மலையக பாரம்பரியத்தில் காமன் கூத்து

ரதி மன்மதன் கோயில், ரதி மன்மதன் கதை, மன்மதன் மனைவி, ஈழத்து மலையக கூத்துக்கள், ரதி மன்மத பூஜை, ரதி தேவி வரலாறு, அனங்கன்

Mar 17, 2023 - 17:45
 0  88
மலையக பாரம்பரியத்தில் காமன் கூத்து

மேற்கைத்தேய காலணித்துவத்திற்கு உற்பட்டிருந்த அப்போதைய இலங்கைத் திருநாட்டில் தொழில் நிமித்தம் அடிமைகளாய் அழைத்து வரப்பட்ட போது அவ் தென்னிந்திய கொத்தடிமைகளின் உணர்வுகள் வழியான கலாச்சாரமாக அவர்களோடு தொடர்ந்து வந்தவைகளுள்  கூத்துக் கலைகளானது தனியானதொரு சிறப்பிடத்தை பெற்றுக் கொள்கின்றது. அவ்வாறு மலையகத்தை தனித்து அடையாளப் படுத்தும் கூத்துக் கலைகளில் காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் முதலான கூத்துக் கலைகள் மலையகத்தின் தோற்றம் முதல் இன்று வரையிலும் பிரதான இடம் வகித்து வருகின்றன.  இவற்றுள் இன்றும் பிரதானமாக மலையக மக்களால் கோலாகலமாக நடாத்தப்பட்டு வருகின்ற காமன் திருவிழா என்று அழைக்கப்படும் காமன் கூத்துக் கலை பற்றிய விரிவான விக்கமே இக் கட்டுரைத் தொகுப்பு.

மலையகம் வாழ் மலை மாந்தருள் இந்து சமயத்தை பின்பற்றுவோரது மதம் சார் வரலாற்று இதிகாச கதையம்சத்தை அடிப்படையாக கொண்டு இடம் பெற்றாலும் கூட மலையகத்தில் இன மத வேறுபாடுகளை கடந்து மலையகத்தராய் ஒரு சமூகமாய் இணைந்து இக் காமன் கூத்து என்று அழைக்கப்படுகின்ற காமன் திருவிழாவானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இக் கூத்து கலையானது முதற் காலத்தில் தொடர்ச்சியான வேலைப் பளுக்கலாளும் அடிமை தனத்தாலும் விரத்தி அடைந்திருந்த சோர்வுற்றிரிந்த மன நிலையை மாற்றியமைக்கும் விதமாகவும் இறைவழிபாட்டு தன்மையை அடையாளப்படுத்தும் விதமாகவுமே முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் இன்றைய நிலையில் மலையக குல தெய்வ வழிபாடுகள் என்ற பிரிவிற்குள் மலையகத்தின் பெரும்பாலான தோட்டங்களில் இடம் பெற்று வருகின்றது. இக் காமன் திருவிழாவானது மலையகத்தில் மாசி மாதத்தில் வளர்பிறையில் குறிப்பாக பெப்ரவரி மாதம் பதினாறாம் பதினேழாம் திகதிகளில் பந்தற்கால் நாட்டல் இடம் பெற்று விழா தொடங்கி விழாவானது மாசி மாத இருதியில் நிறைவுக்கு வருகின்றது.

இவ்வாறு மலையகத்தில் வருடத்தின் முதற் பகுதியில் அறங்கேரும் இக் காமன் கூத்துக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பை காமன் திருவிழாவின் கதை களத்தை கொண்டு மிக தெளிவாக அறிந்து கொள்ள கூடியதாக அமைகின்றது. இவ்வாறு இந்து மத சிறப்பை விபரிக்கும் காமன் கூத்தின் இதிகாச கதை களத்தை அறிந்து கொள்வோம். இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான சிவ பெருமானின் மகளான ரதி தேவிக்கும் தேவர் குல இளவரசனான ஆண் அழகர் மன்மதனுக்கும் காதல் ஏற்பட பின் அவர்களுக்கு முன்றுலக தேவர்களை சாட்சி கொண்டு திருமணமானது அரங்கேறி வாழ்க்கை இன்பியலாய் தொடர்ந்திட கால ஓட்டத்தில் மகிழ்ச்சியாக கடந்த வாழ்க்கையில் உமாதேவியரின் தந்தை சிவனின் சக்தியை வலுவிழக்க செய்யும் விதமாக தொடர்ந்த யாகத்தை அழிக்க சிவன் தவமிருந்து வீரபுத்திரனை தோற்றுவித்து தக்கன் தவம் அழிக்க அனுப்புகிறார் மறுபுறத்தில் உமா தேவியார் தன் தந்தையின் யாக பூஜைக்கு செல்ல அங்கு வீரப் புத்திரனரால் தலைத் துண்டிக்கப் பட்டிருந்த தக்கனின் உடலில் முடிவின்றி சொறியும் உதிரத்தை கண்டு சாந்த சொரூபியான தேவியர் அகோர காளி ரூபம் கொண்டு உதிரத்தை உரிந்து குடித்து தன் தந்தை உயிர் மாய்க்க காரணமாகின்றாள். மறுபுறத்தில் ஓயாத கடுந்தவத்தில் இருக்கும் சிவனின் தவம் நிறைவேறினால் மூவுலகம் தாங்காது என அறிந்து தேவர் சபையினரால் சிவனின் தவம் அழிக்க தேவர் சபை அழைக்கப் படுகின்றார் மன்மதன். தேவர் சபையினரின் தூண்டுதலால் சிவனின் தவம் அழிக்க சென்ற மன்மதன் சிவனை நோக்கி மலரம்பு தொடுத்து சிவனின் தவம் கலைக்கிறார். தன் தவம் கலைந்ததால் பெரும் கோபம் கொண்ட சிவன் மன்மதனை நோக்கி தன் நெற்றிக் கண் தீ கொண்டு உயிர் பறிக்கிறார். இவ்வாறு மன்மதன் உயிர் துறந்த சேதி அறிந்து பெரும் துயர் கொண்டு தன் தந்தையான சிவனிடம் நீங்கள் ஏற்படுத்தி கொடுத்த வாழ்க்கையை நீங்களே பறித்து கொண்டீரே என ரதி தேவியார் புலம்பி சண்டையிட , சிவனால் பறிக்கப்பட்ட உயிர் மீண்டும் உயிர் பெறாது என்பதை உணர்த்தி ரதி தேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு மன்மதனை ரூபியாக உயிர்ப்பிக்கிறார். இவ் இதிகாச கதையே கூத்து களத்தில் ரசனைக்கு ஏற்றாற் போல மாற்றி அமையப் பெற்று அறங்கேற்றம் அடைகின்றது.

இவ்வாறு காமன் திருவிழாவின் கன்னிக்கால் நாட்ட மூன்றாம் நாள் முதல் தொடங்கி ரதி மதனது காதல் வெளிப்பாடாக மாலை நேரங்களில் தோட்டத்தில் வீடுகளுக்கும் காமன் திருவிழா இடம்பெறாத சக ஊர்களுக்கும் சென்று நடனமாடி பாடல் பாடி இன்பியல் வாழ்க்கை பற்றிய விபரிப்பை வழங்கு கின்றனர். இவ்வாறு நாட்கள் செல்ல காமன் திருவிழாவின் இறுதி நாளதில் சிவன், உமயவள்,முருகன்,விநாயகர்,விஷ்ணு,சரஸ்வதி தேவி, லக்ஷ்மி தேவி,பிரம்மா மற்றும் தேவலாக தேவர்கள் முன்னிலையில் ரதி,மதனது திருமணங்கள் நடந்தேருகின்றது. பின்னர் இன்பமாய் பாடல் பாடி காதல் வாழ்க்கையை தொடரும் விதமாக கூத்து களத்தில் நடனமாடி மகிழ்ந்து ரதி,மதன் உரக்கம் கொள்ள ரதி தேவியாரின் கனவில் தேவலோகத்தாரின் வேண்டுதலால் மன்மதன் சிவன் தவமழிக்க கோபத்தில் மன்மதனை சிவன் நெற்றிக் கண்ணால் எறிக்கும் காட்சி தென்பட திடுக்கிட்டு எழுந்து மதனிடம் கனவை உரைக்க பின் மறு நாள் மதன் வேட்டைக்கு சென்ற தருவாயில் ரதி தேவியை சந்தித்த குறத்தி பெண் உன் தாலி பாக்கியம் பறிபோகும் நேரம் தொலைவில் இல்லை உன் கணவன் உயிர் துறக்க போகிறார் என எடுத்துரைத்து செல்ல சலனமுற்று இருந்த ரதி தேவி மதன் தரப்புக்கு தேவலோகத்திலிருந்து மன்மதனை தேவர் சபை அழைத்து தூது வந்து சேர்கின்று இதில் தொடங்கி ரதி தேவியார் மன்மதனை போக வேண்டாம் என தடுக்கும் படலம் ஆரம்பமாகிறது. 

தொடர்ந்து ரதி தேவியார் தடுப்பதும் மன்மதன் போக விடை கோறுவதாகவும் கதை களம் அமைகின்றது இந்த தருணங்களில் மலையகத்தின் குல தெய்வங்களான உமா தேவியரது மறு ரூபங்களான மாரித் தாய் ,காளித் தாய் அகோர காளி,மோகினி தேவி,அதே போல சுடலைமாடன்,முணீஸ்வரர்,கருசாமி,அக்கினி புத்திரன், நாரதர் முதலானவர்கள் மதன் ரதியை சந்தித்து மன்மதனை தேவர் சபை செல்ல வேண்டாம் என தடுப்பதாகவும் கதை களம் தொடர்கின்றது. இக்காட்சிகளின் ஒரு புறத்தில் தக்கன் தவமழிக்கும் சம்பவமும் அரங்கேற்றம் பெற்று முடிகின்றது. இவ்வாறு செல்லும் கதை களத்தில் ரதி தேவி மதனின் செங்கரும்பு வில் எடுத்து மதனை தடுக்க தேவர் சபையிலிருந்து மன்மதனை அழைத்து மறு தூது வந்து கிடைக்கின்றது. இவ் அழைப்பு கண்டதும் மதன் ரதி தேவியிடமிருந்து வில்லை பறித்து கொண்டு தென்றல் ரதத்தில் தேவர் சபை செல்லும் காட்சி இடம் பெறுகின்றது. இதனை  அடுத்து மதன் தேவர் சபையினரின் வேண்டுதலால் சிவனின் தவமழிக்கும் காட்சியும் சிவன் மதனை அழிக்கும் காட்சியும் அரங்கேற்றம் பெருகின்றது. இறுதியாக சிவனை அழிக்கும் காட்சியில் சிவனின் நெற்றி தீ காமன் திருவிழாவிற்காக நாட்ட கன்னிக்கால் பந்தலில் படுவதாகவும் அதில் இருக்கும் மதனின் கரும்புவில்லால் மன்மதன் உயிர் எறிவதாகவும் மலையகத்தாரால் நம்பிக்கை கொள்ளப்படுகின்றது. இதனை காணும் ரதியின் துயர் நிலையோடு அன்றைய காமன் திருவிழா நிறைவுக்கு வருகின்றது. அதனை அடுத்த மூன்றாம் நாள் ரதி தேவி தன் தந்தையான சிவனிடம் சண்டையிடுவதும் பின் மதனை ரதி தேவிக்கு மட்டும் தெரியும் உருவமாக உயிர்ப்பிக்கும் நிகழ்வு இடம் பெற்று காமன் பண்டிகை இனிதாக நிறைவுற்று முடிகின்றது. இக் காமன் பண்டிகையானது மலையக இந்துக்களின் இறை நம்பிக்கை நிறைந்த விழாவாக அன்று முதல் இன்று வரையிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ் விழாவின் மேடை அமைப்பானது ஏனைய கூத்துக் களங்களை விட சற்று வேறுபட்டதாக அமைகின்றது. அவ்வாறு வட்ட மைதானம் போன்ற களத்தில் நடுப் பகுதியில் கன்னிக்கால் நாட்டப்பட்டு பந்தலிட்டு அதை சுற்றி ஆடி நடிக்குமாறு களம் அமைப்பு அமையப் பெற்றிருக்கும் அதே வேலை களத்தை சுற்றி மக்கள் அமர்ந்து பார்த்து ரசிக்கும் வகையிலும், மக்கள் கூட்டங்களின் ஆங்காங்கே சிவன் பார்வதியின் கைலாச மலை அமைப்பும் ஒரு புறத்தில் தேவர் சபை அமைப்பும் அமைக்கப்பட்டிருக்கும். இக் காமன் பண்டிகையில் பயண்படுத்தப்படும் இசைக் கருவிகளில் பிரதானமானதாக தப்பிசை அமையப் பெறுகின்ற அதே வேலை மலையக மூத்த காமன் கூத்துக் கலைஞர்களின் வழி வந்த சொல் இசை பாடல்களுக்கு ஏற்றாற் போல தப்பிசைக்கும் தன்மை அமையப் பெருகின்றன. இவ்வாறு ரதி,மதன்,கதை இடையில் வந்து செல்லும் குல தெய்வங்கள் முதலான காட்சிகளில் தன் கூற்று பாடல்களை பாட கூடிய மூத்த கலைஞர்களின் வழியில் தொடங்கி இன்று இளைய சமூகத்தினர் வரைக்கும் பெரும் தேர்ச்சி கொண்டவர்களாக அமைகின்றனர். அதே போல பல வகை தெரிவுகளில் தப்பிசைக்க கூடிய தப்பிசை கலைஞர்களுள் இன்றைய இளைய சமூகத்தினர் தப்பிசைக்க பஞ்சமற்ற எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றனர்.

இத்தனை சிறப்பு பெற்ற காமன் பண்டிகையில் பயன்படுத்தப்படும் உடை மற்றும் நகை அலங்காரங்கள் முதலானவை ஏனைய கூத்து களங்களை விட சற்று வித்தியாசமானதாக அமையும் அதே தருணம் இங்கு பயன்படுத்தப்படும் உடை அமைப்புக்கள் மலையகத்தவர்களின் கைவண்ணங்களிலேயே அமையப் பெருகின்ற அதே தருணம் தேவர் சபையினரது உடை,நகை அணிகலன்கள் முதலானவை தத்ரூபமாக கற்பனை திறனுக்கு ஏற்றாற் போல் அரசாம்சத்தை கொண்டதாக அமையும் வகையில் மூங்கில் மற்றும் முருங்கை முதலான மர வகைகளை கொண்டு மலையகத்தவர்களாலேயே உருவாக்கப்பட்டு வருகின்றது. மேலும் கதைக் களத்தில் இடையில் வரும் குல தெய்வங்களானது தீப் பந்தங்களை கொண்டதான ஆங்கார ரூபமாக அமையப் பெருகின்றமை இக் கூத்தின் தனித் தன்மையாகும். அவற்றுள் அகோர காளி,வீர புத்திரன்,தூதன் அக்கினி புத்திரன் முதலான குல தெய்வங்கள் பதினாறு தீப்பந்த அமைப்புக்கள், முற்பத்துரென்டு தீப்பந்த அமைப்புக்கள்,முதலானவற்றில் தொடங்கி நூற்றியெட்டு தீப்பந்த கட்டமைப்புக்கள் வரையிலும் கொண்டு தெய்வங்கள் காட்சியளிக்கும் வகையில் அரங்கேற்றம் பெருகின்றது.

இவ்வாறு மலையகத்தின் தோற்ற காலம் முதல் இன்று வரையிலும் சற்றும் தளராது இடம் பெற்று வருகின்ற காமன் கூத்து கலையானது இன்றைக்கு இருநூறு ஆண்டுகளை சந்தித்து சிறப்பாக இடம் பெற்று வருகின்றது. இவ்வாறு தேர்ச்சி பெற்று பயணிக்கும் காமன் கூத்துக் கலை இன்றைய கதை களத்தில் சற்று மருவி வருவதற்கான தன்மை சற்று வெளிப்பட்டாலும் கூட மலையக மூத்த கலைஞர்களிடம் இருந்து கதை தொகுப்புக்களை மலையக இளைஞர்கள் களத்திலிருந்தே கற்று தேர்ந்து வருகின்ற நிலையானது குறிப்பிடத் தக்கதாகும். இதற்கு மேலாக இன்றைய உயர்கல்வி நிலையங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் காமன் கூத்து கலை பற்றிய தெளிவை பெற்று பாதுகாக்கும் வகையில் காமன் கூத்து பற்றிய கற்கை மற்றும் ஆய்வானது நாடகமும் அரங்கியலும் என்ற பாடப் பகுதி ஊடாக இடம்பெற்று வருகின்றமையானது காமன் கூத்து கலை மேலும் வலுப் பெற இன்று உதவிப் புரிகின்றது.

 இவ்வாறு இடம் பெறும் காமன் திருவிழாவிற்கு இன்றைய நாளலளவில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும் அதே வேலை தோட்ட மக்களால் காமன் பண்டிகையை கொண்டாடும் விதமாக வழங்கப்படும் அன்னதான அன்பளிப்புக்கள் ஊடாக விழா நிறைவில் அன்னதான நிகழ்வும் இடம் பெருகின்றமையும் குறிப்பிட தக்கது. இப் பண்டிகைக்கு செலவாகும் பணமானது தோட்ட மக்களிடமிருந்து கிடைக்கும் அன்பளிப்பு மற்றும் காணிக்கைகள் ஊடாகவே இடம் பெறுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது. இவ்வாறு பல தடைகளை கடந்தும் மலையகத்தின் தனித்துவமாய் மலையக மக்களின் கலாச்சாரத்தின் தனித் தன்மையில் அரங்கேறும் இக் காமன் கூத்து பற்றிய அறிமுகத்தை மலை மாந்தரின் வாழ்வியலோடு பயணிக்கும் தன்மையை அறிந்து கொண்ட நாமும் மலையகத்தில் அரங்கேறும் நேரடி கூத்துக் களத்தில்  கண்டு மகிழ்ந்திடுவோம். 

அன்புடன் மலையக கவிஞன் :
மு.அனுஷன்

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow