சுண்டெலியின் கல்யாணம் - கதை - அழ. வள்ளியப்பா

சிறுவர் சிறு கதைகள்

Jun 2, 2022 - 18:14
 0  370
சுண்டெலியின் கல்யாணம் - கதை - அழ. வள்ளியப்பா

ஒரு முனிவர் கங்கை நதிக்குப் போனார். நன்றாகக் குளித்துவிட்டுக் கரைக்கு வந்தார். அப்போது ‘தொப்' பென்று ஒரு சுண்டெலி மேலே இருந்து விழுந்தது. அது ஒரு பெண் சுண்டெலி. உடனே, முனிவர் நிமிர்ந்து மேலே பார்த்தார். ஒரு பருந்து ஆகாயத்தில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அதுதான் சுண்டெலியைத் தவறிக் கீழே போட்டுவிட்டது என்பதைத் தெரிந்துகொண்டார்.

சுண்டெலி துடிதுடித்துக்கொண்டிருந்தது. முனிவருக்கு இரக்கம் உண்டாகிவிட்டது. அவர் ஏதோ ஒரு மந்திரத்தைச் சொன்னார். உடனே அந்தச் சுண்டெலி ஒரு சிறு பெண்ணாக மாறிவிட்டது. முனிவர் அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஆசிரமத்திற்குப் போனார்; அன்பாக வளர்த்து வந்தார்.

சில காலம் சென்றது. அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்யவேண்டிய வயது வந்தது. அவளை யாருக்குக் கல்யாணம் செய்து கொடுக்கலாம் என்று முனிவர் யோசித்தார். 'சூரியனுக்குத்தான் கொடுக்க வேண்டும். அவன்தான் நல்ல பலசாலி' என்று தீர்மானித்தார்.

உடனே சூரியனை வரவழைத்தார். சூரியன் வந்ததும், "ஏம்மா, உனக்கு இந்த மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா?" என்று கேட்டார்.

"இவரா? ஐயையோ! வேண்டவே வேண்டாம். ஒரே சூடாக இருக்கிறார். என்னால் இந்தச் சூட்டைத் தாங்கவே முடியாது. இவரைக் காட்டிலும் பலசாலியைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்” என்றார்.

“அப்படியானால், மேகத்தைக் கல்யாணம் பண்ணிக்கொள். மேகம்தான் என்னைவிடப் பலசாலி. அது அடிக்கடி என்னையே மறைத்துவிடுகிறது” என்றது சூரியன். உடனே முனிவர் மேகத்தை வரவழைத்தார்.

மேகத்தைப் பார்த்ததும், "ஐயோ, இவரைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இவரைவிடப் பலசாலிதான் வேணும்” என்றார் அந்தப் பெண்.

"காற்றுதான் என்னைவிட பலசாலி. அது என்னைத் துரத்திக்கொண்டே” என்றது மேகம்.

முனிவர் காற்றை வரவழைத்தார்.

"காற்றைப் பார்த்ததும், இவரோடு எப்படி நான் வாழ முடியும்? இவர் ஒரு இடத்திலே தங்கமாட்டார். எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பார். இவர் வேண்டாம். இவரைக் காட்டிலும் பலசாலியைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்" என்றார் மணமகள்.

"என்னைக் காட்டிலும் பலசாலி மலை தான். என்னால், மலையை அசைக்கக்கூட முடியாது!" என்றது காற்று.

பிறகு முனிவர் மலையை வரவழைத்தார்.

மலையைப் பார்த்ததும், "இவர் ஒரே கரடு முரடாக இருக்கிறார். இருந்த இடத்தைவிட்டு இப்படி அப்படி அசையமாட்டார். எனக்கு இவர் வேண்டாம். இவரைக் காட்டிலும் வேறு பலசாலி கிடையாதா?” என்று கேட்டார்.

“ஏன் இல்லை? சுண்டெலி இருக்கிறதே! அது என்னைவிடப் பெரிய பலசாலி. என் வயிற்றையே அது குடைந்துவிடுகிறதே!” என்றது மலை.

உடனே முனிவர் சுண்டெலியை வரவழைத்தார். சுண்டெலியைப் பார்த்ததும், "ஆஹா, என்ன அழகு! என்ன கம்பீரம்! என்ன சுறுசுறுப்பு!” என்று வியந்தார் அந்தப் பெண்.

இதைக் கேட்டதும் முனிவர் மகிழ்ச்சி அடைந்தார். உடனே ஒரு மந்திரத்தைச் சொன்னார். சொல்லி முடித்ததும், அந்தப் பெண் பழையபடி சுண்டெலியாக மாறிவிட்டார்!

சுண்டெலி பெண்ணுக்கும் சுண்டெலி மாப்பிள்ளைக்கும் முனிவர் கல்யாணம் பண்ணி வைத்தார். கல்யாணம் வெகு வெகு சிறப்பாக நடந்தது.

source from :- Hindu tamil

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow