தந்திரோபாய முகாமைத்துவத்தின் வெளியகச் சூழல்: வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள், தொழிற் போட்டி மற்றும் போட்டியாளர் பகுப்பாய்வு | Strategic Management External , Competitive, Strength and opportunities Analysis

பொதுச் சூழலின் கூறுகள் மக்கட்சூழல் பிரிவு பொருளாதாரப் பிரிவு அரசியல்/சட்டப் பிரிவு சமூக-கலாச்சாரப் பிரிவு தொழில்நுட்பப் பிரிவு பூகோளச்சூழல் பிரிவு தொழிற்துறைச் சூழல் தொழிற்துறைச் சூழல் பகுப்பாய்வு புதிதாக நுழைபவர்களின் அச்சுறுத்தல் வழங்குநர்களின் பேரம் பேசும் சக்தி வாடிக்கையாளர்களின் பேரம் பேசும் சக்தி பதிலீட்டுப் பொருட்களின் அச்சுறுத்தல் போட்டியாளர்களிடையே போட்டியின் தீவிரம் போட்டியாளர் சூழல் போட்டியாளர் பகுப்பாய்வு

Feb 8, 2023 - 06:52
 0  103
தந்திரோபாய முகாமைத்துவத்தின் வெளியகச் சூழல்: வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள், தொழிற் போட்டி மற்றும் போட்டியாளர் பகுப்பாய்வு | Strategic Management External , Competitive, Strength and opportunities Analysis
  1. பொது, தொழில் மற்றும் போட்டியாளர் சூழல்கள் (The General, Industry, and Competitor Environments)

நிறுவனங்கள் நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளவும், எதிர்காலத்தைக் கணிக்கவும் வெளியக மற்றும் உள்ளகச் சூழல்களைப் பற்றிய ஒருங்கிணைந்த புரிதல் அவசியாகும். தந்திரோபாய முகாமைத்துவத்தில் ஒரு நிறுவனத்தின் வெளியகச் சூழல் மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

1. பொதுச் சூழல்

2. தொழிற் சூழல்

3. போட்டியாளர் சூழல்.

  • பொதுச் சூழல் என்பது பரந்த சமுதாயத்தில் உள்ள பரிமாணங்களால் ஆனதுடன் குறிப்பிட்ட தொழிற்துறை மற்றும் அதில் உள்ள நிறுவனங்களை பாதிப்பதாகவும் உள்ளது.
  • பொதுச் சூழலின் பிரிவுகளையும் கூறுகளையும் நிறுவனங்களால் நேரடியாகக் கட்டுப்படுத்தமுடியாது. அதன்படி, வெற்றிகரமான நிறுவனங்கள் ஒவ்வொரு பிரிவையும் புரிந்துகொள்வதற்குத்தேவையானதும் பொருத்தமான தந்திரோபாயங்களைத் தேர்ந்தெடுத்து செயற்படுத்துவதில் அதன்தாக்கங்கள் பற்றிய தகவல்களையும் சேகரிக்கின்றன.

  • தொழிற் சூழல் என்பது ஒரு நிறுவனம் மற்றும் அதன் போட்டி நடவடிக்கைகள் மற்றும் போட்டிக்கு பதில்ளிக்கும் நடவடிக்கைகள் என்பவற்றை நேரடியாக பாதிக்கும் காரணிகளின் தொகுப்பாகும்: புதிதாக நுழைபவர்களின் அச்சுறுத்தல், வழங்குனர்களின் பேரம் பேசும் சக்தி, கொள்வனவாளர்களின் பேரம் பேசும் சக்தி, பதிலீட்டுப் பொருட்களின் அச்சுறுத்தல் மற்றும் போட்டியாளர்களிடையே போட்டியின் தீவிரம் என்பன இதனுள் அடங்கும்.
    ஓட்டுமொத்தமாக இவ் ஐந்து காரணிகளுக்கிடையேயான இடைத்தொடர்புகள் ஒரு தொழில்துறையின் இலாபத் திறனைத் தீர்மானிக்கின்றன. ஒரு நிறுவனம் அந்த காரணிகளை சாதகமாக பாதிக்கக்கூடிய அல்லது அவற்றின் செல்வாக்கிற்கு எதிராக வெற்றிகரமாக தற்காத்துக் கொள்ளக்கூடிய ஒரு தொழிலில் ஒரு நிலையை கண்டறிவதே இங்கு சவாலான விடயமாகும்.

  • மேலும், நிறுவனங்கள் தங்கள் போட்டியாளர்களைப் பற்றிய தகவல்களை எவ்வாறு சேகரித்து விளக்குகின்றன என்பது போட்டியாளர் பகுப்பாய்வு என்று அழைக்கப்படுகிறது. நிறுவனத்தின் போட்டியாளர் சூழலைப் புரிந்துகொள்வதற்கு பொது மற்றும் தொழிற் சூழல் பகுப்பாய்வின் மூலம் பெறப்பட்ட நுண்ணறிவுகள் மூலம் நிறைவு செய்யப்படுகின்றது.

பொது சூழலின் பகுப்பாய்வு எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் அதேவேளை தொழிற்துறை சூழலின் பகுப்பாய்வு அதன் தொழில்துறையில் ஒரு நிறுவனத்தின் இலாபத்தை பாதிக்கும் காரணிகள் மற்றும் நிபந்தனைகளின் மீது கவனம் செலுத்துகிறது. மேலும் போட்டியாளர்களின் பகுப்பாய்வு போட்டியாளர்களின் செயற்பாடுகள், பதில்கள் மற்றும் அவற்றிலான வேறுபாடுகள் என்பவற்றைக் கணிப்பதில் கவனம் செலுத்துகிறது.

மூன்று பகுப்பாய்வுகளின் முடிவுகள், அதன் வெளிப்புற சூழலைப் புரிந்து கொள்ள நிறுவனம் பயன்படுத்தும் அதன் பார்வை, பணி மற்றும் தந்திரோபாயச் செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

வெளியகச் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு (External Environmental Analysis)

பெரும்பாலான நிறுவனங்கள் மிகவும் சிக்கலான, விரைவாக மாறக்கூடிய உலகளாவிய ரீதியிலான வெளியகச் சூழல்களை எதிர்கொள்கின்றன. பெரும்பாலும் தெளிவற்ற மற்றும் முழுமையற்ற சுற்றுச்சூழல் தரவைச் சமாளிக்கவும், பொதுச் சூழலைப் பற்றிய அவர்களின் புரிதலை அதிகரிக்கவும். நிறுவனங்கள் வெளியகச் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு எனப்படும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றன.

வெளியகச் சுற்றுச்சூழல் பகுப்பாய்வின் தொடர்ச்சியான செயல்முறை நான்கு செயல்பாடுகளை உள்ளடக்கியது:

1.பகுப்பாய்வு செய்தல் (Scanning) :பகுப்பாய்வு செய்தல் என்பது பொதுச் சூழலில் உள்ள அனைத்துப் பிரிவுகளையும் பகுப்பாய்வு செய்யும். இதன் மூலம், நிறுவனங்கள் பொது சூழலில் சாத்தியமான மாற்றங்களின் ஆரம்ப சமிக்ஞைகளை அடையாளம் காண்பதோடு ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைக் கண்டறிகின்றன.

உதாரணமாக, தங்கள் தளங்களைப் பார்வையிடுபவர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கு இணையம் Cookies" களைப் பயன்படுத்துகிறது.

2. கண்காணித்தல் (Monitoring): சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் போக்குகளின் தொடர்ச்சியான அவதானிப்புகள் மூலம் விடயங்களைக் கண்டறிதல்.

உதாரணமாக, அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கர்களின் நடுத்தர வர்க்கத்தின் அளவில் ஏற்படும் தொடர்ச்சியான வளர்ச்சியானது, அதிகரித்து வரும் செல்வத்துடன், அவர்களை முதலீட்டுத் திட்டங்களைக் கொள்வனவு செய்யத் தூண்டுகின்றது. நிதி திட்டமிடல் துறையில் உள்ள நிறுவனங்கள் இவ்வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்த மாற்றத்தைக் கண்காணிக்கலாம்.

3.முன்கணிப்பு (Forecasting) கண்காணிக்கப்பட்ட மாற்றங்கள் மற்றும் போக்குகளின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் விளைவுகளின் முன்கணிப்புகளை உருவாக்குதல்.

உதாரணமாக, புதிய தொழில்நுட்பம் சந்தையை அடைய தேவைப்படும் நேரத்தை ஆய்வாளர்கள் கணிக்கக்கூடும்

4.மதிப்பீடு (Assessing): சுற்றுச்சூழல் மாற்றங்களின் போக்குகள் மற்றும் காலத்தையம், நிறுவனங்களின் தந்திரோபாயங்கள் மற்றும் அவற்றின் முகாமைத்துவத்தின் போக்குகளையும் தீர்மானித்தல். 

"பொதுச் சூழலைப் பகுப்பாய்வு செய்வதன் முக்கிய நோக்கம் வாய்ப்புகள் மற்றும்  அச்சுறுத்தல்களைக் கண்டறிவதாகும்."

வாய்ப்பு எனப்படுவது அவை பயன்படுத்தப்பட்டால், குறிப்பிட்ட நிறுவனம் தந்திரோபாய போட்டித்தன்மையை அடைய உதவும் ஒரு பொதுவான சூழலில் ஒரு நிபந்தனையாகும், 

அச்சுறுத்தல் எனப்படுவது தந்திரோபாய போட்டித்தன்மையை அடைவதற்கான நிறுவனத்தின் முயற்சிகளைத் தடுக்கும் ஒரு பொதுவான சூழலில் நிபந்தனையாகும்.

பொது சூழலை பகுப்பாய்வு செய்ய பல மூலாதாரங்கள் பயன்படுத்தப்படலாம்.

  • அச்சிடப்பட்ட வெளியீடுகள் (வர்த்தக வெளியீடுகள், பல்வேறு வகையான செய்தித்தாள்கள், வணிக வெளியீடுகள் மற்றும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பொது வாக்கெடுப்புகளின் முடிவுகள்),
  • வர்த்தக நிகழ்ச்சிகள் மற்றும் வழங்குனர்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள்.

பொதுச் சூழலின் கூறுகள் (Segments of the General Environment) 

பொதுச் சூழல் என்பது நிறுவனத்திற்கு வெளியில் இருக்கும் காரணிகளால் ஆனது. பொதுச்சூழல் போக்குகள் மற்றும் நிகழ்வுகளாவன, அவற்றைக் முன்கணிக்கும் திறன் குறைவு அவற்றைக் கட்டுப்படுத்துதற்கான திறன் குறைவு தொழிற்துறைகளுக்கிடையில் வேறுபடலாம்

பொதுச் சூழல் ஆறு சுற்றுச்சூழல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. மக்கட்சூழல் பிரிவு - சனத்தொகையின் அளவு, வயது கட்டமைப்பு, புவியியல் பரம்பல், இனக் கலவை மற்றும் வருமானப் பகிர்வு ஆகியவற்றுடன் மக்கட்சூழல் அக்கறை கொண்டுள்ளது. மக்கட்சூழல் காரணிகளாவன,

  • சனத்தொகையின் அளவு
  • சனத்தொகை வளர்ச்சி வீதம்
  • ஆண், பெண் பால் வேறுபாடு
  • பல்லினச் சமூக அமைப்பு
  • கல்வி மட்டம்மற்றும்
  • வயது மட்டம்
  • குடும்ப சமூக அமைப்பு
  • மனை அமைப்பு
  • சனத்தொகையின் புவியியல் பரவல் வருமான மட்டங்களில் அதிக ஏற்றத்தாழ்வுகள்

2. பொருளாதாரப் பிரிவு - பொருளாதாரச் சூழல் என்பது ஒரு நிறுவனம் போட்டியிடும் அல்லது போட்டியிடக்கூடிய பொருளாதாரத்தின் தன்மை மற்றும் திசையைக் குறிக்கிறது.

  • வட்டி வீதங்கள்
  • வேலையின்மை
  • பணவீக்க வீதம்
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியின் போக்குகள்
  • பங்குச் சந்தை மதிப்பீட்டில் ஏற்படும் மாற்றங்கள்
  • வர்த்தக பற்றாக்குறை அல்லது மிகை
  • பாதீட்டுப் பற்றாக்குறைகள் அல்லது மிகை
  • தனிப்பட்ட சேமிப்பு வீதம்

3. அரசியல்/சட்டப் பிரிவு - அரச பிரதிநிதித்துவ நிறுவனங்கள், தற்போது பதவி வகிக்கின்ற அரசின் அரச கொள்கைகள் என்பன வணிகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.இந்த பிரிவு நிறுவனங்கள் அரசாங்கத்தை எவ்வாறு பாதிக்க முயல்கின்றன மற்றும் அரசாங்கங்கள் அவர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் குறிக்கிறது.

  • வரி விதிப்பு சட்டங்கள்
  • கட்டுப்பாடுகளை நீக்கும் தத்துவங்கள்
  • தொழிலாளர் பயிற்சி சட்டங்கள்
  • கல்விக் கொள்கைகள்
  • கூட்டாட்சி மற்றும் கட்டாய குறைந்தபட்ச ஊதியத்தில் அதிகரிப்பு

4. சமூக-கலாச்சாரப் பிரிவு- சமூக-கலாச்சாரப் பிரிவு ஒரு மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பற்றியது.

  • தொழிற்துறையில் பெண்களின் அதிகரித்த பங்கு தற்காலிக தொழிலாளர்கள்/தொழிலாளர் பன்முகத்தன்மை அதிகரிப்பு
  • உடற்தகுதிக்கு அதிக அக்கறை
  • சுற்றுச்சூழலிலின் மீதான அதிகரித்த அக்கறை
  • வேலை மற்றும் தொழில் விருப்பங்களில் மாற்றங்கள்
  • மரபுகள், சம்பிரதாயங்கள்
  • எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களும்
  • சமய நம்பிக்கைகள்
  • சமூகத்தின் அணுகுமுறைகள்


5. தொழில்நுட்பப் பிரிவு- புதிய அறிவை உருவாக்குதல் மற்றும் அந்த அறிவை புதிய வெளியீடுகள், தயாரிப்புகள், மற்றும் செயன்முறைகளாக மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் தொழில்நுட்பப் பிரிவில் அடங்கும்.

  • தயாரிப்பு புத்தாக்கங்கள்
  • அறிவின் அதிகரித்த பயன்பாடுகள்
  • ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செலவினங்களின் அதிகரித்த கவனம்ப
  • புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள்
  • மரபணு பொறியியல்
  • இணைய தொழில்நுட்பத்தின் தோற்றம்

6. பூகோளச்சூழல் பிரிவு- பூகோளச்சூழல் பிரிவில் தொடர்புடைய புதிய உலகளாவிய சந்தைகள். மாறிவரும் சந்தைகள், முக்கியமான சர்வதேச அரசியல் நிகழ்வுகள் மற்றும் உலகளாவிய சந்தைகளின் முக்கியமான கலாச்சார மற்றும் நிறுவன பண்புகள் என்பன அடங்கும்.

  • உலகளாவிய வர்த்தக ஒப்பதங்களின் அதிகரிப்பு
  • நாணய மாற்று விகிதங்கள்
  • இந்திய மற்றும் சீனப் பொருளாதாரங்களின் எழுச்சி
  • பிராந்திய குழுக்களிடையே வர்த்தக ஒப்பந்தங்கள் (NAFTA, EU, ASEAN)
  • உலக வர்த்தக அமைப்புக்களின் உருவாக்கம் (கட்டணங்களக்  குறைத்தல்/சேவைகளில் இலவச வர்த்தகம்)

தொழிற்துறைச் சூழல் (Industry Environment)

ஒரு தொழிற்துறை என்பது நெருக்கமான பதிலீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் குழுவாகும். போட்டி நிலமையின் கீழ், இந்நிறுவனங்கள் ஒன்றன் மீது ஒன்று செல்வாக்கு செலுத்துகின்றன. பொதுவாக, தொழிற்துறைகள், மூலோபாய போட்டித்திறன் மற்றும் சராசரிக்கு மேல் வருவாயை தொடர நிறுவனங்கள் பயன்படுத்தும் போட்டித் தந்திரோபாயங்களின் வளமான கலவையை உள்ளடக்கியது.

போட்டியாளர்கள் - போட்டியாளர்கள் என்பது வாடிக்கையாளர்களின் ஒரே மாதிரியான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பொருட்கள் சேவைகளை வழங்கும் போட்டி நிறுவனங்கள் ஆகும்.

துறை - நெருங்கிய தொடர்புடைய தொழிற்துறைகளின் குழுவாகும்.

சந்தைப் பிரிவுகள் சந்தையில் உள்ள தனித்துவமான பண்புக்கூறுகள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் வேறுபடும் வாடிக்கையாளர்களின் தனித்துவமான குழுக்கள் ஆகும்.

பொதுச் சூழலுடன் ஒப்பிடுகையில், தொழிற்துறை சூழல் பெரும்பாலும் நிறுவனத்தின் மூலோபாய போட்டித்திறன் மற்றும் சராசரிக்கு மேல் வருவாய் மீது நேரடியான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. தொழிற்போட்டியின் தீவிரம் மற்றும் ஒரு தொழிற்துறையின் இலாபத் திறன் ஆகியவை போட்டியின் ஐந்து சக்திகளின் செயற்பாடுகளாகும்.

தொழிற்துறை சுற்றுச்சூழல் பகுப்பாய்வு (The Industry Environment Analysis)

சாத்தியமான வாடிக்கையாளர்களையும் அவர்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களையும் அடையாளம் காண்பதன் மூலம் தற்போதைய மற்றும் சாத்தியமான போட்டியாளர்களை அடையாளம் வேண்டும். காண நிறுவனங்கள் இன்னும் பரந்த அளவில் ஆய்வுகளை மேற்கொள்ள

ஐந்து சக்திகளின் மாதிரியானது, வழங்குநர்கள் வாடிக்கையார்களைப் போலவே (பின்னோக்கி ஒருங்கிணைப்பதன் மூலம்) ஒரு நிறுவனத்தின் போட்டியாளர்களாக (முன்னோக்கி ஒருங்கிணைப்பதன் மூலம்). ஆகலாம் என்பதை அங்கீகரிக்கிறது. மேலும், புதிய சந்தையில் நுழைவதற்கு எதிர்பார்க்கும் நிறுவனங்கள் அல்லது ஏற்கனவே உள்ள தயாரிப்புகளுக்கு போதுமான மாற்றுத் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஒரு நிறுவனத்தின் போட்டியாளர்களாக மாறலாம்.

ஐந்து போட்டிச் சக்திகளைப் பகுப்பாய்வு செய்தல்:

Step 1: ஒவ்வொரு போட்டிச் சக்தியுடனும் தொடர்புடைய குறிப்பிட்ட போட்டி அழுத்தங்களை அடையாளம் காணல்.

Step 2: ஒவ்வொரு போட்டி சக்தியின் பலத்தையும் மதிப்பிடல்.

Step 3: ஐந்து போட்டி சக்திகளின் கூட்டுப் பலம் கவர்ச்சிகரமான இலாபங்களை ஈட்டுவதற்கு உகந்ததா என்பதை தீர்மானித்தல்.

புதிதாக நுழைபவர்களின் அச்சுறுத்தல் (Threat of New Entrants)

தற்போதுள்ள போட்டியாளர்களின் சந்தைப் பங்கை அச்சுறுத்தலாம் என்பதால், புதிதாக நுழைபவர்களை அடையாளம் காண்பது முக்கியம். ஏனெனில், அவை கூடுதல் உற்பத்தி திறனை கொண்டு வருகின்றன

ஏற்கனவே சந்தையில் உள்ள நிறுவனங்களை மிகவும் பயனுள்ள மற்றும் திறமையானதாக இருப்பதற்குக் கட்டாயப்படுத்தவும், புதிய பரிமாணங்களில் எவ்வாறு

போட்டியிடுவது என்பதை அறியவும் புதிய நிறுவனங்கள் செயற்பாடாகும்; ஒரு தொழிலில் நுழைவதற்கான வாய்ப்பு இரண்டு காரணிகளின் நுழைவதற்கான தடைகள் மற்றும் தற்போதைய தொழிற்துறை பங்கேற்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பதிலடி

எனவே அச்சுறுத்தலின் தீவிரம் பின்வரும் காரணிகளைப் பொறுத்து அமையும்:

  • புதிதாக நுழைபவர்களின் அளவு மற்றும் கிடைக்கக்கூடிய வளங்கள்
  • நுழைவதற்கான தடைகள்
  • தற்போதுள்ள நிறுவனங்களின் எதிர்வினை

நுழைவதற்கான தடைகள் (Entry Barriers)

நுழைவுத் தடைகள் இல்லாத போது, புதிதாக நுழைபவர்கள் இலாபகரமாக செயற்படுவதற்கான நிகழ்தகவு அதிகமாகக் காணப்படுவதனால், தற்போதுள்ள போட்டியாளர்கள் நுழைவதற்கான தடைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். குறிப்பிடத்தக்க நுழைவுத் தடைகளில் பல வகைகள் உள்ளன.

  • பொருளாதாரச் சிக்கனம் - ஒரு நிறுவனத்தின் அளவு அதிகரிக்கும் போது அனுபவத்தின் மூலம் அதிகரிக்கும் திறன் மேம்பாடுகளின் காரணமாக பொருளாதார சிக்கனம் பெறப்படுகின்றன. எனவே, அதாவது, குறிப்பிட்ட காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்கும்போது, ஒரு அலகுக்கான உற்பத்திச் செலவு குறைகிறது. பொருளாதாரச் சிக்கனங்களை அதிகரிப்பது நிறுவனத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
  • தற்போதைய போட்டியாளர்களின் பொருளாதாரச் சிக்கனங்களை எதிர்கொள்ளும் போது புதிதாக நுழைபவர்கள் ஒரு சங்கடத்தை எதிர்கொள்கின்றனர். சிறிய அளவிலான நுழைவு அவர்களை ஒரு செலவு பாதகமான நிலமைக்கு இட்டுச்செல்லும். மாறாக, பெரிய அளவிலான நுழைவு, இதில் புதிதாக நுழைபவர் பொருளாதாரச் சிக்கனத்தைப் பெறுவதற்காக ஒரு தயாரிப்பின் பெரிய தொகுதிகளை உற்பத்தி செய்யும் போது, வலுவான போட்டி பதிலடிக்கான ஆபத்தை ஏற்படுத்துகின்றது.
  • உற்பத்தி வேறுபடுத்தல் காலப்போக்கில்,ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு தனித்துவமானது என்று வாடிக்கையாளர்களால் நம்பப்படலாம். ஒரு பொருளின் தனித்துவத்தை மதிப்பிடும் வாடிக்கையாளர்கள், தயாரிப்பு மற்றும் அதைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகிய இரண்டிற்கும் விசுவாசமாக மாற முனைகிறார்கள். பொதுவாக, புதிதாக நுழைபவர்கள் ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர் விசுவாசத்தை சமாளிக்க காலப்போக்கில் பல வளங்களை ஒதுக்க வேண்டும்.
  • தனித்துவத்தின் உணர்வை எதிர்த்துப் போராடுவதற்கு, புதிதாக நுழைபவர்கள் குறைந்த விலையில் பொருட்களை வழங்க முயற்சிப்பர். இருப்பினும், இம்முடிவு குறைந்த இலாபம் அல்லது நட்டத்திற்குக் கூட வழிவகுக்கலாம்.
  • மூலதனத் தேவைப்பாடுகள் ஒரு புதிய தொழிற்துறையில் போட்டியிடுவதற்கு ஒரு நிறுவனம் முதலீடு செய்வதற்கான வளங்களைக் கொண்டிருக்க வேண்டும். பௌதீக வசதிகளுக்கு மேலதிகமாக, இருப்புக்கள், சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் பிற முக்கியமான வணிகச் செயற்பாடுகளுக்கு மூலதனம் தேவைப்படுகிறது. ஒரு புதிய தொழிற்துறையில் போட்டியிடுவது கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், வெற்றிகரமான சந்தை நுழைவுக்குத் தேவையான மூலதனம் வெளிப்படையான சந்தை வாய்ப்பைத் தொடர கிடைக்காமல் போகலாம்.
  • விநியோக வழிமுறைகளுக்கான அணுகல் காலப்போக்கில், தொழிற்துறை பங்கேற்பாளர்கள் பொதுவாக உற்பத்திகளை விநியோகிப்பதற்கான பயனுள்ள வழிமுறைகளை உருவாக்குகனிறார்கள். விநியோக வழிமுறைகளுக்கான அணுகலானது புதிய நுழைபவர்களுக்கு வலுவான நுழைவுத் தடையாக இருக்கலாம். குறிப்பாக நீடித்த பாவனையற்ற பொருட்களுக்கு.
  • அரசாங்கக் கொள்கைகள் - உரிமம் மற்றும் அனுமதி தேவைகள் மூலம், அரசாங்கங்கள் ஒரு தொழிற்துறையில் நுழைவதற்கான தடைகளை உருவாக்கலாம். மதுபான சில்லறை விற்பனை, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு, வங்கி மற்றும் நிதித்தொழில் ஆகியவை அத்தகைய தொழிற்துறைகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும். இதில் அரசாங்க முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் நுழைவு சாத்தியக்கூறுகளை பாதிக்கின்றன. மேலும், தரமான சேவையை வழங்கலை உறுதிப்படுத்தவும் அல்லது வேலைவாய்ப்புக்களைப் பாதுகாக்கவும் சில தொழிற்துறைகளில் அரசாங்கங்கள் அடிக்கடி கட்டுப்படுத்துகின்றன.

வழங்குநர்களின் பேரம் பேசும் சக்தி (Bargaining Power of Suppliers)

விலைகளை அதிகரிப்பது மற்றும் அவர்களின் உள்பத்திகளின் தரத்தை குறைப்பது என்பன ஒரு தொழிற்துறைக்குள் போட்டியிடும் நிறுவனங்களின் மீது அதிகாரத்தை செலுத்த வழங்குநர்களால் பயன்படுத்தப்படும் சாத்தியமான வழிமுறைகளாகும். ஒரு நிறுவனம் அதன் சொந்த விலைக் கட்டமைப்பின் மூலம் அதன் வழங்குநர்களால் மேற்கொள்ளப்படும் செலவு அதிகரிப்பை மீட்டெடுக்க முடியாவிட்டால், வழங்குநர்களின் செயற்பாடுகளால் நிறுவனங்களின் இலாபம் குறைக்கப்படுகிறது. 

வழங்குநர்கள் பின்வரும் சந்தர்ப்பங்களில் சக்திவாய்ந்தவர்களாகக் காணப்படுவர்.

  • வழங்கலானது ஒரு சில பாரிய நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் போது தொழில் நிறுவனங்களுக்கு திருப்திகரமான மாற்று தயாரிப்புகள் கிடைக்காத போது 
  • வழங்குநர்களுக்கு குறிப்பிட்ட தொழில் வாடிக்கையாளர்களாக அல்லாமல் இருக்கும் போது நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க நிறுவனங்களின் சந்தை வெற்றிக்கு வழங்குநர்களின் பொருட்கள் முக்கியமானவையாக இருக்கும் போது
  • வழங்குநர்களின் உற்பத்திகளின் செயற்திறன் தொழில் நிறுவனங்களுக்கு அதிக மாறுதல் செலவுகளை உருவாக்கியுள்ளது.
  • நிறுவனங்கள் தொழிற்துறையில் முன்னோக்கி ஒருங்கிணைக்க இது நம்பகமான அச்சுறுத்தலாக உள்ள போது.
  • வழங்குநர்கள் கணிசமான வளங்களைக் கொண்டிருக்கும்போது மற்றும் மிகவும் வேறுபட்ட தயாரிப்புகளை வழங்கும்போது நம்பகத்தன்மை மேம்படுத்தப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் பேரம் பேசும் சக்தி (Bargaining Power of Buyers)

நிறுவனங்கள் முதலீடு செய்த மூலதனத்தின் வருவாயை அதிகரிக்க முயல்கின்றன. மாற்றாக, வாடிக்கையாளர்கள் பொருட்களை குறைந்த விலையில் வாங்க விரும்புகிறார்கள். எனவே, வாடிக்கையாளர்கள் பின்வரும் சந்தர்ப்பங்களில் சக்தி வாய்ந்தபவர்களாகக் காணப்படுவர்.

  • அவர்கள் ஒரு தொழிற்துறையின் மொத்த உற்பத்தியில் பெரும் பகுதியை கொள்வனவு செய்யும் போது
  • விற்பனையாளரின் வருடாந்திர வருவாயில் கணிசமான பகுதியை குறிப்பிட்ட பொருளின் விற்பனை கணக்கில் கொண்டிருக்கும் போது அவர்கள் குறைந்த செலவில் வேறு தயாரிப்புக்கு மாறக்கூடியதாக இருக்கும் போது
  • தொழில்துறையின் தயாரிப்புகள் வேறுபடுத்தப்படாதவை அல்லது தரப்படுத்தப்பட்டவையாகவும் இருக்கும் போது
  • உற்பத்தியாளரின் செலவுகள் பற்றிய அதிக அளவான தகவல்கள் கிடைக்கக்கூடியதாக உள்ள போது மற்றும் இணையத்தின் சக்தி.

பதிலீட்டுப் பொருட்களின் அச்சுறுத்தல் (Threat of Substitute Products)

பதிலீட்டுப் பொருட்கள் எனப்படுவது குறிப்பிட்ட தொழிற்துறை உற்பத்தி செய்யும் தயாரிப்புகளுக்கு ஒத்த அல்லது அதே செயற்பாடுகளைச் செய்யும் தொழிற்துறைக்கு வெளியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் ஆகும். அவை பொதுவாக. வாடிக்கையாளர்கள் சில மாறுதல் செலவுகளை எதிர்கொள்ளும் போது மற்றும் பதிலீட்டுப் பொருளின் விலை குறைவாக இருக்கும் போது அல்லது அதன் தரம் மற்றும் செயற்திறன் போட்டியிடும் தயாரிப்புக்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும் போது, பதிலீட்டுப் பொருட்கள் நிறுவனத்திற்கு வலுவான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

வாடிக்கையாளர்கள் பெறுமதியளிக்கும் பரிமாணங்களுக்கேற்ப ஒரு தயாரிப்பை வேறுபடுத்துவது (விலை, தரம், விற்பனைக்குப் பின் சேவை மற்றும் இடம் போன்றவை) பதிலீட்டுப் பொருட்கள் மீதான கவர்ச்சியைக் குறைக்கிறது.

பொதுவாக, பதிலீட்டுப் பொருட்கள் ஒரு நிறுவனத்திற்கு பின்வரும் சந்தர்ப்பங்களில் வலுவான அச்சுறுத்தலை அளிக்கும்,

  • எளிதில் கிடைக்கக்கூடிய பல நல்ல பதிலீடுகள் உள்ள போது
  • பதிலீடுகளின் விலை குறைவாக இருத்தல்
  • பதிலீடுகளின் உயர் தரம் மற்றும் செயற்திறன் வாடிக்கையாளர்களின் மாறுதல் செலவுகள் குறைவு

போட்டியாளர்களிடையே போட்டியின் தீவிரம் (Intensity of Rivalry among Competitors)

ஒரு தொழிற்துறையின் நிறுவனங்கள் பரஸ்பரம் ஒன்றில் ஒன்று சார்ந்திருப்பதால், ஒரு நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் பொதுவாக போட்டி பதில்களை உருவாக்குகின்றன. பல தொழில்களில், நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் தீவிரமாக போட்டியிடுகின்றன. ஒரு நிறுவனம் ஒரு போட்டியாளரின் செயல்களால் சவாலுக்குட்படுத்தப்படும் போது அல்லது ஒரு நிறுவனம் அதன் சந்தை நிலையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை அடையாளங்காணும் போது போட்டி தீவிரமடைகிறது.

நிறுவனங்களுக்கிடையிலான போட்டியின் தீவிரத்தன்மையைப் பாதிக்கும் காரணிகளாவன,

  • எண்ணற்ற அல்லது சமமான போட்டியாளர்கள் பல நிறுவனங்களுடனான தொழிற்துறைகளில் கடுமையான போட்டிகள் நிலவுதல் பொதுவானதாகும். மேலும், சமமான அளவு மற்றும் சக்தி கொண்ட சில நிறுவனங்களைக் கொண்ட தொழிற்துறைகளும் வலுவான போட்டிகளைக் கொண்டிருக்கின்றன.
  • தொழிற்துறையின் மெதுவான வளர்ச்சி வளர்ந்து வரும் சந்தைகளில் போட்டியாளர்களின் வாடிக்கையாளர்களை நிறுவனங்களை நோக்கி ஈர்ப்பதற்கான அழுத்தங்கள் குறைவாகக் காணப்படும். எனினும், வளர்ச்சியில்லாத அல்லது மெதுவான வளர்ச்சியுடைய சந்தைகளில் போட்டியாளர்களின் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் சந்தைப் பங்குகளை அதிகரிக்க போராடுவதால், சந்தைப்போட்டி மிகவும் தீவிரமானதாகக் காணப்படும்.
  • அதிகரித்த நிலையான செலவுகள் அல்லது அதிக சேமிப்புச் செலவுகள் - நிலையான செலவுகள் மொத்த செலவில் பெரும்பகுதியைக் கொண்டிருக்கும் போது, நிறுவனங்கள் தங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்க முயற்சி செய்கின்றன. ஆதன் மூலம் நிறுவனங்கள் ஒரு பெரிய அளவிலான வெளியீட்டில் செலவுகளை பரப்ப முயற்சிக்கின்றன. இருப்பினும், பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்க முயற்சிக்கும் போது, அதிகப்படியான திறன் தொழிற்துறை ரீதியில் உருவாக்கப்படுகிறது. இது நிறுவனங்களுக்கிடையிலான போட்டியை அதிகரிக்கின்றது.
  • உற்பத்தி வேறுபடுத்தல் இன்மை அல்லது குறைந்த மாறுதல் கிரயங்கள் தங்கள் உற்பத்திகளை வெற்றிகரமாக வேறுபடுத்திய பல நிறுவனங்களைக் கொண்ட தொழிற்துறைகள் குறைந்தளவிலான போட்டியைக் எதிர்கொள்கின்றன. மாறாக. வாடிக்கையாளர்கள் பொருட்களைப் வேறுபடுத்திப் பார்க்காத போது (அதாவது, சில வேறுபட்ட அம்சங்கள் அல்லது திறன்களைக் கொண்ட தயாரிப்புகள்). போட்டி தீவிரமடைகிறது. இந்த நிகழ்வுகளில், வாடிக்கையாளர்களின் கொள்முதல் முடிவுகள் முதன்மையாக விலை மற்றும் சேவையை அடிப்படையாகக் கொண்டதாகக் காணப்படும். மாறுதல் செலவுகளின் விளைவு வேறுபட்ட உற்பத்திகளின் விளைவுக்கு ஒத்ததாகும். வாடிக்கையாளர்களின் மாறுதல் செலவுகள் குறைவாக இருப்பதால், விலை நிர்ணயம் மற்றும் சேவை சலுகைகள் மூலம வாடிக்கையாளர்களை ஈர்ப்பது போட்டியாளர்களுக்கு எளிதாக இருக்கும்.
  • உயர் மூலோபாய பங்குகள் பல செயற்படுவது முக்கியமானதாக இருக்கும்.

வெளியேறுவதற்கான உயர் தடைகள் -

சில நேரங்களில் நிறுவனங்கள் தங்கள் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் வருமானம் குறைவாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தாலும் ஒரு தொழிலில் தொடர்ந்து போட்டியிடுகின்றன. பொதுவான வெளியேறும் தடைகளாவன,

  • சிறப்புச் சொத்துக்கள் (குறிப்பிட்ட வணிகம் அல்லது இருப்பிடத்துடன்இணைக்கப்பட்ட மதிப்புகளைக் கொண்ட சொத்துகள்)
  • வெளியேறுவதற்கான நிலையான செலவுகள் (தொழிலாளர் ஒப்பந்தங்கள் போன்றவை).
  • மூலோபாய இடைத்தொடர்புகள் (பரஸ்பர சார்பு உறவுகள், ஒரு வணிகத்திற்கும் நிறுவனத்தின் செயற்பாடுகளின் மற்ற பகுதிகளுக்கும் இடையிலான உறவுகள். பகிரப்பட்ட வசதிகள் மற்றும் நிதிச் சந்தைகளுக்கான அணுகல் உட்பட).
  • உணர்ச்சித் தடைகள் (ஒருவரின் சொந்தத் தொழிலுக்கான பயம், ஊழியர்களுக்கு விசுவாசம் போன்றன)
  • அரச மற்றும் சமூக கட்டுப்பாடுகள்.

போட்டியாளர் சூழல் (Competitor Environment)

பொதுவான போட்டிக்கான ஆயுதங்கள்,

  • கடுமையான விலை போட்டி
  • சிறந்த தயாரிப்பு செயற்திறன்
  • உயரந்த தரம்
  • சிறந்த விநியோக வலையமைப்பு
  • உயர் மட்ட விளம்பரம்
  • சிறந்த வாடிக்கையாளர் சேவை
  • குறைந்த வட்டி வீதத்திலான நிதி

கடுமையான போட்டி பெரும்பாலும் பின்வரும் வழிகளில் செயற்படுகின்றது.

  • விலை போட்டியைப் பயன்படுத்துதல்
  • விளம்பரப் போர்களை நடத்துதல்
  • நுகர்வோர் உத்தரவாதங்கள் மற்றும் சேவைகளை அதிகரித்தல் புதிய தயாரிப்புக்களின் அறிமுகம்

தந்திரோபாயக் குழுக்கள் (Strategic Groups)

ஒத்த தநதிரோபாயங்களைப் பயன்படுத்துவதற்கு ஒரே மாதிரியான தந்திரோபாய பரிமாணங்களில் கவனம் செலுத்தும் நிறுவனங்களின் தொகுப்பு ஒரு தந்திரோபாயக் குழு என அழைக்கப்படுகிறது.

ஒரு தந்திரோபாயக் குழுவில் உள்ள நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி ஒரு தந்திரோபாயக் குழுவின் உறுப்பினர் மற்றும் அந்த தந்திரோபாயக் குழுவிற்கு வெளியே உள்ள நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியை விட அதிகமாக உள்ளது.

தொழில்நுட்பத் தலைமையின் அளவு, தயாரிப்பு தரம், விலைக் கொள்கைகள், விநியோக வழிமுறைகள் மற்றும் வாடிக்கையாளர் எடுத்துக்காட்டுகளாகும். சேவை தந்திரோபாயப் பரிமாணங்களின்

ஒரு தொழிற்துறையின் போட்டிக் கட்டமைப்பை பகுப்பாய்வு செய்வதற்கு தந்திரோபாயக் குழுக்களின் கருத்து பயனுள்ளதாக இருக்கும். ஒரு தொழிற்துறையில் உள்ள நிறுவனங்களுக்கிடையிலான அதிக அசைவுத் தடைகள், அதிக போட்டி மற்றும் குறைந்த வளங்கள் தந்திரோபாயக் குழுக்களின் உருவாக்கத்தை கட்டுப்படுத்தும்.


தந்திரோபாயக் குழுக்கள் பல தாக்கங்களைக் கொண்டுள்ளன.

ஒரு குழுவில் உள்ள நிறுவனங்கள் அதே வாடிக்கையாளர்களுக்கு ஒரே மாதிரியான தயாரிப்புகளை வழங்குவதால், அவர்களுக்கிடையேயான போட்டி கடுமையாக இருக்கும். போட்டி மிகவும் தீவிரமானதாகையால், ஒவ்வொரு நிறுவனத்தின் இலாபத்திற்கும் அதிக அச்சுறுத்தல்.

ஐந்து தொழிற்துறை சக்திகளின் பலம் தந்திரோபாயக் குழுக்களுக்கிடையில் வேறுபடுகிறது.

தந்திரோபாயக் குழுக்கள் அவற்றின் தந்திரோபாயங்களின் அடிப்படையில் நெருக்கமாக இருப்பதால், குழுக்களிடையே போட்டிக்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே, ஒரு நிறுவனத்தின் சிறந்த தந்திரோபாய நகர்வுகள் பின்வருவனவற்றால் பாதிக்கப்படுகின்றன

  • போட்டியாளர்களுக்கான தற்போதைய தந்திரோபாயங்கள்
  • போட்டியாளர்களின் எதிர்கால நடவடிக்கைகள்

போட்டியாளர் பகுப்பாய்வு (Competitor Analysis)

போட்டியாளர் பகுப்பாய்வு ஒரு நிறுவனம் நேரடியாக போட்டியிடும் ஒவ்வொரு நிறுவனத்திலும் கவனம் செலுத்துகிறது. ஒரு போட்டியாளர் பகுப்பாய்வில், பின்வரும் விடயங்களை நிறுவனம் புரிந்து கொள்ள முற்படுகின்றது

  • அதன் எதிர்கால நோக்கங்களால் காட்டப்பட்டுள்ளபடி, போட்டியாளரை எது இயக்குகிறது? 
  • அதன் தற்போதைய தந்திரோபாயங்களால் வெளிப்படுத்தப்பட்டதன்படி போட்டியாளர் என்ன செய்கிறார் மற்றும் என்ன செய்ய முடியும் என்பது?
  • எடுகோள்களால் காட்டப்பட்டதன் படி தொழிற்துறையைப் பற்றி போட்டியாளர் என்ன நம்புகிறார் என்பது?
  • பலம் மற்றும் பலவீனங்களால் காட்டப்பட்டுள்ளபடி போட்டியாளரின் திறன்கள் என்ன?

மைக்கேல் போர்ட்டரால் உருவாக்கப்பட்ட நான்கு கோண பகுப்பாய்வு (Four corner analysis) போட்டியாளர்களை பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு பயனுள்ள கருவியாகும்.

இம்மாதிரியானது,

  • ஒரு போட்டியாளரின் சாத்தியமான தந்திரோபாய மாற்றங்கள் மற்றும் அவை எவ்வளவு வெற்றிகரமாக இருக்கலாம் என்பதற்கான சுயவிவரத்தை உருவாக்கவும், சாத்தியமான தந்திரோபாய நகர்வுகளிற்கு ஒவ்வொரு போட்டியாளரின் சாத்தியமான பதிலைத் தீர்மானிக்கவும்,
  • தொழில் மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களிற்கு ஒவ்வொரு போட்டியாளரின் சாத்தியமான பதிலைத் தீர்மானிக்கவும் பயன்படுத்தப்படலாம்.

தொழிற்துறையின் கவர்ச்சியை மதிப்பிடுவதில் கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகளாவன,

  • தொழிற்துறையின் சந்தை அளவு மற்றும் வளர்ச்சி திறன்
  • உந்து சக்திகளால் தொழில் இலாபம் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ பாதிக்கப்படுமா என்பது
  • தொழிற்துறையின் எதிர்கால இடர் மற்றும் நிச்சயமற்ற நிலை
  • தொழிற்துறை எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் தீவிரம்
  • தொழிற்துறையில் நிறுவனத்தின் போட்டி நிலை
  • பலவீனமான போட்டியாளர்களின் பாதிப்புகளைப் பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் திறன்
  • கவர்ச்சியற்ற தொழிற்துறை சக்திகளுக்கு எதிராக பாதுகாக்க நிறுவனத்திற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதா



Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow