தங்க மீன்கள் | ஒரு பக்க கதை
சிறு கதை

நான் பாரதி எனக்கு மனிதர்களின் நடத்தைகளை ரசிக்க பிடிக்கும். பாதையில் நடந்து செல்லும் தூரங்களில் கடந்து செல்லும் மனிதர்களை, ஐஸ்கீரிம் கடைதனில் அப்பாக்களிடம் முரண்டுப்பிடிக்கும் மழலைகளை, பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருக்கும் நேரத்தில் என்னை கடந்து செல்லும் மனிதர்களின் முகத்தில் தெரியும் ஏக்கங்களை, செல்லச்சண்டையிடும் காதலர்களை தள்ளாடும் வயதில் இறுக கரம் பற்றி நடக்கும் கணவனை, மனைவியை இப்படி மனிதர்களை ரசிக்கப்பிடிக்கும் அதனாலேயோ என்னவோ எல்லா மனிதர்களும் நல்லவர்கள் அவர்களின் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவர்களின் விம்பத்தை நல்லவர்கள் கெட்டவர்கள் என தீர்மானிக்கச்செய்கிறது என்பதை நான் அதீதமாக நம்புகிறேன். அதேபோன்றதொரு நாளில் என் எண்ணங்கள் மனிதர்களை கற்பிதம் செய்து கொண்டிருக்கையில் அவள் எனை நோக்கி வருகிறாள்.
வெண்பா இவள் அத்தனை நிறமானவளெல்லாம் இல்லை. நிறம் அவள் அழகை தீர்மானிக்கவும் இல்லை. அவள் அணிந்திருந்த கருப்பு நிற சுடிதார் அவள் மாநிறத்தை இன்னும் மெருகேற்றியது. இடை வரை நீண்டிருந்த கூந்தல் நீண்ட மூக்குஇ அகன்ற நெற்றியில் கொஞ்சம் பெரிய கருத்த பொட்டுடன் குங்குமம் மாஸ்க் அணிந்திருந்தபடியால் அவள் முகம் அவ்வளவு தான் தெரிந்தது. விரல்கள் பற்றியிருந்த வெள்ளிநிற மோதிரங்களும்இ கழுத்தை அலங்கரித்த உருத்திராட்ச்சமும் அவள் நிச்சயம் உலக அற்பங்களின் மீது பற்றற்றவளாய் இருப்பாள் என என் மனம் அவளை வரைந்து கொண்டிருந்தது. இது வரை கடந்து சென்ற மனிதர்களை கடந்தவர்களாய் அதே இடத்தில் விட்டு செல்ல அவளை மட்டும் பின்தொடர வேண்டும் என்று கால்கள் தானாக அவள் பின்னே போக இந்த கொரோனா காலத்தில் எல்லா பொருட்களுக்கும் விலை என்னவோ சுட்டெரிக்கும் சூரியன் தான். அதற்குள் வளர்க்கும் அந்த தங்க நிற மீன்களுக்கு மட்டும் விலை குறைந்தளவிலா இருந்திருக்கப்போகிறது. என்று அவள் கையில் இருந்த பொலித்தீன் பையில் அடைக்கப்பட்ட நீருக்குள் சுற்றி திரிந்த மீன்களையும் பார்த்துக்கொண்டே அவள் பின்னால் நடந்தேன். அவளும் நான் போகவிருந்த அதே பேரூந்தில் தான் ஏறினாள். நடந்து சென்ற அந்த கொஞ்ச தூரத்தில் இவள் மேல் கொஞ்சம் கோபமும் தான். காரணம் அந்த தங்க மீன்கள் சிறிய பொலித்தின் பைக்குள் சுற்றி திரியும் இந்த மீன்கள் அவள் வீட்டிலும் ஒரு சிறிய தொட்டியில் தான் போய் வாழப்போகிறது. அது என் கற்பனைதான் அவள் வீட்டில் எந்த அமைப்பில் அதை வளர்க்கப்போகிறாள் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. இருந்தாலும் அவை வாழும் காலம் முழுக்க அவற்றை ஓரிடத்தில் அடைத்து அவை எப்படியாவது இங்கிருந்து வெளியேறி விடமாட்டோமா என்ற ஏக்கத்துடனேயே சுற்றித்திரியும் மீன்களை அவள் வீட்டின் அழகிற்காகவோ, இல்லை அவளின் மன நிம்மதிக்காகவோ வளர்க்கப்போகிறாள், இருந்தும் இவளை பின்தொடரவே மனம் கூறியது.
பேரூந்துக்குள் அவளுக்காக காத்திருந்தது என்னவோ கடைசி இருக்கை தான் அந்த கடைசி இருக்கைக்கு அவள் கடப்பதற்குள் ஆறு அல்லது ஏழு வயது இருந்திருக்க கூடும் அந்த சிறுமிக்கு வெண்ணிற சீருடையில் கள்ளமற்ற ஒரு வெண்புறாவை போல அகன்ற அழகான தன் முட்டை கண்களுடன் இளஞ்சிவப்பு உதட்டோரம் தன் தண்ணீர் போத்தலின் உறிஞ்சிக்குழாயை வைத்துக்கொண்டு அந்த குட்டி சிறுமி வெண்பா கையில் இருந்த தங்க நிற மீன்களை தன் அகன்ற விழிகளால் இன்னும் அகற்றி அத்தனை பூரிப்பாய் வெண்பா கையில் இருந்த மீன்களை பார்த்தாள். அவள் மீன்களை ஏக்கத்தோடு பார்க்கிறாள் என்பதை வெண்பாவும் அறிந்திருப்பாள். கனப்பொழுதில் தாண்டி சென்ற மீன்களை மீண்டும் பார்த்து விட மாட்டோமா என அச்சிறுமி வெண்பா அமர்ந்திருந்த பின் இருக்கையை எட்டி எட்டி பார்த்த ஏக்கத்தினை அளந்து கூறிட வார்த்தைகளே இல்லை. அதை வெண்பாவின் மைத்தீட்டிய கண்களும் நோட்டமிட்டுக்கொண்டு தான் இருந்தது.
பேரூந்தும் நகரத்தொடங்கியது. வெண்பாவின் மீதான என் எண்ணம் பற்றியெல்லாம் எனக்கு சொல்லத்தெரியவில்லை. “காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்” என் இரவை கடக்க மட்டுமல்ல அத்தனை பேர் இருந்த அந்த பேரூந்தில் எனக்கும் வெண்பாவுக்குமான தனிமைக்கும் என் ராஜா துணைக்கு வந்து விட்டார். அப்போது அப்படித்தான் தோன்றியது. இசைராஜனின் மெட்டுக்களுக்கு எங்களின் பேரூந்து மட்டும் தாளம் போடாமல் தப்புமா என்ன? நகரத்திலிருந்து ஊருக்கு செல்லும் பாதைக்கு சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது போல அரைவாசிக்குத்ததான் தார் போட்டுத்தர முடிந்தது எங்கள் பிரதிநிதிகளால் பாவம் வாயில்லா பூச்சிகள் என்ன செய்வார்கள். குழிகளுக்குள் விழுந்து விழுந்து குளுங்கி நகர்ந்த பேரூந்துக்குள் அந்த குறும்பு சிறுமியின் மீன்களை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் நகர்வதாய் இல்லை. வெண்பாவை பிடித்திருக்கிறது தான் ஆனால் சிறுமியின் ஏக்கம் அவளுக்கு புரிகிறதா இல்லையா என்ற கோபமும் வருகிறது அவள் மீது. மனம் தான் குரங்காயிற்றே அது அவளுடைய பணத்தில் அவளுக்காய் ஆசையாய் வாங்கியது இருந்தும் குழந்தைக்கு அவள் மீன்களை கொடுக்க வேண்டும் என நான் ஏன் தவிக்கிறேன். ஆனால் மீன்களை அவள் சிறுமிக்கு ஒரு கனம் அருகில் பார்க்க மட்டுமாவது காண்பித்து விட்டாள் என் வெண்பா இந்த பாரதிக்கு கண்;ணம்மா. அவளை திட்டவும் தோன்றுகிறது கொஞ்சவும் தோன்றுகிறது என்ன மானம் கெட்ட மனம் இது.
விதி வலியது என்பார்களே சிறுமியின் ஏக்கம் என் ஆறுபடையானுக்கு கவலையளித்திருக்குமோ என்னவோ சிறுமியின் எதிர்புற இருக்கையில் அமர்ந்திருந்தவரின் நிறுத்தம் வந்தது. அவர் எழுந்ததும் நான் அமர்வதற்காக அந்த இருக்கைக்கு அருகில் செல்ல பின் இருக்கையில் இருந்த வெண்பா சட்டென எழுந்து நீங்க பின்னாடி சீட்ல உக்காருங்க நா இந்த எடத்துல உக்காந்துக்குறே என்றாள். என்ன அற்புதமான குரல் அவளுக்கு வெண்பாவின் குரலை கேட்டுவிட்டோம் என் சந்தோசப்படுவதா இல்லை சிறுமியிடம் மீன்களை கொடுக்கச்சொல்லி வெண்பாவிடம் சொல்வதா ? நான் ஒரு வேளை கேட்டு அவள் முடியாதென மறுத்துவிட்டால் இல்லை ஏதாவது எனை திட்டிவிட்டால் அது கூட வேண்டாம் எனை ஒரு கனம் ஏளனமாய் பார்த்து விட்டால் கூட அத்தனை நேரமாக அவள் மீது நான் கட்டிய அற்புத விம்பம் அனைத்தும் சுக்குநூறாகிவிடுமே. என்ன நடக்கப்போகிறது என்ற குழப்பத்துடனும் வெண்பா ஏன் முன் இருக்கைக்கு வருகிறாள் என்ற கேள்வியுடனும் பின் இருக்கையில் அமர்ந்து வெண்பாவை பார்கிறேன் சிறுமியை பார்க்கிறேன். மீண்டும் வெண்பாவை பார்கிறேன் சிறுமியை பார்கிறேன்.
சிறுமியின் கண்கள் மீன்களை விட்டு நகரவே இல்லை. அந்த ஒரு கனம் வெண்பாவின் அந்த மைத்தீட்டிய கண்கள் சிறுமியை பார்த்து புன்னகைத்தது. அது எவ்வளவு அழகு அதை எப்படி எழுதுவேன.; அதில் இருந்து நான் மீழ்வதற்குள் சட்டென வெண்பா மீன்களை தூக்கி சிறுமியின் கையில் கொடுத்தாள். பேரூந்தில் இருந்த அத்தனை பேருக்கும் அது நெகிழ்ச்சியான விடயம் தான் அத்தனை பேர் முகமும் புன்னகை மாட்டிக்கொண்டது. அது எனக்க எப்படிப்பட்டதோர் மகிழ்ச்சி என்பதை நான் விவரிக்க இன்னும் வார்த்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.
சிறுமி அவள் அந்த பொலித்தீன் பைக்குள் சுற்றித்திரிந்த மீன்களை கண்களை சிமிட்டாது பார்த்துக் கொஞ்சினாள் ஆர்ப்பரித்தாள். மீன்களை போலவே தன் உதடுகளை குவித்து பாவனை செய்தாள். அவள் மழலை நிச்சயம் மீன்களுக்கு புரிந்திருக்கும். அந்த காட்சி பேருந்தில் இருக்கும் அத்தனை பேரையும் லயிக்க செய்தது. சிறுமியை பார்த்து வெண்பாவின் முகம் மலர்ந்து உள்ளத்தில் களித்ததை இவள் கண்கள் முழுதிலும் பார்த்தேன். அவள் கண்களின் கரு விழிக்குள் என் பதின்ம வயதுகளுக்குள் பின் நோக்கி சுழன்றேன். இதே போன்றதொரு பாடசாலை நாட்கள் எனக்கும் அழகாய் வாய்த்திருந்தது. பேரூந்து கட்டணத்திற்கே வழியில்லாது எப்போதாவது கிடைக்கும் பத்து ரூபாவில் பேரூந்து பயணமே கனவாய் இருந்த காலமது. என்னிலும் பெரிய அக்காமார் அண்ணாமார் கொஞசம் வசதியானவர்கள் இப்படி தங்க நிறத்து மீன்களை வாங்கிக்கொண்டு பேரூந்துக்குள் வரும் போது நாம் எப்போது அப்படி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு கொண்டு செல்லுவோம் இவர்கள் கொஞ்சம் தொட்டு பார்க்கவாவது எனக்கு தர மாட்டார்களா என்ன வலியும் ஏக்கமும் என் நிறுத்தம் வரும் வரைக்கும் தொண்டைக்குழிக்குள் அடைக்கும் நிறுத்தம் வந்தும் பேரூந்தை விட்டு இறங்கியது கண்கள் இத்தனை நேரம் படம் பிடித்த தங்க நிறத்து மீன்களை கண்ணீராக வெளியேற்றும்.
மீன்களை வாங்கி வீட்டில் வளர்க்க வேண்டும் என்பது ஒரு பதின்ம வயதுடைய மாணவனாய் எனக்குள்ளும் அப்போது இருந்த ஆசைதான் ஆனால் காலம் தந்த பல சவுக்கடிக்குள் பக்குவப்பட்ட மனத்தினனாய் மீன்களை நான்கு கண்ணாடி சுவற்றுக்குள் அடைத்து அதை பார்த்து எனக்கு ஒரு மன நிம்மதி மகிழ்ச்சி கிடைக்குமென்றால் அப்படி ஒன்று தேவையே இல்லை என்ற முடிவுக்குள் வந்துவிட்டேன்.
சட்டென பேருந்து நிற்க அந்த சிறுமியின் நிறுத்தம் வந்தது. இவள் முகம் முன்பைப் போல் பிரகாசமாய் இல்லை. அவள் பூ போன்ற முகத்தை சோகம் குடி கொண்டது. மீன்களை வெண்பாவிடம் கொடுக்க மாட்டாள் என்பதுதான் பேரூந்தில் இருந்த எல்லோரினதும் எதிர்ப்பார்ப்பு ஆனால் நிறுத்தம் வந்ததும். எழுந்து வெண்பாவின் அருகில் வந்து நின்றாள் வெண்பா அவை பார்த்து இதை நீயே வச்சிக்க போறீயா அப்போ வச்சிக்கோ என்றாள். சிறுமியின் முகம் மீண்டும் ஆயிரம் வண்ண பட்டாம் பூச்சிப்போல பிரகாசமானது. சற்றும் எதிர்பாராமல் மீன்களை வெண்பாவின் கைகளில் கொடுத்து வெண்பாவின் இல்லை என் கண்ணாமாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் ஆமாம் என் கண்ணீருக்கு என் ஏக்கத்துக்கு வருடங்கள் இத்தனை கடந்து மருந்தாகிவிட்டவள் என் கண்ணம்மாவாகத்தானே இருக்க முடியும். ஆம் இந்த பாரதிக்கு அந்த நிகழ்வின் பின் அவள் கண்ணம்மாவாகிப்போனாள். மற்றவர் கண்களுக்கு அது வெறும் சாதாரண நிகழ்வாக கடந்து செல்லும் நிகழ்வாக இருக்கலாம் ஆனால் எனக்கு அது அப்படியானதல்ல. மனிதர்களை ரசிக்கும் எனக்கு இதை வெறுமனே இரசித்து விட்டு அதை அங்கேயே விட்டு வந்து விட மனமில்லை. வெண்பாவுக்கு நன்றி சொல்லலாம் என அவள் பெயரை கேட்பதற்காக எழுந்தேன். அவள் அப்பாவாக இருக்க வேண்டும் அவர் வெண்பா இப்போ நம்ம எறங்கனு என்றார்;. அவள் நிறுத்தம் வந்தது இறங்கி சென்றாள். இப்போதும் என் மனம் கனக்கிறது கண்களில் தேங்கி நிரம்பி வழிந்த கண்ணீர் துளிகள் போதும் மீன்களுக்காக இல்லை. வெண்பா எனும் என் கண்ணாமாவுக்காக.
அவள் குரல் அவள் கண்கள் அவள் நிறம் அவள் பொட்டு அவள் கூந்தல் அவள் விரல் எல்லாமே இரத்தத்தோடு சதையாய் கலந்து விட்டது. நினைவெனும் நகலை வைத்துக்கொண்டு அசல் எனும் அவளை தேடிக்கொண்டிருக்கிறேன். கூடவே அவள் நினைவாக தங்க நிற மீன் ஜோடி ஒன்றையும் வீட்டில் வளர்த்துக்கொண்டு…
நன்றி:- பாலசுப்ரமணியம் ருக்சனா
Whats Your Reaction?






