கல்வி துறையில் மலையகம்

Mar 15, 2023 - 17:23
 0  51
கல்வி துறையில் மலையகம்

கல்வி துறையில் மலையகம்

"கேடில் விலாச் செல்வம் கல்விச் செல்வம்" "கற்க கசடற கற்றவை கற்றப் பின் நிற்க அதற்கு தக" என தமிழ் சமூகத்தவரை முன்னிருத்தி உரைத்துச் சென்ற நம் முன்னோர்களான வள்ளுவர்,ஒளவை, பாரதியை முதற் கொண்டு தமிழ் தோற்ற காலம் முதல் தொட்டு கல்வியின் வளர்ச்சி போக்குக்காக ஒவ்வொரு தமிற் சமூகத்திலும் நாளுக்கு நாள் நொடிக்கு நொடி ஆங்காங்கே பெரும் முயற்சிகள் இடம் பெற்ற வண்ணமே உள்ளது. உலகில் ஏழைப் பணக்காரர் என்ற ஏற்றத் தாழ்வுகளின்றி சிறியவர் பெரியவர் என்ற வயது,பால் நிலை வேறுபாடுகள் இன்றி அனைவரும் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் ஈடில்லா பெரும் செல்வமே கல்வி என்றால் மாற்றுக் கருத்தில்லை.

இவ்வாறு அனைவரும் அடைய விரும்புகின்ற கல்வி தாயின் மலையக வருகையும் தற் கால போக்கும் பற்றியதாக சற்று விரிவாக ஆராய்வதே இக் கட்டமைப்புரை.

இலங்கை திருநாட்டின் மையப் பகுதியில் மலைகளால் சூழப் பெற்ற மலைநாட்டில் வந்தேரு குடிகளாக குடிப் பெயர்ந்து இன்றைக்கு இருநூறு ஆண்டுகளை கடந்து பயணிக்கும் மலை மாந்தரின் வாழ்வில் கல்வித் தாயின் வருகை பற்றி சற்று அறிந்து கொள்வோம். அதாவது மேற்கைத் தேயரால் தொழில் நிமித்தம் அடிமைகளாய் அழைத்துவரப்பட்டு ஆட்சி நிகழ்த்திய காலப் பகுதிகளில் மேலைத் தேயரது கட்டளைகளை மலையகத்தோரிடம் மொழிப் பெயர்க்கும் நோக்கில் முதற் காலத்தில் அன்றைய மேற்கைத் தேய துரைமாரின் அடி வருடிகளாய் செயற்பட்ட பெரியாங்கங்காணி என்று அழைக்கப்பட்ட தலைமை கண்காணிப்பாளர்களுக்கு ஆங்கில மொழியை கற்பித்ததன் வழியதில் தொடங்கி பிற் காலத்தில் கங்காணிகள் என்ற கண்காணிப்பாளர்களை முதற் கொண்டு படிப் படியாக வளர்ச்சி பெற்றதே மலையக கல்வி வளர்ச்சி ஆகும்.

இவ்வாறு தொழில் நிமித்தம் மலையக தொழிலாளர்களிடம் தொடர்பு கொள்ளும் நோக்கில் பிரித்தானியரால் ஆங்கில மொழியை தெரிவு செய்யப்பட்ட ஒரு சில  மலையகத்தவர்களுக்கு கற்பிப்பதில் தொடங்கி பின் மேலைநாட்டவரது முதன்மைச் சமயமான கத்தோலிக்க சமயத்தை மலையகத்தில் வளர்ப்பதற்கான முயற்சியின் ஊடாக கத்தோலிக்க பாதிரியார்கள் ஊடாக சமய போதனைகள் மலையக மாணவர்களிடத்து ஆரம்ப கல்வியாக தொடர்ந்தது. பிற் காலத்தில் இலங்கையின் சுதந்திரத்தின் பின்னரான நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் கல்வி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு மலையகத்தில் கல்வி கூடங்களை அமைத்து அடிப்படை கல்வி அறிவான மொழி,கணிதம்,சமூகவியல் மற்றும் மதம் சார் துறைகள் கற்பிக்கப்பட்டு வந்தன. அன்றைய காலத்தில் கல்வி அறிவின் மகிமை அறியா தன்மையும் தாம் தந்தையர் வழியதில் தானும் தேயிலை தோட்ட தொழிலையே மேற்கொள்ள வேண்டும் என்ற முனைப்பும் மலையக பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் தடைகளாக அமைந்தன. என்றாலும் கூட படிப்படியாக முதற் கால ஆரம்ப கல்வி நிலையங்களில் கல்வி கற்ற சிறு தொகையினர் தன் தாய்,தந்தை தொழில் புரிந்த தோட்டங்களிலேயே கண்காணிப்பாளர்களாகவும் கணக்குப்பிள்ளைகள் என்ற நாமத்தால் அழைக்கப்படுகின்ற கணக்காளர் தொழிலையும் மறுபுறம் தொழிற் சங்க காரியாலயங்கள் மற்றும் சமூக நல தொண்டு நிறுவனங்களிலும் தொழிலையும் பெற்றுக் கொண்டமையை அறிந்து தெரிந்து கொண்ட பின்னரே மலையக பகுதிகளில் பெற்றோர்களது தான் கண்ட துன்பம் நிறைந்த அடிமைத் தொழிலை தன் பிள்ளைகளும் அனுபவிக்க கூடாதெனும் எதிர்பாப்பின் சாதக தன்மையாகவே மலையகத்தில் கல்வி வளர்ச்சி துரித தன்மை அடைய ஆரம்பித்த முதற் காலமாகும்.

தொழிலுக்காக அடிப்படை கல்வி அறிவை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து படிப்படியாக அரசினதும் மலையக அரசியல் மற்றும் தொழிற் சங்க தலையீடுகளாலும் செம்மை பெற்ற கல்வி துறையில் மலையக மாணவர்களே பிற்காலத்தில் அரச துறை சார் தொழிலுக்கும் பாடசாலையின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்ற சேவை நிலை தொழிலுக்கும் உள்வாங்கப்பட்டதோடு மலையக கல்வி வளர்ச்சியானது துரித அதிவேக தன்மையை பெற்றுக் கொண்டது. இந் நிலையதில் தொடங்கி படிப்படியாக பாடசாலைகளாக ஆரம்பிக்கப்பட்டு வகுப்புக்களானது வயது மற்றும் தரத்தின் தன்மையில் பிரிக்கப்பட்டு அவை அரசின் கீழ் நிலைப்பட்டு பின் நாட்டின் ஏனைய பிரதேச பாடசாலைகளுக்கு நிகராக சமச்சீர் தன்மையில் பயணிக்க ஆரம்பித்து இன்று வரையிலும் வெற்றிகரமாக பயணித்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறு வெற்றிகரமாக தொடர்ந்த மலையக கல்வி வளர்ச்சியில் இன்று மலையக மாணவ சமூகத்தில் நூற்றுக்கு தொன்னூறு சதவீதமானவர்கள் தனது கல்வி நிலையை குறைந்த பட்சம் சாதாரண தரம் வரை கற்று தேர்ந்தோராவர்களாக காணப்படுகின்றனர். அவ்வாறு பாடசாலை கல்வியை தொடரும் இன்றைய மலையக மாணவர்களது கல்வி வளர்ச்சி போக்கில் ஏனைய பிரதேசங்களை போலவும் கல்வியோடு இணைந்ததாக இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் பிரகாசிக்க வாய்ப்புக்கள் மிக அதிகமாக கிடைக்க பெறாவிட்டாலும் கூட கிடைக்கும் வாய்ப்புக்களை இயன்ற வரையிலும் பிரகாசிப்பதற்கான வாய்ப்பானது கிடைக்க பெருகின்றது என்பது குறிப்பிடத் தக்கதே. அவ்வாறு தமிழ் இலக்கிய மற்றும் மத மற்றும் கலாச்சார ரீதியான போட்டிகளுக்கு அப்பாற் மெய்வல்லுனர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளிலும் இன்றைய மலையக இளைஞர் சமூகத்தினரது பிரகாசிப்பானது விரிவடைந்து வந்துள்ளது. என்றாலும் கூட போதிய பயிற்சி களங்கள் இன்மையானது மலையக மாணவ சமூகம் எதிர்நோக்கும் பெரும் சவாலாக இன்று வரையிலும் அமைந்துள்ளது. குறிப்பாக நோக்குமிடத்து மென் பந்து கிரிக்கட் துறையில் சிறந்த பல சாதணைகளை பதிவு செய்திருந்தாலும் கூட கடின பந்து கிரிக்கட்டில் மலையக மாணவர்களது பிரகாசிப்புக்கான வாய்ப்புக்களானது மிகவும் குறைந்ததாகவே காணப்படுகின்றது. இதற்கான முக்கிய காரணமாய் அமைவது பயிற்சி களங்களும் பயிற்சி உபகரணங்களை கொள்வனவு செய்வதில் உள்ள சிக்கல் நிலையுமே ஆகும்.

இடைவிளகுவோரது வாய்ப்பு

இவ்வாறு பல்வேறு ரீதியில் கல்வி மற்றும் கல்வி சார் இணைப்பாடவிதான செயற்பாடுகள் வரையிலும் துரித கதியில் வளர்ச்சி பெற்றாலும் கூட மலையகத்தில் பாடசாலை இடைவிளகும் மாணவர்களது எண்ணிக்கையில் இன்று வரையிலும் குறைவில்லா நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது. அவ்வாறு தனது வீட்டின் வறுமை நிலை மற்றும் குடும்ப பின்னணி மறுபுறம் கல்வி  சார் விருப்பமின்மை, சிறந்த நண்பர்களது தெரிவின்மை முதலானவைகளும் காரணமாக அமைகின்றன. கல்வி சார் விருப்பமின்மையால் இடம் பெரும் இடைவிலகல்களுக்கு மாற்று தீர்வாக அரச அங்கிகாரம் பெற்ற மற்றும் அரசினால் முன்னெடுக்கப்படும் இலவச மற்றும் கட்டண அடிப்படையிலான தொழில் கல்வி நிலையங்கள் ஊடாக தொழில் கல்வி பற்றிய அறிவூட்டல்கள் வழங்கப்பட்டாலும் கூட இவ்வாறான தொழிற் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களிடத்தில் தெளிவின்மை முதலான காரணங்களால் மலையக மாணவர்கள் நிலையில்லா தற்கால கூலித் தொழில்களில் ஈடுபடும் நிலை இன்று காணப்படுகின்றது. மறுபுறம் இவ்வாறு கொழும்பு முதலான பிரதான மாநகர பகுதிகளில் தற்காலிக கூலித் தொழிலில் ஈடுபடும் இளைய சமூகத்தினர் விடுமுறைக் காலங்களில் மலையகம் நோக்கி படையெடுக்கும் போது அவர்களது நடை,உடை பாவணைகள் மற்றும் ஆசை வார்த்தைகள் முதலானவையும் மலையக மாணவர்களது இடைவிலகல்களுக்கு காரணமாக அமையப் பெருகின்றன.

இவ் தொழில் மோக வலையில் சிக்குண்டு விடாமல் தப்பித்து சாதாரண தரத்திலிருந்து உயர் கல்வி நோக்கி அடியெடுத்து வைக்கும் அதிக மாணவர்களது முதற் தெரிவாக கலைத் துறை அமையப் பெருகின்றது. இதற்கான மிக முக்கிய காரணமாய் அமைவது ஏனைய துறைகளை தெரிவு செய்து கற்றலை தொடர வேண்டுமானால் நகர பாடசாலைகளை தெரிவு செய்ய வேண்டிய நிலையும் மேலதிக பயிற்சிக்களுக்காக நகர்புற மேலதிக கல்வி நிறுவணங்கள் மற்றும் வகுப்புக்களை தெரிவு செய்ய வேண்டிய நிலையும் காரணமாக அமைகின்றது.  இவ்வாறு கல்வியை தொடரும் போது இம் மலையக மாணவர்களது பெற்றோரரது போதியளவான வருமானமின்மை மற்றும் பொருளாதார சிக்கல் நிலையே பெரும் காரணமாக அமைகின்றது. என்றாலும் கூட கலைத் துறைக்கு அப்பால் வணிகம் அதற்கு மேலாக கணித விஞ்ஞான துறைகளில் கல்வியை தொடரும் மாணவர்கள் அரச மற்றும் அரச சாரா நிறுவணங்களது புலமைப் பரிசில்கள் மற்றும் குடும்ப உறவுகளது உதவிக் கரம் என்பவற்றின் ஊடாகவும் இடம் பெறுகின்றது. இதை போலவே தொழில் கல்வியை விரும்பும் மாணவர்கள் தொழில் கல்வி துறையை கொண்ட பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவணங்களை தெரிவு செய்ய வேண்டிய நிலை காணப்படினும் மலையக பகுதிகளில் தொழிற் கல்வியை கொண்ட பாடசாலைகளது எண்ணிக்கை தன்னம குறைவாகவே காணப்படுகின்றமையானது இன்று வரையிலும் இம் மலையக மாணவர்களது பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இவ்வாறு பல தடைகளையும் சவால்களையும் கடந்து உயர் தரத்தை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு அடுத்த கட்டமாக அமையும் பல்கலைக்கழக வாய்ப்பும் நாட்டின் மாணவர்களது வெட்டுப் புள்ளிகளோடு போட்டியிட்டு பெற்றுக் கொள்ள கூடியதாக அமையும் அதே வேலை அவ்வாறு தெரிவாகும் மாணவர்கள் பல்கலைக்கழக படிப்பை தொடர்வதென்பது மூன்றில் ஒரு பங்கு என்ற நிலையிலேயே அமைகின்றது. இதற்கும் மலையக பெற்றோரரது வருமானமின்மையானது பிரதான காரணமாக அமைகின்றது. இதற்கு அடுத்த கட்டமாக கல்வியற் கல்லூரிகளில் மாணவர்களை தெரிவு செய்யும் மலையகத்தில் அமைந்துள்ள சிறிபாத கல்வியற் கல்லாரியில் மலையக மாணவர்களுக்கு பத்து சதவீதம் வரையிலும் வாய்ப்புக்கள் வழங்கப்படுவதாக ஏற்பாடுகள் இருந்தாலும் கூட அவ் ஏற்பாட்டின் ஊடாக கல்வியற் கல்லூரியில் கல்வியை தொடர சில கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் காணப்படுகின்றன. இதற்கு மேலாக தொழிற் கல்வியை தொடரும் மாணவர்கள் அடுத்த கட்டமாக தொழில் கல்வி சார் பல்கலைக்கழக கல்லூரிகளை தெரிவு செய்யும் தன்மையானது  மிக மிக குறைவாகவே மலையக மாணவர்களிடம் தொடர்கின்றது.

இவ்வாறு அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படாத மலையக மாணவர்களிடம் வெளிவாரியான பட்ட கற்கையை தொடர்வது என்பதானது மாணவர்களுக்கு தொலை தூர வாய்ப்பாகவே அமைகின்றது அவ் வாய்ப்பை துரத்தி பிடிக்கும் மலையக மாணவர்களது குடும்ப கட்டமைப்பு ஏனைய மலையக குடும்பங்களை காட்டிலும் பொருளாதார தன்மை மற்றும் வருமானம் தன்மை என்பன உயர்நிலையில் உள்ளதென அடையாளப்படுத்தி விடலாம். மறுபுறத்தில் மலையகத்திலிருந்து அரச மற்றும் அரச சாரா வலு பெற்ற நிறுவணங்களில் தொழில் புரியும் குடும்பத்தில் துளிர் விடும் மாணவர்களுக்கு இவ் வெளிவாரியான பட்ட கற்கைக்கான வாய்ப்பு இலகுவில் கிடைக்க பெறுகின்றது.

இவ்வாறு பல்வேறு தடைகளை கற்று தேரும் மலையக பட்டதாரிகளது தொழில் வாய்ப்பு பற்றி நோக்கும் போது தான் பெற்ற பட்டங்களின் அடிப்படையில் கற்பித்தல் துறைக்கு அப்பால்  ஏனைய துறையிலான வேலை வாய்ப்பு தன்மைகளானது மிகவும் குறைவானதாகவே அமைகின்றது. இதற்கு அப்பால் உயர் தர கல்வியோடு தன் கற்றலை இடை நிறுத்தி கொண்ட மாணவ இளைய சமுதாயத்தினர் பெரும்பாலும் அரச சாரா வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதலான தொழில் வாய்ப்புக்களை பெற்று கொள்ள வேண்டிய நிலையே காணப்படும் அதே வேலை இத் தொழில் வாய்ப்புக்களும் நிலையில்லாததாகவே அமையப் பெருகின்றன. இத்தால் இன்றைய கால ஒவ்வொரு மலையக மாணவர்களது பெரும் எதிர்ப்பார்ப்பாக இலட்சியமாக அமையப் பெறுவது மலையக பெற்றோர்களுக்கு தன் உயர் கல்வி குறித்தான பொருளாதார கஷ்டங்களை வழங்காது அரச பல்கலைக்கழகத்தில் அல்லது அரச கல்வியற் கல்லூரியில் தனது உயர் கல்வியை பூர்த்தி செய்து அரச தொழில் ஒன்றில் இணைந்து தன் குடும்ப கட்டமைப்புக்கு வருமானம் சார் வலு சேர்க்கும் அதே வேலை தன் பெற்றோர்களது இடையறா அடிமைத் தொழிலுக்கு ஓய்வை வழங்க வேண்டும் என்பதுமே ஆகும். இவ் இலக்கை துரத்தி ஓடும் மலையக மாணவர்களின் இலக்குகள் சிறப்பான முறையில் ஈடேர இறைவனை பிராத்திப்போம். கல்வி வாய்ப்புகள் இன்றியும் கல்வி வாய்ப்புக்களுக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் மத்தியில் நம் குடும்ப கட்டமைப்பில் வாழும் மாணவர்களுக்கு கல்வி சார் தெளிவினை வழங்கி வாய்ப்பை சிறந்ததாக பயன்படுத்தி வெற்றி பெற துணை நிற்போம்.

நன்றி:- மலையக கவிஞன் : மு.அனுஷன்

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow