கொரோனா பற்றிய ஒரு மீளாய்வு

மருத்துவ ஆய்வு கட்டுரை

கொரோனா பற்றிய ஒரு மீளாய்வு

கொரோனா பற்றிய ஒரு மீளாய்வு

இயற்கை உலகின் அற்புதமான படைப்பு நம் கண்கள். ஏனெனில் அந்த உலகயே பார்க்க உதவுவது கண்கள் தானே. ஆயினும் நம் இருவிழிப்பார்வைக்கு அப்பாற்பட்ட பல விடயங்கள் எங்கும் வியாபித்து உள்ளது. அவற்றினை பார்த்துவிட முடியாது ஆயினும் உணர்ந்துவிட முடியும். இங்கு நான் ஆத்திகம் பேசவில்லை. மாறாக நான் சொல்வது நம்மை சுற்றி நம்மோடு வாழும் நுண்ணங்கிகள் பற்றி ஆகும்.

இன்றைய மருத்துவ உலகின் மாபெரும் எதிரிகளே அவை. இல்லை இல்லை மாபெரும் எதிரிகளா? இந்த மனிதரை விடவும் மோசமான உயிரினமா இவ்வுலகில். ஏழு கண்டமும் வீற்றிருக்கும் மனித பெரும் இராச்சியத்தில் நம்மில் எத்தனை பேர் மற்றவர்களிற்கு தீங்கு செய்யாது இருக்கின்றோம். ஆனால் நுண்ணங்கிகள் மனிதரை விடவும் பன்மடங்கு உயர்ந்தவை. ஏனெனில் அவற்றுள் பெரும்பாலானவை நமக்கு தீங்கு செய்வதில்லை மாறாக நன்மையே செய்கின்றன.

நமது உடல் மேற்பரப்பு முழுவதும் பரந்து வியாபித்து இருக்கும் நுண்ணங்கிகளில் பல சாதாரணமாக தீங்கு எதுவும் செய்வதில்லை. மேலும் நோயினை ஏற்படுத்தும் நுண்ணங்கிகளால் தொற்று ஏற்படுவதினை தடுத்து நன்மையே செய்கின்றன. இப்படி பல நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சரி நன்மைகள் பற்றிமட்டும் சொல்லி நுண்ணங்கிகளை கதாநாயகர்கள் ஆக்கிவிட முடியாது. நுண்ணங்கிகளிலும் சில வில்லன்கள் இருக்கிறார்கள் தானே அப்போ கொரோனா வில்லனா? ஹீரோவா? நமக்கு தீங்கு செய்யுது ஆகவே வில்லன் ஆனாலும் 2019 இன் பின்னரான வரலாற்றில் அது கதாநாயகன் தானே.

நம் தமிழ் சினிமா போல தான் இதுவும். முன்னைய காலங்களில் நல் ஒழுக்கம் புரிந்த நேர்மையான ஆண்களை கதாநாயகன் என்கிறார்கள், இப்ப அப்படியா? ஒரு கையில் சிகெரெட்டும் மற்ற கையில் மதுவும் பக்கத்தில் மாதுவும் இருந்தால் தானே அவர் ஹீரோ. அது ஒருபக்கம் இருக்கட்டும் சினிமா , தொலைபேசி போன்ற பெரிய நுண்ணங்கிகள் உட்படுத்தும் தொற்றுக்கு உட்படாதவர் யாரும் இல்லை நானும் விதிவிலக்கு அல்ல.    

இப்போதும் முகக்கவசம் அணிவது ஏன்?       

கொரோனா வைரஸை பற்றி பேசினா ரொம்ப பழைய பல்லவிணு சொல்லுவாங்க ஏனென்றால் இப்போ கொரோனா தான் இங்க இல்லையே அப்போ எங்கே போயிருக்கும்? உலகத்தையே நடுநடுங்க வச்சு எல்லோரையும் வீட்டுக்குள்ள சிறைபிடிச்சு வச்ச கொரோனா ஏன் குறிப்பிட்ட காலம் கடந்து அதன் வீரியம் குறைந்தது. அது ஒருபுறம் இருக்க பலநாளா ஒரு சந்தேகம் கொரோனா தான் இப்ப குறைவு . ஆனாலும் வீதிகளில் ஒருசில இளசுகள் அழகழகான முகக்கவசம் அணிவது ஏன்? ஒருசிலரிடம் இருந்து கிடைத்த பதிலில் இருந்து நான் அறிந்தது முகக்கவசம் அணிவது கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு அல்ல.

அவர்களின் திருமுகம் தனில் இதழ் மறைத்து நேத்திரம் வெளிப்படுவது எதிர்பாலினை ஈர்க்குமாம். இந்த ஆராட்ச்சியின் முடிவின் பின்னர் நானும் பொது இடங்கள், சன நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிந்தேன். நீங்கள் இப்போது  நினைப்பது போன்று எதிர்பாலினை ஈர்ப்பத்துக்காக அல்ல.  கொரோனா உச்சம் தொட்ட காலப்பகுதியில் பல வேறு தொற்றுநோய்களினால் குறிப்பாக சுவாசத்தொற்று நோய்கள் மக்களிடையே மிகவும் குறைந்து இருந்தமை உத்தியோக பூர்வமற்ற சில அனுபவமுறையிலான கண்காணிப்பில் தெரியவந்துள்ளது. பெரும்பாலான சுவாசத்தொற்றுகள் ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கு பரவுவது ஒருவர் தும்மும்போது அல்லது இருமும்போது வெளிப்படும் திரவ சிறுதுளிகளால் ஆகும். ஐந்து மைக்குரோமீட்டரை விட பெரிய துணிக்கைகள் சுமார் இரண்டு மீட்டர் வரை செல்லக்கூடியது. ஏரோசோல் எனப்படும் ஐந்து மைக்குரோமீட்டரை விட சிறிய துணுக்கைகள் இரண்டு மீட்டர்க்கு அப்பாலும் செல்லக்கூடியவை. மேலும் வளியில் குறிப்பிட்ட நேரம் தங்கி இருக்க கூடியவை. கொரோனா பல உயிர்சேதங்களை ஏற்படுத்தியத்துக்கு முடியாகாரணம் அது ஏரோசல் மூலம் பரவும் என்பதாலாகும். எனவே முகக்கவசம் அணிவது பெரும்பாலான சுவாச தொற்றுகளை தடுக்கும் எனினும் நீண்டநேர முகக்கவசம் பாதிப்பை ஏற்படுத்தும். நம் வெளிச்சுவாச வளியையே மீண்டும் சுவாசிக்கும் போது உள்ளெடுக்கப்படும் வழியில் ஒக்சிசன் குறைந்து காபனீரொக்சைட் அதிகரிக்கும் எனவே நீண்டநேரம் முகக்கவசம் அணிவது சில உடல் நல கோளாறுகளை உண்டுபண்ணும். குறிப்பாக மூளைக்கு செல்லும் குருதியில் ஒட்ஸிசன் அளவு குறைந்து மயக்கம் கூட ஏற்படலாம்.

 சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம்

கொரோனாவின் தாக்கம் குறைந்து கொரோனாவிற்கு முற்பட்டகாலப்பகுதி போல வாழ்க்கை மாறிவருகின்ற போதிலும் கொரோனா உட்படுத்திய மாறுதல்கள் இன்னும் மாறாமல் தான் உள்ளது. பூமியில் ஜனித்த ஒரு குழந்தை பலசமூக மாற்றங்களை கொண்டுவந்தது. அதனால் உலகம் அதன் வரலாற்றினை கி.மு , கி.பி என மாற்றியது அதுபோல கொரோனாவின் பாரிய தாக்கத்தினை அடுத்து நாங்கள் கொ.மு கொ.பி என வரலாற்றை பிரிப்போம். நாங்கள் இப்போது கொரோனாவின் பின்னரான காலப்பகுதியில் வாழ்ந்துகொண்டுள்ளோம். டிசம்பர் மாதம் ஆரம்பித்த கொரோனா பின்னர் உச்ச நிலையில் இருந்து இப்போது குறைந்துள்ளது.ஆயினும்  கொரோனா போன்ற தீவிர வைரசு பாதிப்பு ஒன்றும் இவ்வுலகிற்கு புதிது அல்ல.

2003 பெப்ரவரி  புதியவகை வைரசு (சார்ஸ்) தொற்று  அடையாளம் காணப்பட்டது. இது சீனாவிலும் வேறு 4 நான்கு நாடுகளிலும் அடையாளம் காணப்பட்டது. முன்னரே இவ்வைரசு தொற்று இருந்தபோதிலும் சுகாதார தாபனம்  சார்ஸ் நோய் தொடர்பான அறிக்கையினை பெப்ரவரியிலேயே உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. (தரவுகள் உலக சுகாதாரதாபனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது ) தலையிடி, காய்ச்சல், மூச்சு எடுப்பதில் சிரமம் போன்ற ஆரம்ப அறிகுறிகளுடன் தொடங்கிய இந்நோயினால் சில நோயாளிகள் மிகவும் தீவிர நிமோனியா நிலையினை அடைந்தார்கள். மார்ச் 12 உலக சுகாதார தாபனம் தீவிர நிமோனியாவை ஏற்படுத்தும் வைரசு தொற்று தீவிரமாக பரவுகிறது என சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது.

ஆய்வில் தாமதம்

மேலும் ஜூலை சார்ஸின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது. அதுபோல டிசம்பரில் ஆரம்பித்த சார்ஸ் வைரஸினை ஒத்த வைரசு தொற்று முதலில் சீனாவில் ஆரம்பித்து. உலகின் பலநாடுகளிடையே பரவி இப்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. வைரசு பொதுவாக மிக நீண்டகாலம்  தொடர்ச்சியாக தொற்றுகளினை ஏற்படுத்த முடியாது. அதற்கு முக்கியகாரணம் அவற்றில் நிகழும் விகாரம் ஆகும். ஒரு வைரசு அவரின் பாரம்பரிய இயல்புகளை டி என் ஏ அல்லது ஆர் என் ஏ இல் சேமித்துவைத்திருக்கும். கொரோனா வைரஸானது ஆர் என் ஏ இணை கொண்டுள்ளது. வைரசுகள் எப்போதும் உயிர்கலங்களிற்கு உள்ளே மாத்திரமே பெருக்கமடையும். மேலும் இவை உயிரற்ற பகுதிகளில் பளிங்குருவில் உயிர்பற்று இருக்கும். கொரோனா வைரசு சுமார் ஏழு நாட்கள் வரையும் உயிரற்ற மேற்பரப்புகளில் பளிங்குருவில் இருக்கும். உலக சுகாதார ஸ்தாபனம் இதனை கண்டறிய மிகவும் தாமதம் ஆனமை , கொரோனாவின் தீவிர பரவலிற்கு ஒரு காரணம் ஆகும்.

இங்கு பளிங்குருவில் உள்ள வைரசு உயிர்கலங்களை அடையும் பட்சத்தில் விரைவாக பெருக்கமடைந்து தொற்றினை ஏற்படுத்தும். வைரசுகள் பெருக்கமடையும் போது அவரின் நியூக்களிக்கமிலங்களில் அதாவது DNA / RNA இல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதுவே விகாரம் ஆகும். விகாரம் காரணமாக உருவான புதிய வைரசு முன்னைய வைரசுகளிலும் மாறுபட்ட புதிய இயல்புகளை கொண்டிருக்கும். ஒருவருக்கு நோய் ஏற்படுத்தும் ஆற்றல் , ஒருவரில் இருந்து  இன்னொருவருக்கு பரவும் ஆற்றல் என்பன விகாரத்தின் விளைவினால் மாறுபடுகிறது.  எனவே 2019 இல் வுஹானில் இனங்காணப்பட்ட வைரசு இப்போது உள்ள வைரசுகளிலும்  பெருமளவு மாறுபட்டவையாக காணப்படும் .காரணம் வைரசு ஒவ்வொருமுறையும் ஒருவருக்கு பரவும்போது சில மாற்றங்களிற்கு உட்படவல்லது .

சக்திவாய்ந்த ஒமிகிரோன்

சிறிய சிறிய மாற்றங்களின் விளைவாக வைரசு முற்றுமுழுதாக மிகவும் வீரியம் மிக்க  அல்லது வீரியம் குறைந்த தொற்றினை ஏற்படுத்தலாம் . அல்பா, டெல்டா,  ஒமிகிறோன் போன்றன அவற்றின் விகாரத்தினால் உருவான திரிபாகும். அண்மைய காலங்களில் ஒமிகிரோன் எனப்படும் திரிபு  அதிகம் பேசப்பட்டது. ஏனைய திரிபுகளை விட பரவும் ஆற்றல் அதிகமாக காணப்பட்டமையே ஒமிகிரோனின் தீவிர தன்மையை வெளிக்காட்டியது .

இவ்வாறு வைரசுகள் விகாரம் அடையும் போது தானாகவே வீரியம் குறைந்த இயல்புகளை பெற்று அவற்றின் தொற்றுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.நாம் கொ .பி காலப்பகுதியில் வாழும் போது திடீரென மீண்டும் கொரோனாவின் புதிய திரிபு தீவிர தொற்றினை ஏற்படுத்த ஆரம்பித்தால் மீண்டும் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்படலாம்.

அரசாங்கத்தின் தொல்லை தாங்காது போட்டுக்கொண்ட வச்சின் புதிய திரிபுகளின் தொற்றிலிருந்து பெருமளவில் பாதுகாக்காது. நீங்கள் கோவிட் வக்சின் போடும் காலப்பகுதியில் இருந்த வைரசு வேறுபட்ட இயல்பை கொண்டிருந்தது. அவ்வியல்புடைய வைரசுகளை எதிர்க்கும் வக்சின்களே அப்போது கொடுக்கப்பட்டது .வைரஸில் விகாரம் காரணமாக புதிய திரிபுகள் ஏற்படும் போது அந்த புதிய திரிபிற்கான வச்சின்களே கொடுக்கப்படும். இதனாலேயே கோவிட் வக்சின் மீண்டும் மீண்டும் ஒவ்வொருகாலப்பகுதியில் கொடுக்கப்பட்டது. வைரசு மாற மாற அதுக்கு ஏற்ற வக்சின்களும் மாறுபடும்.

கொரோணா உயிரிழப்புக்கள்

இலங்கையில் 3 ஜனவரி 2020 இலிருந்து 16 மார்ச்  2023 வரை சுமார் 672047 பேர் கொரோனவினால் பாதிக்கப்படுள்ளதுடன் 16831 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு பல உயிரிழப்புகளினை ஏற்படுத்தும் இவ்வைரசுகள்  உடலில் எத்தகைய மாற்றத்தினை உண்டுபண்ணும் என்பது பற்றி சிந்தித்தது உண்டா?  வைரசு சுவாச தொகுதியினை அடைந்து அங்கு உள்ள மேலணிகலங்களில் உள்ள ACE 2 எனப்படும் வாங்கி மூலக்கூறுகளுடன் இணையும். அதை தொடர்ந்து கொரோனா வைரஸின் RNA கலத்தினுள் விடுவிக்கப்படும். அதை தொடர்ந்து வைரசு கலத்தினுள் பெருக்கமடைந்து தீவிரமான சுவாசத்தொற்றினை ஏற்படுத்துகிறது. ஆயினும் கொரோனவினால் உயிரிழப்பு ஏற்படுவது எமது நீர்பீனடத்தொகுதியால் ஆகும் .

என்ன நீர்பீடன தொகுதியால் இறக்கிறோமா? சிலநேரங்களில் வாழ்க்கையிலும் அப்படித்தானே நம்மை காக்கின்ற சிலவிடயங்கள் தான் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கின்றன. இந்நேரத்தில் மஹாபாரதத்தில் கிரிஷ்ணபகவானின் கூற்று ஒன்று நிழலாடுகின்றது. ஈன்ற புத்திரரின் நல்வாழ்க்கை பற்றி சிந்திக்கும் தாய் அகில நன்மையை மறந்து விடுகிறாள். மஹாபாரதத்தில் துரியோதனனின் தவறுகளிற்கு மறைமுக வித்து காந்தாரி தானே. அதர்மம் சதிராடும் அரங்கில் மாத விலக்குற்ற பெண்ணின் ஆடை விலகிய ஆடவன் தான் ஈன்றோன் என்பதால் அவனின் உடல் தன்னை வச்ரமாக்கிட தவம் கலையும்  காந்தாரி , காக்கும் நோக்குடன் அழிவை அள்ளிக்கொடுத்தால் தன் மகனிற்கு. உண்மையை சொல்லப்போனால் இது தற்காலத்திற்கு மிகவும் பொருந்தும். இங்கு தாய்ப்பாசத்திற்கும் நீர்பீடனத்திற்கும் என்ன தொடர்பு இரண்டும் காப்பவை, ஆனால் அறியாமல் அழிக்கவும் செய்யும். தாய் அன்பு அகிலத்தின் மாபெரும் சக்தி அதை பற்றி குறைசொல்லவில்லை ஆயினும் அது அகிலத்திற்கு நன்மை தரும் பட்சத்திலேயே உயர்வு பெறும். உதாரணமாக பல குற்றம் செய்த மகனை காப்பாற்ற ஒரு தாய் போராடுகிறாள் என்றால் அங்கு அந்த அன்பு அகிலத்தின் முன் உயர்வை பெறாது. தாய் அன்பு பற்றிய குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்தால் வைகுண்டம் சென்று கிருஷ்ண பகவானிடம் கேட்டுக்கொள்ளுங்கள். இது முற்றிலும் அவரின் கருத்து. நான் வெறும் ஆமோதிப்பவன் .

எப்போது இன்னொரு அலை?

இங்கு நீர்பீடன தொகுதி நமது உடலை அந்நிய பொருள்களில் இருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டது. ஆகினும் சில சந்தர்ப்பங்களில் எமது நீர்பீடன தொகுதியே எமது கலங்களை அழிக்கின்றது. இத்தகைய சந்தர்ப்பம் கொரோனாவில் எங்கனம் நிகழ்கின்றது. கொரோனா தொற்றின் காரணமாக நீர்பீடன தொகுதி மிகையாக தூண்டப்பட்டு சைட்டோகைன் எனப்படும் நொதியம் வழமைக்கு மாறாக மிகையாக சுரக்கப்படும். வழமையாக சைட்டோகைன் ஆனது தொற்று ஏற்பட்ட கலங்களை அழித்து தொற்றுக்கள் ஏனைய இடங்களிற்கு பரவுவதை தடுக்கும். இங்கு அதன் மிகையான சுரத்தல் காரணமாக குருதியில் சைட்டோகைனின் செறிவு அதிகரித்து உடல் இழையங்களின் சிதைவுக்கு வழிவகுக்கும்.வழமையாக நுண்ணங்கி தொற்றுகளில் இருந்து இழையங்களை பாதுகாப்பதற்கான பொறிமுறை தற்போது இழையங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் .இறுதியில் இதயம், சிறுநீரகம், ஈரல் போன்ற அங்கங்களின் செயலிழப்பிற்கு இதுவழிவகுக்கின்றது. ஆயினும் 80% ஆன நோயாளிகள் மருத்துவ சிகிச்சை இன்றி நோயிலிருந்து குணமடைகின்றனர். 15% ஆனவர்கள் தீவிரநிலை அடைந்து மேலதிக ஒட்சிசன் சிகிச்சை தேவைப்படுகிறார்கள். வெறும் 5% ஆனவர்கள் மட்டுமே மிகவும் தீவிர நிலை அடைந்து தீவிர சிகிச்சை தேவைப்படுகிறார்கள். உலக சுகாதார தாபனம் இவ்வருடத்துடன் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றின் தீவிர நிலையிலிருந்து மீண்டுவிட முடியும் என அறிவித்துள்ளது. ஆகினும் தற்போது உள்ள கொரோனா பற்றிய அறிவு இன்னொரு அலையினை வெற்றிகரமாக முறியடிக்க உதவும் என நம்புகின்றேன். இயற்கையின் சூட்சுமம் மிகவும் ஆழமானது. மனிதனே உலகின் உச்ச சக்தி என்ற எண்ணத்தினை வீழ்த்திய இயற்கையின் இன்னொரு கணையாக இருந்துவிடுகிறது இத்தகைய வைரசு தொற்றுகள்.