கல்வியின் தேவை என்ன?

கல்வியின் பயன்கள், கல்வியின் நோக்கம், கல்வி பற்றிய பேச்சுப்போட்டி

Mar 16, 2023 - 18:44
Mar 16, 2023 - 18:46
 0  101
கல்வியின் தேவை என்ன?

 இன்றைய நவீன உலகில் காணப்படும் ஈடு இணையற்ற செல்வங்களில் ஒன்றே கல்விச் செல்வம் எனில் அதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.  கேடில் விழுச்செல்வம் கல்வி என்பது ஆன்றோர் வாக்கு. கல்விக்கு நிகர் என்று கூற இந்த உலகில் எதுவும் கிடையாது. மனிதனின் அகக்கண்களைத் திறந்து மனிதனை மனிதனாக வாழ வைப்பது கல்வி ஒன்றே ஆகும் .கல்வி ஒருவரின் அறிவையும் ஆற்றலையும் உயர்த்தி சமூகத்தில் சிறந்த ஒரு அந்தஸ்தைப் பெற்றுக் கொடுக்கும். ஆழமாக நோக்கினால் இந்த கல்வி என்பது எமது வாழ்வின் அனைத்து அம்சங்களுடனும் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். இன்று கல்வி என்பது ஏன் அவசியம் என்ற வினாவிற்கு விடை தேடும் போது அது ஒரு ஆழமான மற்றும் விஷாலமான விடையை வேண்டி நிற்கின்றது. குறிப்பாக இன்று கல்வி என்பது வெறுமனே தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்ள மட்டும்தான் தேவையா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். காரணம் கல்வியின் நோக்கம் ஆழமானது. கல்வி கற்பதன் ஊடாக எதிர்பார்க்கப்படும் மாற்றம் பாறியது. எனவே கல்வி என்பது ஏன் எமக்கு தேவை என்பது ஆய்வுக்குரியது. இதற்கு நாம் கல்வியின் வரலாற்றை சிறிது பின்னோக்கிப் பார்ப்பது பொருத்தமானது .

உலக வரலாற்றில் மறுமலர்ச்சிக்கு முன்னர் காணப்பட்ட மத்திய காலத்தில் கல்வியானது சமய நிறுவனங்களை மையப்படுத்தியதாக காணப்பட்டது. அதாவது கல்வியானது சமய நிறுவனங்களிடம் சிறைப் பட்டிருந்தது என்று கூறலாம். சமூகத்தில் அனைவரும் கல்வியைப் பெறும் உரிமையை பெற்றிருக்கவில்லை. மாறாக சமூகத்தில் இருந்த உயர் வகுப்பு மக்களுக்கு மாத்திரமே கல்வியை கற்பதற்கான உரிமை காணப்பட்டது. சாதாரண மக்களுக்கு கல்வியை பெறுவதற்கான எந்த அனுமதியும் காணப்படவில்லை. இந்நிலை படிப்படியாக மாறி பிற்பட்ட காலங்களிலேயே கல்வியின் அவசியத்தை உலகம் உணரத் தொடங்கியது. மறுமலர்ச்சி காலத்தில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியும் இதற்கு துணையாகவும் தூண்டுகோலாகவும் அமைந்தது எனலாம். சகலருக்கும் கல்வி அவசியம் சகலரும் கல்வியை பெற்றுக் கொள்ளும் உரிமையைப் பெற்றவர்கள் என்ற கருத்து இதன் பின்னரேயே ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கல்வியை ஜனநாயகப்படுத்தும் முயற்சிகளில் சர்வதேச அமைப்புகள் ஈடுபட தொடங்கின. இதன் விளைவாக 1990 ஆம் ஆண்டு ஜொம்ரியன் மாநாடு கூட்டப்பட்டது. 

கல்வியின் தேவை எப்போது எழுந்தது?

1948 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 26 ஆவது உறுப்புரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் கல்விக்கான உரிமை உண்டு. ஆகக் குறைந்தது ஆரம்ப வகுப்புகளிலேனும் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயமானது. தொழிற்கல்வியும் தொழிற்சார் வாண்மைக் கல்வியும் பொதுவாக எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இப்பிரகடனத்தில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்த போதும் சுமார் 4 தசாப்தங்களுக்கு பின்னர் ஆரம்பக் கல்வி மற்றும் எழுத்தறிவு தொடர்பாக சர்வதேச ரீதியாக பெறப்பட்ட தகவல்கள் திருப்திகரமானதாக இருக்கவில்லை. அதாவது இந்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 100 மில்லியன் சிறார்களுக்கு ஆரம்பக் கல்விக்கான வாய்ப்புகள் இருக்கவில்லை. சுமார் 960 மில்லியன் நபர்கள் எழுத்தறிவு அற்றவர்களாக காணப்பட்டனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். சுமார் 100 மில்லியன் சிறார்களும் எண்ணற்ற வளர்ந்தோறும் அடிப்படை கல்வியை பூரணப்படுத்தாதவர்களாக காணப்பட்டனர். வளர்ந்தோரில் மூன்றில் ஒரு பகுதியினர் நூல் அறிவு, புதிய திறன்கள், தொழில்முறையியல் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை. அதனால் அவர்களது வாழ்வில் எவ்வித பண்புத்தர முன்னேற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இவ்வாறு உலக மக்களின் ஆரம்பக் கல்வி, எழுத்தறிவு தொடர்பான தரவுகளும் தகவல்களும் ஆரோக்கியமற்ற நிலையிலே காணப்பட்டன. இதன் விளைவாக மக்களின் வாழ்வில் பண்புத்தர முன்னேற்றங்கள் மிகவும் வீழ்ச்சி நிலையிலேயே காணப்பட்டன. தனி மனிதப் பொருளாதாரம் எவ்வித முன்னேற்றமும் இன்றி காணப்பட்டது. 

எனவே மக்களின் வாழ்வில் அறிவியல் மற்றும் பண்புத்தர மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமாயின் கட்டாயம் மக்களுக்கு கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் 1990 இல் தாய்லாந்தில் ஜொம்ரியன் என்ற இடத்தில் "யாவருக்கும் கல்வி மீதான உலக மாநாடு" கூட்டப்பட்டது. இம் மாநாட்டிற்கு யுனிசெப், யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புகள் தமது பூரண ஆதரவை வழங்கின.  சுமார் 1500 பங்கு பற்றுனர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். ஆரம்பக் கல்வி, எழுத்தறிவு தொடர்பான சர்வதேச நிலமை, அதற்கான காரணிகள், எதிர்கால இலக்குகள், அவ்விலக்குகளை அடைய மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் பற்றி இம்மாநாட்டில் விளக்கமாக ஆராயப்பட்டது. இதன் போது மாநாட்டின் பேராளர்களால் பின்வரும் இரண்டு விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

  1. சகலருக்கும் கல்வி மீதான உலகப் பிரகடனம்
  2. சகலருக்கும் அடிப்படைக் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான சட்டகம்.

 இம்மாநாடு நடைபெற்ற பத்து வருடத்தின் பின்னர் 180 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டு முடிவுகள் 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. இம்முடிவின்படி 2000ம் ஆண்டின் முதல்  தசாப்தத்தில் பத்து மில்லியன் சிறார்கள் மேலதிகமாக பாடசாலைக்கு செல்ல தொடங்கினர். வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம் ஆண்களுக்கு 85 வீதமாகவும் பெண்களுக்கு 74% ஆகவும் வளர்ச்சி அடைந்தது. பாடசாலை செல்லாத சிறார்கள் தொகை 127 மில்லியனில் இருந்து 113 மில்லியனாக வீழ்ச்சி அடைந்தது. இவ்வாறு பல உடன்பாடான மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த அளவு தூரம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கல்வியின் அவசியம் வலியுறுத்தப்பட்டதன் விளைவாக மக்களின் வாழ்க்கைத் தரம் பாரிய அளவில் மாற்றம் கண்டது. 

முறைசார்ந்த கல்வி

நாம் வாழும் சமூகத்தை பொறுத்தவரை சமூகம் என்பது ஒழுங்கு முறையான கட்டமைப்பை கொண்டது. இந்த கட்டமைப்பில் பல சமூக குழுக்கள் மற்றும் சமூக வகுப்பினர் வாழ்கின்றனர் . சமூக கட்டமைப்பு மாற்றம் அடையும் தன்மையை கொண்டது. கல்வி கற்போர் விகிதம் அதிகரிப்பதும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியும் சமூக கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதுண்டு. இன்று எல்லா நாடுகளிலும் சமூகங்கள் பல்வேறு கட்டங்களில் நெருக்கடியையும் சவால்களையும் எதிர்கொள்கின்றன. அந்நிலையில் சமூகங்கள் அவற்றை எதிர்கொள்ளும் தகைமை உடையனவாக மாற வேண்டும். இவ்வாறான தகைமையை ஏற்படுத்த கல்வி உதவும். இவ்வாறான கல்வி சமுதாய கல்வி எனப்படும் .சமுதாய கல்வி முறை முன்னேற்றம் காணும் போது குறித்த சமூகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம், சிந்தனைத் திறன், பழக்கவழக்கங்கள் என்பவற்றில் பாரிய முன்னேற்றம் ஏற்படும். ஒரு சமூகத்தின் சொத்துரிமை முறை, உற்பத்தி முறை, அதன் தொழிநுட்பத் தராதரம், வெளிச்சமூகத்துடன் தொடர்பு, பெண் விடுதலை வாய்ப்பு போன்ற பல காரணங்கள் சமூகங்களை மாற்றி அமைக்க வல்லன. இக்காரணிகள் உயர் நிலையில் பேணப்பட  வேண்டுமாயின் கட்டாயம் அச்சமூகத்தில் கல்வி மட்டம் உயர்நிலையில் காணப்பட வேண்டியது அவசியம் .இன்றேல் குறித்த சமுதாயம் உலகின் இயங்கியல் மாற்றங்களுக்கேற்ப தன்னை பொருத்திக் கொள்ள முடியாது முடங்கிப் போன சமுதாயமாக மாறும் என்பது நிச்சயம்.

 எடுத்துக்காட்டாக சமூகங்கள் காலத்திற்கு காலம் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகள் அல்லது சமூக ஸ்திரமற்ற  தன்மைகளுக்கு உதாரணமாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  1. இயற்கையான அர்த்தங்கள்
  2. யுத்தமும் சமூகமட்ட குழப்பங்களும்
  3. தொற்று நோய்கள்
  4. தவறான நுகர்வு பழக்கம்
  5. அரசியல் ஸ்திரமின்மை

 எனவே இத்தகைய நிலையில் இவ்வாறான நெருக்கடிகளை அல்லது பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள கட்டாயம் அச்சமுகத்தில் வாழ்வோர் கல்வி அறிவை பெற்றிருப்பது அவசியம். கல்வி அறிவின் மூலமே எந்த ஒரு சமூகத்திலும் ஏற்படும் பிரச்சினைகளுக்கான காரணிகளை இனம் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை இனங்கான முடியும். சமூக மட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் மக்களுக்கு எழுத்தறிவை வழங்கவும் தொழில்நுட்ப பயிற்சியை வழங்கவும் நோய் தொடர்பான காப்புணர்வை வழங்கவும் முன்வரும் போது இத்தகைய சவால்களை இலகுவாக வெற்றிக்கொள்ள முடியும். கல்வி அறிவற்ற ஒரு சமூகத்தில் இத்தகைய சவால்களை வெற்றி கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். 

அதேபோல் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டாலும் பொருளாதார துறையில் சடுதியாக ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ளவும் அதற்கேற்ப தமது  தொழில் உலகை வளப்படுத்திக் கொள்ளவும் கல்வி அறிவு அவசியம் .கல்வி அறிவின் ஊடாகவே இந்த விழிப்புணர்வு ஏற்படும்.

கல்வியின் முக்கியத்துவம்

 2000 ஆம் ஆண்டில் உலக வங்கியினால் வெளியிடப்பட்ட "நலிவும் நம்பிக்கையும்" என்ற தனது ஆண்டறிக்கையில் ஒரு நாட்டின் வளம் அந்த நாட்டின் கல்வித் தரத்தை பொறுத்து அமைகிறது என குறிப்பிட்டுள்ளது .இதன் அடிப்படையில் நோக்கும் போது கல்வி என்பது ஒரு நாட்டின் பிரஜைகளின் பண்பு ஆளுமையை வளர்க்கக்கூடியதாக காணப்பட வேண்டும். வெறுமனே புத்தகத்தில் உள்ளதை மனனமிட்டு ஒப்புவிக்கும் செயல்முறையில் இருந்து நீங்கி நடைமுறை வாழ்வுடன் பொருந்திப் போகும் கல்வியே தனி மனித சமூக மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு துணை புரியும் .ஒருவர் மிகச் சரியான முறையில் கல்வியை பெற்றுக் கொள்ளும் போது அக்கல்வி ஒருவருக்கு எந்தெந்த இடத்தில் எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும் கருத்து பரிமாற்ற திறனையும் கற்றுக் கொடுக்கும். அதே போல் கல்வி ஒருவருக்கு  நவீன கால மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள் கொள்ளும் ஆற்றலை வழங்கும். அதேபோல் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையை சரியாக வழி நடத்த கல்வி அவசியம். சமூகத்தின்  சம்பிரதாயங்கள் பண்பாடு கலாச்சாரம் பாரம்பரியம் என்பன ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கல்வியின் ஊடாகவே கடத்தப்படுகிறன. எனவே பண்பாட்டு பரிமாற்றம் என்ற செயல்முறை தொடராக இடம் பெற ஒவ்வொரு தலைமுறையினரும் கல்வியை சரிவர பெற்றிருப்பது அவசியம் .

அதுமட்டுமன்றி தனி மனிதனின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் கல்வியின் செல்வாக்கு காணப்படுகின்றது. அதாவது ஒருவனுக்கு ஏற்படும் மனஎழுச்சிகளை முறையாக கட்டுப்படுத்த கல்வி பாரிய அளவில் துணை புரியும். தான் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சினைகள் என்பவற்றில் சிக்குண்டு சின்னா பின்னமாகி வாழ்வை தொலைத்து விடாது தன்னை பாதுகாத்துக் கொள்ள கல்வி ஒருவனுக்கு சிறந்த வழிகாட்டலை வழங்கும். அதேபோல் ஒரு தனி மனிதனின் படைப்பாற்றலை வளர்க்கவும் கல்வி துணை செய்யும். அதாவது, தான் யார் தனது திறமைகள் என்ன , இந்த சமூகத்திற்கும் நாட்டிற்கும் எத்தகைய பங்களிப்பை வழங்கலாம் போன்ற பல விடயங்களை அறியவும் அதனூடாக வினைத்திறனான பங்களிப்பை வழங்கவும் கல்வி ஒருவனுக்கு வழிகாட்டும் .எனவே ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்தில் ஒரு ஆற்றல்மிக்க உறுப்பினராக விளங்க வேண்டுமானால் கட்டாயம் அவன் கல்வியை பெற்றிருக்க வேண்டியது அவசியம். 

கற்றவர்கள் வாழும் சமூகம் பிரச்சினைகளற்ற புரிந்துணர்வு கொண்ட விட்டுக்கொடுக்கும் பண்புடைய உயர்ந்த சமூகமாக காணப்படும். 

எனவே தனிமனித ஆளுமையை விருத்தி செய்யக்கூடிய, சமூகத்திற்கு பயனளிக்கக்கூடிய, சகல அறிவுகளையும் பெறக்கூடிய, ஒழுக்கத்தை தரவல்ல, தற்கால தொழில் துறைக்கு ஏற்ற கல்வியை அனைவரும் பெறுவதை உறுதி செய்வோம்.

நன்றி :- A.H.F.SADHANA 

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow