திருவழிபாட்டில் ஒளி
கிறிஸ்து திருவழிபாடு வழியாகவே தனது மீட்புப்பணியை திருச்சபையிலும் திருச்சபையினுடனும் திருச்சபை வழியாகவும் தொடர்ந்தாற்றுகின்றார். திருவழிபாட்டில் நாம் கடவுளையும் அவருடைய உடனிருப்பையும் முழுமையாகவும் உண்மையாகவும் அறிந்து அனுபவித்து வார்த்தைகளால் வெளிப்படுத்துவதுடன் நின்றுவிடாமல் இறைவனை நாம் நம்பவும் நம்பும்படி வாழவும் அழைக்கின்ற இந்த வழிபாடானது சில சடங்கு முறைகள், சடங்குகள், அடையாளங்கள், இறைவேண்டல், பாடல்கள், வாசகங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும்.

கிறிஸ்துவின் மறை பொருளைச் சிறப்பாகப் பாஸ்கா மறைபொருளில் கொண்டாடுவதே திருவழிபாடாகும். இயேசு கிறிஸ்துவின் குருத்துவ பணியை செயல்படுவத்துவதன் வழியாகவும் திருவழிபாடு அடையாளங்களின் வழியாகவும் மானிட மீட்பை வெளிப்படுத்தி வருகிறது. ஒப்புயர்வற்ற புனித செயலான திருவழிபாடை நோக்கியே திருச்சபையின் செயல்கள் முழுவதும் நாடிச் செல்கிறது. திருச்சபையின் ஆற்றல் அனைத்திற்கும் திருவழிபாடு ஓர் ஊற்றாகவும் காணப்படுகிறது. கிறிஸ்து திருவழிபாடு வழியாகவே தனது மீட்புப்பணியை திருச்சபையிலும் திருச்சபையினுடனும் திருச்சபை வழியாகவும் தொடர்ந்தாற்றுகின்றார். திருவழிபாட்டில் நாம் கடவுளையும் அவருடைய உடனிருப்பையும் முழுமையாகவும் உண்மையாகவும் அறிந்து அனுபவித்து வார்த்தைகளால் வெளிப்படுத்துவதுடன் நின்றுவிடாமல் இறைவனை நாம் நம்பவும் நம்பும்படி வாழவும் அழைக்கின்ற இந்த வழிபாடானது சில சடங்கு முறைகள், சடங்குகள், அடையாளங்கள், இறைவேண்டல், பாடல்கள், வாசகங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும். அந்தவகையில் ஒளி திருவழிபாட்டில் முதன்மை பெறுகிறது. கண்களுக்கு புலப்படும் அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளே ஒளி எனப்படுகிறது. இது ஒளிர்வு, வெளிச்சம் என்று பொருள்படுகிறது. ஒளியும் இருளும் ஒன்றுக்குகொன்று முரணானவை. இருளால் எப்போதும் ஒளியை வெற்றி பெற இயலாது. இருள் பாவத்தையும் இயேசு கிறிஸ்து வழியாக கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதை ஏற்க மறுப்பவர்களையும் குறிக்கிறது. ஒளியான கிறிஸ்து வாழ்வு தரும் கடவுளாகவும், அந்த வாழ்வுக்கு ஒளிதரும் கடவுளாகவும் விளங்குகிறார். எனவே இயேசு கிறிஸ்துவே இவ்வுலகிற்கு ஒளியாகிறார். இத்தகைய ஒளி பற்றி,
- பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டில் ஒளி
- ஒளி பற்றிய இறையியல் கருத்து
- வழிபாட்டில் ஒளி
எனும் தலைப்புக்களில் நோக்கும்போது,
பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டில் ஒளி
உலக படைப்பின் முதற் கட்டத்திலேயே இறைவன் புவி மீது படர்ந்து கிடக்கும் இருளை அகற்றுவதற்கென ஒளியை படைத்தார். தொடக்கத்திலேயே “ஒளி தோன்றுக” (தொ.நூ1:3) எனக் கூறி ஒளியின் மேன்மையை விளக்குகிறார். அந்த ஒளியே அனைத்து உயிர்களும் உயிர் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமாகி அதற்குரிய ஆற்றலை வழங்குகிறது. எனவே ஒளி ஆரம்பத்திலேயே முதன்மை பெறுவதை காணமுடிகிறது. மேலும் எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து வெளியேறிய மக்களுக்கு இறைவன் உடனிருந்ததாக விடுதலைப்பயண நூல் 13:21-22 வரையான பகுதி கூறுகிறது. அதாவது இஸ்ரயேல் மக்களை பகலில் மேகத்தூண் வடிவிலும் இரவில் நெருப்புத் தூண் வடிவிலும் வழிநடத்தினார்; பராமரித்தார்.எம் விசுவாசத்தின் தந்தையான ஆபிரகாமுடன் ஒளி வடிவில் உடன்படிக்கை (தொ.நூ15:17) செய்கிறார். மோசேயின் அழைப்பின் போது எரியும் முட்செடி நடுவே ஒளியாக காட்சியளிக்கிறார்.
இறைவன் ஒளியாக இருக்கிறார் என்பதை திருப்பாடல் ஆசிரியர் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார். “ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு யாருக்கு நான் அஞ்ச வேண்டும்” என தி.பா 27:1ல் குறிப்பிடுகிறார். இங்கு ஒளியான இறைவன் எமக்கு மீட்பு தருகிறார் என்பதையும் ஆண்டவரில் நம்பிக்கை வைத்தோர் எத்தீங்கிற்கும் அஞ்ச தேவையில்லை என்பதை குறிப்பிடுகிறார். தி.பா 78:14ல் “பகலில் மேகத்தினாலும் இரவு முழுவதும் நெருப்பின் ஒளியாலும் அவற்றை வழிநடத்தினார்” என்றும் தி.பா 89:15ல் “ஆண்டவரே உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்” என்றும் கடவுளின் உடனிருப்பை போற்றிப் புகழ்ந்தனர். ஒளியான ஆண்டவர், அந்த ஒளியை அணிந்துள்ளார். அவ்வொளி பேரொளி எனவும் தி.பா 104:2ல் குறிப்பிடுகிறார். ஒளியானவர் தூய்மையின் அடையாளமாகவும் முட்புதர்களைப் போன்ற தீச்செயல்களை சுட்டெரிப்பவராகவும் உள்ளார் என எசா 10:17ல் “இஸ்ரயேலின் ஒளியானவர் நெருப்பாக மாறுவார்; அதன் தூயவர் தீக்கொழுந்தாய் உருவெடுப்பார்” குறிப்பிடுவதுடன் எசா 60:1ல் “எழு!ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது” என்றும் எசா 60:19ல் “ஆண்டவரே இனி உனக்கு முடிவில்லாப் பேரொளி! உன் கடவுளே இனி உனக்கு மேன்மை” என்று வெளிப்படுத்துகிறார். ஆண்டவரின் அரியணைச் சுற்றிலும் நெருப்பும் ஒளியும் சூழ்ந்திருக்க கண்டதாக எசேக்கியேல் கண்ட காட்சி விபரிக்கிறது. இறுதி நாளில் நல்லவர்களையும் தீயவர்களையும் பிரிக்க இறைவன் ஒளி வடிவாக வருவார் என்று எசாயா குறிப்பிடுகிறார். இவ்வாறாக பழைய ஏற்பாட்டுக் கால அறிஞ்ஞர்களும் இறைவாக்கினர்களும் இறைவனை ஒளியோடு ஒப்பிட்டு போற்றியுள்ளனர்.
கடவுள் ஒளியாயிருக்கிறார் அவரது மகனாம் கிறிஸ்துவும் ஒளியாயிருக்கிறார். அவரது வாழ்வு மனிதருக்கு ஒளியாக இருந்தது. ஒளியான அவர் இவ்வுலகில் இருந்தார் என யோவான் குறிப்பிடுகிறார். மீட்பர் ஒளியாக தோன்றுவார் என இறைவாக்கினர் எசாயா உரைத்த இறைவாக்குகள் நிறைவேறியது. “காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்…..” (மத் 4:16) என்ற ஒத்தமை நற்செய்தியினூடு அறியலாம். அன்று எசாயா முன்னறிவித்த வாக்கை சிமியோனின் பாடல் வெளிப்படுத்துகிறது “இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்படும் அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்கு பெருமை” (லூக் 2:32). ஆண்டவர் அறிவித்தபடி யூதருக்கு மட்டுமல்லாமல் பிறவினத்தாருக்கும் ஒளியாக இருந்தார். ஒளியான கிறிஸ்து தனது சொல்லாலும் செயலாலும் தானே உலகின் ஒளி என்பதை வெளிப்படுத்துகிறார், “உலகின் ஒளி நானே” (யோவா 8:12) இருள் சூழ்ந்த உலகில் ஒளியாக வந்தவர் மக்களுக்கு புது நம்பிக்கையும், துயருறுவோருக்கு ஆறுதலையும், நோயாளருக்கு சுகத்தையும், ஒடுக்கப்பட்டவருக்கு விடுதலையையும் கொடுத்தார். தானே ஒளி என்பதை பல இடங்களில் வலியுறுத்திய இயேசு பார்வையற்றவனுக்கு பார்வை அளித்த நிகழ்ச்சியும் அவர் உலகின் ஒளி என்பதை குறித்துக் காட்டுகிறது. “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கின்றீர்கள்” (மத்5:14) என்றும் “உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க” (மத் 5:16) என்றும் கூறுகிறார். இயேசுவின் மகிமையும் மாட்சியும் வெளிப்படும் இயேசுவின் உருமாற்றத்தில் அவரது முகம் கதிரவனைபட போல ஒளி வீசியது, அவரது ஆடைகள் ஒளியை போல் வெண்மையாக இருந்ததாக மத் 17:2ல் குறிப்பிடுகிறார்.
ஒளியான கிறிஸ்து தம் சீடர்களும் ஏழையின் உள்ளத்தோராய் இரக்கப் பண்பு உள்ளவர்களாய் பிறருக்கு உதவுகின்ற வேளையில் உலகிற்கு ஒளியாக விளங்குவார்கள் என்று போதித்தார். தனது சிலுவை மரணத்தின் ஊடாக இருளை வெற்றி கணடு; பாவத்திலிருந்து மீட்டார். ஒளியில் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டினார். ஒளி என்பது ஒன்றே அவ் ஒளி யேசுவேதான்.
ஒளி பற்றிய இறையியல் கருத்து
படைப்பின் தொடக்கத்திலேயே ஒளியைப் படைத்து ஒளியின் மேன்மையை வெளிப்படுத்துகிறார். ஒளியான இறைவன் இவ்வுலகில் இருந்தார். அவராலே இவ்வுலகு உருவானது. ஒளியானவர் மனித உடலேற்று இவ்வுலகிற்கு வந்தார். இயேசு வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியாவார். “நானே உலகின் ஒளி” என்று அறிக்கையிட்டார். ஒளி இருளை தகர்கக் க்கூடியது. இருளை விரட்டும் சக்தி ஒளிக்கு மட்டுமே உண்டு. ஒளியானவர் தன் மரணத்தினூடாக இருளை வென்றார். ஒளி இறைதன்மையுடையது, தூய்மையானது. அதாவது ஒளியின் வடிவில் மோசேக்கு காட்சியளித்த இறைவன் மிதியடிகளை கழற்றி விட்டு வரும்படி கூறுகிறார். வி.ப 3:5 ல் ஒளியின் தூய்மை தன்மை வெளிப்படுகிறது. அதேவேளை மனிதனையும் இறைவனையும் இணைக்கும் பாலமாகவும் காணப்படுகிறது. மேலும் இஸ்ரயேல் மக்களின் அடிமைத்தனத்தின் போது நீதி, நிம்மதி, உரிமை, விடியல், சுகந்திரம் என்பவற்றை தருவதாக ஒளி விளங்கியது. இவ்ஒளி நன்மையையும், நீதியையும், உண்மையையும் விளைவிக்கிறது. விளக்கானது தன்னை உருக்குலைத்து பிறருக்கு ஒளி தருவது போல இயேசு கிறிஸ்து தனது மரணத்தின் மூலம் இவ்வுலகிற்கு ஒளி தந்தார். மரணத்தில் மட்டுமன்றி முன்மாதிரியான வாழ்வாலும் உலகிற்கு ஒளியானார். ஒளி சுயநலமற்று செயலாற்றுவது போல இயேசுவும் பணி செய்தார். ஒளி மீட்பின் அடையாளம், தீர்ப்பின் அடையாளமும் ஆகும்.
வழிபாட்டில் ஒளி
திருவழிபாட்டு நிகழ்வில் ஒளி முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்தவகைளில் அடையாளங்களை வழங்கும் போது, திருவருகைக்காலங்களில், உயிர்ப்புப் பெருவிழா என்று ஒளியின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. மெழுகுதிரி ஏற்றுதல் ஒளி வழிபாட்டின் அடையாளமாகும். திரி ஏற்றுதல் வெளியடையாளமாக இருந்தாலும் அது மனித இதயங்களில் இறைநம்பிக்கையை ஆழப்படுத்துகிறது. வழிபாட்டில் ஒளி வழிபாடு இன்றியமையாதது ஆகும். புனித இரவு வழிபாட்டில் முதற்பகுதியாக காணப்படும் ஒளி வழிபாடானது பாவ இருளை அகற்றுவதை நினைவு கூருகிறது. இங்கு பயன்படும் திரி இயேசுவைக் குறிக்கிறது. அதில் வரையும் சிலுவை உயிர்ப்பின் மகிமையை காட்டுகிறது. பாவம் எனும் இருள் நிறைந்த வாழ்வை களைந்து புதுவாழ்வு எனும் ஒளியை அணிந்து கொள்ள வேண்டும் என்பதை அடையாளப்படுத்த ஒளியேற்றப்படுகிறது. இது உயிர்த்த கிறிஸ்து எம்முடன் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. “அ”கரம், “ன”கரம் எனும் எழுத்துக்களை அதில் பொறித்து முதலும் முடிவும் நானே என்பதை வெளிப்படுத்துகிறது.
இயேசுவின் முதல் வருகையை நினைவு கூர்வதுடன் அவரது 2வது வருகையினை எதிர்பார்க்கும் காலம் திருவருகைக் காலம் என திருச்சபை கற்றுத்தருகிறது. இக்காலத்திலும் ஒளி பயன்படுகிறது. இங்கு 05 மெழுகுதிரிகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் 04 திரிகள் திருவருகைக் காலத்தில் வரும் 04 வார கால உள்ளார்ந்த ஆன்மீகத் தயாரிப்பை சுட்டிக்காட்டுகிறது. உலகின் ஒளியாம் கிறிஸ்துவின் வருகை, புதிய வாழ்வையும், நம்பிக்கையையும் தரும் என்ற எண்ணத்தோடு காத்திருப்பதைக் குறிக்கும். இங்கு 03 ஊதா நிற திரிகளும் மற்றைய ஒன்று றோஸ் அல்லது இளஞ் சிவப்பு நிறமாகும். ஊதா நிறமானது செபம், தவம், தியாகம் ஆகியவற்றுடன் கூடிய ஒறுத்தல் காலத்தை குறிக்கிறது. முதலாம் ஞாயிறு ஊதா நிற திரி ஏற்றப்படுகிறது. இது எதிர்பார்ப்பின் மெழுகுதிரியாகும். இறைவனிடமிருந்து வரும் நம்பிக்கையை எதிர்நோக்குடன் வாழ அழைக்கிறது. 2ம் ஞாயிறும் ஊதா நிற திரி ஏற்றப்படும். இது ஆயத்தப்படுத்தலைக் குறிக்கும். 3ம் ஞாயிறு றோஸ்ஃ இளஞ்சிவப்பு நிற திரி பயன்படும். இது பெருமகிழ்ச்சியின் அடையாளமாகும். கிறிஸ்துவின் வருகை நெருங்கி விட்டது என்பதை நினைவூட்டுகிறது. 4ம் ஞாயிறு ஊதா நிற திரி ஏற்றப்படும். இது அன்பின் திரி ஆகும். 5வதாக வெள்ளை நிற கிறிஸ்து திரி நடுவில் ஏற்றப்படுகின்றது. இது தூய்மையின் அடையாளமாகும். இது கிறிஸ்மஸ் அன்று ஏற்றப்படும். கிறிஸ்துவே உலகின் ஒளி என்பதை பிரசன்னப்படுத்துகிறது. இது விழிப்பாகவும், ஆயத்தமாகவும், இறைவனில் இணைந்திருக்கவும் அழைக்கிறது.
அருளடையாளங்கள் வழங்கும்போதும் ஒளி பயன்படுகிறது. இங்கும் மெழுகுதிரி ஏற்றப்படுகிறது. ஏனெனில் கிறிஸ்துவினால் ஒளி பெற்று ஒளியின் மக்களாக வாழ திரு அவை அழைப்பு விடுக்கின்றது. ஒளியான கிறிஸ்துவை பிரசன்னப்படுத்துவதாக ஏற்றப்பட்ட திரி காணப்படுகிறது. மேலும் உழைப்பின் முதற்கனியை இறைவனுக்கு கொடுங்கள் என்ற வாக்கிற்கு ஏற்ப பயிர்கள் செழித்து வளர காரணமான ஒளியாம் இறைவனுக்கு உழைப்பின் கனியை அப்பரசப் பொருளோடு சேர்த்து திருப்பலியில் தந்தைக்கு காணிக்கையாக்கும் போது பொங்கல் விழா முப்பொருள், முழுத்தன்மை, முழுஅடையாளம் என்பன வெளிப்படுகிறது.
ஒளியான இறைவன் மனிதர் மீது கொண்ட அளவில்லா அன்பால் தனது அன்புக்குரிய ஒளி வடிவான மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். ஒளி சுயநலமின்றி எல்லோருக்கும் பலன் கொடுப்பது போல எம் ஆண்டவராம் கிறிஸ்துவும் அவரது போதனை மற்றும் வல்லமை வெளிப்படும் புதுமைகளும் எல்லோருக்குமானதாகவே இருந்தது. யூதருக்கு மட்டுமல்லாமல் பிற இனத்தாருக்கும் ஒளியாக இருந்தார். சாதாரண ஒளியாக அல்ல மாறாக பாவ இருளை அகற்றும் வெற்றியின் ஒளியாவார். ஒளியான கிறிஸ்துவின் சீடர்களான நாம் ஒளியாக வாழ திருஅவை அழைப்பு விடுக்கின்றது. கிறிஸ்துவை அறிந்து, அன்பு செய்து, அவருடைய பிள்ளைகளாக எல்லோரையும் அன்பு செய்து வாழ்ந்தால் கிறிஸ்துவை அடைய முடியும். கிறிஸ்து நம்மை அன்பு செய்வது போல நாமும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும். எம் பாவங்களைத் துறந்து ஒளியில் நிலத்திருக்க வேண்டும். “உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க” என்ற கிறிஸ்துவின் வாக்கிற்கேற்ப பிறருடைய வாழ்வில் சுடர்விடும் ஒளியாக வாழ இறைவனிடம் செபிப்போம். இயேசுவிடமிருந்து நாம் பெற்ற ஒளி பிறருடைய வாழ்வை ஒளிமயமானதாகக் மாற்ற வேண்டும். கிறிஸ்தவின் ஒளியை நம் வாழ்வின் ஒளியாக ஏற்போம். பிறருக்கு ஒளி கொடுப்போம். வழிகாட்டுவோம்.
Whats Your Reaction?






