தந்திரோபாய முகாமைத்துவம் என்றால் என்ன? What is the Strategic Management

தந்திரோபாய முகாமைத்துவத்தின் வரைவிலக்கணங்கள், அதன் முக்கியத்துவம், தந்திரோபாய முகாமைத்துவ செயன்முறைகள் எவை? மற்றும் தந்திரோபாய முகாமைத்துவ எண்ணக்கருக்கள் என்பன பற்றி விரிவான பார்வை.

Feb 7, 2023 - 09:23
Feb 7, 2023 - 09:29
 0  149
தந்திரோபாய முகாமைத்துவம் என்றால் என்ன? What is the Strategic Management

தந்திரோபாய முகாமைத்துவத்திற்கான அறிமுகம்

தந்திரோபாய முகாமைத்துவத்தை வரைவிலக்கணப்படுத்தல் 

தந்திரோபாய முகாமைத்துவமானது, பல்வேறு முகாமைத்துவ சிந்தனையாளர்களாலும் தத்துவவியலாளர்களாலும் பல்வேறு விதமாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.

Learned (1965): ஆய்வின்படி, தந்திரோபாய முகாமைத்துவமானது முழு நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் பொது முகாமைத்துவத்தின் பொறுப்புக்களை கொண்டதுடன் அது தொடர்பான பிரச்சினைகள் பாதிக்கின்றன. முழு நிறுவனத்தின் தன்மையையும் அதன் வெற்றியையும்

Schendel and Hofer (1979): தந்திரோபாய முகாமைத்துவம் என்பது நிறுவனத்தின் தொழில்முனைவோர் பணிகள், நிறுவன புதுப்பித்தல் செயற்பாடுகளை வழிநடத்துதல், தந்திரோபாயத்தை மேம்படுத்துவதன் மூலம் உச்ச பயன்பாட்டினை பெறுவதற்குமான ஒரு நிறுவன செயன்முறையாகும்.

Bracker (1980): நிறுவன குறிக்கோள்களை அடைவதற்காக உச்ச அளவில் வளங்களை பயன்படுத்துதல் தொடர்பாக நிறுவனத்தின் உள்ளக மற்றும் வெளியக சூழலை பகுப்பாய்வு செய்வதே தந்திரோபாய முகாமைத்துவம் ஆகும்.

Jemision (1981): சிக்கலாக நிறுவனங்களில் பொது முகாமையாளர் தங்கள் நிறுவனத்தின் திறனையும் சுற்றுச்சூழலில் உள்ள வாய்ப்புக்கள் மற்றும் தடைகளையும் ஒன்றிணைக்க ஒரு தந்திரோபாயத்தை உருவாக்கி பயன்படுத்துதல் தந்திரோபாய முகாமைத்துவம் எனப்படும். இவ்வரைவிலக்கணங்களின் அடிப்படையில்,

தந்திரோபாய முகாமைத்துவம் என்பது ஒரு நிறுவனம் அதன் நோக்கங்களை அடைய உதவும் செயற்பாட்டு முடிவுகளை உருவாக்குதல், செயற்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் என்பவற்றிற்கான கலை மற்றும் அறிவியலாக வரையறுக்கப்படுகிறது.

இவ் வரைவிலக்கணத்தின் படி,

தந்திரோபாய முகாமைத்துமானது முகாமைத்துவம், சந்தைப்படுத்தல், நிதி மற்றும் கணக்கியல், உற்பத்தி / செயற்பாடுகள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் தகவல் முறைமைகளின் ஒருங்கிணைப்பு என்பவற்றில் கவனம் செலுத்துகிறது.

தந்திரோபாய முகாமைத்துவத்தின் நோக்கம், 

எதிர்காலத்திற்கான புதிய மற்றும் வேறுபட்ட வாய்ப்புகளை உருவாக்குவதும் பயன்படுத்துவதுமாகும்.

 தந்திரோபாய முகாமைத்துவச் செயன்முறை

தந்திரோபாய முகாமைத்துவம் என்பது நிறுவனம் மற்றும் தந்திரோபாய தொழிற்துறைகளை மதிப்பிடும் ஒரு வணிகம்  ஈடுபட்டுள்ள தொடர்ச்சியான செயன்முறையாகும். 

முகாமைத்துவ செயன்முறை என்பது ஒரு நிறுவனம் தந்திரோபாய போட்டித்தன்மையை அடைவதற்கும் சராசரிக்கு மேல் வருவாய் ஈட்டுவதற்கும் தேவையான, முழுமையான அர்ப்பணிப்புகள், முடிவுகள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றின் தொகுப்பாகும்.

தந்திரோபாய முகாமைத்துவ செயன்முறை நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது:

1. சுற்றுச்சூழல் ஆய்வு (Environmental Scanning) - சுற்றுச்சூழல் ஆய்வு என்பது தந்திரோபாய நோக்கங்களுக்கான தகவல்களை சேகரித்தல், ஆராய்தல் மற்றும் வழங்கும் செயன்முறையைக் குறிக்கும். இது நிறுவனத்தை பாதிக்கும் உள்ளக மற்றும் வெளியக காரணிகளை பகுப்பாய்வு செய்ய உதவுகின்றது.

2. தந்திரோபாய உருவாக்கம் (Strategy Formulation) தந்திரோபாய உருவாக்கம் என்பது நிறுவன நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான சிறந்த நடவடிக்கையை தீர்மானிக்கும் செயன்முறையாகும். சுற்றுச்சூழல் ஆய்வினை மேற்கொண்ட பின்னர் முகாமையாளர்கள் வணிக மற்றும் செயற்பாட்டு தந்திரோபாயங்களை உருவாக்குகிறார்கள்.

3. தந்திரோபாய அமுல்படுத்தல் (Strategy Implementation)

தந்திரோபாய செயற்படுத்தலில் நிறுவனத்தின் கட்டமைப்பை வடிவமைத்தல், வளங்களை விநியோகித்தல், தீர்மானமெடுக்கும் செயன்முறையை மேம்படுத்துதல் மற்றும் மனித வளங்களை நிர்வகித்தல் ஆகியவை உள்ளடங்கும்.

4. தந்திரோபாய மதிப்பீடு (Strategy Eveluation தந்திரோபாய மதிப்பீடு என்பது தந்திரோபாய முகாமைத்துவச் செயன்முறையின் இறுதிப் நிலையாகும். தற்போதைய தந்திரோபாயங்களின் மூலமாக இருக்கும் உள்ளக மற்றும் வெளியகக் காரணிகளை மதிப்பிடுதல், செயற்றிறனை அளவிடுதல் மற்றும் தீர்வு / திருத்த நடவடிக்கைகளை எடுத்தல் என்பன இதனுள் அடங்கும்.

தந்திரோபாய முகாமைத்துவத்தின் முக்கிய எண்ணக்கருக்கள்

தந்திரோபாய போட்டித்திறன் (Strategic Competitiveness)

ஒரு நிறுவனம் பெறுமதி உருவாக்க தந்திரோபாயத்தை (value-creating strategy) வெற்றிகரமாக உருவாக்கி செயற்படுத்தும் போது தந்திரோபாய போட்டித்திறன் அடையப்படுகிறது. பெறுமதி உருவாக்கம் நிறுவனங்கள் தங்கள் போட்டியாளர்களை விட சிறப்பாகச் செயற்பட வழிவகுக்கின்றது.

தந்திரோபாயம் (Strategy)

தந்நதிரோபாயம் என்பது முக்கிய திறன்களை பயன்படுத்திக் கொள்வதற்கும் போட்டி நன்மைகளைப் பெறுவதற்குமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் தொகுப்பாகும்.

தந்திரோபாயங்கள் ஆனது நீண்டகால நோக்கங்களை அடையும் வழிமுறையாகும். வணிக தந்திரோபாயங்களில் புவியியல் விரிவாக்கம், பல்வகைப்படுத்தல், கையகப்படுத்தல், சந்தை ஊடுருவல் மற்றும் கூட்டு முயற்சிகள் என்பன அடங்கும்.

தந்திரோபாயங்கள் ஆனது சிறந்த நிர்வாக முடிவுகள் மற்றும் பெரிய அளவிலான நிறுவனத்தின் வளங்கள் தேவைப்படும் சாத்தியமான செயற்பாடுகள் ஆகும்.

போட்டி நன்மை (Competitive Advantage)

தந்திரோபாய முகாமைத்துவம் ஆனது ஒரு போட்டி நன்மைகளைப் பெறுவதற்கும் பேணுவதற்குமான செயற்பாடுகளாகும். இது "ஒரு நிறுவனம் குறிப்பாக போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது சிறப்பாகச் செய்யும் எவையும்" என வரையறுக்கலாம்.

போட்டி நிறுவனங்களால் செய்ய முடியாத ஒன்றை ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் போது அல்லது போட்டி நிறுவனங்கள் அடைய விரும்பும் ஒன்றை சொந்தமாகக் கொண்டிருக்கும் போது அந்நிறுவனம் போட்டி நன்மையைக் கொண்டிருக்கும்.

உதாரணமாக, உலகளாவிய பொருளாதார மந்த நிலையின் போது, நிறுவனத்தின் குறிப்பிட்ட நிறுவனம் போதுமான பணக்கையிருப்பைக் கொண்டிருத்தல் அந்நிறுவனத்திற்கு மிகப் பெரிய போட்டி நன்மையை அளிக்கும்.

சராசரிக்கு மேலான வருவாய் (Above Average Return)

சராசரிக்கு மேலான வருவாய் எனப்படுவது ஒரு முதலீட்டாளர் சம அளவு அபாயத்துடன் கூடிய ஏனைய முதலீடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் வருமானத்தை விட மேலதிகமாக பெற்றுக்கொள்ளும் வருமானமாகும். ஒன்று / ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களில் அரிதான, பின்பற்றுவதற்கு விலையுயர்ந்த மற்றும் பதிலீட்டுத்தன்மையற்ற வளங்களையும் திறன்களையும் பயன்படுத்தும் போது சராசரிக்கு மேல் வருமானம் உழைக்க முடியும்.

இடர் (Risk)

இடர் என்பது ஒரு குறிப்பிட்ட முதலீட்டினால் ஏற்படும் பொருளாதார நன்மைகள் அல்லது இழப்புகள் தொடர்பான முதலீட்டாளரின் நிச்சயமற்ற தன்மையாகும்.

சராசரிக்கு மேல் வருமானம் ஈட்ட முயலும் நிறுவனங்கள் போட்டி நன்மையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகும்.

போட்டி நன்மைகள் இல்லாத அல்லது கவர்ச்சிகரமான நிறுவனங்கள் சராசரி வருமானத்தையே ஈட்டிக்கொள்கின்றன.

சராசரி வருவாய் (Average Return)

சராசரி வருமாய் என்பது ஒரு முதலீட்டாளர் சம அளவு இடர் உள்ள முதலீடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் வருமானத்திற்குச் உள்ள சமமான வருமானமாகும். நீண்ட காலத்திற்கு குறைந்தபட்சம் சராசரி வருமானத்தையேனும் ஈட்ட இயலாமை நிறுவனத் தோல்விக்கு வழிவகுக்கின்றது. ஏனெனில் சராசரிக்கும் குறைவான வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் இருந்து முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறுவதால் இந்நிலை ஏற்படுகிறது.

தந்திரோபாய முகாமைத்துவத்தின் முக்கியத்துவம் 

  • கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை அடையாளங் காணவும், பயன்படுத்திக்கொள்ளவும் நிறுவனத்திற்கு உதவுதல். 

  • முன்னுரிமைப்படுத்தவும், மேம்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குதல். அதாவது வணிகங்களின் உற்பத்தி மற்றும் தயாரிப்புக்கள் சந்தைகள் பற்றிய முடிவுகள் உற்பத்தி வசதிகள், முதலீடுகள் மற்றும் நிறுவன அமைப்புக்களுக்கு தேவையான வணிக முடிவுகள் என்பவற்றிற்கான கட்டமைப்பை வழங்குகின்றது.

  • பாதகமான நிலைமைகள் மற்றும் மாற்றங்களின் விளைவுகளை குறைத்தல். அதாவது தந்திரோபாய முகாமைத்துவமானது வெளிப்புற சூழலில் இருக்கும் அச்சுறுத்தல்களை இனங்காண்பதனூடாக நிறுவனங்கள் அவற்றைத் தவிர்த்துக் கொள்ள அல்லது அவ் அச்சுறுதல்களை நடுநிலையாக்க உதவுகின்றது. ஆகவே இவை நிறுவன வெற்றிக்கு வாய்ப்பாக மாறுகின்றது.

  • அடையாளம் காணப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான நேரம் மற்றும் வள ஒதுக்கீட்டைத் வினைத்திறனாகச் செய்தல்.

  • ஊழியர்களிடையே உள்ளகத் தொடர்புகளுக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குதல். முன்னோக்கிய சிந்தனையைத் தூண்டுதல். அதாவது நிறுவன எதிர்கால செயற்பாடுகள் பற்றிய முன்னோக்கிய பார்வையை கட்டமைப்பதற்கும் அதன் மூலம் எதிர்கால நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்வதற்கும் உதவுதல்.

  • மாற்றத்திற்கான சாதகமான அணுகுமுறையை ஊக்குவித்தல். வணிகத்தின் நீண்ட கால ஆயுளை உறுதிப்படுத்த உதவுதல்.

தந்திரோபாய முகாமைத்துவத்தின் 5 முக்கிய கேள்விகள்

1.நாம் இப்போது எங்கு இருக்கின்றோம்? (Where are we now?)

2.நாம் எங்கு செல்ல எதிர்பார்க்கின்றோம்? (Where do we want to go?)

3.நாம் என்ன செய்யப் போகின்றோம்? (What are we going to do (differently)?)

4.நாம் எவ்வாறு மாற்றியமைக்கப் போகின்றோம்? (How are we going to change?)

5.எவ்வாறு முன்னேற்றத்தை முகாமைத்துவம் செய்யப் போகின்றோம்? (How will we manage progress)



சராசரிக்கு மேலான வருவாயின் தொழிற்துறை-நிறுவன மாதிரி (The Industrial- Organizational (I/O) Model of Above-Average Returns)

தொழிற்துறை-நிறுவன (I/O) சராசரிக்கு மேல் வருவாய் மாதிரியானது, ஒரு நிறுவனத்தின் தந்திரோபாய நடவடிக்கைகளில் வெளிப்புற சூழலின் மேலாதிக்க செல்வாக்கை விளக்குகிறது.

முகாமையாளர்கள் நிறுவனத்திற்குள் மேற்கொள்ளும் தெரிவுகளை விட ஒரு நிறுவனம் போட்டியிடத் தேர்ந்தெடுக்கும் தொழிற்துறை, நிறுவன செயற்திறனில் வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளது என இம்மாதிரி குறிப்பிடுகிறது.

நிறுவன செயற்றிறனானது பொருளாதாரம், சந்தை நுழைவிற்கான தடைகள், பல்வகைப்படுத்தல், தயாரிப்பு வேறுபாடு மற்றும் தொழிற்துறையில் உள்ள நிறுவனங்களின் செறிவு அல்லது அளவு உள்ளிட்ட பல்வேறு தொழிற்துறை பண்புகளால் முதன்மையாக தீர்மானிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

1/0 மாதிரி நான்கு அடிப்படை எடுகோள்களைக் கொண்டுள்ளது.

1. சராசரிக்கு மேலான வருவாயை ஈட்டக்கூடிய தந்திரோபாயங்கள் மீது வெளிப்புறச் சூழல் அழுத்தங்கள் மற்றும் கட்டுப்பாடுகளைச் சுமத்துவதாகக் கருதப்படுகிறது,

2. ஒரு தொழிற்துறைக்குள் அல்லது அந்தத் தொழிற்துறையின் ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் போட்டியிடும் பெரும்பாலான நிறுவனங்கள் ஒரே மாதிரியான தந்திரோபாய ரீதியாக தொடர்புடைய வளங்களைக் கட்டுப்படுத்துவதாகவும், அவ்வளங்கள் தொடர்பில் ஒரே மாதிரியான தந்திரோபாயங்களை பின்பற்றுவதாகவும் கருதப்படுகிறது.

3. தந்திரோபாயங்களைச் செயற்படுத்தப் பயன்படுத்தப்படும் வளங்கள் நிறுவனங்களுக்கிடையில் அசையக்கூடியதாகவுள்ளது. எனவே நிறுவனங்களுக்கிடையில் உருவாகக்கூடிய எந்தவொரு வள வேறுபாடுகளும் குறுகிய காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும் எனக் கருதப்படுகிறது.

4. நிறுவனத்தில் தீர்மானமெடுப்பவர்கள் பகுத்தறிவு கொண்டவர்களாகவும், நிறுவனத்தின் சிறந்த நலன்களுக்காக செயற்படுவதற்கு உறுதியுடையவர்களாகவும் இருப்பதாகக் கருதப்படுகிறது, இது அவர்களின் இலாபத்தை அதிகரிக்கும் நடத்தைகளால் வெளிப்படுத்தப்படுகிறது.

பொதுவாக, நிறுவனங்கள் நியமப்படுத்தப்பட்ட பொருட்களை அல்லது நியமப்படுத்தப்பட்ட சேவைகளை போட்டியாளர்களை விடக் குறைந்த செலவில் உற்பத்தி செய்வதன் (கிரயத் தலைமைத்துவம்) மூலமோ அல்லது வாடிக்கையாளர்கள் அதிக விலை செலுத்தத் தயாராக இருக்கும் வேறுபட்ட தயாரிப்புகளை தயாரிப்பதன் (வேறுபடுத்தல் தந்திரோபாயம்) மூலமோ சராசரிக்கு மேல் வருவாய் ஈட்டலாம் என்று இம்மாதிரி அறிவுறுத்துகிறது.

சராசரிக்கு மேலான வருவாயின் வளங்களை அடிப்படையாகக் கொண்ட மாதிரி (The Resource-Based Model of Above-Average Returns)

ஒவ்வொரு நிறுவனமும் தனித்துவமான வளங்கள் மற்றும் திறன்களின் தொகுப்பு என்று வள அடிப்படையிலான மாதிரி கருதுகிறது. அதன் வளங்கள் மற்றும் திறன்களின் தனித்தன்மையே ஒரு நிறுவனத்தின் தந்திரோபாயமாகக் காணப்படுவதுடன் சராசரிக்கு மேல் வருவாய் ஈட்டுவதற்கான அதன் திறனுக்கான அடிப்படையாகவும் அமையும்.

வளங்கள் (Resource) வளங்கள் எனப்படுவபவை நிறுவன உற்பத்தி செயல்முறைகாக உள்ளீடுகளாகும். மூலதன உபகரணங்கள், தனிப்பட்ட ஊழியர்களின் திறன்கள், காப்புரிமைகள், நிதி மற்றும் திறமையான முகாமையாளர்கள் போன்றன வளங்களுக்கான உதாரணங்களாகும். ஒரு குறிப்பிட்ட வளம் தனியாகப் போட்டிநன்மையை அளிக்காது. உண்மையில், வளங்கள் ஒரு திறனாக உருவாகும் போது போட்டி நன்மையை வழங்குவதற்கான அதிக வாய்ப்பு காணப்படும்.

திறன் (Capability) ஒரு திறன் என்பது ஒரு பணியை அல்லது ஒரு செயலை ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் செய்வதற்கான வளத்தொகுப்பின் ஆற்றலாகும். திறன்கள் காலப்போக்கில் வளர்ச்சியடையடைவதோடு சராசரிக்கு அதிகமான வருமாயைப் பெறுவதற்காக மாற்றியமைக்கக் கூடிய வகையில் நிர்வகிக்கப்பட வேண்டும்.

மையத் திறன்கள் (Core competencies) மையத் திறன்கள் என்பது ஒரு நிறுவனத்திற்கு அதன் போட்டியாளர்களை விட சிறப்பாகச் செயற்படுவதன் மூலம் கிடைக்கும் போட்டி நன்மைக்கு ஆதாரமாகவுள்ள வளங்கள் மற்றும் திறன்கள் ஆகும்.

வள அடிப்படையிலான மாதிரியின்படி, காலப்போக்கில் நிறுவனங்களின் செயற்திறனில் ஏற்படும் வேறுபாடுகள் முதன்மையாக தொழில்துறையின் கட்டமைப்புப் பண்புகளைக் காட்டிலும் அவற்றின் தனித்துவமான வளங்கள் மற்றும் திறன்களினாலேயே ஏற்படுகின்றன.

நிறுவனங்கள் வேறுபட்ட வளங்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் அவை எவ்வாறு வளங்களை ஒன்றிணைத்து பயன்படுத்தல் என்பவற்றின் அடிப்படையில் தனித்துவமான திறன்களை உருவாக்குகின்றன இம்மாதிரி கருதுகிறது. வளங்கள் மற்றும் திறன்களில் உள்ள என வேறுபாடுகளே போட்டி நன்மையின் அடிப்படையாகும் என இம்மாதிரி குறிப்பிடுகின்றது.

ஒரு நிறுவனத்தின் அனைத்து வளங்களும் திறன்களும் போட்டி நன்மைக்கான அடிப்படையாக இருக்க முடியாது. வளங்கள் மற்றும் திறன்கள் மதிப்புமிக்கவையாகவும், அரிதானவையாகவும், பின்பற்றுவதற்கு விலை உயர்ந்தவையாகவும் மற்றும் பதிலீடு செய்ய முடியாதவையாகவும் இருக்கும்போது இந்த ஆற்றல் உணரப்படுகிறது.



அக்கறையுடைய தரப்பினர்

அக்கறையுடைய தரப்பினர் என்பது நிறுவன தந்திரோபாய செயற்பாடுகளைப் பாதிக்கக்கூடிய மற்றும் அதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள் மற்றும் குழுக்கள் உள்ளடக்கவதோடு மேலும் அவர்கள் நிறுவனத்தின் செயற்பாடுகளில் உரிமையுள்ள தரப்பினராவர்.

நிறுவனங்கள் தங்கள் அக்கறையுடைய தரப்பினருடன் சார்பு உறவுகளைக் கொண்டிருந்தாலும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைத்து அக்கறையுடைய தரப்பினர் மீதும் சமமாகச் சார்ந்து இருப்பதில்லை. இதன் விளைவாக, ஒவ்வொரு அக்கறைகொண்ட தரப்பினரும் நிறுவனத்தின் மீது ஒரே அளவிலான செல்வாக்கு காணப்படுவதில்லை.

ஒரு நிறுவனம் குறிப்பட்ட தரப்பினர் மீது அதிகம் சார்ந்திருக்கும் போது. குறிப்பிட்ட தரப்பினரின்

பங்கேற்பு மிகவும் முக்கியமானதாகவும் மற்றும் மதிப்புமிக்கதாகவும் காணப்படும்.

இத்தகைய அதிகரித்த அதிக சார்பு, குறிப்பிட்ட தரப்பினருக்கு ஒரு நிறுவனத்தின் பொறுப்புகள், முடிவுகள் மற்றும் செயற்பாடுகள் மீது அதிக சாத்தியமான செல்வாக்கை அளிக்கிறது.

1. மூலதன சந்தை அக்கறையுடைய தரப்பினர் (Capital Market Stakeholders)

பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்குனர்கள் இருவரும் அவர்களது முதலீட்டினை செல்வத்தினை நிறுவனம் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் வருவாய் / இலாபம் முதலீடுகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடரின் அளவுடன் தொடர்புடையது.

2. பொருட்சந்தை அக்கறையுடைய தரப்பினர் (Product Market Stakeholders) பொருட்சந்தை அக்கறைகொண்ட தரப்பினர் (வாடிக்கையாளர்கள், வழங்குனர்கள். சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள்) சில பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இருப்பினும், நிறுவனங்கள் போட்டிப் போர்களில் ஈடுபடுவதனால் நான்கு குழுக்களும் வெவ்வேறு வகையில் பயனடையலாம்.

3. நிறுவன அக்கறையுடைய தரப்பினர் (Organizational Stakeholders) ஊழியர்கள் நிறுவுன அக்கறைகொண்ட தரப்பினராக கருதப்படுகின்றனர். நிறுவனம் அவர்களுக்கு மாறக்கூடிய, தூண்டுதல் மிக்க. மற்றும் பயனளிக்க்கூடிய பணிச்சூழலை வழங்கும் என எதிர்பார்க்கின்றனர்.



Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow