செவ்வானம் நானே நீ அவந்திகையே..!பகுதி -1
காதல் தொடர்கதை

ஏய் ராசாத்தி சீக்கிரமா அந்த தட்ட எடுத்துட்டு வா நேரமாச்சு பாரு..என்னங்க நீங்க இன்னும் ரெடியாகாம என்ன பண்றிங்க சீக்கிரமா போய் ரெடியாகுங்க..
டேய் குமரா நீ என்னடா மசமசனு நின்னுட்டு இருக்க போய் தம்பிய ரெடி பண்ணு போ என மூச்சு வாங்க அனைவரையும் வேலை வாங்கி கொண்டிருந்தார் அந்த குடும்பத் தலைவி சாரதா.
வேலு வாசல்ல வாழமரத்தை நல்ல இழுத்து கட்டு பாரு ஒரு பக்கமா சாஞ்சிருக்கு என பட்டு வேஷ்டி சட்டையில் கையில் உள்ள தங்க காப்பை மேலேற்றி விட்டு மீசையை முறுக்கிய படி கம்பீரமாய் வந்து நின்றான் செந்தமிழ் வேந்தன்.
ரெடியாகிட்டியா தங்கம் என் கண்ணே பட்டுடும் போல என ஆறடியில் வஞ்சனை இல்லாமல் வளர்ந்திருந்த இரண்டாவது மகனை நொட்டி முறித்தாள் சாரதா.
சாரதா நா ரெடி என வந்து நின்றார் சாரதாவின் அப்பாவி கணவன் கோபி.
இன்னும் இந்த குமரனும் ராசாத்தியும் என்ன பண்றாங்க மாமியார் காரி குரலை உயர்த்த இதோ வந்துட்டோம் அத்த என சாரதாவின் மூத்த மகன் குமரனும் மருமகள் ராசாத்தியும் வந்தார்கள்.
அப்பறம் என்ன எல்லாரும் வண்டில ஏறுங்க முகூர்த்த நேரத்துக்கு முன்னாடியே மண்டபத்துல இருக்கனும் என அனைவரையும் துரிதப்படுத்தினாள் சாரதா.
கிறுக்கு பயலே இன்னும் என்னடா பண்ணிட்டு இருக்க அங்க சீக்கிரமா வாடா..
எது வாடாவா..மரியாதையெல்லாம் தேயுது... உனக்கு இந்த மரியாதை போதும் இதையும் கெடுத்துக்காம ஒழுங்கா அவள கூட்டிட்டு போற வேலைய பாரு..
நா என்ன மாட்டேன்னா சொல்றேன் அவ தான் வரமா அப்பா அம்மா குடும்பம்னு அழுது வடிச்சிட்டு இருக்கா..என்றான் பிரபு .
ஸ்ஸ்ஸப்பா மிடில உன் ரெண்டு பேராலையும் எனக்கு பெரிய தலையிடி..
நீ எதுக்குடி இப்போ அழுதுக்கிட்டு இருக்க.. இப்போ நீ அழறத நிறுத்திட்டு பிரபு கூட போகல காலம் பூர அழுதுட்டே தான் இருக்கனும் அதுவும் அந்த ஜெய்ல்ல என அழுது கொண்டிருந்த ஜனனியிடம் கத்தி வைத்தாள் அவந்திகா.
அதுக்கில்ல அதி...அம்மா பாவம் இல்லையா..
என்ன அம்மா பாவம் ஆட்டுக்குட்டி பாவம்னுட்டு சீக்கிரமா போற வழிய பாரு இல்லனு அந்த குந்தானி கிழவிக்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்ட்டப்படுவ...
தேங்க்ஸ் அதி நா வாரேன் என்ற ஜனனி அவந்திகாவை கட்டியணைத்து விடை பெற்றாள்.
ஆமா இப்படி ப்ரோக்கர் வேலை பாக்குறியே உனக்கு வெட்கமா இல்ல என்ற பிரபுவிடம் வெட்கமா ஹாஹா.. எனக்கா..இல்லவே இல்ல வாழ்க்கைல இதெல்லாம் சாதரணப்பா..கெத்தாக காலரை தூக்கி விட்டவள் அவர்களை வழியனுப்பி வைத்தாள்.
என்னது காலரா... அட ஆமாப்பா..பசங்க மாதிரி டவுசர் சட்டை போட்டுகிட்டு சுத்துனா காலர தானே தூக்கி விட முடியும்.அவந்திகா அழகி என்றும் சொல்ல முடியாது அழகி இல்லையென்றும் சொல்ல முடியாது.இருபத்தி மூன்று வயது இளமங்கை கை நிறைய கயிறுகள்,வித விதமாய் கலர் செய்ய பட்ட மூன்றடி கூந்தல், ஆண்கள் அணியும் டவுசர் சட்டை என பார்க்கவே வித்தியாசமான ஜந்து நம் நாயகி.
அதுவும் காலேஜ் முடித்து விட்டு மற்றவர்களை குறிப்பாக ஆண்களை வம்பிலுத்து கொண்டு அப்பன் சேர்த்து வைத்த காசில் ஊரை சுற்றும் அக்மார்க் தமிழ் பெண்.
வாயில் என்னேரமும் சுவிங்கமும் வேறு.
யாரும் கேள்வி கேட்டால் தெனாவெட்டாய் பதில் அதையும் யாரேனும் எதிர்த்து கேட்டால் அடிதடி கோதாவிலும் இறங்கி விட்டும் சரியான அராத்து.
இவளுக்கு எதிரிகள் மட்டும் ஏராளம் அதிலும் குறிப்பாக ஜென்ம எதிரியென்று ஒருவன் அவனுக்கும் இவளுக்கும் ஏழாம் பொருத்தம் இப்போது அவன் வாழ்விலும் ஏழரையை கூட்டி விட்டாள் இனி நடக்க போவதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.
திருமண மண்டபத்திற்கு வந்திறங்கி விட்டார்கள் வேந்தன் குடும்பம் பெரியவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று அவர்களை உள்ளே அழைத்து செல்ல அலைபாயும் கண்களோடு மணமகளவளை வேந்தன் தேடி கொண்டிருந்தான்.
யாரையோ தேடுற மாதிரி இருக்கு..காதுக்கு கேட்ட குரலில் முகத்தில் இருந்த கனிவு கலைந்து போய் இறுக்கம் கூடி போக கேள்வி கேட்டவளை திரும்பி முறைத்தான் வேந்தன்.
நல்ல நாள் அதுமா இவள எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திங்க சத்தமாகவே சாரதா கேட்டு வைக்க..ஏன் நா வந்தா என்னவாம் இது என்ன உங்கப்பன் ஊட்டு மண்டபமா என்ன எனக்கு பத்திரிகை வச்சாங்க அதனால வந்தேன் என்றாள் அவந்திகா திமிராக.
ஏய் என்ன வாய் ரொம்ப நீளுது நாக்க இழுத்து வச்சி அறுத்திடுவேன் ஜாக்கிரதை என ராசாத்தி சீறி கொண்டு வர..
எங்க அறு பார்ப்போம் இந்த நாக்கு என நாக்கை வெளியே நீட்டினாள் அவந்திகா...அம்மா அண்ணி இவ கிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு வாங்க போவோம் என அனைவரையும் இழுத்து கொண்டு சென்றான் வேந்தன்.
ஹும் கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் என இரு கையை பின்னால் கட்டி கெத்தாய் நின்றாள் நம் அராத்து குட்டி நடக்க போகும் சம்பவம் அறியாமல்.
சாரதாவின் அண்ணன் மகளுக்கும் வேந்தனுக்கும் இன்று திருமணம்.. வேந்தன் சொந்த முயற்சியில் ஒரு கார்மன்ட் ஃபேக்டரியை உருவாக்கி நடத்தி கொண்டு வரும் இருபத்தியெட்டு வயது ஆண்மகன்.. எதற்கெடுத்தாலும் கோபம் தான் முன்னால் வந்து நிற்கும் நினைத்ததை செய்து முடிக்க வேண்டும் என்ற பிடிவாத குணம் உடையவன்.
சிறு வயது முதலே மாமன் மகள் மீது காதல் கொண்டு இன்று மணமேடையில் அவளுக்காய் காத்திருக்கிறான் அவள் வருவாளா என்பது தான் கேள்வி குறி.
அவந்திகா சாரதாவின் தம்பி மகள்..தன் பேச்சை மீறி தம்பி ஏழை பெண்ணை காதல் திருமணம் செய்ததால் குடும்பமாய் சேர்ந்து அவந்திகாவின் தந்தையை ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
சாரதாவின் தந்தை ஊரில் நாட்டமையாக இருநதவர். ஏகப்பட்ட பூர்விக சொத்துக்கள் மூன்று பிள்ளைகளுக்கும் சேர்த்து வைத்திருந்தார் .
சாரதாவும் அவளின் அண்ணன் மாதவனும் பணந்திண்ணி பேய்கள் தம்பி ராம் காதல் கல்யாணம் செய்து கொண்டதையே சாக்காக வைத்து கொண்டு மொத்த சொத்தையும் சுருட்டி கொண்டு நகரத்துக்கு வந்து விட்டார்கள் இப்போதைக்கு இதுதான் இவர்கள் குடும்ப நிலவரம் போக போக கலவரம்.
மணமேடையில் அமர்ந்திருந்த வேந்தன் அவந்திகாவை திமிருடன் பார்த்திருக்க அவளோ முன் வரிசையில் அமர்ந்து கால்மேல் கால் போட்ட படி அதே கெத்துடன் அவனை பார்த்திருந்தாள்.
அண்ணி நேரமாச்சு பொண்ண கூட்டிட்டு வாங்க என சாரதா சொல்லி கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் ஒரே சலசலப்பு..கல்யாண பெண்ணே வந்து நின்றாள் கழுத்தில் தாலியோடு மாற்றானின் மனைவியாக. பிரபுவின் கைப்பிடித்த படி நின்றது சாட்சாத் நம் ஜனனியே.
எல்லோரின் பார்வையும் அதிர்ச்சியாய் ஜனனி மேல் படிய ஒருத்தனின் பார்வை மட்டும் கோபமாய் அவந்திகாவை துளைத்தது.
ஏய் ஜனனி என்னடி இது..ஊர கூட்டி உன் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணுனா நீ என்னடான்னா எவனோ பேர் தெரியாத பயல கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறியே ஜனனியின் அம்மா கோகிலா அழுது வடிக்க..
அது எப்படி பேர் தெரியாம கல்யாணம் பண்ணுவாங்க இவன் பேர் பிரபுனு தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணுனா இல்ல ஜனனி... இடையில் வந்து ஆஜர் ஆகிய அவந்திகாவை பிடித்த கொண்டாள் சாரதா..
அதான் அப்போவே இவ கிட்ட சொன்னேன் இந்த சிறுக்கி கூட சேராத சேராதனு..ஓடுகாளி பெத்து போட்டவ தானே அதான் இவ அப்பான் ஆத்தா புத்திய என் மருமகளுக்கும் சொல்லி கொடுத்துட்டா..
இந்தா தாய் கெழவி பார்த்து பேசு பல்ல தட்டி கைல கொடுத்துருவேன் யார பார்த்து ஓடுகாளி பெத்த பொண்ணுனு சொல்ற கண்களை உருட்டி சாரதாவை அவந்திகா மிரட்ட கப் சிப் என வாயை மூடிக்கொண்டாள் சாரதா ஏற்கனவே வாங்கிய அனுபவம் போலும்.
இந்தோ பாரு ஜனனி அவன் கட்டுன தாலிய கலட்டி வீசிட்டு வா உன்ன வேந்தனே கல்யாணம் பண்ணிக்குவான்... அவன் உன்ன எவளோ லவ் பண்றான்னு உனக்கே தெரியும்ல வேந்தனின் அண்ணன் குமரன் சொல்ல...
அவரு மட்டும் காதலிச்சா போதுமா நா காதலிக்க வேண்டாமா..? எனக்கு வேந்தன் மாமா மேல பாசம் இருக்கு ஆனா காதல் இல்ல என் காதல் பிரபுவுக்கு மட்டும் தான் சொந்தம் என பேச்சை முடித்துக் கொண்டாள் ஜனனி.
கோபத்தில் பற்களை கடித்த மாதவனோ ஜனனியின் தாலியில் கை வைக்க போக...
ஹாங் ஐயா பெரியவரே கேமராவ மறைக்காம அப்படிக்கா கொஞ்சம் ஓரமா நின்னு தாலிய கலட்டுனிங்கனா ஃபுல் ஃபோக்ஸோட நா வீடியோ எடுக்க வசதியா இருக்கும் அப்போ தான் எல்லாரோட மூஞ்சியும் மூஞ்சி புத்தகத்துல தெளிவா தெரியும் என்ற அவந்திகாவோ வீடியோ எடுத்து கொண்டிருக்க அதற்கு மேல் அங்கிருந்த யாருக்கும் எதுவும் செய்ய முடியாது போனது.
தங்கச்சிமா நீ ஒன்னும் கவலை படாத நமக்கு நம்ம குடும்ப கௌரவம் தான் முக்கியம் இவ போனா என்ன என் சின்ன மகள உன் வீட்டு மருமகளாக்கிக்க என்ற மாதவனோ தன் சின்ன மகளை மேடையில் அமர வைக்க போக..
இதோ பாருங்க மக்களே பார்ப்பதற்கே பாகுபலி ச்சே சாரி செத்த எலி போல இருக்கும் இவர் தான் மாதவன்..மூத்த மகள் காதல் கல்யாணம் பண்ணியதால் பதினெட்டு வயசு முடியாத பச்ச மண்ணு சின்ன மகள அதோ மேடையில இருக்குற அங்கிளுக்கு கட்டிவைக்க பாக்குறார்..என லைவில் பேசிக் கொண்டிருந்த அவந்திகாவை எதிர்த்து யாராலும் எதுவும் செய்ய முடியாத நிலை.
வேந்தனை பற்றி சொல்லவே வேண்டாம் பார்த்து பார்த்து காதலித்த பெரிய மாமன் மகள் இன்னொருவனை காதலிக்கிறேன் என்ற ஏமாற்றம் இதில் அவந்திகா செய்யும் அட்டகாசங்கள் வேறு.. எரிகிற நெருப்பில் பெற்றோல் ஊற்றியது போல அவள் மேல் உள்ள வன்மத்தை மேலும் தூண்டி விட அவள் முன்பு தோற்று போக கூடாது என்று எண்ணியவன் அனைவரும் சுதாரிக்கும் முன்னரே மேடை விட்டு இறங்கி அவந்திகா கழுத்தில் தாலியை கட்டியிருந்தான்.
சாதாரண பெண்ணாய் இருந்திருந்தால் ஒன்று அதிர்ந்து போயிருப்பாள் இல்லையென்றால் அழுதிருப்பாள் அவந்திகாவோ மாஸ்டர் பீஸ் என்பதால் தாலியையும் வேந்தனையும் மாறி மாறி பார்த்து விட்டு..
திரும்பவும் பார்த்துக்கோங்க மக்களே பார்ப்பதற்கே பலவாள்தேவன் போல் இருக்கும் இவர் தான் செந்தமிழ் வேந்தன்.. செந்தமிழ் வேந்தனவர்கள் அவந்திகாவை என் கழுத்தில் தாலி கட்டி சாரதாவின் மகன் என்ற நிலையில் இருந்து அவந்திகாவின் கணவன் என்று பதவி உயர்வு பெற்றுள்ளார் இனி அவந்திகாவின் பொறுப்பு துறப்பு அனைத்தும் வேந்தனையே சாரும் என லைவ்வை அவந்திகா முடித்து வைக்க மொத்த கூட்டமும் மயங்கி விழுந்தது அவள் அலப்பறையில்.
தொடரும்..