மானிடருள் யார் உயர்ந்தோர்?  [ஆணா? பெண்ணா?]

Mar 13, 2023 - 13:18
Mar 15, 2023 - 20:36
 0  75
மானிடருள் யார் உயர்ந்தோர்?  [ஆணா? பெண்ணா?]

உலக படைப்புகளுள் உயிரின படைப்பே மிக உன்னதமான படைப்பு அதிலும் மானிடர் எனும் சிறப்பு மதியின் வழி தனித்துவம் நிறைந்த படைப்பு. இம் மானிடருள் ஆண்,பெண் என இரு பாலின வேறுபாடுகளை கொண்டிருப்பதை போலவே வேறுபாட்டின் வழியதில் பல தனித் தன்மைகளையும் தனக்கே உரிய இயல்புகளையும் கொண்டு தேர்ந்தவர்கள் என்பதோ இறைவனது படைப்பாய் அமைந்தது என்பது நாம் யாவரும் அறிந்ததே. இம் மானிடருள் ஆண்,பெண் எனும் பால் நிலை வேறுபாடுகள் காணப்பட்டாலும் கூட இவ் இருவரது இணைவை நம்பியே இப் பாருலகமானது இயங்கிக் கொண்டிருக்கின்றது. இன்றைய விஞ்ஞான மெய் நிகர் துரித வளர்ச்சி காலகட்டத்திலும் ஆண்,பெண் எனும் இரு பாலாரது இணைவு அல்லது சேர்க்கையானது என்று நிறைவுருகிறதோ! சேறும் வழியற்று போகிறதோ! ஆண் ,பெண் இல்லற வாழ்வை  இல்லாமல் போகிறதோ! அதன் வழி தடத்திலேயே மானிடர் எனும் உயிரி மட்டுமல்ல உயிர் கோளத்தினது இருப்பும் படிப்படியாக அழிந்து பூகோளத்தினது தனி சிறப்பும் வலு இழந்து போகும் என்பதே மனித கணக்கு. 
 
இத்தனை சிறப்புகளை கொண்ட இரு பாலின மானிடர்களுள் ஆண்கள் எனும் அடையாளத்தை கொண்டவர்கள் தன்னை வீரத்திலும், தனது வலிமையாலும் தன்னை தனித்துவப்படுத்திக் கொள்கிறார்கள். ஆணின் வீரச் சிறப்பை பழைமை தொட்டே, சங்க இலக்கியங்கள் ஊடான ஆதாரங்கள் வழியாகவே அடையாளப்படுத்திக் கொள்ள கூடியதாக உள்ளது. அவ்வாறு தமிழின ஆரம்ப காலமான சங்க காலத்தில் ஐந்து நில வேறுபாட்டின் அமைவிலும் தன் நிலங்களை காத்தலை முதற் கொண்டு தன் ஜுவணோபாயம் வரைக்கும் தன் வீரத்தை நில ஒழுங்கில் பயன்படுத்தி வந்துள்ளான் ஆண் என்பவன். அவ்வாறு ஐநில அடிப்படையில் வெட்சி,வஞ்சி,உழிஞ்சை,தும்பை,வாகை என அங்கு மலரக் கூடிய பூக்களை தன் வெற்றியின் சின்னமாக,அணிந்து தன் வீரத்தை போர்களத்தில் நிரூபித்தவன் ஆண் என்பதை சங்க இலக்கியங்கள் மிக தெளிவுற கூறி அமைந்திருப்பதை நாம் அறிவோம். அன்றைய வரலாற்று ஆரம்பம் முதல் தன் வீரதீர செயலாலும் தனித்துவமான பலத்தாலும் கதையின் நாயகனாக திகழ்ந்தவர்கள் ஏன் இன்றும் வீரத்துக்கும் வலிமைக்கும் பெயர் போனர்கள் ஆண்கள். 

ஆண் எனும் மானிடப் பிரிவினர் மகத்தானவர்களாய் இன்று வரை போற்றப்படுபவர்கள். காரணம் தன்னை நம்பிய பெண் என்பவளை, தன்னை நம்பிய குடும்பத்தை , ஏன் தன்னை நம்பிய சமூகத்தை தளராது தன் பலத்தாலும் அறிவாற்றலாலும் காத்து நிற்பவன் ஆண். தன் சுக போக வாழ்க்கைக்கு அப்பாற் தன்னை சார்ந்தோருக்காக தன் முழுமையான ஆளுமையினை வழங்கி காக்க கூடிய தனித் தன்மை கொண்டவனாக ஆண் என்பவன் அமைகிறான். ஆண் என்பவனது சிறப்பை இத்தோடு இடை நிறுத்திவிட முடியாது. குடும்ப கட்டமைப்புக்குள் குடும்பத் தலைவன் எனும் ஸ்தானத்தில் தொடங்கி தந்தையாக, மகனாக, சிறந்த பாதுகாவலனாக என தொடங்கி சமூகம், நாடு,சர்வதேசம் எனும் வகையில் தன் தனித்துவத்தால் சிறப்பு கொள்கிறான் ஆண். சிறந்த ஆணின் தனித் தன்மையை ஆண் என்பவனின் அவசியத்தை தாய்,மகள்,துணைவி என குடும்ப கட்டமைப்பிலிருந்தே அறிந்து கொள்ள முடியும். அத்தனை பெருமைக்குரியவன் ஆண் எனப்படுபவன் ஒரு ஆணுக்கு நிகர் அவனே. 

இவ்வளவு தெளிவாக ஆணினம் பற்றி ஆராய்ந்த நாம் பெண்ணிணம் பற்றியும் அறிந்து கொள்வதும் மிக அவசியமானதல்லவா!, ஆம் மாற்சிமை உடையவர்களான பெண்கள் உடலால் இறைவன் படைப்பதில் ஆணை காட்டிலும் சற்று மென்மை தன்மை உடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டாலும் ஆண்களுக்கு நிகரில்லா தனித் தன்மை கொண்டவர்களாகவே அமைகின்றனர். ஆண்களை காட்டிலும் அன்பினாலும் அரவணைப்பினாலும் தனித்துவமானவர்கள் பெண்கள். பெண்மையின் அடையாளமாக அன்பு, அழகு,அரவணைப்பு,மென்மை முதலானவை திகழ்கின்றன. பெண்கள் என்பவர்கள் ஆணின் சேவையாளர்களாகவும் ஆண்கள் பெண்களை விடவும் மேலானவர்களாகவும் ஆரம்பம் முதல் அடையாளம் காட்டுகின்றது தமிழும் தமிழ் இலக்கியங்களும். தமிழ் இலக்கியங்களுள் சங்க இலக்கியங்களை முதன்மை கொண்டு பெண்களை ஆணிலிருந்து வீரத்தாலும் பலத்தாலும் சற்று விளக்கி பார்ப்பதையும் இரண்டாம் நிலை தருவதையும் நாம் அறிவோம். சங்க காலம் தொட்டு ஆண்களின் சேவகர்களாக ஆண்களுக்கு பணி புரியும் அடிமை பட்டோராக ஆண்களை மகிழ்விக்கும் அழகு பொருளாக இலக்கியங்கள் சித்தரிக்கப்பட்டு வருதை நாம் அறிவோம். இப் பெண்கள் ஆண் என்பவனுக்காக தன்னை அர்ப்பணித்து பின் அவனது மரண தருவாயிலும் ஆணோடு,தன் தலைவனோ உடன்கட்டை ஏறும் மரபுகளை கூட நம் தமிழ் இலக்கியங்கள் இன்று வரையும் சுமந்தே பயணிக்கின்றது.

பெண் என்பவள் வீரத்தால் ஆணுக்கு நிகரில்லை, உடல் பலத்தால் ஆணுக்கு நிகரில்லை பெண் என்பவளால் ஆணை போல் தனித்து வாழ முடியாது, பெண் என்பவளால் ஆணின்றி இவ் உலகில் வாழவோ நிலைக்கவோ முடியாது என்பதே நம்மில் முதன்மை சமூகத்தினர் பெண்ணை பின்னிலைப் படுத்த காரணமாக அடையாளப்படுத்துகின்றனர். எனினும் குடும்பத்தை அடித்தளமாக கொண்டே ஒரு குடும்பத்தில் பெண் என்பவளது நிலைப்பு தன்மை, ஒரு குடும்பத்தில் தாயின் இன்றியமையாத நிலை,தாரத்தின் வகிபங்கு, ஏன் மகளாக ஒரு குடும்ப நிலைப்பில் பெண்ணானவளது நிலைப்பில் முதற் கொண்டு பெண்மையின் சிறப்பும் ஆணுக்கு தன்னிகரற்றதே. பெண்மையின் நிலைப்பு இவ் உலகில் பேரவசியமானதே, பெண்மையின்றி இவ் உலகு இயங்காது என்றாலும் அதுவும் ஏற்புடையதே. 

ஆணுக்கு நிகராகவோ முதன்மையாகவோ பெண் என்பவள் இல்லை என்பது உண்மை தான் அதே போல மறுபுறம் பெண்ணுக்கு நிகராகவோ முதன்மையாகவோ ஆண் என்பவரும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியதும் மிக அவசியமே. தொண்மைக் காலம் தொட்டே ஆண்களை கதா நாயகர்களாய் முதன்மையானவய்களாய் சிறப்பித்து போற்றும் நம் மூத்த சமூகம் பெண் என்பவளுக்கும் ஆரம்பம் முதலே வீரத்துக்கான பலத்துக்கான பயிற்சியை வழங்கி இருந்தாலோ ஆணுக்கு நிகரான கல்வி அறிவை வழங்கி இருந்தாலோ பெண் என்பவளானவளும் வீரம் மிக்கவளாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பால் என்பதை நாம் ஏற்றுக் கொள்வது மிக அவசியமே. 

“அடுப்பை ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு” என வினவிய சமூகத்தை எதிர்த்து தன் கவிக் குரலால் பெண்களுக்கு உரிமைக் குரலாய் உரைத்த பாரதியை முன்னிறுத்தி பெண்ணியத்தை எண்ணிப் பார்ப்போம்.  அன்றிலிருந்து படிப்படியாக ஆண்களுக்கு சமனாய் சில சமயங்களில் ஆணுக்கு சமச்சீராய் பெண்களுக்கு உரிமை கொடுத்து ஊக்குவித்த சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை எண்ணி மகிழ்வோம். அவ்வாறு ஆணுக்கு நிகராகவோ, சமச்சீராகவோ பெண்ணுக்கும் உரிமை வழங்கப்பட்டதன் வெற்றியே முதல் பெண் விண்வெளி வீராங்கனையாக பெண் சமூகத்துக்கு பெருமை சேர்த்த கல்பனா ச்ஹவுலாவையும் அந்த வீர மங்கையின் வழி தடத்தில் இன்றைய நாசா விண்வெளி களத்தில் இன்னும் பல வீர மங்கைகளையும் அடையாளம் காண முடிகின்றது. விளையாட்டு துறையில் இலங்கை நாட்டை தன் பதக்கத்தால் பெருமை அடையச் செய்த வெற்றி மங்கை சுசந்திக்கா ஜயசிங்கவின் வழி தொடர்ந்து இன்று சகல நிலை விளையாட்டு துறையிலும் நம் நாட்டு பெண்களுக்கான வாய்ப்பும் கிடைக்க பெற்றுள்ளது. இது மட்டுமா ? உலக நாடுகளையே திரும்பி பார்க்க செய்த இலங்கை அரசியலின் முதல் பெண் பிரதமராக அரசியலில் களம் கண்ட கௌரவ சிறிமாவோ பண்டாரநாயங்கவின் வழி தொடர்ந்து இன்று அரசியலிலும் பெண்களின் ஈடுபாட்டு தன்மையானது இன்று வரையிலும் இன்றி அமையாததாகவும் வலுப் பெற்றதாகவும்  அமைகின்றது.

இப் பெண்ணிய சமூகத்திற்கு பல துறையில் சாதனைகள் படைக்க வழித்தடம் இட்டவர்கள் வழியதில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு சமூகமும் பெண்களை களம் காண முழு மன திருப்தியோடு அனுப்பி வைத்து உந்து சக்தியாக தொடர்ந்து நின்று ஆதரவு வழங்குவதன் மாறு முனையே, மாற்று வடிவமே ஆணுக்கு நிகரென பெண்ணிய சமூகத்தை இன்று எம்மால் காணக் கிடைக்கின்றது. அன்று ஆணின் வீரத்திலும் வெற்றியிலும் ஆற்றுப்படுத்திய தாயாக, சகோதரியாக,துணைவியாக பங்கு கொண்ட பெண்ணிய சமூகத்தின் இன்றைய சரி நிகரான சகல துறை சார் வெற்றியிலும் ஆண்களின் பங்களிப்பானதும் தந்தையாக, சகோதரனாக, கணவனாக என பல நிலையிலும் பெண்ணிய சமூகத்திற்கு வலுச் சேர்க்கின்றது.

இப் பின்னணியில் இருந்து அறிந்து கொள்ள வேண்டியது ஒன்று மட்டுமே அது ஆண், பெண் எனும் இரு பால் நிலையையுடைய மானிடர் சமுதாயத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனும் பால் நிலை வேறுபாடு என்பதொன்று இல்லை என்பதே. ஒர் ஆணை விடவும் பல மடங்கு வீரத்தையும் முழுமையான பலத்தையும் ஒரு பெண் தன் பிள்ளையை தன் உடல் பிளந்து பிறப்பிக்கும் தருவாயில் ஒரு ஆணால் அறிந்து கொள்ள முடிகின்றது. அதே சமயம் ஒரு பெண்ணாணவள் பிரசவ வலியின் கொடூரத்தால் துடிக்கும் பொழுது அதை காணும் ஒரு ஆணின் மென்மையும் துயர் நிலையும் பெண்ணிலும் பல மடங்கு உயர்ந்ததே. இங்கு பெண்ணின் மேலான இயல்பின் பல மடங்கை ஓர் ஆணிலும் ஆணின் பலத்திலும் நிகரில்லாத சக்தியினை பெண்ணில் காண்கின்றோம் இதுவே இயற்கையினதும் இறைவனதும் படைப்பு.

இதன் வழி நாம் அறிந்து கொள்வதாவது இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் பயணிக்கும் நம் சமூகத்திலும் இன்னும் மானிடருள் யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்? ஆணா? பெண்ணா? என்ற கேள்வி நம்மில் தோன்றா வண்ணம் ஆணை பெண்ணும் பெண்ணை ஆணும் சிறந்த புரிதலாலும் உயர்நிலை மனப்பாங்காலும் தன்னையும் தன் சமூகத்தையும் ஆற்றுப்படுத்தி கொள்வது மாத்திரமே. உலக படைப்புக்களில் மேன்மைதகு படைப்பான மானிடரெனும் படைப்பில் ஆணினதும் , பெணினதும் எனும் சரி நிகர் தன்மையின் சிறந்த வெளிப்பாடே சிறந்த மனித சமூகம் என்பதை அறிந்து கொள்வோம் . ஆணின் பார்வை பெண் எனப்படுபவள் இவ் உலக நிலைப்பின் தேவதையாகவும் பெண்ணியத்தின் பார்வையில் ஆண் எனப்படுபவன் பாருலகில் தன் மேலான  பாதுகாவலன் எனும் என்னம் மனதில் ஈடேறும் நொடியதில் தொடங்கி மனித சமூகம் வேறுபாடின்றி மகத்தான ஒரு சமூகமாய் வாழும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இனியும் சிறப்பான புரிதலோடு உலகின் முடிவென்பதில்லை என்பதை அறிந்து வாழும். 

ஆணும் பெண்ணும் சமமென கருதின் அங்கில்லை பிரிவின் பால் சண்டைகளோ துயர் நிலைகளோ. அதை அறியா சில மூடர் சமூகமே தன்னிலை மறந்து தாங்கள் தான் முதன்னிலை சமூகம் என பெரும் பெருமையால் வசை பாடி கொள்கின்றனர். இன்றும் யார் உயர்தோர் எனும் எண்ணம் கொண்ட மூடர் சமூகமே இன்று இல்லற வாழ்க்கையது இனிக்கவில்லையென புழம்பி தீர்த்தும் முடியாமல் விவாகரத்து நோக்கியும் அதன் வழியில்  மாதம் ஒருமுறை என நீதி கோரி நீதி மன்றங்களை நோக்கியும் படைத் தொடுக்கின்றனர். சில நொடிகளில் தீரும் மன நிலைகளை மாற்றிக் கொள்ள மனமில்லாமல் தன் வாழ்வையே துறக்க நினைக்கின்றனர். இதற்கான முழுமை காரணம் புரிதலின்மையும். யார்?,தான் தான் உயர்ந்தவன் என்ற எண்ணங்களும் மாத்திரமே. எண்ணங்களில் ஆண் பெண் புரிதல் கொண்டால் அங்கில்லை ஆண் பெண் உயர்வு தாழ்வு. இனிப்பாய் இனித்திடும் மனித வாழ்வு. 

பெண்ணியம் அழகே 
பெண்ணியத்தின் பெருமை கொள்
எண்ணங்களால் -ஆண்மையும் பேரழகே
இணையில்லா இவ் உலக படைப்பில் யாருக்கும் யாரும் நிகரென படைக்கப் படவில்லையே அவ்வாறு படைப்பிருந்தாலும் மனிதனது தனித்தே சுக போகமின்றி தனித்து விழுந்த ஆலம் விதையாய் பிறப்பு முதலே துரவரத்தில் தொடங்கி துரவரமாகவே துவண்டு போயிருக்குமே. இந் நிலையில் உலகு அமைந்திருந்தால் உலகில் மனித இனத்தின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்திருக்குமே. சற்று சிந்திப்போம் . படைத்தவன் வழியதில் பக்குவமாய் நடப்போம். புரிதலால் புன்னகைத்து மகிழ்வோம். நாம் யாவரும் மானிடரே என பெருமை கொள்வோம். உலக மானிடர் நாம் யாவருமாய் மகத்துவமாய் வாழ்வோம்.

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow