மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 05 (கர்ணன் அவதாரம்)

சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 05 (கர்ணன் அவதாரம்)

பாகம் -5

கண்ணனின் பாட்டனான சூரன் என்பவனுக்குப் பிருதை என்றொரு மகள் இருந்தாள். சூரனின் மைத்துனான குந்திபோஜனுக்குப் பிள்ளையில்லாமையால் சூரன் தனது மகளான பிருதையை அவனுக்கு வளர்ப்பு மகளாகக் கொடுத்தான். அதன் பின் பிருதை குந்தி என்றழைக்கப்பட்டாள்.

அவள் கன்னியாக இருந்த காலத்தில் துருவாசமுனிவர் குந்திபோஜனின் அரண்மனைக்கு வந்து அங்கு ஒரு வருட காலம் தங்கியிருந்தார். அப்போது குந்தியே முனிவருக்கு மிக்க அன்புடன் பணிவிடை செய்தாள். அவளது பணி விடையில் மகிழ்ந்த துருவாசமுனிவர் ஒரு சச்தி மிக்க மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார். பின்பு மகளே; “இந்த மந்திரத்தைச் சொல்லி நீ எந்தத்தேவரை அழைக்கிறாயோ அவர் உன் எதிரே வந்து உனக்குப் பாக்கியம் நிறைந்த புத்திரனைத் தருவார்" என்று சொல்லி விட்டுச் சென்றார். பிற்காலத்தில் குந்திக்குப் பிள்ளைகள் பிறக்காதென்பது முனிவருக்குத் தெரியும்.

விளையாட்டுப்பெண்ணாக இருந்த குந்திக்கு உடனே அம்மந்திரத்தைப் பரீட்சித்துப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடனே அவள் ஆகாயத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த சூரியனை வணங்கி மந்திரத்தைச் சொன்னாள்.

உடனே சூரிய தேவன் அவள் முன் தோன்றினான். அவனைக்கண்டு நடுநடுங்கிய குந்திதேவி; 'பகவானே, அறியாத்தனத்தால் உன்னை நினைத்துத் துருவாசமுனிவர் கூறியமந்திரத்தை உபதேசித்து விட்டேன். நான் 23 கன்னி,திருமணமாகாதவள். அதனால் என்னை மன்னித்துத் திரும்பிச் சென்றுவிடுங்கள்" என்றாள்.

"குந்திதேவியே, என்னை அழைத்தால் அதன் பலனைப்பெற்றாக வேண்டும். அதனால் எனது சக்தி பெற்ற புதல்வன் ஒருவன் உனக்குப் பிறப்பான்”. என்று மறைந்துவிட்டான். கூறி உடனே கவசமும் குண்டலங்களும் கொண்ட அழகான ஆண்மகனொன்று குந்திக்குப்பிறந்தது.

குழந்தையைப்பெற்றெடுத்த குந்தி பெரும்அதிர்ச்சியடைந்தாள். தன்னால்

அக்குழந்தையை வளர்க்கமுடியாதுதென்று உணர்ந்த குந்தி ஒருபெட்டி செய்து அதனுள் தனது சேலையை வைத்து அதன்மேல் குழந்தையை வைத்து ஆற்றில் விட்டாள். ஆற்றில் மிதந்து வந்த பெட்டியை எடுத்த ஒருதேரோட்டி அக் குழந்தையை தனது வீட்டுக்குக் கொண்டு சென்று மனைவியிடம் கொடுத்தான். அவர்களுக்குப் பிள்ளையில்லாததால் அக்குழந்தையைக் கடவுள்தான் தமக்குத் தந்தார் என்று நினைத்து மகிழ்ந்து கர்ணன் என நாமமிட்டு வளர்த்துவந்தனர்.

அதன் பின் பாண்டு மன்னன் குந்திதேவியை மணந்தான். அதன்பின் பீஷ்மரின் யோசனைப்படி மத்ரராஜனுடைய தங்கை மாத்திரியையும் மணந்து கொண்டான். திருதராட்டினன் குருடனானபடியால் பாண்டுவுக்கு முடிசூட்டப்பட்டது. பாண்டு நீதி தவறாது நாட்டை ஆண்டு வந்தான்.

பாகம் 6 பதிவேற்றப்பட்டுள்ளது அதனை படிக்க

 Click to See more பட்டனை கிளிக் செய்யுங்கள்

பின்குறிப்பு:- சிறுவர்கள் வாசித்து பயன்பெறும் வகையில் மிகவும் எளிய வடிவில் முழு மகாபாரதமும் சுருக்கப்பட்டு இங்கே எழுதப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன