மனநிறைவான வாழ்வை வாழ்வது எப்படி?
வாழ்வை நோக்கி......... நிரப்பமான உள்ளம்., செல்வம் தேடுவதில் நடுநிலைமை, உறவுகளின் உன்னதம் பேணல், உறவுகளின் உன்னதம் பேணல், நிதானம் ,பொறுமை, அமைதி , நாவை பேணுதல், யதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளல், ஆன்மீகத்தில் கவனம் செலுத்தல்,

மனித மனம் என்பது அற்புதமானது. நொடிக்கு நொடி மாறுபடக் கூடியது. மண்ணிலே உயரிய பிறப்பெடுத்திருக்கும் மனிதனுக்கு மனநிறைவு என்ற உயரிய தன்மை இல்லாவிட்டால் அவன் வாழ்வில் எந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் கிட்டப் போவதில்லை. ஒருவன் எவ்வளவு செல்வங்களைப் பெற்றிருந்த போதும் மன நிறைவுடன் கூடிய மகிழ்ச்சியை அனுபவிக்கும் பெரும் பேறு கிடைக்காவிடின் அவன் பெற்றிருக்கும் செல்வங்களால் துளி அளவும் பயன்கிட்ட போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. எனவே வரமாகக் கிடைத்திருக்கும் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ நாம் எப்போதும் எமது மனதை பயிற்றுவிக்க வேண்டும்.
- நிரப்பமான உள்ளம்.
மனநிறைவான வாழ்வின் முதல் அடிப்படை நிரப்பமான உள்ளம் ஆகும். இவ்வுலகின் உண்மையான செல்வம் நிரப்பமான உள்ளத்திலேயே தங்கியுள்ளது. நிரப்பமான உள்ளமே அனைத்து நன்மைகளினதும் ஊற்றுக்கண் ஆகும். நிரப்பமான உள்ளத்தை பெற வேண்டுமாயின் எமது உள்ளத்தை ஆட்கொண்டுள்ள உலகியல் சிந்தனைகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை பெற்றிருக்க வேண்டும். அதாவது உலக வாழ்வின் சுகபோகங்களுக்குள் மூழ்கி தன்னுணர்விழந்து வாழும் நிலையை மாற்றி ஓரளவு உலகைத் துறந்து வாழ நாம் எம்மை பயிற்றுவிக்க வேண்டும். உலகைத் துறத்தல் என்பது உலக விவகாரங்களில் இருந்து விடுபட்டு வாழ்வதன்று. மாறாக உலக வாழ்வில் நாம் அன்றாடம் மேற்கொள்ளும் அனைத்துக் கருமங்களையும் அது நன்மையாக நடந்தாலும் தீமையாக நடந்தாலும் இறை நியதிப்படியே நடந்து முடிந்துள்ளது என்ற உயர் மனநிலையில் எதையும் அமைதியான மனதுடன் ஏற்க பழக வேண்டும். காரணம் எமக்கு ஏற்படும் மன வேதனை, கவலை என்பன உலக வாழ்வில் நாம் கொள்ளும் பேராசையின் அறிகுறிகளே.
நடக்க வேண்டியவை அவற்றுக்கே உரிய விதத்தில் நடைபெற்று விட்டன. அவற்றை திருப்பிப் பெற முடியாது. நடைபெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டவை அதற்காக விதிக்கப்பட்ட நேரத்தில் விதிக்கப்பட்ட இடத்தில் விதிக்கப்பட்ட முறையில் ஒழுங்காக நடைபெறும். எனவே இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் மனதில் இருந்து தூர நிறுத்தி நிகழ் கால நிகழ்வுகளுடன் ஒன்றித்து ஒவ்வொரு நிமிடத்தையும் ஆழமாக சுவாசித்து வாழ வேண்டும் . உலகின் சடப் பொருளிலிருந்து எமது உள்ளங்களை பிரிக்க முடியாத அளவு அவற்றின் மேல் நாம் பற்றுக் கொள்ளக்கூடாது. சிறப்பாக உண்ணலாம், சிறப்பாக ஆடை அணியலாம், வசதியாக வாழலாம் ஆனால் இவை இருப்பதோ அல்லது இல்லாமல் இருப்பதோ எமது மனநிலையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது.
2. செல்வம் தேடுவதில் நடுநிலைமை.
மன நிறைவான வாழ்விற்கு நாம் பின்பற்ற வேண்டிய அடுத்த முக்கிய பண்பு செல்வம் தேடுவதில் நடுநிலைமை பேனல் ஆகும். நாம் பொருளைத் தேடுவதில் சிறிதளவும் அசிரத்தை காட்டக்கூடாது .அதே வேளை எவ்வளவு முயற்சித்தாலும் எமக்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு செல்வம் எம்மை வந்து சேரும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்து ஆகுமாக்கப்பட்ட வழிகளிலேயே நாம் எமது வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ள வேண்டும். எப்போதும் நாம் செல்வம் தேடுவதில் நடுநிலைமையை பேண வேண்டும். எமது தேவைகளை திருப்திகரமாக நிறைவேற்றிக் கொள்ள போதுமான அளவு செல்வம் கிடைக்கும்போது அத்துடன் மன நிறைவு அடைந்து மேலதிக செல்வத்தின் பக்கம் எமது நிம்மதி மகிழ்ச்சி என்பவற்றை அடகு வைத்துவிட்டு ஓடக்கூடாது .அவ்வாறு செல்வத்தின் பின்னால் ஓடுவதால் வாழ்வில் ஏராளமான சின்னஞ்சிறு சந்தோஷங்களை இழந்து விடுவோம் என்பது நிச்சயம்.
3. உறவுகளின் உன்னதம் பேணல்.
உறவுகள் வாழ்வின் உயிர்நாடி .உறவுகள் அற்ற வாழ்வு உயிரோட்டமற்ற வாழ்வு எனலாம். வாழ்வின் மன நிறைவு என்பது உறவுகளின் உன்னதத்தைப் பேணி வாழ்வதிலேயே தங்கி உள்ளது. உறவுகள் முறியும் போது எமது உள்ளமும் சுக்கு நூறாக உடைந்து விடும். ஊரே திரண்டு வந்து எமது வாழ்விற்குக் கரம் கொடுத்தாலும் உறவுடன் பகைத்த வாழ்வு என்பது எப்போதும் உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருக்கும். எனவே மனநிறைவான வாழ்விற்கு நாம் எப்போதும் உறவுகளைப் பேணி வாழ வேண்டும். உறவுகளைப் பேணல் எனும் போது சகிப்புத்தன்மை, பொறுமை ,விட்டுக் கொடுப்பு என்பன தாராளமாகத் தேவைப்படும். காரணம் எமது உறவென்று கூறிக் கொள்ளும் அனைவரும் நாம் எதிர்பார்க்கும் அதே குணங்களுடன் இருக்க மாட்டார்கள். உறவுகள் மத்தியில் முரண்பாடுகள், சண்டைகள், உட்பூசல்கள் ஏற்படுவது உலக நியதி .இவை அனைத்தையும் எமது உள்ளத்தில் போட்டு நாம் எமது வாழ்வை நகர்த்த முற்பட்டால் எம் வாழ்வின் நகர்வு துன்பம் எனும் சக்கரத்தைக் கட்டிய வண்டியாக மாறிவிடும். இந்நிலையை மாற்றி எமது நெருங்கிய உறவினர்களின் உரிமைகளைச் சரிவர நிறைவேற்றி எந்நேரமும் அவர்களுடன் நன்முறையில் நடந்து கொள்ள வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் எமது உறவுகளை அனுசரிப்பது சிறந்தது. முதலில் நெருக்கமான உறவினர்கள். அடுத்தபடியாக அவர்களுக்கு அப்பால் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் உறவுகளுக்கு உயர் முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது. எனவே மனநிறைவான வாழ்விற்கு உறவுகளிடையே ஏற்படும் சிறு சிறு மனக்கசப்புக்களையும் பெருமனதுடன் மன்னித்து அவற்றை மறந்து அடுத்த நொடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க வேண்டும் .
4.பிறரின் திருப்தியை நாடாமை
உலகில் மனிதனின் மன நிம்மதி இழக்கப்படுவதற்கான ஒரே காரணம் பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற சிந்தனை ஆகும். ஆனால் நம்மைப் பற்றிய பிறரின் எண்ணம் அவர்களது பிரச்சினையே அன்றி அது எமது பிரச்சினை அல்ல என்ற கொள்கையுடன் எமது வாழ்வை வாழ முடியும் என்றால் அதுவே எமது மன நிறைவான வாழ்விற்கு நாம் இட்டுக் கொள்ளும் ஒரு அழகிய அடிப்படையாகும். காரணம் உலகில் நாம் பிற மனிதர்களை திருப்திப்படுத்த ஆரம்பித்தால் அவர்கள் ஒவ்வொருவருக்காக வேண்டியும் நாம் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டி ஏற்படும். இது எமது மனநிம்மதியை அடியோடு அழித்துவிடும். நாம் செய்யும் எந்த ஒரு செயலும் உண்மைக்கும் நேர்மைக்கும் நியாயத்திற்கும் உட்பட்டு இருந்தால் நாம் ஒருபோதும் பிறரின் பாராட்டையும், புகழ்ச்சியையும் எதிர்பார்க்கவோ அவர்களது விமர்சனத்திற்கு அஞ்சவோ தேவை இல்லை.
5. நிதானம் ,பொறுமை, அமைதி
மனநிறைவான வாழ்வின் மூன்று தாரக மந்திரங்களே நிதானம், பொறுமை, அமைதி என்பனவாகும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எத்தகைய இக்கட்டான நிலையிலும் நாம் நிதானம் தவறோ அமைதி இழக்கவோ கூடாது. மாறாக பொறுமை என்ற உயர் பண்பைக் கைக்கொண்டு வாழ எமது மனதை பயிற்றுவிக்க வேண்டும். நிதானம் தவறாத அமைதி இழக்கப்படாத எந்த ஒரு செயலினதும் இறுதி முடிவு அழகானதாகவே காணப்படும். அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் கருத்து வேற்றுமைகளை பொறுமையுடன் சகித்துக் கொள்வது மனநிறைவான வாழ்விற்கு வழிகாட்டும்.
6. நாவை பேணுதல்
எமது வார்த்தைகளால் பூமியில் உள்ள எந்த ஒரு படைப்பினத்தையும் மனம் நோகச் செய்யக்கூடாது. அநேக சந்தர்ப்பங்களில் நாம் வெளியிடும் வார்த்தைகள் பற்றி போதிய அளவு கரிசனை எடுப்பதில்லை .வீணாக வெளியிடப்படும் வார்த்தைகள் என்றோ ஒருநாள் எமக்கு எதிராய் மாறிவிடுகின்றன. எப்போதும் மனநிறைவான ஒரு வாழ்க்கையை வாழ விரும்பும் ஒருவர் மனிதர்களைப் பற்றி பேசுவதாக இருந்தால் நல்லவற்றையே பேச வேண்டும் .அல்லது வாய்மூடி மௌனமாக இருக்க வேண்டும். மாறாக அடுத்தவர்களைப் பற்றி நச்சுக் கருத்துக்களை ஒருபோதும் விதைக்க கூடாது. அதேபோல் ஒருபோதும் பிற மனிதர்களின் குறைகளை அம்பலப்படுத்தக்கூடாது. பிறரின் குறைகளைக் கண்டால் அவற்றை இங்கிதமாக மறைத்து விடுவதே உயர்ந்தோர் பண்பாகும் .அடுத்தவர் விடயத்தில் இத்தகைய உயர் பண்பினைக் கடைபிடிக்கும் போது எமது மனம் இயல்பாகவே அமைதி என்றால் கடலுக்குள் பிரவேசிக்க ஆரம்பிக்கும்.
7. யதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளல்.
நமது வாழ்க்கை ஓட்டத்தில் மனவருத்தங்களையும் ஏமாற்றங்களையும் சந்திக்கும் போது அவற்றின் யதார்த்த நிலையை உணர்ந்து ஏற்றுக்கொள்ள தயாரற்ற மனநிலையே எம்மில்ல் அதிகமானவரிடம் காணப்படுகின்றது. வளமான மனித உறவுகளை இத்தகைய போக்குகளே தகர்த்தெரிகின்றன . மன நிறைவான வாழ்வை வாழ விரும்பும் ஒவ்வொருவரும் இவற்றை விட்டு முழுமையாக ஒதுங்கி விட வேண்டும் .எமது கட்டுப்பாட்டை மீறி சந்தர்ப்ப சூழ்நிலைகளின் சூழ்ச்சியால் நடைபெறும் சில விடயங்கள் எமது மன அமைதியையும் நிம்மதியையும் பாதித்துவிடும். இத்தகைய நெருக்கடிமிக்க சந்தர்ப்பங்களில் இதுவே யதார்த்தம் என்பதை ஏற்றுக் கொண்டு அமைதி வேண முயற்சிக்கும் போது காலம் அக்காயங்களுக்கு மறந்திட்டு அவற்றை ஆற்றி விடும். யதார்த்தங்களை ஏற்கும் மனநிலை மனநிறைவான வாழ்வின் ஒரு அழகிய அடிப்படை ஆகும். உண்மையான மனநிறைவு இத்தகைய யதார்த்தங்களை அமைதியாக ஏற்றுக் கொள்வதில் தங்கி உள்ளது.
8. ஆன்மீகத்தில் கவனம் செலுத்தல்
மனிதனை மகானாக மாற்றுவது ஆன்மீகம். மனிதன் ஆன்மீகத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளும் போது அவன் இயல்பாகவே அமைதி எனும் உலகில் நுழைந்து விடுகிறான். ஆன்மீக உலகில் நுழையும் ஒருவர் இயல்பாகவே அதன் ஆழமான நன்மைகளை அடைந்து கொள்வர். எனினும் இன்று அதிகமானோர் ஆன்மீகம் என்றால் என்ன என்பதை சரியாக உணராதவர்களாக உள்ளனர். அதாவது ஆன்மீகம் என்றால் ஏதோ ஒரு மதத்தை கெட்டியாகப் பற்றி பிடித்துக் கொண்டு அச்சமயத்திற்குரிய அடையாளங்களை அணிந்து கொண்டு ஏதோ ஒரு வழிபாட்டிடத்தில் அமைதியாக அமர்ந்திருப்பது ஆன்மீகம் என்று எண்ணுகின்றனர். எனினும் இது முற்றிலும் தவறானது இது ஆன்மீகத்தின் ஒரு வெளிப்பாடு என்றாலும் சாதாரணமாக அன்றாட வாழ்வில் அனைவருக்கும் ஆன்மீகவாதியாய் மாற முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.
மனதில் தீய எண்ணங்கள் இன்றி, பிறருக்கு கெடுதல் நினைக்காது, அனைவரிடமும் அன்பாக பழகி, அனைவரையும் மரியாதையுடன் நடத்தி வாழும் அனைவரும் ஆன்மீகவாதிகளே. இத்தகைய உயர் நெறிகளை கடைபிடித்து வாழும் அனைத்து உள்ளங்களிலும் நிச்சயம் அமைதி குடி கொண்டிருக்கும். இவ் அமைதி மன நிறைவுக்கு வழிவகுக்கும்.
எமக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை என்பது அனைத்தையும் விட மிகப் பெறுமதி மிக்க ஒன்றாகும். அதனை நாம் முழுப் பொறுப்புணர்வுடன் ஏற்று அழகிய முறையில் வழி நடத்த வேண்டும். ஒரு தாய் தனது குழந்தையை பாதுகாப்பது போல் நாமும் எமது வாழ்வை பார்த்துப் பார்த்து பாதுகாக்க வேண்டும். அதனை எமது பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். எம்மைச் சூழ உள்ள உலகில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எமது வாழ்வை சிதைக்க நாம் அனுமதி வழங்கக் கூடாது .இதற்கு ஒரே வழி மன நிறைவு என்ற மந்திரத்தை வாழ்வின் தாரக மந்திரமாய் ஏற்றுக் கொள்வதாகும். நீண்ட நெடுந்தூர வாழ்க்கைப் பாதையை வெற்றிகரமாக கடக்க மன நிறைவே எமக்கு வழித்துணையாக அமையும். கடவுள் எமக்கு கொடுத்திருக்கும் வாழ்வாதாரங்களையும் வாய்ப்புகளையும் முழு மனதுடன் ஏற்று தர்மத்தின் வழியில் நடக்கும் போது நாம் அடைய நினைக்கும் மனநிறைவு தானாகவே எம்மே வந்தடையும்.
எனவே நாமும் எமது வாழ்வினை வெற்றிகரமாகவும் மனநிறைவு மிக்க வாழ்வாகவும் மாற்றியமைக்க முயற்சிப்போம். அதன் ஊடாக எம்முள்ளும் எம்மைச் சூழ உள்ள உலகிலும் அழகிய மாற்றத்தை ஏற்படுத்த முனைவோம். மானிடப் பிறப்பின் உயர்வை உலகிற்கு உணர்த்த மாசற்ற மனதுடன் மன நிறைவாய் வாழ்வோம்.