என்னை பொன்ஸ் என்று கேலி செய்வார்கள்.!ஆனாலும் என்னை நான் மாற்றி கொண்டேன்.

பிறப்பில் ஆணாக இருந்தும் பெண்ணைப்போல் உடல்மொழியை கொண்ட ஆண்கள் தங்களை மாற்றி கொள்ள இப்பிடி செய்யுங்கள்.

என்னை பொன்ஸ் என்று கேலி செய்வார்கள்.!ஆனாலும் என்னை நான் மாற்றி கொண்டேன்.

கேள்வி:-
நான் 25 வயது நிரப்பியவன். ஆண் உடலில் இருந்தாலும் சிறு பெண் உடல்மொழி இருப்பதனால் கல்லூரி வரை என்னுள் இருக்கும் பெண்மையை கேலி கிண்டல் செய்து, சில தகாத தொடுவதையும் எதிர்கொண்டேன். இன்று எனது வேலை இடத்திலும் இது தொடர்கிறது. எப்படி இதனை எதிர்கொள்வது?

பதில்:-
நான் கோராவில் ஒரு வழிப்போக்கன் மட்டும்தான்,பெரிதாக பதில்கள் எதையும் எழுதுவதில்லை. இருந்தபோதிலும் இந்த கேள்விக்கு பதில் எழுத தோன்றுகிறது.

அதற்கான காரணம் என்னவெனில் நானும் உங்களைப் போன்ற கசப்பான அனுபவங்களை அனுபவித்து இன்று அந்த நிலையிலிருந்து விடுபட்டவன்.

எனக்கு தெரிந்த வகையில் ஒரு ஆணுக்குள் எப்படி பெண் தன்மை ஊடுறுவுகின்றது என்பதை விளக்குகிறேன்,சற்று புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

தம்மைச்சுற்றி நடக்கும் விடயங்களை அவதானித்து அவற்றை உள்வாங்கிக்கொள்வதென்பது பொதுவானதொரு மனித இயல்பு.

ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் சுற்றுச்சூழலில் உள்ள விடயங்களை உள்வாங்கிக்கொள்ளும் இயல்பானது அதிகமாக இருக்கும்.உதாரணத்திற்கு ஒரு சிலருக்கு ஆக்ஷன்(Action) திரைப்படங்களை பார்த்தால் முடிவில் அவர்களும் அதில் வரும் ஹீரோக்களைப் போன்று நடந்துகொள்வார்கள்.எந்த அளவுக்கென்றால் இவர்களது நடை கூட ஹீரோவின் நடையை ஒத்ததாகவே மாறிவிடும்.அந்த அளவுக்கு அவர்கள் அந்த திரைக்கதையில் கண்ட காட்சிகளை உள்வாங்கி இருப்பார்கள்.இவ்வாறு பல விடயங்களில் உள்வாங்கிக் கொள்ளும் (observance) இயல்பை அதிகமாக கொண்டவர்களுக்கு அந்த இயல்பே ஆப்பாக அமைந்துவிடும் சந்தர்ப்பங்களும் உள்ளது.அவ்வாறானதொரு சந்தர்ப்பம்தான் ஒரு ஆண் ஒரு பெண்ணின் இயல்பை உள்வாங்கி நடந்துகொள்வது.

ஆண்கள் சிறு வயதில் அம்மா,அக்கா,தங்கை,தோழிகள் என பல வகையில் பெண்களுடன் கலந்திருப்பார்கள்,இது இயல்பானதே!

ஆனால் அங்குதான் நான் மேற்சொன்ன இயல்பை அதிகமாக கொண்டவர்கள் தம்மை அறியாமல் மாட்டிக்கொள்கிறார்கள்,இவர்கள் பெண்களோடு பேசும் போதோ அல்லது விளையாடும் போதோ முற்றுமுழுதாக அவர்களது நடை உடை பாவனை என அனைத்தையுமே உள்வாங்கிக்கொள்கிறார்கள். பிற்காலத்தில் அவர்களையே அறியாமல் சினிமாவில் ஹீரோவைப்பார்த்து விட்டு இவரும் ஹீரோவைப்போலவே நடப்பது போன்று பெண்களையே பார்த்து வளர்ந்த ஒருவரும் பெண்களைப் போன்றே மாறிவிடுகிறார்.

நான் மேற்சொன்ன பிரச்சினையை எதிர்கொள்ளும் ஆண்களில் பெரும்பாலானவர்கள் தன் வீட்டில் அவர் மட்டுமே ஆணாகவோ அல்லது அவர் வசிக்கும் பகுதியில் அவருடைய வயதை ஒத்த நிறைய பெண் தோழிகளை கொண்ட ஒருவராகவோ அல்லது தன் தாயை அளவு கடந்து நேசிக்கும் ஒருவராகவோதான் இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட வயது வரை சமூகத்தை எதிர்கொள்ளாததனால் இவர்களுக்குள் வெளிப்படும் பெண் தன்மை பெரிதான ஒன்றாக வெளியில் தெரியாது.இவரை சுற்றியிருக்கும் யாரும் அதை பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.

பெண்ணின் நடத்தை கொண்ட ஒரு ஆணின் தாய் ஒரு நாளும் அவனைப் பார்த்து நீ பெண்களின் நடத்தையை கொண்டிருக்கிறாய் என சொல்ல மாட்டார்,மாறாக அவன் மீதுள்ள பாசம் இன்னுமின்னும் அதிகரிக்கும்,காரணம் அவன் அப்போது அதிக மென்மையுடையவனாய் இருப்பான்,மென்மையான குழந்தையை வெறுக்கின்ற தாய் இருப்பார்களா இந்த உலகில்?

ஆனால் இவ்வாறான ஒருவர் வளர்ந்து சமூகத்தை எதிர்கொள்ளும் போதுதான் பிரச்சினை தலைக்கேறும்.

பெரும்பாலானவர்கள் அந்த நேரத்தில்தான் தனக்குள் இவ்வாறானதொரு மாற்றம் இருப்பதையே கண்டுகொள்வார்கள்.

எனக்கும் அதுதான் நடந்தது,ஆண் பெண் கலந்த பாடசாலை ஒன்றில் குறிப்பிட்ட காலம் வரை படித்து விட்டு தனியான ஆண்கள் பாடசாலைக்கு மாறிய போதுதான் வாழ்க்கை இருண்டு போனது.

வகுப்பறையை விட்டு வெளியே கால் வைக்க முடியாது,மீறி வைத்தால் எங்கோ இருந்து பல குரல்கள் என் மீது விழும் "பொன்ஸ்" , "ஒன்பது" என்றெல்லாம் கூவி அழைப்பார்கள்.என்னை அப்படி அழைப்பதால் அவர்களுக்கு என்னதான் சந்தோஷம் என தெரியவில்லை எனக்கு.

அவர்களை விட நான் எந்தவிதத்திலும் குறைந்திருக்கவில்லை, விளையாட்டிலும் சரி,படிப்பிலும் சரி நல்ல ஈடுபாடுடையவனாகத்தான் இருந்தேன். இருந்தும் என்னை அவர்கள் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். "டேய் பொன்ஸ்,போடா " என்று விரட்டுவார்கள். சற்று அதிகமாகவே கவலைப்பட வைத்து விட்டார்கள்.

ஒதுக்கியே வைப்பார்கள் எப்போதும். இருந்தும் 3 நண்பர்கள் எனக்கு இருந்தார்கள் அப்போது. அவர்கள் என்னை ஒதுக்கியதில்லை. என்னிடமுள்ள குறையை பற்றி அவர்கள் பேசியதுமில்லை.எனக்கிருந்த ஆறுதல் அவர்கள்தான் அப்போது.

நிறைய யோசித்தேன் ஏன் நான் இப்படி மாறினேன் என்று, கண்ணாடியின் முன்னால் நின்று நடந்து பார்ப்பேன், என் உடல் மொழியை மாற்றி மாற்றி எது சரியாக இருக்கின்றது என எனக்கு நானே பரீட்சித்துப்பார்ப்பேன்,

ஜிம் செல்ல வேண்டுமென தோன்றியது ஆனால் அதற்கான வசதி குடும்பத்தில் இல்லை,சோற்றுக்கே பெரும்பாடு இங்கு.

ஆனால் ஜிம் செல்பவர்கள் நெஞ்சை நிமிர்த்தி எவ்வாறு நடந்து செல்கிறார்களென அவதானித்து அவர்களைப்போல் என் நடையை மாற்றிக்கொண்டேன்.

மற்றவர்களுடன் பேசும் போது கைகளை ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் விட்டுக்கொள்வேன்,குரலில் சற்று வன்மையை பிரயோகித்து எனக்குள் இருந்த நளினத்தை வெளியில் தெரியாதவாறு மாற்றிக்கொண்டேன்.

இரண்டு ஆண்டுகள் கழிந்து அந்த பாடசாலையிலிருந்து வெளியேறி மேற்படிப்புக்காகவென சென்ற பின்னர்தான் எனக்கிருந்த பெயர் அழிந்து போனது.

இப்போது யாரும் என்னை அவ்வாறு அழைப்பதில்லை, பழைய பாடசாலையில் என்னை கேலி செய்த பலர் இன்று என்னை அடையாளம் கண்டு கொள்வதும் இல்லை.அப்படியே என்னை அடையாளம் கண்டாலும் வாயில் கை வைக்கிறார்கள் நீயா இது என்று, ஏனெனில் அன்று அவர்கள் கண்ட பொன்ஸ் வேறு, இன்று அவர்கள் முன் நின்று பேசும் நான் வேறு. இன்று என் உடல் மொழி முற்றிலும் வேறு பட்டது. எந்த இயல்பால் நான் பெண்களைப்போன்று நடந்துகொண்டேனோ அதே இயல்பைக்கொண்டு நான் இன்று ஹீரோக்களை போன்று நடந்துகொள்கிறேன்;என்னை நான் மாற்றிக்கொண்டேன். இன்று எனது சோஷியல் மீடியா போட்டோக்களை பார்க்கும் போது பலருக்கும் ஆசை வருகிறது, என்னை தொட வேண்டுமென்று அல்ல, என்னைப்போல் ஆக வேண்டுமென்று.

அன்று நான் இது ஹோர்மோனில் ஏற்படும் மாற்றம், இதுதான் என் தலைவிதியென்று நினைத்திருந்தால் இன்று நான் புடவை கட்டிக்கொண்டு லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டுதான் இருந்திருப்பேன்.

உங்களுக்கு நான் கூறும் அறிவுரை என்னவெனில், "மாற்றிக்கொள்ளுங்கள் உங்களை, உங்களை கேலி செய்பவர்கள் உங்களை கண்டு வாயில் கை வைக்கும் படி மாற்றிக்கொள்ளுங்கள்", நீங்கள் தற்போது வேலை செய்யும் இடம், வசிக்கும் இடம் என எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளுங்கள் குறைந்தது ஒரு வருடத்திற்கு.

அந்த ஒரு வருடத்தில் ஜிம்முக்கு செல்லுங்கள்,நன்றாக விளையாடுங்கள்.

அடிக்கடி கண்ணாடி முன் நின்று உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், என்னவெல்லாம் குறைகளுள்ளது என்று பாருங்கள், நீங்களே திருத்தங்களை செய்து கொள்ளுங்கள்.

உங்கள் விம்பத்தோடு நீங்களே பேசுங்கள்,உங்கள் உடல் மொழியை கவனித்து நீங்களே மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.

இது ஹோர்மோனில் ஏற்படும் மாற்றம்,நீ இவ்வாறு பிறந்தது உன் குற்றமல்ல என்று உங்களிடம் யாராவது கூறினால் நினைத்துக்கொள்ளுங்கள் உங்கள் முதல் எதிரி அவர்கள்தான்,

பிறப்பில் ஆண் உறுப்போடு பிறந்த ஒருவன் நடத்தையில் பெண்ணாக இருக்கிறான் என்றால் தவறு பிறப்பில் அல்ல, தன் நிலையை சரியாக புரிந்து கொள்ள முடியாத அவன் மனதில் இருக்கிறது.

உங்களை அவ்வளவு கேலி செய்தும் கல்லூரி படிப்பெல்லாம் முடித்து வேலை வரைக்கும் வந்த உங்களுக்கு உங்கள் மீதுள்ள குறைகளை சற்று மாற்றிக்கொள்வதென்பது பெரிதல்ல,

முயன்று வா நண்பா!