இயற்கையோடு வாழ்வோம்
இயற்கை அரண்களால் பூகோளம்

ஞாயிற்று தொகுதியில் இன்று வரையிலும் மனித இன இருப்பிற்கு மிகவும் ஏற்றதானதும் தனித் தன்மை கொண்டதுமான ஒரேயொரு சிறப்பு மிக்க கோளாக புவிக் கோளவகம் அமையப் பெறுகின்றது. இவ் புவிக் கோளத்தின் தனித் தன்மையே இயற்கை வளங்கள் என்றால் அது மறுக்க முடியாதாகும். இவ்வாறு இயற்கை சூழலில் உள்ள மனிதனின் நிலையான இருப்பிற்கும் செயற்பாடுகளுக்கும் பயன்படுபவைகளே இயற்கை வளங்கள் என அழைக்கப்படுகிறன. இவ்வாறு இயற்கை வளங்களில் பாறைகள்,கனிமங்கள்,மண்,நீர்,காற்று,சூரிய ஒளி,தாவரங்கள்,வனஜீவராசிகள் என்பன சிறப்பான இடம் வகிக்கின்றன. இவ்வாறு தனித் தன்மை கொண்ட பூகோளத்தின் இயற்கை வளங்கள் பற்றியதான ஓர் விரிவான விளக்கமே இக் கட்டமைப்புரை.
புவி கோளத்தின் தனித் தன்மையான இயற்கை வளங்களின் பெறுமதியானது மனித தேவையின் பால் தீர்மானிக்கப்படும் அதே நேரம் மனித தேவைகள் மற்றும் தொழிநுட்பம் முதலானவற்றின் தன்மைக்கேற்பவே இவ் வளங்களின் பெறுமதியானது தீர்மானிக்கப்படுகின்றன. என்றாலும் இவ்வாறு இயற்கை வளங்களுக்காக மனிதனால் தீர்மானிக்கப்படும் பெறுமதிகள் காலத்திற்கு ஏற்ப மாறுபட கூடியதாக அமைகின்றன. இவ்வாறு புவியின் சிறப்பான இயற்கை வளங்கள் மனித முயற்சி இன்றி பெறக்கூடிய வளங்கள் மற்றும் மனித முயற்சியால் பெறப்படும் வளங்கள் என இரு வகைப்படுத்தலின் கீழ் வேறுபடுத்தி வகுத்தறிகின்றனர் புவியியல் சார் வல்லுனர்கள். இவ்வாறு மனித முயற்சியின்றி பெறும் வாளங்களின் பட்டியலில் மண்,நீர்,சூரிய வெளிச்சம், காற்று மற்றும் காடுகள்,காட்டு தாவரங்கள் முதலானவைகள் உள்வாங்கப்படுகின்றன. இதே போல மனித முயற்சியால் பெற்றுக் கொள்ள கூடிய வளங்களாக கனிய வளங்கள், நீர்பாசன நீர்,குழாய் நீர், காடாக்கம்,பிறப்பிக்கத் தக்க வளி மற்றும் வளமூட்டப்பட்ட மண் முதலானவைகள் அங்கம் வகிக்கின்றன. இவ்வாறான வளங்களின் தன்மையை துணைக் கொண்டு நோக்கும் போது புவியியல் மேற்பரப்பில் இலகுவாக கிடைக்க கூடிய வளங்கள், மற்றும் மனித அறிவை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளத்தக்க வளங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளமையை அறிந்து கொள்ள கூடியதாக அமைகின்றது.
இவ்வாறான வகைப்படுத்தலுக்கு மேலாக புவியல் சார் இயற்கை வளங்கள் எனும் பிரிவிற்குள் மீண்டும் புதுப்பிக்க முடியாத மனித பயன்பாட்டால் அழிவுரும் வளங்கள், புவி இயல்பின் தன்மை அடிப்படையில் இயல்பாக புதுப்பிக்க தக்க வளங்கள் மற்றும் மனித அறிவைக் கொண்டு மீள உற்பத்தி செய்து கொள்ள கூடிய வளங்கள் எனும் மூன்று வகைபாடுகளும் புவியலாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறு மீண்டும் புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களாக சுவட்டு எரிபொருள்,காடுகள் ,பாறைகள்,வளமான மண்,உலோக கனியங்கள்,உலோகமல்லா கனியங்களான நிலக்கரி,சிலிக்கா,இரத்தின கற்கள் முதலானவைகள் உள்ளடங்குகின்ற அதே நேரம் இயற்கையாக புதுப்பிக்க கூடிய வளங்களாக நீர்,சூரிய ஒளி,காற்று முதலானவைகளும் இவற்றோடு மனித சக்தியால் மீள உற்பத்தி செய்து கொள்ள கூடிய வளங்களாக காடுகள்,மண்,மீன்கள்,மற்றும் வன ஜீவராசிகள் முதலானவைகளையும் பட்டியற் படுத்தியுள்ளனர் புவியியலாளர்கள், இன்று இவற்றிற்கு மேலாக இயற்கை வளங்களை உயிருள்ள வளங்கள் ( வனஜீவராசிகள்,தாவர இனங்கள்) , உயிரியல் சாராத அல்லது உயிரற்ற வளங்கள் (நீர்,மண்,கனியங்கள்,காற்று,வற்று பெருக்கு) முதலான வகைப்பாடுகளும் முன்வைக்கப்பட்ள்ளன.
இவ்வாறான தனித் தன்மைகளை கொண்ட இயற்கை வளங்களின் வகைப்பாட்டின் படி மீண்டும் புதுப்பிக்க முடியாத அழிவடையும் வளங்கள் பற்றி சற்று விரிவாக நோக்குவோம். அவற்றுள் முதன்மை வளமாக அமையப் பெற்றுள்ள சுவட்டு எரிபொருள் பற்றி அவதானிக்கும் போது மனித இன வரலாற்றில் தோற்றம் பெற்ற தாவரங்கள்,விலங்கினங்கள் முதலானவை கால சுழற்சியில் இறந்து மண்ணில் புதைந்து அழிய பல்லாயிரக் கணக்கான கால இடைவேளையின் பின்னர் அவை மண்ணில் இருந்து அகழ்ந்து எடுக்கப்படுவதன் ஊடாக உயிர் சுவட்டு எரிபொருளானது தோற்றம் பெருகின்றது இவ்வாறு கிடைக்கப் பெறும் உயிர் சுவட்டு எரிப்பொருட்களை மனித மற்றும் தொழிநுட்ப வலு கொண்டு பிரித்தெடுப்பதன் ஊடாக நிலக்கரி,சுப்பர் பெற்றோல்,பெற்றோல்,டீசல்,மண்ணெண்ணைய், தார் நிறப்பூச்சிக்கள் முதலான வளங்கள் கிடைக்கப் பெருகின்றன.
இதற்கடுத்ததாக மீள புதுப்பிக்க முடியாத இயற்கை வள கட்டமைப்புக்குள் காடுகள் மற்றும் காட்டு தாவர இனங்கள் முதலானவைகள் காணப்படுகின்றன இவை பற்றி நோக்கும் போது மனித இனத் தோற்றக் காலத்திலிருந்து இன்று வரையிலான மனித வளர்ச்சி கால கட்டத்தில் அதிகமாக அழிவடைந்து வரும் வளங்கள் என்ற பிரிவிற்குள் இவை உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறு தற்கால மனித இன தோற்றத்தில் தன் வாழ்க்கை குடியேற்ற கட்டமைப்புக்களை அமைத்துக் கொள்ளும் நோக்கில் இன்று இயற்கை காட்டு வளங்கள் மற்றும் காட்டு தாவர வளங்கள் முதலானவைகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அழிவடையும் காட்டு வளத்தால் மனித வாழ்வியல் தேவைகளுக்கான மூலப் பொருட்கள் முதலான இயற்கை கூறுகள் அழிவடைந்து செல்லும் அதே வேளை இவை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை வரைக்கும் தள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் இன்றைய நவீனத்தின் வளர்ச்சியாலும் மனித சனத்தொகையின் வளர்ச்சியினாலும் அழிக்கப்பட்டு வரும் இக் காட்டு வளமானது இன்று எதிர்கால மனித சமூகத்தின் இருப்புக்குகாக தற்கால நவீன விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியை கொண்டு மீள் காடாக்க நடைமுறைகளானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது. இத்தால் இயற்கை வள பாகுபாட்டுக்குள் மீள புதிப்பிக்க கூடிய வளங்கள் என்ற பிரிவுக்குள் காட்டு வளங்கள் உள்வாங்கப் பட கூடிய வகையில் மீள் காடாக்கமானது வளர்ச்சி பெற்றுள்ளமையானது குறிப்பிடத் தக்கதாகும்.
இதற்கு அடுத்ததாக புதுப்பிக்க முடியாத வளங்களில் பாறைகள் மற்றும் வளமான மண் முதலானவை அமையப் பெறுகின்றன. அவற்றுள் பாறைப் படைகளானது மனிதனது பாதுகாப்பான குடியிருப்புக்கான நிலம் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளின் மூலப் பொருட்களாக அமையப் பெருவதன் நிமித்தம் மனித சமூகத்தில் இன்று அழிவடைந்து வரும் பிரதான இயற்கை வளங்களுள் இப் பாறைகளும் அங்கம் வகிக்கின்றன. இவற்றுக்கு மேலாக இன்றைய அறிவியல் வளர்ச்சி மூலமான தொழிநுட்பங்களின் வருகையாலும் மண்ணை முதன்மையாக கொண்டு இடம் பெறும் விவசாயத்தில் இரசாயனக் கலப்புக்கள் ஊடாகவும் இயற்கை கனியுப்புக்களை கொண்ட வளமான மண் எனும் இயற்கை வளமானது அழிவடைந்து வரும் வளமாக அடையாளம் காணப்படுகின்றது. இதனால் வளமான மண்ணை முதன்மையாக கொண்டு இடம் பெறும் சேதன விவசாயமானது பெறும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய நவீன காலத்தில் விவசாயமானது மனித கேள்விக்கான நிரம்பலாக இடம் பெற்று வந்தாலும் கூட இது முற்று முழுதாக இரசாயன உரம் மற்றும் இரசாயன வளமாக்கிகளை கொண்டே இடம்பெற்று வருகின்றது மறுபுறத்தில் வளமான மண்ணை முதலாக கொண்ட இயற்கை விவசாயமுறை வலுவிழக்கும் அளவிற்கு வளமான மண்ணின் அழிவுத் தன்மையானது அமையப் பெறுகின்றது.
இதே போல உலோகம் மற்றும் உலோகமல்லா கனியங்களும் இன்றைய கால சூழலில் புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு மனித முயற்சி மற்றும் அறிவியல் சார் நவீன இயந்திரங்களது துணையுடன் அகழ்வு மூலமாக பெறப்படுகின்ற இயற்கை வளங்களாக இவை அடையாளப்படுத்தப் படுகின்றன. இவ்வாறான இயற்கை வளங்களான உலோகங்களில் இரும்பு தாது,செப்பு,தங்கம், முதலான உலோகங்கள் இன்றைய மனித கேள்வி நிறைந்த உலோகங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான உலோகங்கள் வளமான மண் படை கட்டமைப்பு மற்றும் மண்ணாக்க பாறை படைக் கட்டமைப்புக்கள் முதலானவற்றிலிருந்து அகழ்வு மூலமாக பிரித்தெடுக்கப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் உலோக கனிமங்களுள் இரும்பு தாதானது கட்டுமானம் மற்றும் அது சார் உபகரணங்களின் தோற்றத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றதோடு செப்பு உலோகமானது மின்னியல் மற்றும் தொழிநுட்பம் சார் உபகரணங்களது உருவாக்கத்திற்கு பெரும் மூலப் பொருட்களாக அமைகின்றது. இதே போல தங்க உலோகமானது மனித சமூகத்தின் ஆபரணவியல் சார் நகைகளை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக பித்தளை உலோகமும் தற் காலத்தில் மனித தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
உலோகங்களை போலவே மனித முயற்சி மற்றும் இயந்திர துணையோடு வளமான மண் கட்டமைப்பு மற்றும் பாறை படைகளிலிருந்து அகழ்வு மூலம் பிரித்தெடுக்கப்படும் கனியங்களாக உலோகமல்லா கனியங்களும் காணப்படுகின்றன. இவ் உலோகமல்லா கனியங்களுள் சிலிக்கா,இரத்தினக்கல் ,நிலக்கரி முதலானவைகள் அங்கம் பெறுகின்றன. இவற்றுள் மண் கட்டமைப்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சிலிக்காவானது கட்டடவியல் சார் சீமந்து முதலான முடிவுப் பொருள் தயாரிப்புக்களின் முதன்மை மூலப் பொருளாக அமையப் பெறுகின்றது. அதே போல மண் படைக் கட்டமைப்பிலிருந்து அகழ்வு ரீதியாக பெறப்படும் நிலக்கரியானது மனித சமூகத்தில் பிரதானமானதொரு எரிபொருளாக அமையும் அதே தருணம் அனல் மின் உற்பத்திக்கு பிரதான மூலப் பொருளாகவும் இது அமையப் பெருகின்றது. இதே போல பாறை கட்டமைப்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இரத்தினக்கல்லானது ஆபரணவியல் துறையில் மிக முக்கிய மூலப் பொருளாக அமையப் பெறுகின்றது. இவ்வாறு மனித சமூகத்தின் இன்றைய பயன்பாட்டு தன்மையிலும் அதிக கேள்வி நிறைந்த இவ் உலோக மற்றும் உலோகமல்லா கனியங்களை அகழ்வு ரீதியாக பெற்றுக் கொள்வதில் காணப்படும் பெரும் சிக்கல் நிலை மற்றும் முதலீடு முதலான காரணங்களாலும் இவை குறிப்பிடத்தக்க பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுகின்றன என்பதனாலும் மனித சமூகத்தில் பெரும் பெறுமதி நிறைந்தவைகளாக அடையாளம் காணப்படுகின்றன.
என்றாலும் கூட இவற்றின் வள தன்மையானது ஒப்பீடளவில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன என்பதனாலும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் கூட மீள உருவாக்கி கொள்ள முடியாது என்பதாலும் புவியில் புதுப்பிக்க முடியாத கனிய வளங்கள் என்ற வகைபாட்டுக்குள் இவை அடையாளப்படுத்தப்படுகின்றன.
இவற்றுக்கு அடுத்தாக புதுப்பிக்க தக்க இயற்கை வளங்களுக்குள் அமையப் பெற்றுள்ள நீர், சூரிய ஒளி, காற்று முதலானவற்றை நோக்கும் போது இவ் இயற்கை வளங்களானது மனித பயன்பாட்டால் அழிக்கப்பட்டாலும் கூட தானியக்க முறையில் மீள புதுப்பித்து கொள்ள கூடிய வளங்களாக இவை அமைந்துள்ளன. இவ்வாறு மனித சமூகத்தின் உயிர் நிலைப்பு தன்மையில் தொடங்கி நீர் மின் உற்பத்தி வரையிலும் மனித சமூகத்தில் அதிக கேள்வியை கொண்ட மூலகமாக நீர் அமைகின்றது. இந் நீர் மனித தேவைக்காக பயன்படுத்தப்பட்டு மாசுப்படுத்தப்பட்டாலும் கூட தானியக்க முறையில் ஆவியாக்கம் பெற்று முகில்களாய் மாறி மீண்டும் மழையாய் மனித சமூகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைகின்றது. இதே போல புவியின் நிலைப்பு தொட்டு இன்று வரையிலும் மாறாத அளவில் வெப்ப கதிர்களையும் வெளிச்சத்தையும் பூமிக்கு வழங்கும் சூரிய ஒளி மற்றும் சுழற்சி முறையில் தானியக்கமாய் உருவாக்கம் பெற்று கொள்ளும் காற்று முதலானவைகள் அழிவடையா புதுப்பிக்க கூடிய இயற்கை வளங்களாக அடையாளப் படுத்தப்படுகின்றன.
இதே போல இன்றைய மனித மற்றும் தொழிநுட்ப முறைமைகளை கொண்டு உருவாக்க முடிகின்ற வளங்களாக மண், உயிரினங்கள், வன ஜீவராசிகள், மற்றும் காடுகள் மற்றும் அதனோடு இணைந்த தாவர இனங்கள் முதலானவை அடையாளப்படுத்தப்படுகின்றன. இவ்வாறே ஞாயிற்று தொகுதியில் மனித இன வாழ்க்கைக்கு ஏற்ற தனி தன்மையை கொண்ட பூகோளத்தில் இயற்கை அன்னையின் கொடையான இயற்கை வளங்கள் அமையப் பெறுகின்றன. இவ்வாறு புவியியல் சார் இயற்கை வளங்களின் உருவாக்கம் அடிப்படையிலான தெளிவான தகவல்களை பெற்றுக் கொண்ட நாம் நமது அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் இயற்கை வளங்களை பயன்டுத்தி கொள்ளும் அதே நேரம் இயற்கை வளங்களை வீண்விரயமாக்குவதை தவிர்த்து இயற்கையோடு இணைந்ததான வாழ்வியலை வாழ்ந்திடுவோம்.