What is AI artificial intelligence? செயற்கை நுண்மதி(AI) என்றால் என்ன?
செயற்கை நுண்ணறிவு என்பது இக்கணினி அறிவியலின் வளர்ச்சியின் ஒரு கட்டம் ஆகும்.

செயற்கை நுண்மதி(AI) என்றால் என்ன?
இன்று உலகம் நவீன தொழிநுட்பங்களின் பக்கம் வீறு நடை போட்டுக்கொண்டு விரைந்த வண்ணம் உள்ளது. நொடிக்கு நொடி நவீன தொழிநுட்பத்தின் வளர்ச்சி உச்சத்தை எட்டிய வண்ணம் காணப்படுகின்றது. இந்த வரிசையில் தொழிநுட்ப உலகம் கண்ட ஒரு பெரு வெற்றியே செயற்கை நுண்மதி என்ற எண்ணக் கருவாகும்.
இன்றைய நவீன உலகம் கணினியை அடிப்படையாகக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது எனலாம். இதன் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு என்பது இக்கணினி அறிவியலின் வளர்ச்சியின் ஒரு கட்டம் ஆகும்.
நுண்ணறிவு-- பதவிளக்கம்
நுண்மதி அல்லது நுண்ணறிவு என்பது காரண காரியம் காணுதல் ,பிரச்சினை தீர்த்தல் ,மற்றும் புதிய திறன்களை கற்பதற்கான உள ஆற்றல் எனலாம். இது புலனுணர்வு,கவனம், நினைவாற்றல், மொழியாற்றல் மற்றும் திட்டமிடல் ஆகிய பல்வேறு திறன்களுடன் தொடர்பு பட்ட அறிவாற்றல் செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான செயன்முறை ஆகும்( கொலோம்,2010).
அறிவைப் பெறுதல், புரிந்து கொள்ளுதல் மற்றும் பயன்படுத்துதலே நுண்ணறிவு என நிபுணர்கள் நுண்ணறிவை வரையறுக்கின்றனர்.
அதேபோல் சிந்தனை மற்றும் பகுத்தறிவை ஏற்படுத்தும் ஆற்றலே நுண்ணறிவு என பிரிதொரு சாரார் விளக்கம் அளிக்கின்றனர். இந்த நுண்ணறிவு என்பது இயற்கையாக அல்லது செயற்கையாக இருக்கலாம் என ஆலன் நியூவெல் என்பவர் "அறிவாற்றலின் ஒருங்கிணைந்த கோட்பாடு" என்ற எண்ணக் கருவின் கீழ் நுண்ணறிவுக்கு விளக்கம் அளிக்கிறார்.
ஃபேர்டசன்( 2004) என்பவர் நுண்ணறிவை பின்வருமாறு வரையறுக்கிறார். அதாவது உயிரியல் நுண்ணறிவு என்பது மனதால் கட்டுப்படுத்தப்படும் ஐந்து புலன்களை அடிப்படையாகக் கொண்டது. அதேவேளை இயந்திர நுண்ணறிவு என்பது இயந்திர நரம்பியல் வலையமைப்பினால் கடத்தப்படும் செயற்கை உணரிகளை அடிப்படையாகக் கொண்டது. அதாவது இயற்கை உயிரினங்கள் தங்கள் புலன்கள் மூலம் நுண்ணறிவை சேகரிக்கின்றன. அதே வேளை இயந்திர அல்லது செயற்கை நுண்ணறிவு இயற்கையை உருவகப்படுத்துவதன் மூலம் இயந்திரங்களால் சேகரிக்கப்படுகின்றது. இது செயற்பாட்டிற்கான அறிவையும், தகவலையும் சேகரித்தல், தொகுத்தல், விளக்குதல் மற்றும் பரப்புதல் ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்கியது.
செயற்கை நுண்ணறிவு- விளக்கம்
செயற்கை நுண்ணறிவு என்பது வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக விவரிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு என்ற பதத்திற்கு முதன்முதலாக விளக்கம் அளித்தவர் ஜோன் மெக்கார்த்தி என்பவர் ஆவார். செயற்கை நுண்ணறிவு என்ற பதத்தினை முதன்முதலாக
ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறை 1956 ஆம் ஆண்டில் உருவாக்கியது. (கிரேவியர் 1993, ப. 50)
மனிதர்களின் பிரதான அம்சமான நுண்ணறிவு என்பதை ஒரு இயந்திரத்தால் உருவாக்கப்படக் கூடிய அளவிற்கு துல்லியமாக விவரிக்க முடியும் என்ற கூற்றின் அடிப்படையில் இந்த எண்ணக்கரு உருவாக்கப்பட்டுள்ளது. (மெக்கார்த்தி, 1955)
பிற்காலத்தில் செயற்கை நுண்ணறிவு என்பதை இயற்கையான நிகழ்வாக அன்றி ஒரு செயற்கையான அமைப்பாக வரையறை செய்தது.
ரிச் மற்றும் நைட் (2004) என்போர் இதனை பின்வருமாறு விளக்குகிறார்.
மனிதர்கள் தற்போது சிறப்பாக செய்யும் பணிகளில் சிறப்பாக செயல்படும் செயற்கை அமைப்புகளை உருவாக்க முயற்சித்தல் என செயற்கை நுண்ணறிவுக்கு விளக்கம் அளிக்கிறார்கள்.
இவ்விளக்கங்களுக்கு பிற்பட்ட காலங்களில் செயற்கை நுண்ணறிவு என்பதை வரையறுக்கும் போக்கு மேலும் ஆழமானதாக மாறியது .அதாவது செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களிடம் இருந்து வரும் பாரம்பரிய பதில்களுடன் ஒத்துப்போகும் வகையிலான பதில்களை அளிக்கும் இயந்திரங்களை உருவாக்குவதற்கான யோசனைகளின் ஆய்வு ஆகும் .அதாவது இது சிந்தனை, தீர்ப்பு போன்ற மனித திறன்களை இயந்திரங்களுக்கு கொடுப்பதை குறிக்கும். இத்தகைய இயந்திரங்கள் ஒரு விடயம் தொடர்பிலான விமர்சன மதிப்பீடு மற்றும் தனக்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்களை தேர்ந்தெடுப்பதில் ஈடுபட வேண்டும் .மனித முயற்சியால் உருவாக்கப்பட்ட இவ்வியந்திரங்கள் போலியானவை என்றாலும் வாழ்க்கை, ஆன்மா, உணர்கிறன் என்பவற்றுடன் ஒத்துப்போக வேண்டும். சிக்கல்களைத் தீர்த்தல், நியாயப்படுத்துதல் மற்றும் இயற்கை மொழியை புரிந்து கொள்ளல் போன்ற பணிகளில் இவை ஈடுபட வேண்டும் என்ற அடிப்படையில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது மனிதன் சிந்தித்து செயல்படுவது போன்று பல்வேறு கணினிச் செய்நிரல்களை உருவாக்கி அவற்றை கணினியில் உள்ளீடு செய்து அதன் வழியாக ஒரு இயந்திரத்தை சிந்தித்து செயல்பட வைக்கும் முறையே செயற்கை நுண்ணறிவு என இதற்கு இலகுவாக விளக்கம் அளிக்கலாம்.
இந்த செயற்கை நுண்ணறிவு என்பது திட்டமிடல், பிரச்சினைக்கு தீர்வு காணல், பன்முகங்களில் சிந்தித்தல், எண்ணங்களை கற்றுக் கொள்ளுதல், கற்றுக் கொண்டதை செயல்படுத்தல் போன்ற நுண்ணறிவுத் திறன்களை உள்ளடக்கி இருக்கும்.
இன்றைய நவீன ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவின் பல பிரிவுகளைக் கண்டறிந்துள்ளனர்.
1 .தர்க்க ரீதியான செயற்கை நுண்ணறிவு
தன்னிடம் காணப்படும் காரணிகளை வைத்துக்கொண்டு தர்க்க ரீதியாக ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண விளைவதை இது குறிக்கும் .கணித ரீதியான தர்க்க முடிவுகளை எடுப்பது இதில் பிரதானமானது. உதாரணம் ஒரு இலக்கம் இன்னொரு இலக்கத்தை விட பெரிதா சிறிதா என ஆய்வு செய்தல் .
2. தேடல் முறைமை
செயற்கை நுண்ணறிவின் ஒரு முக்கிய அங்கமாக இத்தேடல் முறைமை காணப்படுகின்றது. அதாவது ஒரு குறித்த இலக்கை அடைவதற்கு அளவுக்கதிகமான சாத்தியக் கூறுகளை தேடி அதிலிருந்து ஒரு முடிவை எடுப்பதை இது குறிக்கும். உதாரணம் செஸ் விளையாட்டு களுக்காக உருவாக்கப்படும் ப்ரோக்ராம்கள் நாம் வைக்கும் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் அடுத்ததாக எப்படியெல்லாம் அதுக்கு காயை நகர்த்தினால் அதன் கை ஓங்கும் என்று தேடித்தேடி அதற்கு ஏற்ப தனது காயை நகர்த்தும்.
3. தரவு சித்தரிப்பு
ஒரு குறித்த முறைமையை பின்பற்றி தகவல்களை ஒரு தர்க்க ரீதியான முறையில் சேமித்து வைப்பதை இது குறிக்கும். இவ்வாறு சேமித்து வைக்க முடிந்தால்த்தான் தர்க்கரீதியான முடிவுகளை எடுப்பதற்கோ ,தேடலை வினைத்திறனாக மேற்கொள்ளவோ முடியும் .தரவுச் சித்தரிப்பின் துல்லியத் தன்மை அதிகரிக்க அதிகரிக்க செயற்கை நுண்மதியின் திறனும் அதிகரிக்கும்.
4. அனுமானிக்கும் திறன்
செயற்கை நுண்ணறிவின் பிரிதொரு முக்கிய விடயமே அனுமானிக்கும் திறனாகும். அதாவது சில உண்மைகளில் இருந்தே வேறு சில உண்மைகளை எம்மால் ஊகிக்க முடியும். உதாரணம் ஒரு பறவை ஓசை எழுப்புகிறது என்றால் அந்தப் பறவை பறக்கும் என எம்மால் அனுமானிக்க முடியும். ஆனால் ஒளியெழுப்புவது ஒரு பென்குயின் என்றால் அந்தப் பறவை பறக்காது என்ற முடிவிற்கு வரலாம். இங்கு பறவை, பறவையின் ஓசை, பறவையின் இயல்புகள் என்பன மிகச் சரியாக ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டு தரவு சித்தரிப்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் அனுமானிப்புத்திறன் சரியாக இயங்கும்.
5. பொது அறிவு மற்றும் பகுத்தறிவு
செயற்கை நுண்ணறிவைப் பொருத்தவரை இன்னும் ஆராய்ச்சியில் பின்தங்கி இருக்கும் இரு துறைகளே இதுவாகும். அதாவது மனிதனுக்கு இருப்பது போன்ற பகுத்தறிவை இயந்திரங்களுக்கு உருவாக்குவதில் மனித இனம் வெற்றி பெறவில்லை என்பதே கசப்பான உண்மை ஆகும். இதன் பொருட்டு ஆய்வாளர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். உதாரணம் CYC திட்டம். இது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தரவுச் சித்தரிப்புகளை தன்னுள் கொண்டுள்ளது. எல்லாமே மனிதனால் உள்ளீடு செய்யப்பட்டவை ஆகும். இந்த தரவுகளை வைத்து அது சில முடிவுகளை எடுக்க வல்லது. ஆனால் அந்த தரவுகளுக்கு அப்பால் இருக்கும் பொது விடயங்களை அதனால் பகுத்தறிய முடியாது. இதுவே இதன் பலவீனம் ஆகும்.
செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் .
செயற்கை நுண்ணறிவானது தவறுகள் மற்றும் பிழைகளைக் குறைக்க உதவுகிறது. காரணம் இவை மிகவும் துல்லியமான அமைப்பில் செயற்படும் தன்மை வாய்ந்தது ஆகும். அதேபோல் இவை களைப்படைவது இல்லை .இவற்றின் நிரலாக்கத்தின் காரணமாக அவற்றிற்கு அதிக மற்றும் கடின உழைப்பை பொறுப்புடன் செய்ய முடியும். மேலும் இச்செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு காரணமாக மனித வளங்களின் தேவை மிச்சப்படுத்தப்படுகிறது.
காரணம் இன்று உலகளாவிய ரீதியில் டிஜிட்டல் உதவியாளர்களாக செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. அதே போல் செயற்கை நுண்ணறிவைப் பிரயோகிக்கும் ரோபோக்கள் முடிவுகளை எடுக்கும் போது உணர்ச்சி பூர்வமாக அன்றி தர்க்கரீதியான சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது .மேலும் இச்செயற்கை நுண்ணறிவின் துணையுடன் வேலைகளைச் சலிப்பின்றி மீண்டும் மீண்டும் செய்ய முடிகிறது .இயற்கையில் மனிதர்கள் ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்யும்போது சலிப்படைவர். இத்தகைய பணிகளை ரோபோக்கள் எந்தச் சலிப்பும் இன்றி எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்து முடிக்கின்றன. ரோபோக்களைப் பொறுத்தவரை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய முடிகின்றமை இதன் ஒரு நன்மை ஆகும். அதேபோல் மருத்துவத்துறை, விண்வெளிதுறை ஆராய்ச்சிகள் போன்ற துறைகளிலும் இன்று செயற்கை நுண்ணறிவின் பரந்த பயன்பாட்டைக் காணலாம்.
மருத்துவத்துறையை பொறுத்தவரை செயற்கை நுண்ணறிவின் துணையுடன் இன்று நோய்களை இனம் காணல் ,சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளல் போன்ற பல பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் சிமியுலேட்டர்கள் மூளையின் செயற்பாடுகளை உருவகப்படுத்தி நரம்பியல் கோளாறுகளை கண்டறிய உதவுகிறது.
அதேபோல் விண்வெளித் துறையை எடுத்துக் கொண்டால் முற்றுமுழுதாக இது செயற்கை நுண்ணறிவின் ஆளுகைக்கு உட்பட்ட ஒன்றாக இன்று மாறியுள்ளது எனலாம். அண்ட சராசரங்களினதும் எல்லைகளைக் கடந்து இங்கு அனைத்தும் துல்லியமாக எம்மை வந்தடைகிறது என்றால் அது இந்த செயற்கை நுண்ணறிவின் துணையே என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது .
செயற்கை நுண்மதியின்தீமைகள்.
செயற்கை நுண்ணறிவின் மூலம் இன்று உலகம் பாரிய பயன்களை அடைந்து வருகின்ற போதும் இதிலும் ஒரு சில பாதகங்கள் காணப்படவே செய்கின்றன.
அதாவது செயற்கை நுண்ணறிவு பிரயோகிப்பதற்கு பயன்படும் உபகரணங்களைப் பொறுத்தவரை அவற்றை உருவாக்குவதற்கு பாரிய அளவிலான நிதித் தேவை காணப்படுகின்றது.
அதேபோல் அவற்றின் பராமரிப்பிற்கும் பெருமளவு பணம் தேவைப்படுகிறது.
மேலும் எவ்வளவுதான் மனித மூளையை ஒத்ததாக இவற்றை செயல்பட வைக்க முனைந்தாலும் இயற்கையாக மனிதனிடம் காணப்படும் பகுத்தறிவை இந்த இயந்திரங்களுக்கு வழங்கி விட முடியாது காரணம் இயந்திரங்களுக்கு எந்த உணர்ச்சிகளும் கிடையாது .அவற்றால் ஏற்கனவே திட்டமிட்ட விடயங்களை மாத்திரமே வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். எனினும் அறிமுகம் இல்லாத சூழ்நிலையை கையாளும் திறன் இவ் இயந்திரங்களுக்கு கிடையாது.
அல்கோரிதங்களை பயன்படுத்தி தொழிற்படும் இயந்திரங்களால் மனிதனது மூளையின் ஆற்றலுடன் போட்டி போட முடியாது என்று ரோஜா் பெண்ரோஸ் போன்ற பல கணித மேதைகள் கூடக் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே செயற்கை நுண்ணறிவு என்பது நாம் எதிர்பார்த்ததை விட வெற்றி பெற்றாலும் அது மனிதனை விஞ்சுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த கட்டுரை மொழியை மாற்ற - ENGLISH