மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 14 (தருமன் ஆட்சி )
சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

பிராமண வேடம் தாங்கி வந்து துருபதனின் மகளைத்
திருமணம் செய்தது அர்ச்சுனன் என்றும், அவனும் சகோதரர்களும் குந்திதேவியும் இப்போது துருபதனின் அரண்மனையில் சகல வசதிகளோடும் இருக்கிறார்கள் என்றும் விதுரனும் துரோணரும் திருதராட்டினனுக்குச் சொன்னார்கள். அதை முன்பே தூதுவர்கள் மூலம் அறிந்த திருதராட்டினன் மிக்க வேதனை அடைந்திருந்தான். ஒன்றுமற்றவர்களாக இருந்த பாண்டவர்கள் , திரௌபதியைத் திருமணம் செய்ததன் மூலம் படைப்பலம் பெற்று விட்டார்கள் என நினைத்தான்.
"அரசே! தருமனுக்கு வயது வந்து விட்டது அதனால் அவர்களுக்குச் சேர வேண்டிய அரசுரிமையைக் கொடுத்தல் வேண்டும். அதனால் பாஞ்சால நாட்டில் தங்கியிருக்கும் தருமனை முறைப்படி அழைத்து முடிசூட்டவேண்டும்" என்றான் விதுரன். அக்கருத்தைத் துரோணரும் வலியுறுத்தினார். அதனால் திருதராட்டினனால் மறுக்கமுடியவில்லை. சரி என்று ஒப்புக்கொண்ட திருதராட்டினன் துருபதனிடஞ் சென்று நிலைமையை எடுத்துக் கூறிப் பாண்டவர்களை அழைத்து வருமாறு விதுரனனைப் பணித்தான்.
அதற்காகக் காத்திருந்த விதுரன் பாஞ்சால நாட்டுக்குச் சென்று துருபதனுக்கு நிலைமையை எடுத்துக்கூறிப் பாண்டவர்களுக்குத் தீமை ஏற்படவிடமாட்டேன் என்று உறுதியளித்துப் பாண்டவர்களை அத்தினாபுரத்திற்கு அழைத்து வந்தான்.
தருமனுக்கு முடி சூட்டு விழா நடைபெறப் போவதை அறிந்தமக்கள் மகிழ்ந்தனர். முனிவர்களும், பிராமணர்களும் ஆசீர்வதித்தனர்.
பட்டாபிஷேகம் முடிவடைந்ததும் தருமன் திருதராட்டினனை வணங்கினான். அவனை ஆசீர் வதித்த திருதராட்டினன்; "மகனே, எனது தம்பியான பாண்டு நல்ல முறையில் ஆட்சி செய்தான். அதுபோல நீயும் நல்லாட்சி செய்தல் வேண்டும். நீங்கள் காண்டவப்பிரஸ்தத்திற்குப் சென்று உங்கள் ராஜதானியை அமைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய முக்னோர்களாக புரூரவசுவும் நகுசனும் யாயாதியும் அந்த நகரைத் தான் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். நமது வம்சத்தின் தலைநகர் அது தான். எனவே அங்கு சென்று நல்லாட்சி செய்வாயாக" என்றான்.
பாண்டவர்கள் பாழடைந்து போயிருந்த காண்டவப் பிரதேசத்தைத் திருத்தி மேலும் புதிய மாளிகைகளையும் பாது காப்பு அரண்களையும் கட்டி, இந்திரப் பிரஸ்தம் எனப்பெயரிட்டு அறநெறி தவறாது ஆண்டு வந்தனர். அதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Whats Your Reaction?






