூலமான வருமானம் நாட்டின் பொருளாதாரத்தை 30% ஆக உயர்த்தியுள்ளதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.இது ஆச்சரியமூட்டும் உண்மையாகும். எம் தேசமும் சுற்றுலா துறைக்கு பிரசித்தமான ஒரு முக்கியத்துவமிக்க தேசமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இன்று பிற்போக்கு நிலையை அடைந்துள்ளமை கவலைக்குரியது.
“புதியவற்றை காண்பதும் ; புதியவற்றை அறிவதும் ; அனுபவம் பல பெறுவதுமே!” உண்மையான மனித வாழ்வு என்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்த வகையில் நாம் ஒவ்வொருவரும் புதியவற்றை காண விழைய வேண்டியது முக்கியமானதொன்றாகும். இதன் மூலம் உலகம் மட்டிலான அறிவும் உலக மக்கள் மட்டிலான புரிந்துணர்வும் எமக்கு ஏற்படுகிறது. இன்று இப்புரிதல் இன்மையால் தான் பல யுத்தங்களும் பிரிவினைகளும் எம்மிடையே ஏற்பட்டுள்ளன என்றால் முற்றாக மறுக்க முடியாது.
இன்று பல ஆய்வுகளும் முடிவுகளும் புதிய கண்டுபிடிப்புகளும் இச்சுற்றுலாவின் விளைவாகவே கண்டறியப்பட்டுள்ளன.மனிதன் புதியவற்றினை காண விளையும் போது புதியவற்றை கண்டறிகிறான் என்றால் மிகையாகாது. ஒளவைப் பிராட்டி கூறுகிறார் “ தேசங்கள் பல கடந்தும், பற்பல அனுபவங்கள் பல பெற்றும் பாடல் பல புனைந்தேன்” என்கிறார். அனுபவங்கள் மனிதனை பூரணமாக்குகின்றன. சுற்றுலாக்கள் மேற்கொள்ளப்படுகையில் சக மக்களிடையிலான புரிதல், வேலைவாய்ப்புகள் என எண்ணிலடங்காத அனுகூலங்கள் பெறப்படுவதுடன் மக்களின் பிரிவினைகளும் தகர்ந்து போகின்றன .
இன்று தனியறைகளில் முடங்கி, மூளைசோர்வு அடைந்துள்ள நாம் ஒவ்வொருவரும் சுற்றுலா எனும் மாத்திரையை உட்கொள்ள வேண்டியது அவசியமானதொன்றாகும். தனி மனிதனின் எழுச்சி ஒரு சமூகத்தின் எழுச்சி ஆகிறது அது நாளடைவில் ஒரு தேசத்தின் எழுச்சியாக பரிணமித்து இறுதியில் சிறந்த உலகமொன்றை கடியெழுப்ப ஆவண செய்கிறது. இவ்வாறு தனி மனிதன் சிறந்த மன எழுச்சியுள்ளவனாக மாறும் போது அது சிறந்த மனிதர்களை கொண்ட உலகொன்றை கடியெழுப்ப வழி சமைக்கிறது.
என் கருத்துப்படி நாம் எம்மை சுற்றியுள்ளவற்றை அறிந்து புரிந்து கொண்டாலே பாதி போர்களும், அழிவுகளும் இல்லாமல் போய்விடக் கூடும். புரிதல் வேண்டுமெனின் அறிதல் முக்கியமானது.ஒரு பாடல் உள்ளது,
“புத்தம் புது வானம் வேண்டும்
நித்தம் புது பூமி வேண்டும்….”
என செல்லும் இவ்வழகிய வரிகளில் புதிய அனுபவங்களின் அருமை உணர்த்தப்பட்டுள்ளது. இவ்வுலகின் அழகு அதனை அனுபவிப்பதில் தான் உள்ளது. இன்று மடிக்கணணிகளில் முடங்கி விட்ட நாம் கண் திறந்து உலகை பார்க்க மறந்து விடுகிறோம். இது தான் சுற்றுலா எனும் பதம் அருகி வர காரணமாகிறது.சுற்றுலா கூட ZOOM இல் போய்விடலாம் எனுமளவிற்கு நாம் நிதர்சன அனுபவங்களை சுவைக்க தவறுகிறோம் இது கவலைக்குரிய விடயமாகும்.
இன்று சுற்றுலாத் தலங்கள் பலவும் அருகிவருகின்றன. இளம் தலைமுறையினராகிய நாம் அதற்கு காரணமாகிறோம். இதனால் நாம் எம் தேசத்தின் தனித்துவத்தையும், அதற்கான செலாவணியையும் இழந்து பின்னடைவினை நோக்கி செல்கிறோம். எவ்வாறெனின் படைப்புகளில் எம் பெயர்களை கிறுக்கல் செய்கிறோம், படைப்புகளை சேதமாக்குகின்றோம், அவற்றை சட்டவிரோதமாக விற்க முற்படுகின்றோம்.இவ்வாறான செயல்களால் இத்தகைய சுற்றுலா தலங்கள் பயணிகளின் கவனத்தை இழந்து இறுதியில் சுவடுகளாக மாறிச் செல்லும் அவலமும் ஏற்படுகிறது.
ஒரு நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் அந் நாட்டின் வளங்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம். நாம் அவற்றை இரசிக்கும் உரிமையை எம் முன்னோர் எமக்கு கொடுத்தது போல் நாமும் அந்த உரிமையை எமக்கு அடுத்த சந்ததியினருக்கு வழங்க வேண்டும். இது ஒவ்வொரு தனி மனிதனினதும் கடமையாகும்.ஒரு நாட்டை குறித்து கூறும் போது நாம் அங்குள்ள பிரசித்தமான இடத்தை வைத்தே அடையாளம் செய்கிறோம்.
பணமே வாழ்வு!!! என ஓடும் நாம் வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது.புதிய தேடல்களிலும் எம் நாட்டங்களை செலுத்த வேண்டியது முக்கியமாகும். குடும்பங்களாக நாம் சுற்றுலா செல்லும் போது அவை பிணைப்பையும் இனிய நினைவுகளையும் பரிசளிக்கின்றன அது போலவே தொழில் ரீதியில் செல்கையில் அவை தொழில் குறித்த அறிவை விருத்தி செய்து எம்மை மேம்படுத்துகின்றது. “அனுபவ ரீதியான அறிவே உண்மையானது ” என்பது ஏவுகனை நாயகன் அப்துல் கலாம் ஐயா அவர்களின் சொல்லாகும்.இதனை நாம் உணர வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் புத்தக அறிவு மிகப்பெற்ற பலரால் இயல்பாக சக மனிதர்களுடன் பழக முடிவதில்லை அதற்கும் ஒரு வகையில் புதிய மனிதர்களுடன் பழக்கம் ஏற்படுத்தும் அனுபவங்களை பெறாமை ஒரு காரணமாகும். இவ்வாறான பிரச்சினைகளும் இத்தகைய சுற்றுலாக்கள் தரும் அனுபவங்கள் மூலம் சரி செய்யப்படலாம் என்றால் மறுக்க முடியாது.காலம் முன்னேறிக் கொண்டிருக்க இருபத்து நான்கு மணிநேரம் கூட மனிதனுக்கு போதாது எனும் அவல நிலையில் உறவுகளை மறந்து, எம்மை மறந்து சக்கரத்தில் சிக்கிய மான் குட்டி போல் அல்லலுறுகிறோம். இத்தகைய வாழ்க்கையை சிறிது காலம் தளர்த்தி விட்டு எம் மனதிற்கு ஆறுதல் தரும் சுற்றுலாக்கள், களப்பயணங்கள் போன்றவை மேற்கொள்ளல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி கோலும் செயலொன்றாகும்.
இத்தனை நன்மைகளை அள்ளித் தெளிக்கும் சுற்றுலா பயணங்களை நாமும் எம் வாழ்வில் ஓர் அங்கமாக மாற்றி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ எம்மை நாமே பழக்கி கொள்வதுடன் எம் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலா தலங்களை பாதுகாக்கும் பொறுப்பினையும் ஏற்றவர்களாக மாறி ஆரோக்கியமான சமூகமொன்றினை உருவாக்க முன்வருவோமாக!!!!