அசோக் மித்ரன் ,சிறு கதைகள் -01

இந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும்
"இந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் நான் வராமல் சமாளித்துக்கொண்டு விடுகிறீர்களா!” என்று அவள் மீண்டும் வேண்டிக் கேட்டுக்கொண்டாள். அதை வேண்டுகோள் என்று சொல்லிவிட முடியாது. அவளுடைய குரலில் லேசாகத் தொனித்த அலட்சியத்தை மறைக்க அவள் அதிகம் பிரயாசை எடுத்துக்கொள்ளவில்லை. அவனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அவன் உடனே அவனுடைய நாடகக் குழுவுக்கு ஒரு புதுக் கதாநாயகியைத் தேட ஆரம்பிக்க வேண்டும்.
அவள் புன்னகை புரிந்தபடிதான் நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் விவரமறியாத குழந்தையினுடையது போலத்தான் பிரகாசித்தன. சிவந்த, பூரித்திருந்த அவளுடைய உதடுகள் அவளுடைய பல்வரிசை மின்ன சிறிது இடைவெளிவிட்டிருந்தன. அவளை மறுதலிக்க முடியாது என்று அவள் நன்கு தெரிந்துகொண்டவளாக இருந்தாள்.
அவன் ஏதோவாறு முனகினான். அவளுக்கு எஜமானனாகவும் ஆசானாகவும் அவளுடைய எதிர்காலத்தைச் சமைப்பவனாகவும் பல தருணங்களில் அவளுடைய பெண்மைக்கு உரியவனாகவும் அவன் இருந்த மூன்று வருட காலத்தில் அவளை அவ்வளவு அழகுடையவளாகவும் திண்ணமுடையவளாகவும் அவன் கண்டதில்லை. மூன்று வருடங்கள் முன்புதான் அவனுடைய கதாநாயகியும் அந்த ஸ்தானத்துடன் கூடிய எல்லாமாகவும் இருந்த இந்திரா ஒருநாள் மெல்ல “அடுத்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் நானில்லாமல் பார்த்துக் கொள்கிறீர்களா?” என்று கேட்டிருந்தாள். அப்போதே அவன் இன்னும் ஒருவார காலத்திற்குள் அவனுடைய குழுவிற்கு ஒரு புதுக் கதாநாயகியைத் தேடிப்பிடித்தாக வேண்டும் என்று உணர்ந்திருந்தான். அப்போதுதான் எவ்வளவோ காலத்திற்குப் பிறகு அவனுடைய ஒரு நாடகம் வெற்றியாக ஏற்கப்பட்டு அவனோடும் அவனுக்காகவும் உழைத்துக்கொண்டிருந்தவர்கள் மிக உற்சாகத்துடன் இருந்தார்கள். சமூக வட்டாரங்களில் அவன் பெயர் அடிபடத் தொடங்கியிருந்தது. பத்திரிகைகள் சிறிது விஸ்தாரமாகவே அவன் நாடகத்துறைக்குப் பெரும் தொண்டு செய்துவருவதாக எழுத ஆரம்பித்திருந்தன. ரேடியோக்காரர்கள் ஒரு கருத்தரங்குக்கு அவனை அழைத்திருந்தார்கள். சில அமெச்சூர் நாடகக் குழுக்கள் தங்களுடைய நாடகங்களுக்கு அவனைத் தலைமை தாங்க அழைத்தன. ஒரு அனாதை ஆசிரமத்துக் காரியதரிசி நன்கொடைக்காக அவனிடம் விண்ணப்பித்துக் கொண்டிருந்தார். இப்படியெல்லாம் உருவாகிக்கொண்டிருக்கும் தருணத்தில்தான் இந்திரா அவனை நேருக்கு நேர் முகம் பார்த்து ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் நாடகத்திற்கு அவள் வராமல் இருக்க அனுமதி விட்டது, கேட்டாள். அப்போதே அவனுக்கும் தெரியும், அவளுக்கும் தெரியும், அவனுடைய உலகம் குலைந்துவிட்டது, சிதைந்து பாழாகிவிட்டது என்று. அவனுடைய கதாநாயகி குழுவை விட்டுப்போய் அவன் உலகம் பாழாவது அதுதான் முதல் தடவை என்றில்லை. ஆனால் இந்திரா அப்படி ஒரு நாடக பாணிச் செயலை நாடக அரங்கிற்கு வெளியே அவனுக்குச் செய்வாள் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவளே அப்படிச் செய்தாள், அவள் செய்தால் யாரும் செய்யக்கூடும், உண்மையில் அப்படித்தான் செய்துகொண்டிருந்தார்கள். அந்த நாடகக் குழுவிலேயே அந்த மாதிரி செய்ய மாட்டாதவனும் செய்ய முடியாதவனும் அவன் ஒருவன்தான். காரணம் அவன்தான் கதாநாயகன், அவன்தான் டைரக்டர், அவனேதான் சொந்தக்காரன் ...
அவன் தெளிவாக ஒருவார்த்தை உச்சரிக்க முடியாமல் அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அவளும் புன்னகை மாறாமல், அவள் கண்களில் இயல்பாக ஜுவலிக்கும் ஒரு குழந்தைக்குரிய ஒளியுடன், அழகாக, உருண்டு, திரண்டு, வெறி உண்டாக்குமாறு, திண்ணத்துடன் நின்றுகொண்டிருந்தாள். உண்மையில் நம்ப முடியாத அளவுக்கு மாறுதல் அவளிடம் ஏற்பட்டுவிட்டது. மூன்று வருடங்கள் முன்னால் அவளை ஒரு ராத்திரியில் அந்தத் துறையில் சுத்த அயோக்கியன் என்றாலும் தவிர்க்க முடியாத அந்த ஏஜண்டு அவன்முன் நிறுத்தியபோது மக்குக்களில் மக்காகத்தான் அவளிருந்தாள். அப்போது அவளுக்குப் பதினாறுதான் நிரம்பியிருக்கும். பயந்தவளாக இருந்தாள். அவன் பார்வையில் ஒவ்வொரு அங்கமும் சுருங்க நின்றாள். அப்போது அவன் எழுந்திருக்கவும் முடியாத சோர்வில் இருந்தான். சற்று நேரம் முன்புதான் இந்திரா அவனை விட்டுப் போயிருந்தாள். அவனுடைய இருபத்தேழு வருட நாடக அனுபவத்தில் இந்திராதான் மிகச் சிறந்த கதாநாயகியாயிருந்தாள், அவளே போய்விட்டாள், அவள் போனால் அப்புறம் எது போனாலும் ஒரு பொருட்டல்ல, அவன் இன்னொரு கதாநாயகியைத் தேடிப் போக நீண்ட பயணம் எடுத்துக் கொண்டால் நிச்சயம் சிதறிப் போய்விடுவான், அப்போது அந்த ஏஜண்டு இவளை அவன் முன் நிறுத்தினான், இவள் குளிரிலும் பயத்திலும் நடுங்கிக் கொண்டிருந்தாள், அவன் இவளைப் பார்த்தான், சரி என்றான், ஒரு புது கதாநாயகி உருவாக ஆரம்பித்தாள். அவளிடம் பிரமாதமான கலைத்திறமை இருக்கும் என்று அவன் எதிர்பார்க்க ஒன்றும் இல்லை. ஆனால் அவன் மிகவும் சோர்ந்து போயிருந்தான். நிகழ்காலத்திலிருந்து, எதார்த்தத்திலிருந்து, நிராசையிலிருந்து அவன் தப்பித்துக்கொள்ள தவித்துக்கொண்டிருந்தான். அது மூன்று வருடங்களுக்கு முன்னால். ஆனால் அவனால் நிகழ் காலத்திலிருந்து, அவன் நிலையிலிருந்து, தன்னிடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியவில்லை. இந்தப் புதுப் பெண்ணுடைய குளறுவாயை வைத்துக்கொண்டு, கூன் முதுகை வைத்துக்கொண்டு, மேடைக் கிலியை வைத்துக்கொண்டு, எடுத்ததெற்கெல்லாம் அழ ஆரம்பிக்கும் சுபாவத்தை வைத்துக்கொண்டு மீண்டும் உழைக்க ஆரம்பித்தான். அவன் உண்மையாக, கடுமையாக, களைப்பில்லாமல் உழைத்தான். அவனால் எது செய்தாலும் நாடகத்தில் மட்டும் அவனுக்குத் திருப்தியளிக்காததையும் அளிக்காதவர்களையும் மேடையேற்ற முடியாது. அவளுக்கும் ஒரு நல்ல கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. பொறுமையான, தொடர்ச்சியான, கடுமையான பழக்கம் ஏற்படுத்தியதில் அவள் ஓரளவு அவளுடைய மட்டித்தனத்தை ஒதுக்கிவைக்க முடிந்தது. உடலளவில் அவள் மிகவும் விரும்பத்தக்கவளாக இருந்தாள். உடலளவில் அவள் மிகவும் விரும்பத்தக்கவளாகவே வளர்ச்சிபெற்றாள். முதல் வருடத்தில் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்துகாட்டி யார் கண்டனத்திற்கும் உட்படாமல் இருந்தாள். இரண்டாவது ஆண்டில் அங்கொருவர் இங்கொருவர் அவளைப் பாராட்டினார்கள். மூன்றாண்டு முடிவதற்குள் ஜனம் அவள்மேல் உருகி வழிய ஆரம்பித்தது. என்ன அழகு, என்ன கம்பீரம், என்ன உணர்ச்சி, என்ன அனாயாசம், பிறவி நடிகை, கலைவாணியின் அவதாரம், வரலாறு காணாத அற்புத நடிப்புத் திறன், இந்திய நாடக சரித்திரத்தின் தலை சிறந்த சோகரச விற்பன்னள், ராமப்பிரம்மத்தின் எவ்வளவோ கதாநாயகிகளில் இவளைப் போல் சிறந்தவளில்லை அது சாதனை. இப்போது இந்திரா இல்லாதது குறித்து யாருக்கும் ஒரு நினைவுக் கீறல்கூட இல்லை. இப்போதைய நாடகம் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு பெரிய நாடகங்களுக்கு ஏற்பாடுகள் ஆரம்பித்தாகிவிட்டது. அப்போது இந்த மட்டிப்பெண் தன்முன் நெளிந்து வந்து அடுத்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் வராமல் இருப்பதற்கு அனுமதி கேட்கிறது. யாருக்குத் தெரியாது நீண்ட பெரியகார்கள் அவள் வீட்டின் முன்னால் நிற்க ஆரம்பித்துவிட்டன.
எவனெவனோ கொழுத்த அசிங்கமானவன் தூங்கி வழியும் நேரத்திலெல்லாம் உள்ளேபோய் வருகிறான். அதே ஏஜண்டு அவளுக்கு எழுதத் தெரியும் அவளுடைய கையெழுத்தை மூன்று சினிமா ஒப்பந்தங்களில் வாங்கிவிட்டான் என்று? அவனுடைய நாடகக் குழுவிற்கு அவள்தான் அதிகமாகக் கூலி வாங்கும் கதாநாயகியாக இருக்கலாம், ஆனால் அது அவளுக்கு ஒரு காட்சிக்கு நாற்பது ரூபாய் மேல் தராது. இப்போது சினிமாத் தயாரிப்பாளர்கள் அவள் வீட்டு முன்னால் அலைய ஆரம்பித்துவிட்டார்கள். அவள் ஆயிரம் ஆயிரமாகப் பணத்தைப் பார்க்கலாம், பெரிய பங்களா வாங்கலாம், சோப் விளம்பரங்களுக்கு அவள் முகத்தைப் பிரசுரிக்கச் செய்துகொள்ளலாம், தேசப் பொருளாதாரத்தை ஆட்டிவைக்கும் முதலாளிகளின் இரவு விருந்துக்குப் பின் நிகழும் அந்தரங்கப் பேச்சு வார்த்தையில் அடிபடலாம், அதெல்லாவற்றினுடைய படிக்கட்டில் அவள் இருந்தாள். ஏன் உலகமே இன்னும் இரண்டாண்டு காலத்தில் அவள் காலடியில் விழுந்து கிடக்கலாம். இரண்டாண்டு காலத்தில் உலகமே காலடியில் விழுந்து கிடக்கக்கூடிய அவளை அவன் வெறித்துப்பார்த்தான். அவள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தினம் பற்றித்தான் கேட்டாள். எப்போதும் அப்படித்தான் அது ஆரம்பமாகும். ஆனால் அவனுக்குத் தெரியும் அவள் போயேவிடுவாள் என்று. அவன் மீண்டும் ஒரு மட்டியைப் பொறுக்கி எடுக்க வேண்டும். மீண்டும் அவளை வைத்துக்கொண்டு இல்லாத தயாரிக்க வேண்டும். சினிமாக்கள் பாடுபட்டு ஒரு கதாநாயகியைத் இருக்கும்; சினிமாக்கள் எப்போதுமே இருக்கும். அவளும் ஒரு மூன்றாண்டு காலத்தில் ஒரு பக்குவம் ஏற்பட்டவுடன் போய்விடுவாள். அப்புறம் இன்னொருத்தியைத் தேர்ந்து எடுக்க வேண்டும். அவளும் போய்விடுவாள், மறுபடியும் இன்னொருத்தி, அவளும் போய்விடுவாள், அப்புறம் இன்னொன்று, அதற்கப்புறம் இன்னொன்று, இன்னொன்று, இன்னொன்று என்று அவன் களைத்து, அலுத்து, சலிப்புற்று, ஒரு காசுக்கும் பயனற்ற கிழவனாகி, அப்படியும் அவன் நாடகக் குழுவுக்கென ஒரு கதாநாயகி மிஞ்சமாட்டாள்.
அவள் உருட்சியுடன், திரட்சியுடன், பூரிப்புடன், இன்னும் அந்தப் புன்னகையுடன் காத்து நின்றுகொண்டிருந்தாள். அவளை எக்கேடு கெட்டுப்போ என்று சொல்லிவிட அவனுக்கு வலி ஏற்படும் என்று தோன்றவில்லை. ஆனால் எல்லா வலியையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு வெறித்தனமான ஒரு வேகம். அந்த வேகத்தை அந்நாள்வரை அந்தத் தாங்க முடியாத அளவுக்கு அவள் அவனுக்கு உண்டுபடுத்தியதில்லை. அதுதான் அந்தக் கணமே அவள்மீது பாய்ந்து அவளைக் கசக்கிப் பிழிந்து தரதரவென்று படுக்கையறைக்கு இழுத்துச் செல்ல வேண்டும் என்பது.
..….…