கல்வித் தத்துவங்கள் என்றால் என்ன?
அறிமுக கட்டுரை, பிளேட்டோவின் இலட்சிய கருத்தியல், பிளேட்டோவின் கல்வி சிந்தனைகள் , அரிஸ்டோட்டிலின் கல்வி சிந்தனைகள் , இந்திய தத்துவ ஞானிகளின் கல்விச் சிந்தனைகள், ரவீந்திரநாத் தாகூரின் கல்விச் சிந்தனைகள், முன்பள்ளி கல்வி சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்ட தத்துவங்கள், மரியா மொண்டசூரி, ஹென்றி பெஸ்டலோசி

அறிமுகம்
மண்ணில் மனித இனம் தோன்றிய காலம் முதலே கற்றல் செயல்முறையும் இடம் பெற ஆரம்பித்தது. மனித இனம் தனது பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் புதிய புதிய விடயங்களை தேடி கற்றுக் கொண்டே வந்துள்ளது. மனிதர்கள் தொடர்ந்து புதியவற்றைத் தேடியும் கண்டுபிடித்தும் கல்வியின் பல் பரிமாண விருத்திக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டுள்ளனர். இத்தகைய பின்புலத்திலேயே கல்வி பற்றிய வெவ்வேறு சிந்தனைகள் தோற்றம் பெற்றுள்ளன. உலகின் பல பாகங்களில் இருந்தும் கல்வி பற்றிய பல்வேறு தத்துவங்கள் கல்வித் தத்துவவியலாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. அரிஸ்டோட்டில், பிளேட்டோ,ரூஸோ, ஜோன் டூயி, மகாத்மா காந்தி, தாகூர் போன்ற பல தத்துவஞானிகளை இவர்களுக்கு உதாரணமாக குறிப்பிடலாம். இத்தத்துவ விளக்கங்களின் விரிவாக்கத்தின் அடிப்படையில் கல்வியின் கருவூலங்கள் யாவும் சமூகம், மனிதர், இயற்கை பற்றிய ஆய்வாக விரிவடைந்துள்ளது. இவை படிப்படியாக வளர்ச்சி அடைந்து மனித இன விடுதலை, சமூக மாற்றம் என்பன குறித்த தேடல் என்பவற்றிற்கு வழிவகுத்துள்ளன. இந்த அடிப்படையில் அனைத்து கல்வி தத்துவங்களும் தமது இறுதி இலக்காகக் கொண்டிருப்பது மனித குல மேம்பாடு ஆகும்.
பிளேட்டோவின் இலட்சிய கருத்தியல்
பிளேட்டோ கி.மு 427 - 347 வரை வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி ஆவார். இவரின் தத்துவமானது இலட்சியவாத கருத்தியல் என அழைக்கப்படுகிறது. இவர் தனது கருத்துக்களை போதிக்க அகடமியா என்ற கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தார் .இவர் உருவாக்கிய மெய்யியல் சமூகத்தில் இருந்த ஒருவரே அரிஸ்டோட்டிலும் ஆவார். அறிவுத்தேடலும், நியாயித்து விடை காணுதலும், கருத்தாடல் நிகழ்த்துதலும், மெய்ப்பொருள் தேடலும், நிறுவன மயப்பட்ட கல்வியை வழங்குதலும் பிளேட்டோவின் கல்வி சார்ந்த நடவடிக்கைகளாக அமைந்தன.
பிளேட்டோவின் கல்வி தத்துவத்தின் சாராம்சம் பின்வருமாறு அமைந்தது. அதாவது பொருள் உலகம் கருதுலகம் என்பவற்றில் கருத்து உலகமே முந்தியதும் முதன்மையானதும் ஆகும். பொருட்களுக்கு கால வரையறை உண்டு. ஆனால் மூலக்கருத்துக்கள் காலம் கடந்தவை. அவை ஆதியும் அந்தமும் அற்றவை. பொருள்கள் பூரணத்துவமற்றவை. ஆனால் மூலக்கருத்துக்கள் முழு நிறைவானவை. மூலக்கருத்துக்களின் முழுமையில் உண்மையும், அழகும், நன்மையும், உன்னத நிலையிலும் சந்திப்பை நிகழ்த்துகின்றனர். என்பதே இவரின் கருத்தாகும். இது இலட்சிய வாதம் அல்லது என்ன முதல் வாதம் என்றும் அழைக்கப்படும். அதேபோல் இவரின் கல்வி தத்துவத்தின் பிறிதொரு முக்கிய அம்சம் இவர் கட்டமைக்க முயன்ற இலட்சிய அரசைக் கொண்டு நடாத்துவதற்குரிய மெய்யியல் அரசர்களை அல்லது ஆட்சியின் பாதுகாவலர்களை கல்வியால் உருவாக்க முயன்றார். தர்க்கவியலை அல்லது மெய்யியலை கற்பதற்கு முன்னர் ஆட்சியாளர்கள் 10 ஆண்டுகள் வரை கணிதவியலை கற்க வேண்டும் என்று தான் எழுதிய "குடியரசு" என்ற நூலில் குறிப்பிட்டார். தமது கல்வி நிலையமாகிய அகடமியாவின் நுழைவாயிலில் "கேத்திர கணிதம் அறியாதோர் உள்ளே நுழையாது இருப்பாராக" என்ற வாசகத்தை பொறித்து வைத்தார். இது தர்க்க சிந்தனைக்கு அவர் வழங்கிய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. அது மட்டுமின்றி உடற்பயிற்சி, ஒழுக்க பயிற்சி, என்பவற்றிற்கும் அவர் தனது கல்விச் சிந்தனைகளில் முக்கியத்துவம் வழங்கினார். உறுதியான உடலும் உறுதியான உள்ளமும் என்ற கோட்பாட்டை இவர் மீள வலியுறுத்தினார்.
இவர் கல்வியை வாழ்க்கை முழுவதும் தொடரும் செயல்முறையாக குறிப்பிட்டார். ஒரு குழந்தை கருவாகி இருக்கும்பொழுது கற்றலை தொடங்குகிறது என்பதே இவரின் கருத்தாகும் .அதாவது குழந்தை கருவில் இருக்கும் பொழுதே தாயால் நுகரப்படும் இன்னிசை, நறுமணம் போன்ற புலன் உணர்வுகளைக் குழந்தையும் பெற்றுக் கொள்கிறது என குறிப்பிட்டார். இதுவே ஒரு குழந்தை கல்வியை பெற ஆரம்பிக்கும் ஆரம்ப இடம் எனவும் குறிப்பிட்டார்.
அதேபோல் இவர் தனது ஆரம்பகால சிந்தனைகளில் வர்க்க சார்பான கல்விக்கு முக்கியத்துவம் வழங்கினார். அதாவது சமூகத்தில் காணப்படும் மனிதர்கள் வெவ்வேறு அந்தஸ்தை உடையவர்கள் . இவர்கள் வெவ்வேறு பட்ட பணிகளுக்கு உரியவர்கள். எனவே வேறுபட்ட நபர்களுக்கு வெவ்வேறு விதமான வகையிலேயே கல்வியை வழங்க வேண்டும் என குறிப்பிட்டார். அவர் இதனை பின்வருமாறு மேலும் விளக்குகிறார்.
- ஒவ்வொருவரும் வேறுபட்ட உலோக வடிவில் ஆக்கப்படுகின்றனர். தங்க நிலபை் பட்டோர் அரசை நிர்வகிக்கும் ஆற்றல் உடையோர் ஆகின்றார்.
- வெள்ளி நிலைப் பட்டோர் வர்த்தகத்திற்கும் இராணுவ செயற்பாடுகளுக்கும் பொருத்தமானவர்கள் ஆவர்.
- இரும்பு நிலைப்பட்டோர் தொழிலாளர்களாகவும் விவசாயிகளாகவும் தொழிற்பட வல்லவர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு விதமான கல்வியை வழங்க வேண்டும் .எனினும் ஆட்சி செய்வோருக்கு உரிய கல்வியேஅதிக முக்கியத்துவமானது என்று தனது "குடியரசு" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் பிளேட்டோவின் ஏனைய முக்கிய கல்வி சிந்தனைகளை பின்வருமாறு பட்டியல் படுத்தி நோக்கலாம்.
- அறிவுத் தேடல் என்பது வினாக்களுடன் ஆரம்பிக்கிறது. வினாக்களின் ஊடாக ஒவ்வொருவரும் தம்முள்ளே உண்மையை தரிசித்துக் கொள்ள வேண்டும்.
- 7 வயதிற்கும் 20 வயதிற்கும் உட்பட்ட காலத்தில் கல்வி வழங்கப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் தேர்வு நடத்தி அதில் சித்தி அடைய தவறியவர்களை வெவ்வேறு தொழில்களுக்கு உரிய வேலை ஆட்களாக அனுப்புதல் வேண்டும்.
- கற்றல் என்பது மகிழ்ச்சியான செயற்பாடாக இருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலாரும் சேர்ந்து கூட்டு கற்றலை முன்னெடுக்க வேண்டும்.
- சமூகத்தில் ஆட்சியாளர்களாக தெரிவு செய்யப்படும் வகுப்பினர் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வாறு பிளேட்டோவின் இலட்சியவாத சிந்தனையில் மேற்கூறிய உள்ளடக்கங்களை காணலாம்.
ரூசோவின் இயற்பண்பு கருத்தியல்.
ஜெனிவாவில் உள்ள கல்வினிஸ்ட் என்ற இடத்தில் பிறந்தவரே ஜீன் ஜக் ரூஸோ ஆவார். இவர் கல்வியில் இயற்கை நெறியை அல்லது இயற்பண்பு வாதம் என்ற அம்சத்தை முறையாக விளக்கியவர் ஆவார். இயற்பண்பு வாதம் என்பது பாரம்பரியத்தாலும் சூழலாலும் மனித நடத்தைகள் பொறிமுறையாக தீர்மானிக்கப்படுகின்றன என்ற கருத்தை வலியுறுத்தும் சிந்தனை ஆகும். மனிதனின் செயற்பாடுகளுக்கும் விலங்குகளின் செயற்பாடுகளுக்கும் ஒப்புமை காணுதல் இவ்வாதத்தின் தனித்துவம் ஆகும்.
picture source:- http://www.srilankaguardian.org/
இவர் தனது சமூக ஒப்பந்தம் என்ற நூலில் இயற்கையோடு இசைந்து வாழவும் தமது பிரச்சினைகளை தாமே பேசி விட்டுக் கொடுக்கவும் வல்ல சிந்தனைகளை முன் வைத்தார். இவரின் "எமிலி" என்ற நாவலில் இயற்கை வாதத்துடன் இணைந்த கற்பனையான கல்விப் பரிசோதனைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவர் தான் வாழ்ந்த காலத்து பாடசாலைகளில் மாணவர்கள் மீது சுமத்தப்பட்ட வன்முறைகளை எதிர்க்கக் கூடியவராக மாறினார். அடக்குமுறைகளில் அழுத்தங்களுக்கு உட்பட்ட மாணவர்களை விடுவிக்க முயன்றார்.
இவரின் கல்வித் தத்துவத்தில் உள்ளடக்கப்படும் முக்கிய விடயங்களை பின்வருமாறு நோக்கலாம்.
- அறிவு புலன்களினாலே திரட்டிக் கொள்ளப்படுகின்றது. எனவே கற்றலில் புலன்களின் தொழிற்பாடுகள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். கற்றலின் போது புலன்களை தூண்டக்கூடிய சூழல்களை கட்டமைப்பு செய்ய வேண்டும். வரண்ட பாடநூல் வழியே கற்கும் முறை மாணவரின் இயற்கையான வளர்ச்சிக்கு பாதகமாக அமையும் .
- பிறப்பு முதல் ஐந்து வயது வரையான குழந்தை பருவத்தில் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் வளப்படுத்தி மேம்படுத்தும் செயற்பாடுகளை வழங்க வேண்டும்.
- குழந்தை பருவத்தை அடுத்து வருவது பிள்ளை பருவம். இது ஐந்து வயது முதல் 12 வயது வரை நீடிக்கும். இப்பருவத்தில் உற்று நோக்கலாலும் அனுபவங்களாலும் அவர்களின் புலன் உறுப்புகளையும் உணர்வுகளையும் வளப்படுத்த வேண்டும்.
- 12 முதல் 15 வயது வரை கட்டிளமைப் பருவம் ஆகும். இவ்வயதில் கற்றல், கடின வேலை, வழிகாட்டல் முதலியவற்றால் அவர்களது ஆளுமைப் பரிமாணங்களை வளர்க்க வேண்டும்.
- 15 முதல் 20 வயது வரை நிகழ்வது இளமைக்காலம் ஆகும். இப்பருவத்தில் சிறந்த மனவெழுச்சி முகாமையை வழங்க வேண்டும். இப்பருவத்தில் அறச் சிந்தனை, சமூகப் பண்பு என்பவற்றை வளர்க்க வழிகாட்ட வேண்டும்.
- மாணவர்களை மையமாகக் கொண்டே அனைத்துக் கல்விச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
- மாணவர்களின் கட்டற்ற தெரிவுகளுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.
- கற்பித்தலில் விளையாட்டு முறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு இயற்கையுடன் இணைந்து கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை இவர் வலியுறுத்தினார்.
அரிஸ்டோட்டிலின் கல்வி சிந்தனைகள்.
மேற்கத்திய நாகரிகத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் கிரேக்க தத்துவ அறிஞரான அரிஸ்டோட்டிலின் கல்வி தத்துவமானது ஒழுக்க விழுமியங்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகின்றது. அதாவது அரிஸ்டோட்டிலின் கல்விச் சிந்தனை பற்றி கர் மற்றும் ஹரிசன் (2015 )என்போர் பின்வருமாறு குறிப்பிடுகிறார் .
"ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் கல்வியானது கலைத்திட்டம் மற்றும் திறன்களை வளர்ப்பதை விட ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சமூகப் பெருமானங்களை வளர்ப்பதையே இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் "
இவரின் கருத்துப்படி சிறு வயதில் ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்வியை வழங்குவது பெற்றோரின் பொறுப்பாகும். அதன் பின்னர் உயர்கல்வியை வழங்குவது அரசின் பொறுப்பாகும். இவர் மனித வளர்ச்சிக் கட்டத்தின் ஆரம்ப அடிப்படையான முன் பள்ளி கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார். பாடசாலைகளை ஆரம்ப பாடசாலை, இடைநிலை பாடசாலை, உயர்கல்வியை வழங்கும் பாடசாலை என மூன்றாகப் பிரித்தார் .
- 7 வயது முதல் 14 வயது வரை ஆரம்ப பாடசாலைக்கு செல்ல வேண்டும் .இங்கு உடற்பயிற்சி ,எழுத்து, வாசிப்பு, இசை , வரைதல் என்பவற்றை கற்க வேண்டும்.
- 14 முதல் 21 வயது வரை இடைநிலை பாடசாலைக்குச் சென்று இலக்கியம், கவிதை, நாடகம், நடனம் போன்ற விடயங்களை கற்க வேண்டும். இங்கு இறுதி 4 வருடங்களிலும் இராணுவ பயிற்சி போன்ற விடயங்கள் வழங்கப்பட வேண்டும்.
- 21 வயதிலேயே உயர்கல்வி தொடங்கப்பட வேண்டும். உயர்கல்வியை ஆண்கள் மாத்திரமே பெற வேண்டும்.
இவ்வாறு இவரின் கல்வித் தத்துவம் அமைந்திருந்தது.
இந்திய தத்துவ ஞானிகளின் கல்விச் சிந்தனைகள்
அதேபோல் இந்திய தத்துவ ஞானிகளின் கல்விச் சிந்தனைகளை நோக்கினால் இங்கு மகாத்மா காந்தி, தாகூர் போன்றோரின் கல்விச் சிந்தனைகள் முக்கியம் பெறுகின்றன .
இந்திய தத்துவஞானி ரவீந்திரநாத் தாகூரின் கல்விச் சிந்தனைகளை பொருத்தவரை அதன் பிரதான அம்சங்களாக பின்வருவனவற்றை நோக்கலாம். இவரின் கருத்துப்படி ஒரு மாணவனுக்கு இயற்கையே சிறந்த ஆசான் ஆகும். எந்த ஒரு விடயத்தையும் கற்றுக்கொள்ள மாணவர்களை நிர்ப்பந்திக்க கூடாது. யாருக்கு என்ன கல்வி தேவையோ அதனை பெற்றுக்கொள்ள இயற்கை அவனுக்கு வழிகாட்டும் .இவ்வாறு அவன் பெற்றுக்கொள்ளும் கல்வி அவனின் நடத்தையையும் பண்பாட்டையும் வடிவமைக்கும்.
ரவீந்திரநாத் தாகூர்.
அதே போல் இவர் புத்தகங்களை மையப்படுத்திய கல்விமுறையை வன்மையாக கண்டித்தார் .இது மாணவர்களின் இயற்கையான திறமைகளை மழுங்கடிக்க செய்யும் என குறிப்பிட்டார்.
மேலும் கற்பித்தல் என்பது வெறுமனே செயற்கை தன்மையை கொண்டதாக அமையாது நடைமுறை உலகுக்கு பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும் எனவும் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கல்வி மூலம் மனிதன் உற்பத்தி செய்யப்படுவது அல்ல மனிதன் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதே இவரின் கருத்தாகும்.
கல்வியின் இலக்குகளாக தன்னை அறிதல் ,உள்ளார்ந்த திறன்களின் வளர்ச்சி, உடல் வளர்ச்சி, மனிதத்தை நேசித்தல், சுதந்திர உணர்வுடன் வாழல், ஒழுக்க மற்றும் ஆன்மீக வளர்ச்சியைப் பெறல் என்பன காணப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தியின் கல்வித் தத்துவத்தை பொருத்தவரை இவர் கல்வியானது 6 அடிப்படைகளை கொண்டது என விளக்கினார்
- ஆரம்பக் கல்வியானது அனைவருக்கும் கட்டாயமானது.
- கல்வியானது கைத்தொழில் துறையை நோக்கி ஒழுங்கமைக்கப்பட வேண்டும் .
- கல்வியின் மூலம் சுய கட்டுப்பாடும் சுய ஒழுக்கமும் வளர்க்கப்பட வேண்டும் .
- கல்வியானது தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும்.
- கல்வி பலவந்தமாக திணிக்கப்படக்கூடாது.
- தலை, கை, இருதயம் இம்மூன்றினதும் சமமான செயற்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கல்வி வடிவமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
கல்வி தத்துவங்களின் பிறிதோர் பரிமாணம் முன்பள்ளி கல்வி சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்ட தத்துவங்கள் ஆகும்.
முன்பள்ளிகள் என்பன பிள்ளைகளின் உடல் இயக்கத் திறன்கள், உளச் செயற்பாடுகள் மற்றும் கலைத்திட்ட வளர்ச்சி என்பவற்றுடன் தொடர்பு பட்டது. இந்த வகையில் குழந்தைகளுக்கான கல்வி தத்துவங்களை முன்வைத்தவர்களுள் முக்கியமான ஒருவரே மரியா மொண்டசூரி ஆவார். இவரின் கல்வித் தத்துவம் குழந்தைக் கல்வி தொடர்பான முக்கிய கொள்கைகளை வெளிப்படுத்துகிறது.
இவரின் கருத்துப்படி கல்வியானது சந்தோஷமான விளையாட்டுகளின் மூலம் வழங்கப்பட வேண்டும். பிள்ளைகளுக்கு வீட்டில் வழங்கப்படும் ஆரம்பக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் பிள்ளையின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு பாதகம் விளைவிக்க கூடாது. வகுப்பறைகளை பிள்ளைகள் விரும்பக்கூடிய இடமாக மாற்றி அமைக்க வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை இவர் முன் வைத்தார்.
picture source : hindutamil.in
அதேபோல் முன் பள்ளி கல்வி தொடர்பான கருத்துக்களை முன்வைத்தவர்கள் ஜோன் ஹென்றி பெஸ்டலோசி என்பவர் முக்கியமானவர்.
சிறுவர்களுக்கான உளவியல் மயப்பட்ட கல்வி செயற்பாடுகளை முன்மொழிந்த இவரின் கல்வி செயல்முறையில் குடும்பத்தின் முக்கியம் மீள வலியுறுத்தப்படுகிறது.
சிறுவர்களுக்கு கல்வியை வழங்கும் போது கைகளும், அறிவும், உணர்வும் என்ற முப்பொருள்களினதும் முக்கியத்துவத்தை விளக்கியவர் அவற்றுக்கு உரிய முறையிலே பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
பெஸ்டலோசியின் சிறார் கல்வி சிந்தனைகளுல் பின்வருவன முக்கியமானவை.
- குழந்தைக் கல்வியில் பேச்சுக்கு முக்கியத்துவம் வழங்கி பேச்சுக்கு பின்னரே எழுத்து கற்பிக்கப்பட வேண்டும்.
- கற்பிக்கப்படும் பாடம் குழந்தைகளின் உடல், உள, மனவெழுச்சிக்கு பொருந்தக்கூடியதாக அமைய வேண்டும்.
- கற்பித்தல் என்பது முற்றிலும் உளவியல் மயப்பட்டதாக எளிதில் இருந்து படிப்படியாக சிக்கலை நோக்கி செல்லக்கூடியவாறு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
இவ்வாறே ஜான் பிரட்ரிக் கர்பார்ட், பரட்றிக் புரோபல், ஜி.ஸ்ரான்லி ஹோல் போன்ற பலரும் முன் பள்ளி கல்வி சிந்தனைகளை முன் வைத்தனர்.
அதேபோல் கீழைத்தேயவாதிகளின் பார்வையில் கல்வியை நோக்கின் இவர்களது கருத்துப்படி கல்வி என்பதன் இறுதி இலக்கு இரட்சிப்பு ஆகும். ரிக் வேதங்களின் கருத்துப்படி கல்வி என்பது மனிதனை தன்னம்பிக்கை உடையவனாகவும் தன்நல மற்றவனாகவும் மாற்றுகிறது .சுவாமி விவேகானந்தரின் கருத்துப்படி கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே உள்ள பரிபூரணத்தின் வெளிப்பாடு ஆகும். இவ்வாறு கல்வி பற்றிய ஏராளமான தத்துவ கருத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. அனைத்து தத்துவங்களையும் ஆழமாக உற்று நோக்கும் போது அனைத்து தத்துவங்களும் மனித இன மேம்பாட்டை வலியுறுத்தி நிற்பதை அவதானிக்கலாம்.
இதனையும் படியுங்கள்
Whats Your Reaction?






