அவனுள் அவள் | ஒருபக்க கதை

மீண்டும் ஓர் பேரூந்து பயணம். ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம். இதுவும் அப்படிதான், மீண்டு வர முடியாத எண்ணங்களை வாழ்வில் விதைத்தது. பேரூந்திற்காக காத்திருந்த தருணங்களில் எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றன. சில முகங்கள் சிரிப்போடு, சில தவிப்போடு சில கோபத்தோடு இன்னும் சில உணர்வற்ற ஏதோ ஓர் நிலையாக தன்னுடைய இயல்புகளை வெளிக்காட்டி நின்றன.
மனித உணர்வுகள் எத்தனை மாறுப்பாடனவை ஒரே நிகழ்வாயினும் அதன் வெளிப்பாடுகள் வெவ்வேறு விதமானவையாக அமைகின்றன. மனித உணர்வுகளில் புன்னகை என்பதுவும் பிறிதோர் வடிவம். அது நிகழ்த்தப்படும் இடத்தினைப் சூழ்நிலையினையும் பொருத்து வெவ்வேறு அர்த்தப்படுத்தல்களை கொண்டிருக்கின்றன.
அன்றும் அப்படிதான். அச்சிரிப்பொலியின் அர்த்தங்களை என்னால் விளக்கவோ விளங்கிக்கொள்ளவோ முடியவில்லை. அது ரசிக்கத்தக்க ஒன்றாக அமைந்திருக்கவில்லை.
ஒரு வேலை என்னை பார்த்துதான் சிரிக்கின்றார்களா? என எண்ணி உடைகளை சரிப்பார்த்துக் கொண்டேன். மீண்டும் தொடர்ந்தன... அந்த எரிச்சலூட்டும் சத்தம். சற்று அவர்களை திரும்பிப்பார்த்தேன், எல்லாருமே வெள்ளை நிற உடையணிந்திருந்த பள்ளி மாணவர்கள். இப்போது சிரிப்போடு சேர்த்து கேளியாக சில பேச்சு சத்தங்களும் கேட்கலாயின.
அப்போதுதான் சற்று தளர்வான மனநிலைக்கு வர முடிந்தது. இல்லை, அவர்கள் என்னை பார்த்து சிரிக்கவில்லை.
உணர்வில் என்னையும் உருவத்தில் அவர்களையும் கொண்டிருந்த அவளை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனர். தெளிவாக சொல்லுகின்றேன். பிறப்பால் ஆணாகவும் உணர்வால் பெண்ணாகவும் உருவான மனிதி அவள்..
ஏன் இத்தனை கேளி பேச்சுக்கள் அவளுள்ளும் என்னை போன்ற ஒருத்தி இருப்பாள். இத்தனை நேரமும் அச்சிரிப்பால் நான் அனுபவித்த அத்தனை அவஸ்தைகளையும் அவளும் அனுபவித்துக் கொண்டடிருப்பாள் என என் மன எண்ணங்களும் அங்கும் இங்குமாக அசைந்தன. ஆனால் அவளில் எவ்வித சலனமும் இருக்கவில்லை. நிமிர்ந்து நேர்க்கொண்ட பார்வை. அதில் அத்தனை கனவுகள் எதிர்காலத்தை நோக்கி.
அத்தனை இன்னல்களையும் தாண்டி சகித்து நின்றிருந்தால். ஆனால், தன் முக்காட்டால் முகத்தை மூடிக்கொண்டு இருந்தாள். அவள் ஏன் முக்காடிட்டுக்கொள்ள வேண்டும்... மனிதம் மறந்த இம்மரங்கள் அல்லவா முக்காடிட்டுக் கொள்ள வேண்டும். அவள் இப்புவியில் வாழ அனுமதித்தவன் இறைவன்.
அவளுக்கும் சக மானுடம் போல உடலும் உணர்வும் ஒருங்கே படைக்கப்பட்டுள்ளது. ஆண், பெண்ணே உயர்பாலினம். யார் வகுத்த நியதி இது? வெறுமனே சமூகம் தன்போக்கில் கட்டமைத்து கொண்டவை யார் யாருக்கு எது சவுகரியமோ, ஏற்பானதோ அதன் போக்கில் கட்டமைத்து கொண்டவை.
எது வலியதோ அது சிறியதை ஆண்டுக் கொள்கின்றது. பெண் என்றால் ஆண் வலியது. மாற்று பாலினம் என்றால் ஆண் பெண் வலியது. அவரவருக்கு ஏற்றாற் போல அவரவர் நியதி.
பாலினம் என்பதனை ஐக்கிய நாடுகள் சபை பின்வருமாறு வரையறுக்கின்றது. அதாவது, பாலினம் என்பது சமூக ரீதியாக கட்டமைக்கப்பட்ட பெண் ஆண் என்ற பண்புகளை குறித்து நிற்கின்றது. இவ்வாறு ஆண் பெண் என்ற நிலைகளையும் கடந்து ஒருவர் கொண்டிருக்கக்கூடிய பாலியல் ஆர்வத்தின் அடிப்படையில் LGBTQ சமூகத்தினரும் பாலினம் என்பதற்காகவும் உள்வாங்கப்படுகின்றனர்.
கால மாற்றத்திற்க்கேற்ப எல்லாம் மாறி வருகின்றது. எல்லாமே கைக்குள் உள்ளடக்கப்பட்டு விட்டன. சமூக கட்டமைப்பினை உடைத்து இன்று பல மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் ஏனோ தெரியவில்லை, இவர்களின் மாற்றங்களை மட்டும் யாரும் ஏற்க்க தலைப்படுவதில்லை.
சமூகத்தையும் சமயத்தையும் காரணம் காட்டி ஓரங்கட்டி விடுகின்றோம். இதனையும் தவிர்த்து சில கலாச்சார போர்வை போர்த்திய கலாச்சார காவலர்களும் இதற்கெதிராக கொடி பிடிக்க ஆரம்பிக்கின்றனர்.
மண்ணில் ஆணாகவும் பெண்ணாகவும் வாழ ஆற்படுத்தியவன் இறை என்றால் இவர்களுக்கான இடத்தினையும் அவன்தானே கொடுத்திருக்க வேண்டும்.இன்று அதன் பேரிலேயே அவர்களுக்கான எதிர்ப்பொலிகளையும் சீண்டல்களையும் கொடுக்கின்றோம்.
இம்மாற்றத்தின் ஆதியும் அந்தமும் இறை தீர்மானித்தது. அது இயற்கையின் நியதி ஆண் பெண் என்பது ஆதரிக்கத்தக்கது என்றால் அவனுள் உறையும் அவளும் போற்றப்பட வேண்டியவளே.
இன்று எத்தனையோ நாடுகள் சட்டபூர்வமாக இவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி இருக்கின்றன. ஆனால் மனித மனங்கள் இவர்களை அங்கீகரிக்க மறுக்கின்றன.
இங்கு அவளை பார்த்து சிரித்துக் கேளி பேசுபவர்களில் வருங்காலத்து ஆசிரியர், சட்ட விற்பனர்கள், அரசியல் தலைமைகள் இருக்கலாம்... இவர்களது சிரிப்பில் அவளுக்கான அங்கீகாரம் என்பதனையும் தாண்டி எதிர்கால சமூகம் இவ்வாறனவர்களின் கைகளில் என்னவாகும் என்பதே என் மனதில் எழும் பேரச்சமாக இருந்தது.
இலங்கை குற்றவியல் சட்டத்தின் பிரிவு 365 படி இவ்வாறானவர்களுக்கான ஓர் முரணான சட்டமூலமாக காணப்படுகின்றது. இலங்கை அரசு அரசியலமைப்பு மனித உரிமைகள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக மிக நீண்ட காலமாக திருநங்கைகளை அங்கீகரிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளது.
சட்ட நூல்களிலிருந்து பிரிவு 365 ஐ நீக்க அரசாங்கம் முயற்சித்தது. பல அரசு சாராநிறுவனங்கள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் மத அமைப்புகள் பாற் புதுமையினருக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
வெளிப்படையாகவே தங்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் என அறிவித்தவர்கள் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதனைக் காணலாம்.
இதுமட்டுமல்லாமல் உலக அளவில் இவளை போன்றவர்கள் சாதனையாளர்களாக பலருக்கு இன்று முன்மாதிரிகளாக திகழ்கின்றனர். இந்த பேரூந்து தரிப்பிடத்தை போலவே உலகில் எத்தனையோ இடங்களில் இவர்களுக்கான அச்சுறுத்தல்களும், தீண்டாமைக் காணப்படவே செய்கின்றன. அதற்காக யாரும் முடங்கிவிடவில்லை. தன்னவர்களுக்கான முன்னுதாரணமாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள்.
மார்ஷா பி. ஜான்சன் ஒரு கறுப்பின திருநங்கை ஒரு sex worker மற்றும் ஒரு ஆர்வலராக இருந்தவர், அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சமத்துவத்திற்காக போராடினார். சாயிஷா ஷிண்டே இவர் ஒரு இந்திய ஒப்பனையாளர் ஜனவரி 2021 இல் இவர் தன்னை ஓர் திருநங்கையாக அறிவித்தார்.
தன் வாழ்க்கையில் அத்தனை சவால்களையும் தாண்டி இப்போது ஒரு சாதனை பெண்ணாக திகழ்கின்றார். இதனை போலவே நாஸ் ஜோசி இந்தியாவின் முதல் சர்வதேச அழகுராணி போட்டியில் பங்குபற்றி வெற்றிவாகை சூடியவர். மேலும், டாக்டர் கல்கி சுப்ரமணியம் எழுத்தாளர், நடிகர், தொழிலதிபர் என பன்முகத் திறமை கொண்டவராவார்.
சுப்ரமணியம் தனது இளமை நாட்களில், தனது சமூகத்தின் உறுப்பினர்களுக்கு சம உரிமையை வாதிடுவதற்காக சகோதரி என்ற பத்திரிகையையும் வெளியிட்டார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில், அதே பெயரில் அதே நோக்கத்துடன் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். 2011 ஆம் ஆண்டில், திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த இந்தியாவின் முதல் திருநங்கையாக கல்கி அங்கீகரிக்கப்பட்டார்.
இப்படி எத்தனையோ பேர் தனக்கான போராட்டங்களை தாண்டி உலக அளவில் தனியான அடையாளமாக திகழ்கின்றனர். இவர்களுக்கான போராட்டங்கள் மறுப்புக்களையும் தாண்டி தன்சார்ந்த சமூகத்திற்காக எழுந்து பிரகாசிக்கவே செய்கின்றனர்.
எனக்கும் இவளை பார்க்க அப்படிதான் தோன்றியது. அங்கு நடந்தேறிய அத்தனை நாடகங்களையும் தாண்டி கொஞ்சம் கூட தளராமல் தனக்கான பேரூந்து வரும் வரைக்கும் அங்கேயே நின்றிருந்தாள். ஒருவேளை அவள் அவ்விடத்தை விட்டு கடந்திருந்தால் இவ்வளவு தூரம் என் மனதில் நின்றிருக்கமாட்டாள். அவள் அவனின் பலத்தையும் அவளின் அன்பையும் ஒருங்கே இணைந்தவள்.
தன்னை பார்த்து சிர்ப்பவர்களை சினந்துக்கொள்ளவுமில்லை, தன்னுடைய பெயரையும் தாண்டி தனக்கு அவ்விடத்தில் புனைப்பெயரிட்டவர்களிடம் சென்று வாக்குவாதம் பண்ணவுமில்லை. இவள் அவள் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிபலிப்பு.
இவர்களின் கேளிகளுக்கெல்லாம் பதில் அவள் கைகளில் இருந்தது. சட்ட புத்தகங்களை தன்னுடைய கைகளில் வைத்திருந்தாள். ஆம், அவளது சட்ட கல்லூரி மாணவி. தனக்கான அடையாளத்தை அவள் தேட ஆரம்பித்து விட்டாள்.
அவளுக்கான பேருந்தும் வந்தது அவளது பயணமும் ஆரம்பித்தது. ஆனால் அங்கு நின்றிருந்தவர்களின் கேளி சிரிப்புக்கள் தொடர்ந்தன இப்போது அவளை பற்றியல்ல அங்கு நின்றிருந்த உடல் பருத்த பெண்ணை நோக்கி....