கடைசி முகம் | ஒரு பக்க கதை

பாசமிகு தந்தையின் கடைசி நிமிடங்கள்..

Mar 14, 2023 - 23:10
 0  123
கடைசி முகம் | ஒரு பக்க கதை

இதய ஒலி பட படக்க கைவிரல்களில் கோலம் இட்டிருந்தேன் நான். எல்லோரது உரையாடல்களுக்கும் நடுவே குட்டி வாண்டுகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெண்ணிற திரைச்சேலையின் அலைவுகளிற்கிடையே அரைகுறை நிலவாகத் தெரிந்தாள்.

திரைச்சேலை விலக என் கண்இமை இடையே அவள் முகம். "என்ன ஐயா பிள்ளை வந்ததோ " குரல் கேட்டு கண் விழித்தேன் பக்கத்துக் கட்டில்க்காரன். கண்ணீர் கலந்த புன்னகை மட்டும் பதிலாகிப் போனது. மருந்தும் வைத்தியசாலைக் கட்டிலும் வாழ்க்கையாகிப் போனது. ஆதரிக்க யார் இருக்கான் படைச்சவன் உனைத் தவிர, ஆழ்ந்த மூச்சுடன் உறங்கிப்போனேன்.

 மெல்லிய காற்றின் சில்லென்ற தீண்டலில்  சூடான அவள் மூச்சின் இதம் சேர்க்கும் காலையில் என்னவளோடு ஒரு பயணம். யாழ் தேவியின் ஜன்னல்லோர இருக்கையில் என் குட்டி தேவதையும் அவளும். அவள் மீதான காதலின் அடையாளம். எங்களின் திருமண வாழ்க்கையின் புதிய அத்தியாயம் நிலா.

 "ஆவணி மாத பாடசாலை விடுப்புக்கு குட்டிமாவோட வெளில போகனும்". இந்த தடவை ஏமாத்தவேணாம் கண்டிப்புடன் சொன்னாள் என் கண்ணம்மா.

ஐயா உங்களுக்கு மனிசி பிள்ளையள் இல்லையோ? கையெழுத்து வைக்க வேணும் தியட்டருக்கு எடுக்க. கெதியா வரச் சொல்லுங்கோ நர்ஸ் அம்மா சிடு சிடுத்தாள். ஆஸ்பத்திரிக்கு வந்த நாளில இருந்து பக்கத்துக் கட்டில் பத்மநாதன்ர மகன் தான் படிச்சுகொடுத்த புண்ணியத்துக்கு என்னப் பாத்துக்கொள்றான் .

தகவல் தெரிஞ்சும் என்னைத்தேட யாரும் இல்லை வலிக்கிற உண்மை இது. நான் அரச பள்ளிக்கூடம் ஒன்றின் ஆசிரியர், வரலாறு பாடம் எண்டால் அவ்வளவு விருப்பம் எனக்கு. என்னைச் சுத்தித் திரியிற வண்ணசிட்டு எல்லாம் பார்க்கும்போது நிலா தான் கண்ணுக்குள்ள நிற்பாள்.

பெண் குழந்தை ஒன்று பிறக்கும் போதே அவர்களுடன் நூறு கனவுகளும் பிறந்துவிடுகிறது. என்னோட நிலாவ நல்லா படிக்கவச்சு நான் வரலாறில படிப்பிக்கிற இடத்துக்கு எல்லாம் நேர்ல கூட்டிக்கொண்டு போய் நான் காணாத உலகத்தின் அதிசய பக்கங்கள் எல்லாம் அவள் நினைவுகளால் நிரப்பி அவள் ஆசைக்கொள்ளும் கலைகள் எல்லாம் கற்றுத் தேற வைத்து அவள் விரும்பும் வாழ்க்கை ஒன்றை வாழ வைக்க ஆசை கொண்டேன்.

இப்படித்தான் அந்த புகையிரதப் பயணமும். நிலாவுக்கு எப்பொழுதும் ஆசை மிருகக்காட்சி சாலைக்கு போகவேணும் என்று. அப்பா யானை பார்க்கோணும், அப்பா சிங்கம் பார்க்கோணும் கேட்டுக்கொண்டே இருப்பாள். "ஓம் குட்டிமா போவம்" ஒவ்வொரு தடவையும் இதுவே என் பதிலாக இருந்தது ஆனால் அன்று அது நிஜமானது. சில்லென்ற காற்றின் தீண்டலுடன் அவள் தாயின் அணைப்பின் உள்ளே தன் சிறகை விரிக்கும் ஆசையோடு எல்லாவற்றையும் ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.

நீண்ட நாட்களிற்குப் அவளுடனான இந்தப் பயணம் இருவருக்குமான நெருக்கத்தினை அதிகரிக்கும் என நம்பினேன். கொழும்பு ஸ்டேஷனும் வந்தது 

வெளில இருக்க மரங்கள், புகையிரதத்தின் டடாக் டடாக் சத்தம், அசைந்தாடும் தாலட்டு என அனைத்தையும் ரசித்தபடி தூங்கிவிட்டாள் நிலா. வானுயர்ந்த கட்டிடங்களின் வரவேற்ப்புடன் எங்கள் பயணம் ஆரம்பமானது. நிலாவை சுதா தூக்கிக்கொண்டு வந்தாள். நான் எங்கள் பயணப்பையையும் தூக்கிக்கொண்டு நடக்கலானேன் .

என்னங்க முதல்ல குளிச்சிட்டு குட்டிமாவ சாப்பிட வச்சிட்டு, கொஞ்சமா தூங்கி எந்திரிச்சி கடற்கரைக்கு போய் வருவமா? இல்லடி குட்டிமா ரொம்ப ஆசையா கேட்டுடு இருக்கா மிருககாட்சி சாலைக்கு போவம்னு நாளைக்கு போவமா?  எனக் கேட்டவனிடம் நிலா வந்ததும் நீங்க மாறிட்டீங்க என்னில பாசம் குறைஞ்சுட்டு உங்க செல்ல மகள்ல தான் ரொம்ப பாசம், இப்போ கூட  நிலா கேட்டதுக்காகத் தானே கூட்டிட்டு வந்தீங்க, ஹ்ம்... என்னவோ பண்ணுங்கனு சொல்லி முகத்த திருப்பிக்கிட்டா.

சுதாவும் ஒரு குழந்தை தான் ஆனா எனக்கு எப்போவுமே அவ அம்மாவாகத் தான் இருந்திருக்கா. சுதாவ விட கண்ணம்மானு தான் அவளை அதிகம் கூப்பிடுவன். ஏதோ ஒரு உயிரோட்டம் இருந்தது அந்த பேர்ல, நெருக்கமும் கூட

"கண்ணம்மா நில்லு" கண்ணுக்கு எட்டிய திசை எல்லாம் என் கண்ணம்மாவைத் தேடினேன். இரட்டை குடுமியும் குட்டைப் பாவாடையும் கையில் ஒரு பொம்மையுடன் மம்மி என்று வந்து கட்டிப்பிடித்தாள். பக்கத்துக்கட்டில் பத்மாநாதன்ர பேத்தியாம். அவள்ட மம்மி வேற யாரும் இல்லை பத்மாநாதன்ர மகள் தான். மதிய நேர நோயாளி பார்ப்புக்கு வந்திருக்கீனம். காலைல தான் கொழும்பில நிண்டு வந்தவை கண்ணம்மாவயே பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு பத்மாநாதன் சொன்னான்.

பத்மாநாதனும் நானும் ஒரே ஊர்க்காரர் என்னோட கண்ணம்மாவ கலியாணம் கட்டினப் பிறகு ஊர் மாறி நெடுந்தீவு போயிட்டம். ஒரு சின்ன வீட்டில நானும் அவவும் அது ஒரு சந்தோஷமான வாழ்க்கை. எல்லாம் கண்ணம்மாக்காகத் தான். எனக்கென்று பார்க்கதான் யாரும் இல்லையே அப்போவும் இப்போவும். என்னை நேசித்து எனக்காக வாழ்ந்த ஒருத்தி. அவ தைரியசாலி, அடம்பிடிக்கத் தெரிந்தவள் காதலிக்கவும் தான். தன்னுள்ளே எனை ஈர்த்து எனக்காகத் தனை இழந்து நமக்காக நிலா எனும் தேவதையை கொடுத்தவள்.

இப்படியே விட்டிடா  சரிவராது டாக்டர், யாரும் வாற பாடில்லை நான் அவரது சிறு வயது சினேகிதன் தான் நான் வேணுமென்றால் கையெழுத்துப் போடட்டுமா? பத்மாநாதன் டாக்டர் உடன் பேசிக் கொண்டிருந்தான். இந்த சம்பாசனை காதில் விழாமல் இல்லை இருந்தும் என்ன பயன். வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தம் இறுதி நொடிகளில் தானே புரிகிறது. அவள் வருவாளோ இல்லையோ, என் ஜீவன் நிம்மதியைத் தேடுகிறது. அந்த முகம் சிறிய கண்கள், பிஞ்சு விரல், மென் நிறக் கூந்தல், சிணுங்கல் சிரிப்பு சிதறிக் கிடக்கிறது என் மனக் கண்ணில். இந்த விம்பச் சிதறலுக்கு உயிர் கொடுத்தவழும் அவளே, என் கண்ணம்மா.

 அன்று திரைச்சேலைகளின் அலைவின் உள்ளே முழுமதி அவள் எனக்கென்று அவளிடம் பேச யாரும் இல்லை எனக்கும் சேர்த்து அவளே பேசினாள். நிரந்தர நேசிப்புக்கு ஏங்கிக் கிடந்த என்னைச் சரணாகதி அடையச்  செய்தவள். வீட்டின் ஒரே செல்ல மகள், தானக்குக் கிடைத்த அத்தனை காதலையும் எனக்குக் கொடுத்தவள்.

 கண்ணம்மா என் காதல் மனைவி. டெக்னிக் காலேஜ் இல் ஆசிரியர் பயிற்சியின் போது அவளை சந்தித்தேன். அவளின் பொதுவான அக்கறை எனக்குள் காதலாக மலர்ந்தது. அவள் மீதான என் காதலே அவளை என்னிடம் கொண்டு சேர்த்தது. எனக்கென்று யாரும் இல்லை ஏதோ பரம்பரை வீடாம் அது மட்டும் எனக்கென்று உள்ள சொத்து அதோட இந்த படிப்பும்.

 எல்லாம் எங்கட ஊர் பாதர் செய்த உதவி அவரும் நான் வேலை ஆக்குறதுக்குள்ள வீட்டுப் பத்திரத்த குடுத்துட்டு இயேசுட்ட போய்ட்டார். என்னோட தனித்த உலகத்துல எனக்குனு ஒரு குடும்பமா வந்தவள் கண்ணம்மா. அவளோட அம்மா அப்பாக்கு விருப்பம் இல்ல அவளோ ஒரே பொண்ணு நானோ ஒட்டு உறவு ஏதும் இல்லாத ஒருத்தன் இருந்தும் அவள் என்மேல் கொண்ட காதலுக்காகவும் அவள் கொண்ட பிடிவாதத்தினாலயும் எங்களோட காதல் திருமணத்தில் முடிந்தது.

அதுக்கு பிறகு தான் நெடுந்தீவில என்னோட வாழ்க்கை ஆரம்பிச்சுது. எல்லாம் கண்ணம்மாவின் முடிவு தான்.

 கலியாணம் முடிஞ்ச கொஞ்ச நாளில அம்மா அவரிட வீடு நெடுந்தீவில ரெண்டு பேரும் அங்க இருக்கலாம்னு நினைக்கிறம் உங்களுக்கும் சிரமம் தானே நீங்க விரும்பாத என்னோட வாழ்க்கையை தினமும் பார்க்கிறது என்று சொல்லிட்டு நம்ம  வீட்டுக்கு போவம்னு உரிமையாக் கேட்டா.

அத்தைக்கும் மாமாக்கும் கொஞ்சமும் விருப்பம் இல்லை எங்களோட திருமணம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவன் ஒண்டுமில்லாதவன், ஒரு ஓட்டை வீடு அதை ஒரு பரம்பரை வீடு எண்டு சொல்லிக்கொண்டு இங்க வந்து தங்கிட்டான் என்ர பொண்ணை மயக்கிட்டான் என்று ஒரே புலம்பல். என்னால் என்ன செய்ய முடியும் எனக்குத்தான் ஒட்டும் இல்ல உறவும் இல்லை இருப்பவளையும் பிரித்துக்கொண்டு போவது எந்த விதத்தில் நியாயம். ஆனால் அவளோ விடாப்பிட்டியாக இருந்தாள்.

முடிந்த அளவு விரைவாக வீடடைத் திருத்தி என்னால் முடிந்த வசதிகள் எல்லாம் செய்து என் கண்ணம்மாவை கூடிச்சென்று விட்டேன் அவளின் ஆசைப்படி.

நடந்ததெல்லாம் நினைத்துப் பார்த்தப்படி கடற்கரையில் அமர்ந்திருந்தேன். கண்ணம்மா நிலாவுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒப்பனை அற்ற காதல் அவளுடையது. என்னைத் தவிர எதையும் கேட்டதில்லை அவள். என்னங்க போவமா நேரமாச்சு காலைல சீக்கிரம் எந்திரிக்கணும் நம்ம குட்டிமா ஓட சூ  க்கு போகணும் எல்லோ என்று கையை நீட்டினாள்.

அவளின் கையை பிடித்த படி எழும்பினேன், அவளின் முகத்தைப் பார்த்து நெற்றியில் முத்தமிட்டேன் மீண்டும் சிலிர்த்தது தேகம் அவள் மீதான காதலால். சரி நிலா எங்க என்று கேட்டடேன் அவள் விளையாடின இடத்தில் பார்த்தால் நிலாவக் காணோம்.

 நிலா நிலா நீ எங்க இருக்க நிலா, சார் என்ன சார் என்னாச்சு அவன் உசுப்பின உசுப்பில் சுய நினைவுக்கு வந்தேன் நான். இன்னும் அதே கட்டில் தான். சலித்துப் போனேன்.

டாக்டர் வந்தார் இனியும் உங்கள வச்சிருக்க ஏலாது சார் அவங்கள் எப்போ வருவாங்களோ தெரியல இவர் உங்கட நண்பர் தானே உங்களுக்கு ஓம் எண்டால் இவர் கையெழுத்துப் போட்டால் நாளைக்கே ஆப்பரேசன்  செய்யலாம், இல்லை எண்டால் உங்கட உயிருக்கு ஆபத்து. அந்த முகத்தினைப் பார்க்காமல் இறக்கும் எண்ணம் இல்லை, இறந்தால் என் உயிர் இறைவனைச் சேராது, ஒப்புக்கொண்டேன்.

இரவின் மடியில் உறங்காமல் உறங்கிப்போனேன். என்னங்க, நிலாவ எங்கயும் காணமே என்ன பண்றது பதறினாள் சுதா, அதோ அதோ நிலா கத்தியபடி ஓடினாள் சுதா நானும் தொடர்ந்து ஓடினேன் வாகனங்கள் நிறைந்த தெருவில் நிலா குறுக்கே போக அவளைக் காக்கும் முயற்சியில் வென்று தன் உயிரைத் தோற்றுவிட்டாள் கண்ணம்மா.

நொடி நேர இயக்கத்தில் தலைகீழாய்ப் போனது என் உலகம். இறுதி நொடியில் அவள் காதல் என் கண்ணோரம் மறைந்து போனது. நிலாவின் கண் முன்னே நடந்த நிகழ்வு அவளை பெரிதும் பதித்திருந்தது. சுதாவின் பெற்றோருக்கு என் மீதிருந்த விருப்பமின்மை வெறுப்பாக மாறிப்போனது.

கண்ணம்மாவின் இழப்பு என் அன்றாடத்தை நரகமாக்கியது. நான் நிலைகுலைந்திருக்கும் நிலையில் நிலா எங்களுடன் இருப்பது தான் நல்லது என்று கூறி நிலாவையும் பிரித்துக் கொண்டார்கள் என்னிடமிருந்து.

இனி என் வாழ்க்கை நிலாவுக்கானது என்று அவளைத் தேடிச் சென்றேன் காட்ட மறுத்துவிட்டார்கள் அவளின் அத்தையோடு வெளிநாடு அனுப்பிவிட்டார்களாம். நாதி அற்ற நான் எங்கு போவேன் முடிந்த வரை கெஞ்சி விட்டேன் எனக்கும் கண்ணம்மாவுக்குமான வாழ்க்கையின் அடையாளம் நிலா, எங்கள் வாழ்க்கையின் அர்த்தமே அவள் தானே. அவளுடன் பேச மட்டும் அனுமதித்தார்கள்.

 அருகே இருந்து ஆறுதல் கூறி, வழிநடத்தவேண்டிய நானே தொலைவில் நிற்கும் வெளி ஆளாய்ப் போனேன். இன்று வரை இருக்கும் ஆசை எல்லாம் நிலாவைப் பார்ப்பது தான்.

ஐயா எழும்புங்கோ இந்த மருந்த போட்டு கொஞ்சம் தண்ணி குடியுங்கோ ஒண்ணும் சாப்பிட வேணாம் இன்னும் ஒரு மணித்தியாலத்தில உங்களுக்கு ஒப்பரேஷன் நர்ஸ் அம்மா சொல்லிவிட்டு நாகர்ந்தாள். பத்மாநாதன் என் கையைப் பற்றியபடி எல்லாம் சரியாகும் என்று சைகை செய்தான்.

நேரம் கடந்தது மயக்க ஊசி போட்டு ஆபரேஷன் தியேட்டர் உள்ளே அழைத்துச் செல்ல ஆயத்தமானார்கள். "அப்பா.." அரை மயக்கத்திலும் உயிரைத் துளைக்கும் குரல் மூடுகின்ற கண்களையும் இழுத்து நிறுத்தினேன் அதே முகம் என் கண்ணம்மா இப்படித்தான் இருந்திருப்பாள் அவள் சிறு வயதில், அவள் கைகளைப் பற்ற முயல்கிறேன்.

 அந்த முகம் நான் ஏங்கிய என் வாழ்நாளின் கடைசி முகம் என் கண்ணிமைக்குள்ளே சிறையிட்டுக் கொண்டேன்.கண் இமை மூடிக்கொண்டது. இனி வாழ்வதும் உயிர் போவதும் இறைவன் கைகளிலே.


நன்றி :- சு. கிருஷிகா

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow