இலங்கை மலையகத்தில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மலையகத்தின் ரகசியம்

Mar 15, 2023 - 18:17
Feb 4, 2025 - 14:19
 0  84
இலங்கை மலையகத்தில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மலையகத்தின் ரகசியம்

ஆசியாவின் முத்து எனும் சிறப்பினை உடைய இலங்கைத் தீவின் வசீகரம் அதன் இயற்கை வளங்களும்  கண்கவர் கட்டிட நிர்மானங்களுமே என்றால் அது பொய்க்காது. இலங்கை திரு நாடானது தன் பக்கங்கள் நான்கு புறங்களிலும் கடல் வளத்தை சூழ்ந்து கடல் அலைகள் மோதி நித்தமும் முத்தமிடுவதாய் தவழுகின்ற சிறு தீவாக பிரகாசிக்கின்றது. இத்  திரு நாட்டில் தனித்துவமாய் தாவர போர்வைகளால் சூழப் பெற்ற கடற் பரப்பிலிருந்து தனித்து உயர்ந்து நிற்கும் நாட்டினுடைய மையப் புள்ளியில் அமைந்ததாக இம் மலையகம் எனும் மலைகளின் தொடர்ச்சிகள் புடைத்து நிற்கும் மலைநாட்டு பகுதியானது அமையப் பெற்றுள்ளது. நாட்டினுடைய மத்திய,ஊவா மற்றும் சப்ரகமுவ முதலான மாகாணங்களை உள்வாங்கியதான பகுதியாக மத்திய மலை நாட்டு பிரதேசம் அமைந்துள்ளது. கடற் காற்றிலிருந்து சற்று விளகி உயர்ந்து நிற்கும் இம் மலைநாட்டு பகுதியின் தனித் தன்மை மற்றும் மலையக பிரதேசத்தின் சுற்றுலாத் துறை சார் ஈர்ப்பின் ரகசியம் பற்றியும் இக் கட்டுரையின் வழியதில் விரிவாக அறிந்து கொள்வோம்.

இட அமைவின் தன்மையில் நாட்டின் நாற்புறங்களும் சம தரை நிலங்களாகவும் சற்று உயர்ந்து தாழ்ந்த தனி மலை பாங்குகளையும் கொண்டு அமைந்திருக்க நாட்டின் மத்தியப் பகுதியில் இவற்றிலிருந்து மாறுபட்டதாக தனித்துவ உயர வேறுபாட்டை கொண்டதாகவும் தொடர் மலைகளால் சூழப் பெற்றதாகவும் பாரிய கற்பாறை படைகளை சுமந்ததாகவும் நீரேந்து பிரதேசமாகவும் இம் மலை நாட்டு பகுதி அடையாளப்படுத்தப் படுகின்றது. இம் மலை நாட்டு பிரதேசமே இலங்கையின் உச்ச உயரம் கொண்ட பிரதேசமாக அமையப் பெற்றுள்ளமையினால் இலங்கை வாழ் ரசனையாளர்களுக்கும் உள்ளக மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் மிக விருப்புடைய பகுதியாகவும் ரசனைஙளுக்கு ஏற்புடைய பிரதேசமுமாக இம் மலையக பகுதி சுற்றுலா துறையில் தனி இடம் பிடித்து கொள்கின்றது. மலையத்தின் மலைப்பாங்கு சுற்றுலா துறையினரது மிகும் எதிர்பார்ப்பின் பகுதியாக அடையாளப் படுத்தப்பட்டு கொள்கிறது. இதனால் சுற்றுலா துறையினரின் வருகையானது காலநிலை மாறுபாட்டு தன்மைகளை கடந்தும் வருடம் முழுவதுமாக பதிவாகிக் கொண்டே இருக்கின்றது என்பதை ஆதாரப் பூர்வமானக அறிந்து கொள்ள முடிகின்றது.

(நக்கீல்ஸ் மலைத் தொடர்)

மலைத் தொடர்களின் அடிப்படையில் நக்கீல்ஸ் மலைத் தொடர், பீதுரு தால கால மலைத்தொடர் முதலானவைகள் உள்ளக மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின், மலை சார் ஆய்வு ரீதியான  செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்குகின்ற அதே வேளை மறு புறத்தில் மலையகத்தின் மலை சார் சுற்றுலா தளங்களுள் சர்வதேச அளவிலும் பாரிய வரவேற்பை பெற்ற சிவனொலிப்பாத மலைத் தொடரானது தனிச் சிறப்பு பெருகின்றது. இம் மலையானது இலங்கை வாழ் சகல மக்களிடத்திலும் தன் மத ரீதியான நம்பிக்கையின் ஆதார சின்னமாக அமையப் பெறும் அதே தருணம் சர்வ தேச ரீதியில் அதிசயம் நிறைந்த ஒரு மலையாக இச் சிவனொலிப் பாத மலை அடையாளப்படுத்தப் பட்டுள்ளது.

சிவனொலிப் பாத மலை

அவ்வாறு இம் மலையின் அடிவாரம் முதலே இலங்கை வாழ் நான்கு மத ஸ்தலங்களையும் தரிசிக்க கிடைக்கும் அதே வேளை மலையின் உச்சி வரை செல்ல கூடிய வாய்ப்பானது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம் இம் மலை உச்சியில் காணக் கிடைக்க பெறுகின்ற பாத சுவடே ஆகும். அதாவது சிவனொலி பாத மலையின் வனாந்தர உச்சியில் மனித பாதத்தை போன்றும் மனிதனிலும் சற்று அகன்றதான பாத சுவடுகள் வரலாற்றுக்கு முற்பட்ட தொண்மை காலம் முதலே அமையப் பெற்றுள்ளது. இப் பாத சுவடானது இந்துக்களின் நம்பிக்கை படி சிவபெருமானது பாத சுவடெனவும் பௌத்தர்களது இறை நம்பிக்கையின் படி அப் பாத சுவடானது கௌதம புத்த பகவானது பாத சுவடாகவும் ஸ்லாமியர்களது இறை நம்பிக்கை படி அது நபிகள் நாயகத்தினது பாத சுவடாகவும் கிஸ்தவர்களது நம்பிக்கை படி அப் பாத சுவடானது இயேசு கிறிஸ்துவின் பாத சுவடாகவும் அடையாளப்படுத்தப்பட்டு இம் மலைத் தொடரானது நான்கு மத பிரிவினராலும் வழிபடப்படும் வழிபாட்டு தளமாக தனித்துவம் கொண்டு அமையப் பெற்றுள்ளது. எனவே இங்கு நாட்டின் சகல பாகத்தில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்களதும் சுற்றுலா பயணிகளதும் வருகையானது இடம்பெறுகின்றது. இம் மலைத் தொடரின் முதல் காற் பகுதியை அடையும் போது ஜப்பான் நாட்டவரின் நிர்மானத்தில் அமையப் பெற்ற ஜப்பான் கோயில் என அழைக்கப்படும் கௌதம புத்த பகவானின் பௌத்த விகாரையானது அமையப் பெற்றுள்ளது. மேலும் மலையின் உச்சி பகுதியை நோக்கி செல்லும் வழியில் கலைப்பு போக்குவதற்கும் தங்கி இளைப்பாறுவதற்கும் பாரிய மடங்கள் அமையப் பெற்றுள்ளதோ சுற்றுலா பயணிகளின் நலன் கருதிய குளியலறைகள், மலசல கூடங்கள், ஓய்வறைகள் முதலான ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதோ அவசர சிகிச்சைக்காக வைத்திய சாலையும் அமையப் பெற்றுள்ளது மலையேரும் போது ஆங்காங்கே சிறு சிற்றுண்டி கடைகள், நினைவு பொருட்களை கொள்வனவு செய்ய கூடிய சிறு கடைகளும் அமையப் பெற்றுள்ளன. இவ்வாறு மலைகளில் தனிச் சிறப்புடையதும் மத ஸ்தலமாக அடையாளப்படுத்தப்படுவதுமான இச் சிவனொலிபாத மலையின் மற்றுமொரு தனி சிறப்பு இலங்கையில் சூரிய உதயத்தை நேரடியாக பார்வையிட கூடிய ஒரு தனித்துவமான இடமாக சிவனொலி பாத மலையின் உச்சி பகுதி காணப்படுகின்றது. இச் சிறப்புக்களால் சிவனொலி பாதமலையானது சுற்றுலா துறையில் மலையகத்தில் தனித்துவமாகவும் பெரும் வரவேற்பை பெற்றும் அமைந்துள்ளது. 

இம் மலைக்கு செல்லும் வழியில் இதன் தொடர்ச்சியாக அமையப் பெற்ற ஏழுமலை என அழைக்கப்படும் மலைத் தொடர்களும் வரலாற்று ரீதியாக சுற்றுலா துறையில் தனித்தன்மை உடையதே. இருபதாம் நூற்றாண்டின் நிறைவு பகுதியில் விமானமொன்று மலையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் மலையகத்தில் நடந்தேறிய நினைவுகளே அவ் விபத்து இடம்பெற்ற மலைத் தொடரே இந்த ஏழுமலைத் தொடர்கள் இதனால் இவ் விமானத்தில் பயணித்து உயிர் நீத்தோரது உறவுகளும் அத் தகவல் சார் தெளிவுடைய சர்வதேச சுற்றுலா பயணிகளும் அந் நினைவு நாட்களிலோ, சுற்றுலாவில் இடம்பெறும் காலத்திலோ அம் மலையடிவாரத்தில் நேரத்தை கழிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் படி மலையகத்தின் தனித்துவ அடையாளம் என அடையாளப்படுத்த கூடிய மலைத் தொடர்களும் வரலாற்று சான்றுகளாகவும் ஆதாரங்களாவும் நினைவு தடங்களாகவும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து மலையகத்தின் பால் சுற்றுலா பயணிகளை ஈர்த்து மலையக சுற்றுலா துறையில் தனித்தன்மையாக இடம்பிடிக்கின்றன. 

மலைத்தொடர்களை போலவே இயற்கை ரசிகனை கவரும் நீரோடைகளுக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கும் நலினத்தோடு பயணிக்கும் நதிகளுக்கும் இங்கு குறைவென்பதே கிடையாது. ஆம் மலையகத்தின் காவல் அரண்களான மலைத்தொடர்களின் வழி தடத்தில் தொடங்கி பல அழகிய ரசனை மிகுந்த நீர் வீழ்ச்சிகளுகளும் நாட்டின் நன்னீர் தோற்ற நீர் நிலைகளுக்கும் நதிகளுக்கும் இங்கு பஞ்சம் என்பதே இல்லை. அவ்வாறு டெவன் நீர்வீழ்ச்சி, லக்ஸபான நீர்வீழ்ச்சி,கார்ட்மோர் நீர்வீழ்ச்சி முதலான இன்னும் பல அழகிய நீர் வீழ்ச்சிகளை மலையகம் முழுவதுமாக ஆங்காங்கே கண்ணுற்று இன்பிக்க கூடிய தனிதன்மை கொண்ட இடமாக மலை நாட்டு பகுதிகள் அமையப் பெற்றுள்ளது. இதற்கு மேலாக பாதுகாப்பாக நீராடி படகோட்டி மகிழ கூடிய நதிகளும் ஒடைகளும் கூட தன் வசீகரத்தால் சுற்றுலா பயணிகளையும் இயற்கை ரசிகர்களையும் ஈர்த்தே வைத்துள்ளது. அவ்வாறு மகாவலி கங்கை,களுகங்கை, கல் ஓயா முதலான நதிகளில் தொடங்கி இலங்கையின் முன்னிலை நதிகளின் நீரேந்து பிரதேசமாக மலை நாட்டு பகுதியானது அமையப் பெற்றுள்ளமையானது பெரும் சிறப்பே. இவ்வாறான நதிகளை மையமாக கொண்டு மலையக பகுதிகளில் நீர் தேக்கங்களை அமைத்து நீர் மின்சார உற்பத்தி இடம் பெறுகின்றமையும் குறிப்பிடத் தக்கதே. இவ்வாறான நீர்வீழ்ச்சிகள், நதிகள், நீர் நிலைகள் முதலானவற்றின் வசீகர தன்மையை காணவும் நீர் சார் ஆய்வு ரீதியாகவும் மலையகத்தை நோக்கிய சுற்றுலா துறையினரது வருகையானது இடம் பெறுகின்றமையும் குறிப்பிடத் தக்கது.

இச் சிறப்புகள் மட்டுமின்றி இயற்கை தாவர போர்வைகள், மலைநாட்டின் வித்தியாசம் நிறைந்த போக்குவரத்து வீதி கட்டமைப்புக்கள் இயற்கை வனாந்தரங்கள் முதலானவையும் மலையக சுற்றுலா துறையின் வளர்ச்சி போக்கில் செல்வாக்கு செலுத்துகின்றன. மலையகத்தின் சிறப்பாய் சிங்க ராஜா வனாந்தர பகுதியானது அமையப் பெற்றுள்ளதால் அதனை ஒட்டிய ஆய்வு ரீதியான சுற்றுலா கள பயணங்களும் இயற்கை ரசனைக்கான சுற்றுலா பயணிகளின் வருகையும் இடம்பெறுகின்றது. இதே போல இலங்கையின் ஏனைய பிரதேசங்களை விடவும் சற்று வித்தியாசமானதும் அதிக ஏற்ற இரக்கத்துடன் கூடிய வலை நெலி பாதை அமைப்புகளும் மலையகம் நோக்கி சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதாக அமைகின்றன. அவ்வாறு தனித்து இலகு ரக வாகனங்களை செலுத்தும் போதும் பேருந்து மற்றும் குறிப்பாக புகையிரதங்கள் ஊடாக பயணங்களை மேற்கொள்ளும் போதும் வேறெங்கும் அனுபவிக்க முடியாத இயற்கை ரசனையை குளிர் காற்றை உரசி கடக்கும் மேக மூட்டங்களை மலையக மண் வாசணையை இயற்கையின் ஆற்றுப்படுத்தலை மலையகத்தில் தனித்துவமாய் அனுபவித்து சிறந்த நினைவுகளை பதிவு செய்து கொள்ள முடியும். எனவே இவ்வாறான இயற்கையின் அரவணைப்புக்களை அனுபவிக்கும் வண்ணம் மலையகத்தை நோக்கி உள் நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளது வருகையானது வருடம் முழுவதுமாக தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. 

இத்தனைக்கும் மேலாக இலங்கையின் மலை நாட்டு பகுதிகளுக்கே சொந்தமான தேயிலைச் செடிகளது அழகு,செழிப்பு, தேயிலை தோட்டங்களது போர்வை முதலானவற்றை கண்டு இரசிக்கவும் உலக அளவில் இலங்கையின் நாமத்தை பதிவு செய்து இன்று வரையிலும் முதன்னிலை ஏற்றுமதி பயிராக அடையாள படுத்தப்படுகின்ற  தேயிலை பயிர்ச் செய்கை சார் ஆய்வுகளை மேற் கொள்ளவும் என பல சுற்றுலா பயணிகளது வருகையானது இடம் பெறுகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது. 

இதன் வழி சற்று மாறுபட்ட  வாழ்வியல் முறைமை மற்றும் கலாச்சாரம் குடியிருப்பு அமைவுகள் முதலானவற்றை தனித்தன்மையாக கொண்டு வாழும் மலையக உறவுகள் பற்றி அறிந்து கொள்ளவும் தெளிவினை பெற்று கொள்ளவும் ஆய்வு ரீதியாக தரவுகளை திரட்டிக் கொள்ளவும் கூட மலையகம் நோக்கிய சுற்றுலாத் துறையினரது வருகையானது இடம் பெற்ற வண்ணமே உள்ளது. அவ்வாறு வரலாற்று ரீதியாக தென்னிந்தியாவிலிருந்து தொழில் நிமிர்த்தம் அடிமைகளாய் குடியேறி மேற்கைத் தேயரது  அடக்கு முறைகளுக்கு உற்பட்டு வறுமை நிமிர்த்தம் நிரந்தர குடியிருப்பற்று நிரந்தர முகவரியற்று இன்றும் பல காலம் பயன்பாட்டில் இல்லாது ஒதுக்கப்பட்ட கரைபடிந்த புகையிரத பெட்டிகளை ஒத்த இரண்டறை லயன் அறைகள் பற்றி தெரிந்து கொள்ளவும் நியாயமற்ற குறை சம்பளத்தால் இன்றும் வறுமையில் வாழ்வியலை நடாத்தும் மலையகத்தவரின் துயர் நிலைகளை பற்றி அறிந்து கொள்ளவும் அவர்கள் துயர் மறக்க கொண்டாடும் கலை கலாச்சார பண்டிகை முதலான தெளிவுகளை பெற்றுக் கொள்ளவும் ஆய்வு செய்யவும் உள் நாட்டு மற்றும் சர்வதேச கல்வி, துறை சார் சுற்றுலா பயணிகளின் வருகையானது மலையகத்தை நோக்கி இடம் பெற்ற வண்ணமே உள்ளது.

இவ்வாறு இலங்கை திரு நாட்டின் சுற்றுலாத் துறையில் அதிகமான சுற்றுலா துறையினரது சுற்றுலா தெரிவுகளில் மலையகம் எனும் மலை நாட்டு பகுதியும் இன்றி அமையா இடம் வகிக்க மேற் கூறப்பட்டவைகள் பிரதான முதன்மைக் காரணங்களாக அமைகின்றன. இத்தனை தனித்துவ சிறப்புக்களை கொண்ட மலையகத்தின் ரசனைகளை நீங்களும் கண்டு மகிழ எண்ணுகின்றீர்களா?  சுற்றுலாவை விரும்பும் உங்கள் தெரிவில் இலங்கை திரு நாட்டையும் இயற்கை வனப்பு மிக்க மலையகத்தையும் கட்டாயம் இணைத்து கொள்ளுங்கள். பசுமை நிறைந்த நினைவுகளை உங்கள் நினைவேடுகளில் பதித்து செல்லுங்கள்.

நன்றி :- மலையக கவிஞன் : மு.அனுஷன்