பண்பாட்டுமயமாக்களில் விவிலியமும் இறையியலும் | Bible and Theology in Culturalization in tamil

நம்பிக்கைகள், கலைவடிவங்கள், வாழ்க்கை முறைகள், சமூக அமைப்புக்கள் ஆகியவற்றினூடாக ஒரு மக்களினம் தனது தனித் தன்மைளை வெளிப்படுத்துவது பண்பாடு ஆகும். ஒவ்வொரு மக்களினத்திற்கும் தனக்கே உரிய பண்பாடு உண்டு (உதாரணம்: தமிழர் (இந்துக்கள், கிறிஸ்தவர்கள்), முஸ்லீம்கள், பௌத்தர்கள்). இது மக்களின் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டது. ஒரு மக்களினம் பிற இனத்தவருடன் சேர்ந்து வாழும் போது அவர்களின் பண்பாடுகளை ஏற்று அதை தமதாக்கிக் கொண்டு வாழ்வது பண்பாட்டுமயமாக்கல் ஆகும். இது இன்று எம்மிடையே சகஜமாக நிலவுகின்ற ஒன்றாகும். அந்தவகையில் பண்பாட்டுமயமாக்கலிற்கு விவிலியம் சிறந்த ஓர் எடுத்துக் காட்டாகும். ஏனெனில் தொடக்க கால விவிலிய மக்கள் வேற்று இனத்தவருடன் சேர்ந்து வாழும் போது அவர்களுடைய பண்பாட்டை தமதாக்கிக் கொண்டதால் அம்மக்களுடன் தங்களை இலகுவில் ஐக்கியப்படுத்திக் கொண்டனர். இவர்களது பொது வாழ்வில் கானானியரின் பண்பாட்டை பிரிதொன்றாக பார்க்கவில்லை. ஏனெனில் பல்வேறு காரணங்களால் கானானில் இருந்து வெளியேறி மீண்டும் கானானில் குடியேறியவர்களே இஸ்ரயேல் மக்களாவர். கானானியப் பண்பாடுடன் ஒத்திருந்தாலும் ஆண்டான் - அடிமை எனும் கானானிய சமுதாய கொள்கையையும் சமூக – பொருளாதார அமைப்பு முறையிலும் முரண்பட்டனர். இவர்களது பண்பாட்டுமயமாக்கலில் வழிபாடு, விழாக்கள், இலக்கியம், அதிகார அமைப்பு முறை, சட்டம், கட்டிடக்கலை என்பவற்றை ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.
இஸ்ரயேல் மக்களின் வழிபாட்டில் பண்பாடு அதிகமாகவே காணப்பட்டது. அதாவது நாடோடிகளாக வாழ்ந்த காலத்தில் இவர்கள் தொடக்கத்தில் ஆட்டைப் பலியிட்டு அதன் மூலம் மேய்ச்சலுக்குரிய ஆட்டின் பாதுகாப்பையும் வளமையையும் வேண்டினர். பிற்காலத்தில் இது இஸ்ரயேல் மக்களுடைய பாஸ்காச் சடங்கோடு தொடர்புடையதாயிற்று. கான்னில் குடியேறிய பின்னர் கானானியப் பண்பாட்டை பின்பற்றினர். மேலும் பேரரசன் தாவீது என்பவருடைய காலத்தில் எருசலேம் அரசியல் மற்றும் சமய தலைநகராக ஆக்கப்பட்ட போது ஜெபுசேய வழிபாட்டுப் பிண்ணனி அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு தாவீது அரசனால் தமதாக்கிக் கொள்ளபட்டது. இதற்கு ஜெபுசேய வழிபாட்டு தலத்திலேயே இஸ்ரயேல் வழிபாட்டுத்தலம் எழுப்பப்ட்டிருக்க வேண்டும். அத்துடன் சாதோக் எனும் தலைமைக்குரு ஜெபுசேய பிண்ணனியைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய வழிபாட்டு முறை இங்கு தாக்கம் செலுத்தியிருக்கும். இஸ்ரயேல் மக்களுடைய விழாக்களை நோக்கும் போது ‘ஆண்டில் மூன்று முறை எனக்கு நீ விழா எடுப்பாய்’ (வி.ப 23:14) என கூறியதன் படி பாஸ்கா விழா, பெந்தகோஸ்து விழா, கூடாரத் திருவிழா ஆகிய விழாக்கள் முக்கியமான ஒன்றாக காணப்பட்டதால் இதனை தொடர்ந்து ஏழு நாட்கள் கொண்டாடினர். இவ்விழாக்கள் இஸ்ரயேலின் வாழ்வில் தனிச் சிறப்பானதாக இருப்பினும் அது பிற இனத்தவருடையதே என்பதில் எதுவித ஐயமில்லை. ஏனெனில் இவ்விழாக்களை தொடக்கத்தில் கானானியர்கள் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டே அறுவடை விழாக்களாக கொண்டாடினர். இந்த உழவர் விழா தான் காலப் போக்கில் ஆடு, மாடு மேய்ப்போரின் பாஸ்கா சடங்கோடு சேர்ந்து பாஸ்கா பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இஸ்ரயேல் மக்களுக்கு பண்பாட்டு மயமாக்கல் இயல்பான என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ‘இஸ்ரயேலரை எகிப்தினின்று அழைத்து வந்த போது கூடாரங்கள் அமைத்து தங்கினார்கள் என்பதை உன் வழிமரபினர் அறிந்து கொள்வர்’ (லேவி 23:43) என்பதனூடாக இறைவனே விழாக்களை இஸ்ரயேல் மக்களுக்கு கொடுத்ததாக விவிலியம் கூறுகிறது. இருப்பினும் அவர் புதிய விழாக்களைக் கொடுக்கவில்லை மாறாக பிற இனத்தவரின் விழாக்களை உதறித் தள்ளாமல் அவற்றை அறிந்து மதித்து அதை தழுவி தம் சமய நிகழ்வுடன் தொடர்பு படுத்தி கொண்டாடச் சொல்கிறார்.
பண்பாட்டுமயமாக்கலுக்கு சிறந்த உதாரணமாண திருவிவிலியம் இஸ்ரயேலின் மாபெரும் இலக்கியம் ஆகும். இது தனக்கு முன் வந்த இலக்கியங்களை தழுவியது என்பதை மறுக்க முடியாது. அந்தவகையில் தொடக்க நூலில் குறிப்பிடப்படும் படைப்புக் கதைகள் மொசபத்தேமிய ‘எனுமா ஏலிஷ்’ எனும் நூலின் பல கூறுகளையும் அத்துடன் ஏதேன் தோட்டம், வாழ்வின் மரம், பாம்பால் மனிதர் ஏமாற்றப் பெறும் நிகழ்ச்சி, வெள்ளப் பெருக்கு போன்ற நிகழ்வுகள் ‘கில்கமேஷ்’ எனும் மொசபத்தேமிய நூலை தழுவி அமைக்கப்பட்ட ஒன்றாகும். மேலும் இஸ்ரயேல் மக்களின் திருநூலான சட்ட நூலில் (தோரா) குறிப்பிடப்படும் சில சட்டங்களும் பிற இனத்தவரிடம் கடன்வாங்கப்பட்டது. உதாரணமாக பாபிலோனிய மன்னன் கம்முராபி ‘கண்ணுக்கு கண்’ , ‘பல்லுக்குப் பல்’ குறிப்பிட முடியும். மக்கள் ஒன்றினைந்து உரிமைக் குடிமக்களாக வாழ வேண்டும் என்பதே இறைவனுடைய விருப்பம். இதை உணர்ந்தவரான மோசே அவ்விருப்பை நிறைவேற்ற அச்சட்டங்களை தழுவியமைத்துக் கொள்கிறார். அத்துடன் ஞான நூல்களும் மொசபத்தேமிய, எகிப்திய, கிரேக்க ஞான மரபுகளை தழுவியது. அது மாத்திரமன்றி புதிய ஏற்பாட்டிலும் பண்பாட்டு மயமாக்கலின் தாக்கத்தை காண முடிகிறது. இதற்கு தூய பவுலின் திருமுகங்கள் சிறந்த எடுத்துக் காட்டு. எபிரேய சிந்தனையான நற்செய்தியை கிரேக்க சிந்தனையாக மக்களுக்கு தந்தார். இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை கிரேக்க மயமாக்குகின்றார். இதனால் மூலையில் முடங்கிக் கிடந்த நற்செய்தி உலகெங்கும் பரவ பவுலின் பண்பாட்டு மயமாக்கல் சிறப்பாக வழி வகுத்தது என்றால் மிகையாகாது. மேலும் கொலோசையர், எபேசியர், 1ம் பேதுரு ஆகிய திருமுகங்களில் குறிப்பிடப்படும் குடும்ப ஒழுக்கம், ‘ஸ்தோயிக்கரின்’ ஒழுக்கப் பண்பாட்டினை தழுவியிருப்பினும் அதில் கிறிஸ்தவ தன்மையை புகுத்தி ‘கிறிஸ்துவுக்காக’, ‘கிறிஸ்துவில்’ என்ற அடைமொழியை சேர்த்து அவ் ஒழுக்கங்களை கிறிஸ்தவ மயமாக்கி கிறிஸ்தவ குடும்ப ஒழுக்க விதியாக தருகின்றார். எனவே விவிலியம் பண்பாட்டு மயமாக்கலுக்கு சிறந்ததொரு எடுத்துக் காட்டு. ஏனெனில் விவிலியத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பண்பாட்டுமயமாக்கலின் தாக்கத்தை காணக்கூடியதாக உள்ளது. இறைவன் தன்னை, தன் திருவுளத்தை, மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை பல்வேறு வகையாக வெளிப்படுத்துகிறார்.
பண்பாட்டு மயமாக்கல் என்பது மனித வாழ்க்கை முறை ஆகும். இதனுடைய இறையியலானது படைப்பு, மனுவுடலேற்றல், மறை அறிவிப்புப் பணி, திரு அவையின் அமைப்பும் தன்மையும் என காணப்படுகிறது. நற்செய்தி எங்கெல்லாம் அறிவிக்கப்பட்டதோ அந்த பண்பாட்டுக்கமைய அது கிறிஸ்தவ பண்பாடாக மாறியது. படைப்பு எனும் போது ‘ஆதியில் விண்ணையும் மண்ணையும் படைத்தார்’ (தொ.நூ 1:1) , வார்த்தையான இறைவன் மனிதரானார் என்பதையும் ‘தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது; வாக்கு எனும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின் உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை’ (யோவா 1: 1-3) என்ற விவிலிய பகுதி இயேசு கிறிஸ்து வரலாறு முழுவதிலும் படைப்பு அனைத்திலும் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதை அவதானிக்க முடிகிறது. மனித பாவத்தால் அருள் நிலையை இழந்த உலகினை தனது கல்வாரிப் பலி எனும் ஒப்புரவால் அருள் நிலைக்கு உயர்த்தினார். படைப்பு அனைத்தையும் நல்லது (தொ.நூ 1: 1-25) எனக் கண்ட இறைவன் இதனை பேணிப் பாதுகாக்க விரும்பியே தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். கடவுளாம் வார்த்தையானவரின் மனுவுடலேற்றல் பண்பாட்டுமயமாகலின் உயிரூட்டம் உள்ள தொடர் நிகழ்ச்சி ஆகும்.
‘வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்’ (யோவா 1: 14) எனும் விவிலியப் பகுதி மூலமாக வார்த்தையானவர் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பண்பாட்டு நியதிகளுக்கு உட்பட்டு கட்புலனாகும் நிலைக்கு மாறுவதாகும். பண்பாட்டுமயமாக்கலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் உறுதியான வடிவாகவும் இருப்பது மனுவுடலேற்ற நிகழ்வாகும். இயேசு யூத மக்களுடைய பண்பாட்டில் தன்னை புகுத்திக் கொண்டு யூத மக்களின் எல்லா பழக்க வழக்கங்களையும் நேர்மையாகவும் முழுமையாகவும் கடைப்பிடித்து வாழ்ந்தாலும் சில சந்தர்ப்பங்களில் குருட்டுத்தனமான பழக்க வழக்கங்களை பின்பற்றாது தனது பண்பாட்டிற்கு பொருளற்றதான அம்சங்களை சுட்டிகாட்டினார். உதாரணமாக கானானியப் பெண்ணின் உரையாடல், சமாரியப் பெண்ணுடனான உரையாடல், விபச்சாரத்தில் பிடிபட்ட பாவிப் பெண், தொழுநோயாளர் சந்திப்பு, சக்கேயுவின் வீட்டில் விருந்து, ஆலயத்தை வியாபாரக் கூடமாக மாற்றிய போது ஏற்பட்ட கோபம் போன்ற நிகழ்வுகளை குறிப்பிட முடியும். இயேசுவின் இத்தகைய செயல்கள் மக்களின் மத்தியில் அவருக்கு எதிர்ப்பை பெற்று தந்தது மட்டுமல்லாமல் அவரது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தியது (இயேசுவின் கல்வாரிப் பலி அல்லது மரணம்). இதுவே மனுவுடலேற்ற பண்பாட்டுமயமாக்கலின் தாட்பரியம்.
சுதேசத்தில் தான் தன்னை வெளிக்காட்டி செயற்படும் திரு அவை கிறிஸ்துவின் மறையுடல் ஆகும். இது மக்களின் பாரம்பரியங்களை ஏற்று பரந்த ஓர் சமூகமாக இன்று உருவாகியுள்ளது என்பது நாம் அறிந்த உண்மை. திருஅவை தனது வல்லமையை நிலை நிறுத்தி மக்களின் பண்பாடுகளையும் மற்றும் மரபுகளையும் மதிக்க வேண்டும். இதனூடாக மக்களை ஆன்மீக வழியில் உயிரூட்டமுள்ள திரு அவையாக இன்றைய மாற்றங்களுக்கு ஏற்ப அதனை ஏற்றுக் கொண்டு முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து யூதப் பண்பாடுகளுக்கமைய அடையாளங்களினூடாக திருத்தூதர்களுக்கு போதித்து மக்களுடைய பண்பாடுகளுக்கமைய வாழ்ந்து திருஅவையை உருவாக்கினார். இந்த நற்செய்திப் பணியை திருத்தூதர்கள் மற்றும் தூய பவுல் ஆகியோர் உலகெங்கும் சென்று பணியாற்றி மாபெரும் திரு அவையாக மாற்றினர். இன்று இத் திரு அவையானது திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும் விசுவாசக் குழுக்களினுடைய (உதாரணம்: இளைஞர் ஒன்றியம், மறைக்கல்வி, பாலத்துவ சபை, மரிய கொரற்றி, பாடகர் குழாம், கிறிஸ்தவ வாழ்வு ஒன்றியம், அன்பியங்கள் போன்றன) பல்வகை வாழ்க்கை முறைகளிலும் நற்செய்தியை வெளிப்படுத்தி வந்த திரு அவை நற்செய்திப் பணிகளில் நல்ல விடயங்களை பயன்படுத்தி முன்மாதிரியான வாழ்க்கையை கற்பிக்கிறது. மேலும் மக்களுடைய பிரச்சினைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு மற்றும் மரபு அறிந்து திரு அவையின் பணியாளர்கள் தங்கள நற்செய்திப் பணியை முன்னெடுக்கின்றனர். இதனால் மக்களின் வாழ்க்கை முறையோடு ஒன்றித்ததாக இன்றைய நற்செய்திப் பணி காணப்படுவதால் கிறிஸ்துவில் முழுமையாக நிலைத்திருக்கவும் அவருக்கு எம்மை அர்ப்பணிக்கவும் அந்த பண்பாட்டுமயமாக்கல் உதவுகின்றது என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே எமது நற்செய்திப் பணியின் போதும் பிறரது குடும்ப சூழல் மற்றும் அவர்களின் மன நிலையை அடிப்படையாக கொண்டு நற்செய்திப்பணி செய்வோம். இன்றும் எம் சமூகத்தை நோக்கும் போது பல் சமயத்தவருடன் ஒன்றித்து வாழ வேண்டிய தேவை காணப்படுகின்றது. எனவே அவர்களுடைய பண்பாடுகளும், கலாச்சாரமும் எம்மேல் தாக்கம் செலுத்துவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எனவே நாமும் கிறிஸ்துவைப் போல அவர்களின் பண்பாடுகளையும், கலாச்சாரங்களையும், மரபுகளையும் மதித்து அவர்களது சமயங்களை வெறுக்காமல், கேலி செய்யாமல், மூட நம்பிக்கை என்று இழிவு படுத்தாமல் பல்சமய மதிப்பினை வழங்கி எமது நற்செய்திப் பணியினைத் தொடர்ந்து மேற்கொள்வோம்.