மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 10 (திருதராட்டினன் மனமாற்றம்)
சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

வீமனுடைய பலத்தையும் அர்ச்சுனனுடைய வில்வித்தையும் கண்டு துரியோதனன் கவலைப்பட்டான். அவன் எப்படியும் பாண்டவர்களை அழித்தே தீர வேண்டும் என்று எண்ணினான். அதற்கு அவனது தாய்மாமனான சகுனி ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தான்.
பாண்டவர்கள் உரிய வயதை அடைந்தனர். அதனால் வீரனான தருமனுக்கே முடிசூட வேண்டும் என்று நாட்டிலுள்ள பெரியவர்களும் மக்களும் விரும்பினர். இதனால் துரியோதனன் கடுங்கோபம் கொண்டான்.
துரியோதனன் சகுனியிடம் ஆலோசனை பெற்றுத் தன் தந்தையிடம் சென்று சொன்னான்; தந்தையே, தங்களுக்குக் கண்தெரியாததால் பாண்டுவுக்கு முடிசூட்டப்பட்டது. இப்பொழுது பாண்டு இறந்தமையால் பீஷ்மர் நாட்டைப் பராமரித்து வருகிறார். நாட்டிலுள்ள பெரியவர்களும் மக்களும் தருமனுக்கே அடுத்து முடி சூட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி முடி சூட்டினால் நாம் எமக்குரிய நாட்டை இழந்து விடுவோம். தருமனுக்னுகுப் பின் அவனது புத்திரர்களுக்கே முடிசூட்டப்படும். அதன்பின் நாம் என்ன செய்வது?" என்று அழுதான்.
திருதராட்டினனுக்குத் தனது மகன் சொல்வது நியாயம் எனப்பட்டது. அத்துடன் துரியோதனன் நாட்டிலுள்ள சில பெரியவர்களுக்குத் திரவியங்களை அள்ளிக் கொடுத்துத் தன்பக்கம் சேர்த்திருந்தான் அவர்கள் துரியோதனனுக்குக்காகத் திருதராட்டினனுடன் கதைத்தனர். திருதராட்டினனுடைய மனம் சிறிது சிறிதாக மாறுபட்டது.
திருதராட்டினன் தருமனை அழைத்து மிகவும் அன்புள்ளவனைப்போலச் சொன்னான்; மகனே. வாரணாவதம் என்ற நகரத்தில் பெருமானுக்குப் பெரும் திருவிழா நடக்கப்போகிறது. நீங்கள் ஐவரும் அங்கு சென்று சிவனைத் தரிசித்துக்கொண்டு வாருங்கள் அத்துடன் அந் நகர மக்கள் உங்களைக் காணவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அதனால் அவர்களையும் சந்தித்து மகிழ்ச்சிப் படுத்திக்கொண்டு வாருங்கள்"
அதற்கு உடன்பட்ட தருமன் பெரியவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு தனது சகோதரர்களையும் தாயையும் அழைத்துக்கொண்டு வாரணாவதம் சென்றான்.
இதை அறிந்த துரியோதனனும் சகுனியும் கர்ணனும் இரகசியமாகச் சதித்திட்டம் தீட்டினர். அதன்படி புரோசனன் என்பவன் வாரணா வதத்திற்குச் சென்று குங்கிலியம், மெழுகு, நெய், கொழுப்பு, அரக்கு ஆகிய எரியும் பொருட்களோடு மண்ணையும் கலந்து அழகான ஒரு மாளிகையைக் கட்டி முடித்தான். அதில் பாண்டவர்களைத் தங்க வைத்து அதற்குத் தீ வைக்கத் துரியோதனன் திட்டமிட்டான்.
பாகம் 11 பதிவேற்றப்பட்டுள்ளது
Click Here -->> மகாபாரதம் பாகம் 11 அரக்கு மாளிகை
பின்குறிப்பு:- சிறுவர்கள் வாசித்து பயன்பெறும் வகையில் மிகவும் எளிய வடிவில் முழு மகாபாரதமும் சுருக்கப்பட்டு இங்கே எழுதப்படுகிறது.
உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
Whats Your Reaction?






