எனது சுற்றுலா அனுபவங்கள் - நியூ பீ கொக் ஹில் (New peacock Hill )
What is Peacock Hill?,

நியூ பீ கொக் ஹில் (New peacock Hill )
இருப்திமூன்று வயதிற்குப் பிறகு அவ்வப்போது என்னுள் எட்டிப் பார்த்த பயணிக்கும் ஆவலைப் படிப்பைக் காரணம் காட்டித் தள்ளிப் போட்டிருக்கிறேன். அது பொருத்தமான காரணமே இல்லை என்பதை நான் நன்கு அறிவேன் ஆனாலும் அந்த காரணத்தை என்மனம் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், எனது பயண ஆசையை வெளிப்படுத்திய பின் வீட்டினர் சொல்லப் போகும் 'வேண்டாம்','தேவைஇல்லை ' போன்ற சொற்களை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதால் . இருபத்தி ஐந்தாம் முகநூலிலும், சமூக தலங்களிளும் பகிரப்படும் படங்கள் ண உள்ளத்தில் பயண ஆசையை இன்னும் கூட்டியது,
இதற்கு மேலும் இவ் ஆசையை தள்ளி போட கூடாது என எண்ணி
வீட்டினரிடம் எனது பயண விருப்பத்தைத் தெரிவித்தேன். எதிர்பார்த்தது போலவே அவர்களது அக்கறையும் பயமும் ‘முடியாது’ 'முடியவே முடியாது' என்ற வார்த்தைகள் வந்து விழுந்து.பெண் பிள்ளை மேல் உள்ள அளவு கடந்த அக்கறை, சமூகத்தில் அன்றாடம் நடக்கும் செய்திகளுமே அவர்களின் முடியாது என்ற வார்த்தைகளுக்கு மூலகாரணம் என்று உணர்ந்து கொண்டேன். அவர்களின் அச்சத்தை போக்கவும், என் பயண ஆசையை நிறைவு செய்து கொள்ளவும் நானும் எனது பெண் தோழிகளும் தெரிவு செய்த இடமே
நியூ பீ கொக் ஹில் (New peacock Hill )
நியூ பீ கொக் ஹில் (New peacock Hill )
என்பது இலங்கையின் மத்திய மலைநாட்டில் புஸ்ஸல்லாவ நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு மலையாகும். இது சுமார் 1518 மீ உயரத்தில் உள்ளது மற்றும் சுற்றியுள்ள மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் அற்புதமான காட்சியை வழங்குகிறது. மலையின் உச்சியில் புஸ்ஸல்லாவ நகரம், கொத்மலை நீர்த்தேக்கம், கபரகல மலை, ரம்பொட நீர்வீழ்ச்சி, அம்புலுவாவ, பிதுருதலாகல, பைபிள் ராக், டோலஸ்பாகே, கம்பளை நகரம், நாவலப்பிட்டி நகரம் மற்றும் நுவரெலியா நகரம் ஆகியவற்றின் அற்புதமான காட்சிகளை காணலாம். போன்ற அடிப்படை தகவல்களை கூகுளை தட்டி சேகரித்து கொண்டோம். மற்ற இடங்களை விடவும் நியூ பீ கொக் ஹில்செல்வது ஒப்பீட்டளவில் எளிதான ஒன்றாகும் எமக்கு .நியூ பீ கொக் ஹில்"மொனரா காலா மலை" என்றும் அழைக்கப்படுகிறது.நியூ பீ கொக் ஹில் புஸ்ஸல்லாவ நகருக்கு 200 மீ உயரத்தில் உள்ளது. புஸ்ஸல்லாவவில் உள்ள மிக உயரமான சிகரம் இது மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் வழியாக செல்லும் சாலை வழியாக எளிதில் அணுகலாம்.
காலை ஏழு மணி நாம் நினைத்தபடி பயணிக்க போகிறோம் என்ற சந்தோஷம் ஒரு புறம், பெற்றோர்கள் பயப்படுவது
போலவே பாதுகாப்பற்ற பயணமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் மறு புறம்.
"வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு"
இளையராஜாவின் இசையோடு புலமைபித்தனின் வரிகள் ரேடியோவில் என்னை மேலும் தூண்டி விட பஸ்தரிப்பிடத்திற்கு சென்றேன். கம்பளை பஸ் தரிப்பிடத்தில் நியூ பீ கொக் செல்லும் பஸ் காலை 6:45க்கு சென்று விட்டது என்று நேரக்கனிப்பாளர் கூறிய போது ஆரம்பமே தடையா என்று தோன்றியது. ஆனாலும் சென்றே தீரவேண்டும் என்ற எமது ஆசை மாற்று வழியை தேடியது. கம்பளையில் இருந்து புசலவா, நுவரேலியா, பூண்டுலோய செலக்கூடிய எந்த பஸ்சில் சென்றாலும் நியூ பீ கொக் சென்று விடலாம் என்று நேர கணிப்பாளர் கூறவும். நாங்கள் புஸ்லவா பஸ்சில் ஏறினோம்.
கம்பலையில் இருந்து 28கிலோமீட்டர் மட்டுமே தூரம் என்று கூகுல் கூறவும் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தானே என்று பஸ்சில் இறுதியாக இருந்த இருக்கையில் நான் என் தோழிகள் அனைவரும் சென்று அமர்ந்தந்தோம்.
நீண்ட தூர பேருந்து பயணம், எல்லோருக்குமே ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். குறுகிய தூரங்களே பயணித்திருக்கிறேன் என்பதால், நீண்ட தூரம் பயணம் செய்யும் வாய்ப்பு அதிகம் கிடைத்ததில்லை. மீறிப்போனால் அப்பா, அம்மா, அக்கா என்று குடும்பமாக ஏதாவாது திருமண விழா, மரண வீடு , ஒரு ஐந்து முறை நீண்ட தூரம் பயணித்திருப்பேன். அதுவும் கம்பலையில் இருந்து கொழும்பு வரை மூன்று தடவை பயணித்துள்ளேன். மிகுதி இரண்டு பயணங்களும் கம்பலையில் இருந்து ஹட்டன் வரை மட்டுமே. இவை தான் என் இருபதைந்து வயது வரையிலும் நான் நினைத்து கொண்டிருந்த, பயணித்த நீண்ட தூர பயணங்கள் எனலாம்.
பேருந்தில் ஏறி உட்கார்ந்த உடனே, மனது அலை பாயும். அதுவும் பேருந்து முழுக்க சீட் இருந்தால், குறைந்தது மூன்று முறையாக இடம் மாறி அமர்ந்துவிடுவேன். ஜன்னல் காற்று, சாய்ந்து தூங்க வசதி, கால் வைக்க இடம் என, அப்போ தான் மூளை பல்வேறு கோணங்களில் யோசிக்க ஆரம்பிக்கும்.
என்னுடைய சொகுசுக்கு யோசித்த நான், ஒருமுறை கூட பாதுகாப்பு பற்றி சிந்தித்து பார்த்ததே இல்லை. அப்படி ஒரு தடவை கொழும்பு பயணத்தின் போது அப்பா கூறிய அறிவுரை மனக்கண் முன் வந்தது எப்போதும் "நீண்ட தூர பேருந்து பயணத்தில், படிக்கட்டுக்கு பக்கத்தில் உள்ள சீட்டுகளில் பாதுகாப்பு ரொம்ப குறைவு. அதுவும் இரவுப் பயணத்தில்பொருத்தமே இல்லை.இவ்வாறான சந்தர்ப்பதை திருடர்கள் பார்த்து இருப்பார்களாம் கைபேசி, பை என்பவற்றை பறித்து கொண்டு ஓட அவர்களுக்கு இலகுவாக அமைந்து விடுமாம்.
இன்னும் சில பயணகளில் டிரைவர் சீட்டுக்கு பின்னால் அமர்ந்து கொள்வேன். பேருந்தில் உள்ள சீட்டுகளிலேயே அங்கே தான், கொஞ்சம் கால் வைக்க அதிக இடம் கிடைக்கும். விமானத்தில் பிஸினஸ் கிளாஸ் சீட் கிடைத்துவிட்டது போல குஷியா இருக்கும். ஆனால் அந்த சீட்டையும் மதகுரு யாராவது வந்தால் கொடுத்து விட வேண்டும் எனவே அந்த சீட்டுகளில் அமர்வதையும் தவிர்த்தல் நல்லது இறுதியா பாதுகாப்பான சீட் எதுவென்று பார்த்தால், நடுப்பகுதியில் இடது, வலது பக்க ஜன்னல் இருக்கைகள் தவிர, நடுவில் உள்ள இருக்கைகளில் பயணம் செய்வதுதான் மிகவும் பாதுகாப்பானது என்று நினைக்கிறேன். பேருந்தின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்தால், இடது பக்கத்தை காட்டிலும், வலதுபக்கம் மிகவும் ஆபத்தானது. நேருக்கு நேர்மோதலில் வலது பக்கம்தான் அதிக பாதிப்படையுமாம் . அதே போல பின்பக்கம் அமர்ந்து பயணம் செய்தாலும், வலது பக்கம் ஆபத்து அதிகம். அதனால் எனக்கு தெரிந்து பேருந்தின் நடுப்பகுதியில் உள்ள ஜன்னல் ஓர சீட்டுகளை தவிர்த்து, நடுவில் எங்கே உட்கார்ந்தாலும்,மற்றஇடங்களைக்காட்டிலும் பாதுகாப்பு அதிகம். என்றெல்லாம் அப்பாவின் அறிவுரைகளை நினைத்து கொண்டு என் தோழி ஒருத்தி அனைவர்க்குமாக டிக்கெட் வாங்கினாள்.
புசலாவை போகும் பஸ்சில் சென்று ரெட்டைப்பாதை என்ற இடத்தில் இறங்க வேண்டும் அங்கிருந்து மீண்டும் தொரகளை என்ற இடத்திற்கு வேறு வாகனத்தில் செல்ல வேண்டும்.தொரகளை என்ற இடத்தில் இருந்து நியூ பீகொக் மலைக்கு நடந்தே செல்ல வேண்டும்.
பஸ் நகர தொடங்கியது பேருந்து ஆரம்பித்த வேகத்தில் இருந்து துளி கூட வேகத்தை குறைக்கவில்லை அதே கதியில் ஓடியது என்று சொன்னால் பொருந்தாது உர்ந்தது என்றே சொல்ல வேண்டும். பஸ்சில் ஒலித்த 80களில் வெளிவந்த சிங்கள மொழி காதல் பாடலும், அந்த பஸ்சின் வேகமும் எம்மை தாலாட்டுவது போலவே இருந்தது. இருபது நிமிடங்களில் அடைய வேண்டிய ரெட்டை பாதை என்ற சந்தியை நாற்பது
நிமிடங்களில் வந்து சேர்ந்திருந்தோம்.
அடுத்து தொரகல செல்ல வேண்டிய பஸ் வரும் வரை காத்திருக்க வேண்டும். இப் பீ கொக் மலைக்கு இரண்டு பிராதான வழிகளில் வரலாம் கண்டி நகரில் இருந்து புஸ்ஸல்லாவ நகருக்கு வர வேண்டும் கண்டியில் இருந்து புஸ்ஸல்லாவைக்கு 35 கிலோமீட்டர் தூரம்,
அடுத்து நுவரெலியாவிலிருந்து வருவது. இது கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் எல்லையில் உள்ள நகரம். ஆகையால் இவ் இருவழிகளிலும் வரலாம் நாம் கண்டிக்கும் புஸ்ஸல்லாவைக்குப் இடைப்பட்ட நாகரான கம்பளையில் இருந்தே பயணத்தை ஆரம்பித்துளோம்,
சரி நாங்கள் செல்ல வேண்டிய பஸ் வந்துவிட்டது அது பஸ் என்று கூற முடியாது மினி வேன் உட்கார்ந்து செல்ல சீட் எல்லாம் அனைவரும் அமர்ந்து நின்று கொண்டு போகவும் வாய்ப்பில்லை. அடுத்த பஸ்சில் செல்ல வெண்டுமானால் இன்னு 2மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டும். எப்படியோ இதில் சென்று விடவேண்டும் என நாம் முடிவு எடுக்கும் முன்னமே நடத்துனரும், சாரதியும் எங்களை தள்ளி வேனிற்குள் அனுப்பி வைத்துவிட்டார்கள். எங்களுக்கு இது புது அனுபவம் நன்றாக தான் இருந்து. ஆனால் இங்குள்ள மக்கள் இவ்றான போக்க்குவரத்தின் மூலமே தமது அன்றாட தேவைகளை நிவர்த்திக்கிறார்கள் என்று அறிந்து கொண்ட பின் கொஞ்சம் நெருடலாக இருந்து.முப்பது நிமிடங்களின் பின் நாம் இறங்கினோம் இன்னும் ஐந்து கிலோமீட்டர் நடை தூரத்தில் நியூ க்கோக் மலை.
எமது நடைபயணம் ஆரம்பித்து சுடாத வெயில் மக்கள் நடமாட்டம் இல்லாத பாதை இரு புறங்களிலும் எட்டிய தூரம் வரை தேயிலை தோட்டங்கள், தேயிலை ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்பட்டாலும் இலங்கையர்கள் என்ற வகையில் எமக்கும் தேயிலை மற்றும் தேநீர் ஆகியவற்றுடனான உறவு அதிகம். காலையில் எழுந்தவுடன் அந்நாளுக்கான ஆரம்பம் ஒரு கோப்பை தேநீர். மாலை நேர இடைவெளிக்கு ஒரு கோப்பை தேநீர். தலை வலி என்றால் ஒரு கோப்பை தேநீர். விருந்தினர் வருகையென்றால் தேநீர். இரவுநேர விழித்திருப்புகளுக்கு துணை செய்வதும் ஒரு கோப்பை தேநீர் தானே. சுமார் மூன்றரை கிலோமீட்டர் நடந்த பின்
மலை அடிவாரத்தை அடைந்து விட்டோம்
பாதையின் தொடக்கப் புள்ளியைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல. இது கடினமான உயர்வு இல்லை சாலை பைன் மரங்களின் குறுகலான நடைபாதை புதிய ஆனந்ததை எற்படுத்தியது.உயர்ந்து வளர்ந்த பைன் மரங்களுக்கிடையில் நடக்கும் போது குளிர் காற்று மற்றும் மரங்களின் சல சலப்பு எம்மை வேறு உலகத்திற்கே அழைத்து சென்று விட்டது. ஐம்பது மீட்டர் நிறைவில் சமவெளி பனியும் கலந்து மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது அவ் அழகை காண கோடி கண்கள்
தேவை என்று தோன்றியது. பல பல கோணங்களில் புகைப்படங்களை எடுத்தோம் பனி கலந்த அந்த சுற்றுப்புறம் புகைப்படங்களுக்கு மேலதிக அழகை தந்தது.
இரண்டு மணித்தியாலங்களின் பயணகளைப்பு எமக்கு பசியை ஏற்படுத்த மலையிலோ அடிவாரத்திலோ எந்த ஒரு கடையும் இல்லை என்பதால் நாம் கொண்டு வந்த பிஸ்கட்களைஉண்டோம்.வெற்றிகரமாக எமது பயணம் நிறைவடைந்தது. மெதுவாக மலை அடிவாராத்தை வந்தடைந்து 2மீட்டர் தொலைவில் காலையில் நாம் தவற விட்ட பஸ் நமக்ககாவே காத்திருப்பதாய் தோன்றியது. தவறவிடப்படும் வாய்ப்புகள் கூட சில சமயங்களில் நன்மைகாகவே. காலையில் இந்த பஸ் தவறவிடதால்தான் எமக்கு இப்படி ஒரு சுவரசியமான அனுபவம் கிடைத்தது.
பஸ் புறப்பட்டது சரியாக ஒரு மணித்தியத்தில் நாம் கம்பலையில் இருந்தோம்.மிகவும் பயந்த அம்மாவும், குடும்பத்தினரும் இப்போது வாயெல்லாம் பல்லாக, “பரவாயில்லையே ! தனியாவே போய்ட்டு வந்துட்டியே !” எனப் பெருமையாகச் சொல்லிச் சொல்லிப் பூரிப்படைகிறார்கள்.
வாழ்க்கையில் இன்னும் பயணப்பட வேண்டிய அவசியத்தை மிக அழுத்தமாக உணர்த்திய இம்முதல் பயணம் மனதில் தானாகவே ஒரு பட்டியலை இட்டது.
எனது பயணங்களுக்கான விதை நியூ பீ கொக் மலை பயணத்தின் மூலம் விதை தூவப்பட்டிருக்கின்றன. அதற்குத்தான் தண்ணீர் ஊற்றித் திரும்பியிருக்கிறேன். இன்னும் பல பயணங்கள் தொடரும் என்ற நம்பிக்கையில்..
திருமதி -நிரஞ்சனிதினேஷ்