மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 18 வனவாசம்

சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

Mar 25, 2023 - 12:06
 0  44
மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 18  வனவாசம்

பாண்டவர்கள் காட்டுக்குச் சென்றதால் நாட்டிலுள்ள பெரியவர்களும் அறிஞர்களும் முனிவர்களும் நாட்டு மக்களும் திருதராட்டினனைப் பழித்துரைத்தனர். அதனால் அவனுக்குக் கவலையும் பயமும் உண்டானது; "மன்னா நீ உனது பிள்ளைகளுக்காக நீதியில்லாமல் நடந்து கொண்டாய். அத்துடன் அன்று சபையில் நடைபெற்ற கொடுமைகளை யாரும்  தட்டிக்கேட்கவில்லை என்று மக்கள் வேதனைப் படுகின்றனர்'' என்று விதுரன் கூறும் போது நாரதர் அங்கு வந்தார்; "மன்னா, இன்று உனது மகன் துரியோதனன் செய்த கொடுமையின் பயனைப் பதின் நான்கு ஆண்டுகளின் பின் அனுபவிப்பான். அத்துடன் உனது உனது மகன் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாக அழிவர்" என்று கூறிவிட்டு மறைந்தார்.

அதனால் பயந்த துரியோதனன் துரோணரிடம் சென்றான் ; ''குருவே, எம்மை உம்மால் தான் காப்பாற்ற முடியும்" என்று துரோணரைப் பணித்தான்.

"பாண்டவர்கள் தேவர்களின் புதல்வர்கள். அவர்களை யாராலும் அழிக்க முடியாது. எனினும் என்னிடம் நீ தஞ்சமடைந்ததால் என் உயிர் உள்ள வரை உன்னைப் பாதுகாப்பேன். எனினும் விதி வலியது" என்றார் துரோணர்.

ஒருநாள் மைத்திரிரேய முனிவர் திருதராட்டினனது சபைக்கு வந்தார்; காப்யாவனத்தில் தற் செயலாகப் பாண்டவர்களைச் சந்தித்தேன். வனத்தில் தவம் செய்யும் முனிவர்கள் பலரும் அங்கிருந்தனர். எல்லோரும் உன்மீது தான் குற்றம் சுமத்தினர். நீ அவர்களுக்குச் செய்தது கொடுமை. துரியோதனா, பாண்டவர்கள் வீரர்கள், கிருஷ்ணன் அவர்களின் பக்கம் இருக்கிறான். துருபதன் பெரும்வீரன். அதனால் அவர்களைப் பகைக்காது சமாதானம் செய்து கொள்" என்றார்.

அதைக்கேட்ட துரியோதனன் மைத்திரேய முனிவரைக் கோபத்துடன் பார்த்துத் தனது காலால் பூமியை உதைத்தான். அந்த உதை தனக்கு உதைக்ப்பட்ட உதை என்று உணர்ந்த முனிவர்; “உனது கர்வத்தாலேயே நீ அழிவாய். உனது தொடையை வீமன் தனது கதையால் அடித்துப் பிளப்பான்.” எனச் சபித்தார்.

திருதராட்டினன் கலங்கிய படி அவரின் பாதங்களைப் பணிந்து; “எனது மகனைக்காப்பாற்றுங்கள்" என்று அழுதான்.

'உனது மகன் பாண்டவர்களுடன் சமாதானமானால் எனது சாபம் பலிக்காது" என்றார் மைத்திரேய முனிவர்.



பாண்டவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த கிருஷ்ணன், பாண்டவர்கள் காட்டுக்குச் சென்ற செய்தியை அறிந்து பாண்டவர்கள் தங்கியிருந்த காட்டிற்கு வந்தார். அவரைக் கண்ட திரௌபதி துக்கத்துடன் சொன்னாள்; “கண்ணா, நான் தனிமையில் இருந்தபோது எனது தலைமயிரைப் பற்றிப் பிடித்துத் தரதரவென்று இழுத்துவந்த துச்சாதனன், என்னைச் சபை நடுவே நிறுத்தி மானபங்கப்படுத்தினான். அதை எனது கணவர்களோ, பெரியவர்களோ, அரசர்களோ, முனிவர்களோ தட்டிக் கேட்கவில்லை. எனது துணியைச் சபையோர் முன்நிலையில்  உரிந்தனர். இதற்குப் பிறகும் நான் உயிர் வாழ வேண்டுமா?' என அழுதாள்.

"திரௌபதி,கவலை கொள்ளாதே உன்னைத்துன்புறுத்திய அனைவரும் கொல்லப்படுவார்கள். பாண்டவர்கள் பேரரசராவர். நீ பட்டத்தரசியாவாய். அதற்கான சகல நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன். இது சத்தியம்” எனச் சத்தியம் செய்தான் கிருஷ்ணன்.

"தருமா, நீங்கள் சூதாடும் போது நான் சிசுபாலனை வதம் செய்தேன் என்ற கோபத்தினால் சால்வன் துவாரகையில் நான் இல்லாத போது போர்தொடுத்தான். அதனால் அவனுடன் யுத்தம் செய்ய வேண்டியதாயிற்று. நான் அன்று சபையில் இருந்திருந்தால் பெரியவர்களுக்கு நியாயத்தை எடுத்துக் கூறிச் சூதாட்டத்தை தடுத்திருப்பேன். எல்லாம் துன்பமாக முடிவடைந்து விட்டது. இனி எதுவும் செய்யமுடியாது. அமைதியாக இருங்கள்” என்று கூறிய கிருஷ்ணன் அர்ச்சுனனின் மனைவியான சுபத்திரையையும் மகனாக அபிமன்யுவையும் அழைத்துக் கொண்டு துவாரகைக்குச் சென்றான்.



வியாசர் ஒருநாள் வனத்திற்கு வந்து பாண்டவர்களைச் சந்தித்தார்; "தருமா, வனவாசத்தின் போது எதிரிகளைத் தாக்கி அழிக்கக் கூடிய அஸ்திரங்களை நீங்கள் பெறுதல் வேண்டும். அத்துடன் தேவர்களிடம் ஆசியும் பெறுதல் வேண்டும்" என்றார்.

அதன்படி அர்ச்சுனன் அஸ்திரங்களைப் பெறுவதற்காகக் காடுகளைத் தாண்டி இந்திர கீல மலையை அடைந்தான். அங்கே ஒரு கிழப்பிராமணன் இருந்தார். அவரின் அருகில் சென்ற அர்ச்சுனன்;   பெரியவரே, யாருமில்லாத இக்கொடிய வனாந்திரத்தில் தனித்து ஏன் இருக்கிறீர்கள?” என்று கேட்டான்.

“மகனே உன்னைச் சந்திக்கவே நான் வந்தேன். நான் தேவேந்திரன், தேவர்களின் தலைவன்” என்று கூறித் தனது உருவத்தைக் காட்டினான் இந்திரன்.

அர்ச்சுனன் மிக்க மகிழ்ச்சி கொண்டு அவனை வணங்கினான். பின்; “சுவாமி, எனது குடும்பத்தினரைக் காப்பாற்ற வலிய அஸ்திரங்களை எனக்குத் தந்தருளுங்கள்" என்றான்.

“மகனே, முக்கண்ணனாகிய சிவபெருமானை நோக்கித் தவம்செய். அவரிடமிருந்து வலிய ஆயுதங்களைப் பெற்றால் உனது எண்ணம் நிறைவேறும்". என்று கூறி மறைந்தான் இந்திரன். இந்திரனது சொற்படி அரிச்சுனன் சிவபெருமானை நினைத்துத் தவம் செய்தான்.

அர்ச்சுனனுக்கு உதவுவதற்காகச் சிவபெருமான் அம்பும் வில்லும் கொண்டு உமாதேவியாருடன் வேடனாக உருமாறி அர்ச்சுனன் தவம் செய்யும் இடத்திற்கு வந்தார்.

அப்போது காட்டுப்பன்றி ஒன்று அர்ச்சுனனைத் தாக்கவந்தது. அதை நோக்கிச் சிவபெருமான் அம்பு எய்தார். அர்ச்சுனனனும் அம்பு எய்தான். இருவரது அம்பும் பட்டுப் பன்றி இறந்தது.

"நான் எய்த அம்பால் தான் பன்றி இறந்தது" என்றான் அர்ச்சுனன்.

"இல்லை, நான் எய்த அம்பால் தான் பன்றி இறந்தது" என்றார் வேடவடிவில் வந்த சிவபெருமான்.

வாய்த்தர்க்கம் முற்றிப் போர் ஆரம்பித்தது. அர்ச்சுனன் மழையாக அம்புகளைப் பொழிந்தான். சிவபெருமான் அவற்றைத் தனது அம்புகளால் செயலற்றதாக்கினார். அதனால் மற்போர் தொடங்கியது. இருவரும் கடுமையான மல்யுத்தத்தில் ஈடுபட்டனர்.

சிவபெருமான் அர்ச்சுனனைத் தன் மார்போடு அனைத்தார். கடும் பிரயத்தனம் செய்தும் அர்ச்சுனனால் அதிலிருந்து  மீளமுடியவில்லை. அதனால் சிவபெருமானைத் தியானித்தான்.

உடனே சிவபெருமான் தனது உருவத்தைக் காட்டினார். சிவபெருமானைக் கண்ட அர்ச்சுனன் தன்னை உணர்ந்து கொண்டான். வேடனாக வந்தவர் சிவபெருமான் என அறிந்து தனது பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டி சிவபெருமானது பாதங்களைப் பற்றினான்.

“மகனே மகாபாரத யுத்தத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இது பாசுபதம் என்ற அஸ்திரம். இந்த அஸ்திரம் வலிமை பொருந்தியது. எவற்றாலும் அழிக்க முடியாதது” என்று அதைக்கொடுத்த சிவபெருமான்;  "தேவலோகம்  சென்று இந்திரனைச் சந்தித்து ஆயுதங்களைப் பெறு" என்று  கூறி மறைந்தார். அப்போது இந்திரனுடைய தேர் அவ்விடம் வந்தது. அர்ச்சுனன் அதில் ஏறி இந்திர லோகம் சென்றான்.




அரிய அஸ்திரங்களைப் பெறுவதற்காகக் காட்டில் அர்ச்சுனன் நெடு நாட்கள் தவம் செய்து கொண்டிருந்தமை பாண்டவர்களுக்கு வேதனையாக இருந்தது. எனினும் அவ்  வேதனையைப் பொறுத்துக் கொண்டு காட்டில் வாழ்ந்தார்கள். 

அப்போது அங்கு வந்த தௌமியர் அவர்களின் நிலையை அறிந்து கொண்டார்; தருமா, அர்ச்சுனன் உன் குலத்தின் நன்மைக்காகவே அரிய அஸ்திரங்களைப் பெறத்தவம் செய்கிறான். அதற்காக வேதனைப்படுவதை விடுத்து, புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபடுங்கள்" என்றார். அதன்படி பாண்டவர்கள் புனிதத்தலங்களுக்குச் சென்றனர். அவர்களுக்குதவியாக வீமனின் மகனான கடோற்கஜன் வந்து சேர்ந்தான்.

வீமனும் கடோற்கஜனும் நடக்கமுடியாது பாண்டவர்கள் சிரமப்படும் வேளைகளில் அவர்களைத் தூக்கிச் சென்றனர்.

..... தொடரும்.....

பின்குறிப்பு:- சிறுவர்கள் வாசித்து பயன்பெறும் வகையில் மிகவும் எளிய வடிவில் முழு மகாபாரதமும் சுருக்கப்பட்டு இங்கே எழுதப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன