இலங்கையின் ஆங்கில கல்வியின் முக்கியத்துவம்

பல்கலைக்கழக கல்வியும் ஆங்கில அறிவும் , ஆங்கில கல்வியின் அவசியம்.

இலங்கையின் ஆங்கில கல்வியின் முக்கியத்துவம்

அறிமுகம்

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு தனிமனித வெற்றிக்கும் இன்றியமையாத காரணியாக கல்வி காணப்படுகிறது.கல்வியால் தன்னை உயர்த்திக் கொள்ள ஒவ்வொரு தனிமனிதனும் ஓடிக் கொண்டிருக்கின்றான்.கல்வியால் சாதனைகள் காண்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.திறன் விருத்தி மற்றும் மொழி விருத்தி இரண்டும் சிறந்து காணப்பட்டால் கல்வியின் உச்சத்தை அடையலாம்.பாலர் பாடசாலையுடன் ஆரம்பமாகும் கல்வி உயர்கல்வி கல்வி வரையில் தொடர்ந்து வெற்றி காண்பது கல்வியின் வெற்றி. இதன் அர்த்தமானது கல்வியினால் அடையும் வெற்றி இதுவரை தான் என்று வரையறைக்கு உட்படுத்தவதாக அர்த்தம் கிடையாது.கல்வி வெற்றி எல்லை இல்லாதது. இதனை விளக்குகிறது " கற்றது கையளவு கல்லாதது உலகளவு" எனும் பழமொழியாகும். இதனூடாக அறிவது என்னவென்றால் கல்வி எல்லை கடந்தது என்பதாகும்.

ஒவ்வொரு மாணவனும் பாடசாலை கல்வியின் வெற்றியின் விளைவாக பட்டம் பெற்று பார் வெல்ல பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றான். பாடசாலை கல்வியில் சிறந்து விளங்கிய மாணவன் ஒருவன் பல்கலைக்கழக கல்வியில் வெற்றி காண்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல.ஆனாலும் சில மாணவர்கள் பல்கலைகழகத்தில் மிளிராமைக்கான காரணம் என்ன? இதற்கான காரணம் என்ன என்று தேடி அறியப்பட வேண்டிய ஒன்றாகும்.ஏனெனின் ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவனும் நிச்சயமாக ஏதோ ஒரு துறையில் திறமையானவன். ஏதோ ஒரு துறையின் வளர்ச்சிக்கு பங்குதாரனாக மாற கூடியவன்.

பல்கலைக்கழக மாணவன் ஒருவனின் சவால்களை நாம் பல கோணங்களில் ஆராயலாம். ஆனால் இங்கு நாம் ஆராய இருப்பது ஆங்கில அறிவினை ஆகும்.

ஆங்கில கல்வியின் அவசியம் 

ஆங்கில அறிவு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாகும். இன்றைய உலகின் விஞ்ஞான வளர்ச்சியுடன் நாம்சமனாக நடைப் போட வேண்டுமானால் ஆங்கில அறிவுடன் கூடியகணினி அறிவும் கட்டாயமாகும். மொழி என்பது தொடர்பாடலுக்கு அவசியமான ஒன்றாகும்.ஒவ்வொரு கருத்துகளின் பரிமாற்றமும் மொழியில் தங்கி உள்ளது. இவ்வாறு இருக்க ஆங்கில மொழி சர்வதேச மொழி ஆகும். ஆங்கிலமின்றிய கல்வி அறிவு என்பது இன்றைய காலகட்டத்தில் நடைமுறைக்கு சாத்தியம் அற்றது ஆகும். உலகளாவிய தொழில் வாய்ப்புகள் ஆங்கில அறிவினை மையப்படுத்தும் விதத்தில் காணப்படுகின்றன. உலகில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்கள் ஆங்கில அறிவினை பிரதான திறனாக கொண்டே ஒரு நிறுவனத்துக்கான ஊழியரை தெரிவு செய்கிறது. ஒரு சர்வதேச பொது மொழியாக ஆங்கிலம் காணப்படுவதால் பல்கலைக்கழக மாணவன் ஒருவனின் வெற்றிக்கும் ஆங்கில அறிவு அவசியம் தேவையானது.

ஆங்கில அறிவு ஏன் ஒரு பல்கலைக்கழக மாணவனின் சவாலாக மாறுகிறது

பாடசாலைகளை( இலங்கையில்) பொதுவாக நாம் நகர்ப்புற பாடசாலை மற்றும் கிராமப்புற பாடசாலைகள் என வகுக்கலாம்.பொதுவாகவே நகர்ப்புற பாடசாலைகளை காட்டிலும் கிராமப்புற பாடசாலைகளின் வளங்கள் என்பது அவ்வளவு கிடையாது. நகர்ப்புற பாடசாலை ஒன்றிற்கு கிடைக்கின்ற அதே அளவான வளம் கிராமப்புற பாடசாலைகளுக்கும் கிடைக்கின்றதா என்ற வினா வரும் போது அதற்கான விடை நிச்சயமாக நகர்ப்புறத்தை காட்டிலும் கிராமப்புற பகுதிகளில் குறைவுதான்.நகர்புற சூழல், பாடசாலைகளின் தரம் மற்றும் கல்வியின் தரம், பெற்றோர்களின் கல்வி அறிவு என்பதன் விளைவாக நகர்ப்புறத்தில் கல்வி பயின்று பல்கலைக்கழகம் தெரிவாகின்ற ஒரு மாணவனுக்கு பரந்த அளவில் ஆங்கில அறிவு இருக்கும்.பல்கலைகழகத்தில் கற்பிக்கபடுகின்ற ஒவ்வொரு பாடமும் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுகிறது. ஆகவே ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனுக்கு பல்கலைக்கழக கல்வி என்பது அவ்வளவு கடினமான சவாலாக அமையாது.

ஆனால் கிராமப்புற பகுதிகளில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படுகின்ற ஒரு மாணவனுக்கு பரந்த அறிவு காணப்பட்டாலும் கூட மொழியை சார்ந்த ஆங்கில அறிவு என்பது குறைவாகவே காணப்படுகிறது. ஏனெனில் கிராமப்புற சூழலின் தன்மை, பாடசாலைகளின் தரம் மற்றும் கல்வியின் தரம் பெற்றோர்களின் கல்வி அறிவு நகர்ப்புற பாடசாலைகளை காட்டிலும் கிராமப்புற பகுதிகளில் குறைவுதான்.அவ்வாறான ஒரு சூழலில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படுகின்ற ஒரு மாணவனுக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி என்பது நிச்சயமாக சவாலுக்கு உட்பட்ட விடயமாகும்.

ஆகவே ஆரம்ப பாடசாலையிலிருந்து ஆங்கில மொழி அறிவுடன் வந்த ஒரு மாணவனுக்கு ஆங்கிலத்தில் கற்பிக்கும் பாடங்களை புரிந்து கொள்ளவது இலகுவான செயலாகும்.ஆனால் தன்னுடைய தாய்மொழியில் கற்று வந்த மாணவனும் திடிரென முழுமையாக ஒரு வேறுபட்ட மொழியில் பட்ட படிப்பை படிப்பது என்பது இயலாத காரியம் ஆகும். இதனால் அவ்வாறான மாணவனால் பல்கலைக்கழகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு சித்தியையோ அல்லது வெற்றியையோ பெற முடியாமல் போகும்.இதனால் குறிப்பிட்ட மாணவன் நிச்சயமாக மன அழுத்தங்களுக்கு உட்பட கூடும்.

இன்று ( இலங்கையில்) ஏற்படுகின்ற பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கு பிரதான தூண்டுதல் காரணியாக இந்த பிரச்சினை உள்ளது. அரசாங்கமோ அதற்கான எந்த விதமான செயற்திட்டங்களையும் அமுல்படுத்தியதாக இல்லை. வெறுமனே ஒரு செய்தியாகவே பார்கின்றது. மாணவர்களை போதை வஸ்து பழக்கத்திற்கு உட்படுத்துகிறது. தகாத சகவாசங்களையும் நடப்புகளையும் உருவாக்குகிறது. கல்வி மீதான ஈடுபாட்டை குறைக்கிறது.இடைவிலகல் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகின்ற பிரச்சினை ஆகும். இவற்றை எல்லாம் காட்டிலும் கொவிட்- 19 நிலைமை பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியினை நிகல்நிலை கல்வியாக தொடர வழிவகுத்தது.தொலைதூர கல்வி, நேர முகாமைத்துவம் என் பலவாறாக இதற்கு சார்பான கருத்துக்கள் பேசப்பட்டாலும் கூட பௌதீக சூழலில் இருக்கின்ற போது ஏற்படுகின்ற கல்வி விருத்தியை காட்டிலும் நிகல்நிலை ஏற்படும் கல்வி விருத்தி மிக குறைவாகும். இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் இடையில் தன் உயர்கல்வி வாய்ப்பினை இழந்தவர்கள் ஏராளம்.இதனை அரசாங்கமோ கல்வியாளர்களோ , சமூக ஆய்வாளர்களோ பேச வில்லை.அரசியல் அரங்குகளில்  கல்வியை உயர்த்த வேண்டும் என்றவாறான அரசியல் பேச்சுக்கள் இன்றும் செவிகளை எட்டுகிறது. ஆனால் உண்மையில் அதற்கான ஒழுங்கான ஏற்பாடுகளும் செயற்பாடுகளும் இதுவரை கொண்டு வரப்படவில்லை.

இந்த பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன?

கல்வி முறைமை பாரம்பரிய முறைசார் கல்வி நிலையிலிருந்து நடைமுறைக்கு ஏற்ற வகையில் மாற வேண்டும். ஆங்கில அறிவு விருத்தியினை பாலர் பாடசாலையில் இருந்து விருத்தி செய்ய வேண்டும்.இதற்காக அரச பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்ற ஒரு சில பாடங்களை யாவது ஆங்கில மொழியில் கற்பிக்கவும் கற்கவும் வழி ஏற்படுத்தி வேண்டும்.ஆசிரியர்களுக்கு ஆங்கில அறிவு விருத்தியினை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர் ஊடாகவே கல்விசார் பாரிய மாற்றங்கள் கொண்டு வர முடியும். இவற்றோடு பெற்றோர்களுக்கும் தன் பிள்ளைகளுக்கு ஏன் ஆங்கில அறிவு அவசியம் என்பதை பாடசாலை சமூகத்தின் ஊடாக எடுத்து காட்டுதல்.மாணவர்களுக்கு ஆங்கில அறிவு தொடர்பான முன்அனுபவம் உடையவர்கள் ஊடாக எடுத்து காட்டுதல்.

அடுத்ததாக சமூக சூழலில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.சமூகத்திலிருந்து எழுகின்ற மாற்றங்கள் பாரிய புரட்சிகளை செய்ய வல்லது. ஆங்கில அறிவினை விளக்கும் வகையிலான கருத்தரங்கு மற்றும் வகுப்புக்களை மேம்படுத்தல்.உயர்கல்வி வாய்ப்புகள் ஆங்கில மொழி விருத்தியில் தங்கி உள்ளது என்பதை வெளிக்கொண்டு வருதல்.இவற்றை எல்லாம் காட்டிலும் ஆங்கில பேச உள்ள பயத்தினையும் கூச்ச உணர்வினையும் தாழ்ந்த மனப்பான்மையையும் முதலில் மாணவர்கள் மத்தியில் இருந்து நீக்குவதற்கான முறைகளை கண்டறிதல். ஒரு மாணவன் தன் தாய் மொழியை கற்று கொள்ள கொண்டுள்ள அதே அளவான ஆர்வத்தை ஆங்கில மொழியை கற்பதிலும் கொண்டு வருதல் வேண்டும். சர்வதேச ஆங்கில மொழி பாடசாலைகளில் மட்டுமே ஆங்கிலம் கற்பிக்கப்படும் என்ற நிலை மாறி தேசிய பாடசாலைகளிலும் ஆங்கில பாடத்துக்கான முக்கியத்துவத்தை உயர்த்த வேண்டும்.

ஆங்கில மொழி அறிவுடைய ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு உள்ளெடுப்பதை அதிகரித்தல்.ஆசிரிய பயிற்சி கலாசாலைகளில் ஆசிரிய பயிற்சியாளர்களுக்கான ஆங்கில அறிவு விருத்தி மற்றும் பேச்சாற்றலுக்கான ஏற்பாடுகளை செய்தல். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ? என்பது போல ஆரம்ப வகுப்பிலிருந்து மாணவனுக்கு ஆங்கில கற்பிக்கப்பட வேண்டும்.

ஆங்கிலம் கற்று கொள்வதற்கான வழிகளை சமூகத்தில் அதிகரித்தல். ஆங்கில பிரத்தியேக வகுப்புகளுக்கான கட்டணம் தனியார் துறைகளில் அதிகமாக அறவிடப்படுவதனாலும் மாணவர்கள் அதற்கான விருப்பத்தை கைவிடுகின்றனர். இதற்கு அரச பாடசாலைகளில் ஆங்கில மேலதிக வகுப்புகள் இலவசமாக தொடங்குவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் வேண்டும்.

முடிவுரை

இலங்கையை பொருத்தவரையில் அனைத்து மாணவர்களும் பெற்று பயனடையும் வகையில் இலவச கல்வி திட்டம் காணப்படுகிறது.கல்வி வளர்ச்சிக்காக தனி அமைச்சுக்கள் காணப்படுகிறது. இலங்கையில் சில அரசாங்கம் பாடசாலைகளில் கா.பொ.தர சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை ஆங்கிலத்தில் தோற்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. அவ்வாறான பாடசாலைகளில் ஆங்கிலத்தில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.ஆனால் இந்த முறைமை அனைத்து ஆங்கில பாடசாலைகளிலும் ஏற்படுத்த படவில்லை. கல்வி துறையின் முன்னேற்றத்திற்காக இலங்கையில் பல்வேறு திட்டங்கள் அரசாங்கத்தால் வடிவமைக்கப்படுகிறது என்பது உண்மையாகும்.ஆனாலும் ஆங்கில அறிவு மட்டம் மாணவர்கள் மத்தியில் கீழ் மட்டத்திலேயே உள்ளது. சில நேரங்களில் திட்டங்கள் வெறுமனே அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால் அந்த திட்டங்களை சிறப்பாக பாடசாலைகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றதா என்பது கேள்வி குறியாகும். அண்மை காலங்களில் அரச பாடசாலைகளில் வாரத்திற்கு ஒரு தினம் அனைத்து தொடர்பாடல் நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் இடம் பெற வேண்டும் என்ற திட்டம் இலங்கை அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. அத்திட்டத்தை திறம்பட செய்ய ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டது. உண்மையில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்புக்கு உட்படுத்த பட வேண்டிய ஒன்றாகும்.இதனூடாக ஆங்கில மொழி விருத்தியில் இலங்கை அரசாங்கத்தால் கரிசனை காட்டப்படுகிறது என்பது உண்மை ஆகும்.ஆனால் அவை போதுமானதாக இல்லை என்பதே கவனிக்க தக்கது.

இலங்கையின் கல்வி நிலைமையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டியது முக்கியம் ஆகும் மற்றும் நாளைய இலங்கையின் அபிவிருத்தி கல்வியில் தங்கி உள்ளது. தொழிற்சார் கல்வி தேவை அதிகமாக உள்ளது.இதற்கு ஆங்கிலம் சார்ந்த மொழி விருத்தியினை மாணவர்கள் மத்தியில் கொண்டு வர வேண்டும்.

தொழில் உலகுக்கு தயார் நிலையில் உள்ள பல்கலைக்கழக மாணவன் ஒருவனின் சவால்களை இந்த கட்டுரை எடுத்து காட்டுகிறது. அதற்கான சில வழிகளையும் காட்டுகிறது.இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு எட்ட பட வேண்டுமானால் குறிப்பிட்ட பிரச்சனைக்கு என்ற குழு அமைக்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடி தீர்வினை எட்டுவது சிறப்பாக அமையும்.

கல்வியில் ஏற்படுத்தப்படும் மாற்றமே ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின் மற்றும் ஒரு நாட்டின் மாற்றமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

நன்றி :- ஆர்.சுஜா