மென்திறன்கள் என்றால் என்ன? Soft skills in tamil மென்திறன்களை எவ்வாறு வளர்த்துகொள்ளலாம்?

மென்திறன்கள் , வன்திறன்கள் வேறுபாடுகள், மென்திறன்கள் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்றன?, மென்திறன்களை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்.

மென்திறன்கள் என்றால் என்ன? Soft skills in tamil மென்திறன்களை எவ்வாறு வளர்த்துகொள்ளலாம்?
Google image

மென்திறன்களும் அவற்றை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளும்.


இன்று உலகளாவிய ரீதியில் தனிமனித ஆற்றல்கள், திறன்கள் என்பவற்றிற்கு உயரிய முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. நிறுவன ரீதியான முன்னேற்றம் என்பது தனிமனித முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதே இதற்கு காரணம் எனலாம்.

திறன் என்றால் என்ன?

பொதுவாக" திறன்" என்பது ஒரு செயற்பாட்டில் ஒருவருக்கு இருக்கக்கூடிய ஆற்றலை அல்லது ஒரு செயற்பாட்டைச் செய்யக்கூடிய இயலளவைக் குறிக்கும்.  இத்திறன்கள் கல்வி, பயிற்சி ,அனுபவம் என்பவற்றின் ஊடாக விருத்தி செய்யப்படக்கூடியவை ஆகும் .

உதாரணம் 
1.நன்றாகப் பாடும் திறன்.
2. சிறந்த முறையில் உரையாடும் திறன். 3.நன்றாக ஓவியம் வரையும் திறன்.
4. வேகமாக ஓடும் திறன். 


மென்திறன்கள் என்றால் என்ன?

 திறன்கள் என்ற பதத்தை ஆய்வு செய்யும் போது மென் திறன்கள் என்ற விடயம் முக்கியம் பெறுகின்றது. மென்திறன்கள் என்பன ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். மென்திறன் என்பதை "மக்கள் திறன்" என்றும் அழைப்பர்.

 அதாவது தனிநபர் ஒருவர் பிற மனிதர்களுடன் தொடர்புபட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போது அத்தொடர்பாடலை எவ்வாறு எந்த அடிப்படையில் வடிவமைத்துக் கொள்கின்றார் என்பதைப் பற்றியே இம்மென்திறன்கள் என்ற பகுதி கவனம் செலுத்துகின்றது. ஒருவர் மற்றவரோடு பேசிப் பழகும் தன்மை, சமூகத்தில் பிற மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன், தொடர் பாடலின் போது பின்பற்றும் அணுகுமுறைகள், குறித்த நபரின் தனிப்பட்ட ஆளுமைகள், தொழில் சார் பண்புகள், உணர்வுகள் சார்ந்த திறன்கள் போன்ற அனைத்தையும் பற்றி ஆழமாக நோக்கும் ஒன்றே இம்மென்திறன்கள் எனப்படுகின்றன.

மென் திறன்கள் பொதுவாக எந்த ஒரு குறிப்பிட்ட தொழிலுடனும் பிணைக்கப்பட்டு நோக்கப்படுவதில்லை. மாறாக அவை நமது ஆளுமைகளுடன் தொடர்புபட்ட ஒரு விடயம் ஆகும். இவற்றை தனிநபர் ஒவ்வொருவரும் தமக்குள் வளர்த்துக் கொள்ளலாம் .அனைத்து தொழில்துறைகளினதும் அடிப்படையாக மென் திறன்கள் காணப்படுகின்றன.

இம் மென்திறன்கள் என்ற பதத்தை 'காலின்ஸ்' ஆங்கில அகராதி பின்வருமாறு வரைவிலக்கணம் செய்கிறது.

" சில பணிகளுக்குத் தேவைப்படும் ஏட்டு அறிவைச் சாராத பொது அறிவு அல்லது இயல்பு அறிவு சார்ந்த பண்புகள், மக்களைக் கையாளும் விதம் மற்றும் நேர்மறையான நெகிழ்வான அணுகுமுறைகள் மென் திறன்கள் எனப்படும்"

 அதேபோல் 1993 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் இம்மென்திறன்களை "வாழ்க்கைத்திறன்" என்ற பதத்தின் ஊடாக அறிமுகப்படுத்தியது.

 அதாவது சமூகத்தில் ஒருவர் தனது வாழ்வை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான அடிப்படை திறன்கள் என்ற அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதனை அடையாளப்படுத்தியது. மேலும் உலகளாவிய ரீதியில் பல்வேறு நபர்களும் அமைப்புகளும் இம்மென் திறன்களை வெவ்வேறு பெயர்களால் வரையறை செய்துள்ளனர். எடுத்துக்காட்டாக 
1.குறுக்குவெட்டுத்திறன்(ISFOL-1998)
2. வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் நன்கு செயற்படும் சமூகம் என்பவற்றிற்கான முக்கிய திறன்கள்(OECD-2003, 2012)
3. 21ம்நூற்றாண்டின் திறன்கள்( Ananiadou & claro, 2009)
4. எதிர்கால வேலைத் திறன்கள்(Manpower group- 2014)

பொதுவாக இம்மென் திறன்கள் இன்றைய நவீன உலகில் தொழில் உலகுடன் இணைத்தே நோக்கப்படுகின்றது. அன்றாட வாழ்வில் ஒரு தனி நபர் சமூகத்துடன் தொடர்புபடும் போது இத்திறன்கள் தேவைப்படுவது இயல்பு.

எனினும் ஒரு வாண்மைத்துவம் என்ற அடிப்படையில் பெரும்பாலும் மென்திறன் மேம்பாடு என்பது இன்று நிறுவன வளர்ச்சியுடன் இணைந்து ஆய்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. காரணம் இன்றைய நவீன உலகில் எண்ணற்ற இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் சிறப்பான போதிய கல்வியை அளிக்கும் பல கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. எனினும் இவ்விளைஞர் யுவதிகள் தொழில் உலகிற்குள் நுழையும் போது தாம் எதிர்பார்த்த தொழிலினைப் பெற முடியாது ஏமாற்றம் அடைகின்றனர். காரணம் இன்று ஏராளமான நிறுவனங்கள் நமது நிறுவன முன்னேற்றத்திற்கான அளவுகோல்களாக இம்மென்திறன்களை முன்வைக்கின்றன. எனவே வெறுமனே ஏட்டு அறிவு நடைமுறை உலகிற்கு பொருந்தாது. மாறாக நாளைய உலகில் நுழையும் அனைவரும் இம் மென்திறன் மேம்பாடு என்ற அம்சத்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஒருவரிடம் காணப்பட வேண்டிய அடிப்படை மென்திறன்களாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்

1. தொடர்பாடல் திறன்

2.தலைமைத்துவப் பண்பு 
3.படைப்பாற்றல் 
4.சுய முயற்சி 
5.உணர்வு சார் நுண்ணறிவு 
6.குழுவாக இணைந்து செயல்படல்
7. பொறுப்பேற்கும் தன்மை 
8.பிரச்சினையை ஆராய்ந்து தீர்வு காணல்
9. நேர முகாமைத்துவம்
10. கடினமான சவால்களை ஏற்றுக் கொள்ளல்
11. பலருடன் கலந்துரையாடி ஒப்பந்தம் செய்து முடிக்கும் திறன்
12. நெகிழ்வுத் தன்மை
13. தன்னம்பிக்கை

14.நட்புறவுடன் செயல்படல்.

15.பின்வாங்காமை
16. மன அழுத்த மேலாண்மை என்றவாறு மென் திறன்களை பட்டியல் படுத்திக் கொண்டே போகலாம். 

ஒருவர் தான் பணிபுரியும் இடத்தில் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றிக்கும் அவரிடம் உள்ள மென் திறன்களே காரணம் ஆகும். பல தலைசிறந்த நிறுவனங்கள் அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெற்று உயர்வடைய காரணம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் மென் திறன்களே  எனலாம்.


மென் திறன்களை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?


 ஒருவர் மென் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமாயின் முதலில் தான் யார்? தனது பலம் என்ன? பலவீனம் என்ன? போன்ற விடயங்களை அடிப்படையில் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

 கிரேக்க தத்துவஞானி சோக்ரடீஸின் அடிப்படை மந்திரமே "உன்னையே நீ அறிவாய்" என்பதாகும். இது பிறந்தது முதல் மனிதனின் இறப்பு வரையும் நிலவும் அருமையான தத்துவம் ஆகும்.

 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நபர்களுடன் பழகும் போது நம்மிடையே காணப்படும் குணங்கள் அவ்வப்பொழுது மாற்றம் அடைய வேண்டும். இதன் பொருட்டு எம்மிடம் எத்தகைய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும், எத்தகைய திறன்களை கைவிட வேண்டும் என நாம் அறிவது அவசியம். இதனைச் சரிவர அறிவதன் ஊடாக எமது மென் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும் .ஒரு தனிநபர் என்ற வகையில் நாம் எமக்குள் மென்திறன்களை வளர்த்துக் கொள்வதன் ஊடாக எம்மைச் சூழ உள்ள சமூகத்துடன் சிறந்த முறையில் இடைவினை ஆற்ற முடிவதுடன் எமது தொழில் வாழ்வையும் வெற்றிகரமானதாக மாற்றிக் கொள்ள முடியும்.

 அந்த அடிப்படையில் எமது மென்திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான மிக அடிப்படையான முதல் அம்சம் தனி நபர்களுக்கு இடையிலான உறவை மேம்பாடு அடைய செய்வதற்கான வழிமுறைகளில் கவனம் செலுத்துவது ஆகும்.

 அதாவது சிறந்த முறையில் பிறருடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கான வழிவகைகளை இனம் கண்டு அவற்றை எமது வாழ்வில் கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும்.

 பொதுவாக சிறந்த தொடர்பாடல் திறன் என்பது பல்வேறு அடிப்படைகளை கொண்டது. அதன் முதல் அம்சம் நிதானம் ஆகும் .அதாவது நாம் யாருடன் தொடர்புபட முயற்சிக்கின்றோமோ அவரை நிதானமாக அமைதியாக அணுக வேண்டும். அது எமக்கு சாதகமான சூழலாக இருந்தாலும் சரி பாதகமான சூழலாக இருந்தாலும் சரி, எந் நிலையிலும் எமது தொடர்பாடலை நிதானத்துடன் ஆரம்பிக்க வேண்டும்.

 அதேபோல் சிறந்த தொடர்பாடலின் அடுத்த அடிப்படை சிறந்த செவிமடுத்தல் ஆகும். யார் சிறந்த செவிமடுப்பாளராக இருக்கிறார்களோ அவர்களே சிறந்த ஆலோசனைகளை வழங்குபவர்களாக மாறுவார்கள். நம்முடன் தொடர்பு கொள்ளும் நபர்களின் கருத்துக்களை பூரணமாக அமைதியாக செவி சாய்த்து கேட்கும் பழக்கத்தை எம்மில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எம்முடன் தொடர்பு படுபவர்களுக்கு எம்மை பற்றிய மதிப்புணர்வும் நம்பிக்கையும் ஏற்படும். பிறரின் கருத்துக்களை பூரணமா செவிமடுக்காது இடையே குறுக்கீடு செய்யும் போது அது தொடர்பாடல் திறனை பாதிக்கும். 

அதே போல் சிறந்த தொடர்பாடல் திறனின் பிறிதொரு முக்கிய பண்பு நேர்மறையான வார்த்தைகளைப் பிரயோகித்தல் ஆகும்.
 அதாவது எப்போதும் எம்மோடு தொடர்புபடும் நபர்களை நம்பிக்கை ஊட்டும் விதமாக மாற்றும் வகையில் எமது தொடர்பாடல் அமைய வேண்டும். 'இயலாது',  'முடியாது', சாத்தியமில்லை போன்ற நம்பிக்கை இழக்க செய்யும் வார்த்தைகளை பிரயோகிப்பதை தவிர்த்து 'முடியும்', 'சாத்தியம்' ,'இயலும்' போன்ற சாதகமான நம்பிக்கையூட்டக்கூடிய வார்த்தைப் பிரயோகங்களை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் எமது தொடர்பாடல் பூரண விளை திறன் மிக்கதாக மாறும்.

அதேபோல் மென் திறன்களுள் பிறிதொரு முக்கியமான மென்திறன் படைப்பாற்றல் ஆகும். உலகப் பொருளாதார மன்றத்தின் எதிர்கால வேலைவாய்ப்பு அறிக்கையானது படைப்பாற்றலை எதிர்காலத்திற்கான முதல் ஐந்து மிக முக்கியமான திறன்களில் சேர்த்துள்ளது. படைப்பாற்றல் என்பது எந்த ஒரு விடயத்தையும் ஒரு ஆக்கபூர்வமான வழியில் சிந்திக்கக் கற்றுக் கொள்வது ஆகும். அதேபோல் சிக்கல்கள் ஏற்படும் போது மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்தி அதனை தீர்க்க புதுமையான வழிமுறைகளை கண்டுபிடிப்பதையும் இது குறிக்கும். எடுத்துக்காட்டாக எமது சிந்தனைகளை குறுகிய வட்டத்திற்குள் வைத்திருக்காது எப்போதும் திறந்த மனதுடன் சிந்தித்தல், மனவரைபடங்கள் ஊடாக பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்தல் போன்ற திறன்கள் ஊடாக நமது படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

அதேபோல் தலைமைத்துவ பண்பு என்பது எம்மிடம் விருத்தி செய்யப்பட வேண்டிய பிறிதொடு முக்கிய மென்திறன் ஆகும். அதாவது சிறந்த தலைமைத்துவம் என்பது அடக்கு முறையோ அல்லது இறுக்கமான சட்ட திட்டங்களை வைத்துக்கொண்டு ஆணையிடுவதோ அல்ல .மாறாக ஒரு சிறந்த தலைவர் எப்போதும் தமக்குக் கீழ் பணிபுரிபவர்களின் நன்மதிப்பை பெற்றவராகவும் நிறுவனத்தை வெற்றிகரமாக முன்னோக்கி நகர்த்தக் கூடியவராகவும் இருக்க வேண்டும் .இதன் பொருட்டு இவர் தந்திரோபாயமான வழிமுறைகளைக் கையாண்டு தமக்கு கீழ் இருப்பவர்களை தம் பக்கம் ஈர்த்துக் கொள்ள முடிய வேண்டும்.

 எடுத்துக்காட்டாக தமக்குக் கீழ் பணிபுரிபவர்கள் சிறந்த முறையில் பணியாற்றும்போது அவர்களை பாராட்டல், அவர்கள் தவறு செய்யும் போது உரிய முறையில் சுட்டிக்காட்டி அவற்றை சீர்படுத்தல், அவர்களுக்கு ஊக்குவிப்புகளை வழங்கல், அவர்களின் தனிப்பட்ட நலன்களில் ஓரளவு அக்கறையுடன் செயல்படல் என்பன தலைமைத்துவப் பண்பின் சிறந்த அணுகுமுறைகள் ஆகும். 

அதேபோல் மென் திறன்கள் என்ற அம்சத்திற்குள் உள்ளடக்கப்படும் பிறிதொரு முக்கிய பண்பு உணர்வு சார் நுண்ணறிவு ஆகும். உணர்வு சார் நுண்ணறிவு என்பது எமது சொந்த உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நமக்குள்ள திறன் ஆகும்.  அதே வேளை எம்மைச் சுற்றியுள்ளவர்களின் உணர்ச்சிகளை மதித்து நடப்பதையும் இது குறிக்கும் .இதுவும் எம்மில் வளர்க்கப்பட வேண்டிய மிக முக்கியமான ஒரு மென் திறன் ஆகும்.

மென்திறன்களில் முக்கியம் பெறும் அடுத்த ஒரு அம்சம் குழுவாக இணைந்து செயல்படும் ஆற்றல் ஆகும்.

 அதாவது மனிதன் ஒரு சமூகப் பிராணி என்ற வகையில் அவன் சமூகத்தில் வாழும் போது வெவ்வேறு நபர்களுடன் இணைந்து தனது அன்றாட பணிகளை முன்னெடுக்க வேண்டியவனாக உள்ளான். இதன்போது அவனுக்கு குழு உணர்வு அவசியம். பிற நபர்களுடன் குழுவாக இணைந்து செயல்படும்போது விட்டுக் கொடுத்தல், பிறரின் கருத்துக்களை மதித்தல், பிறருக்கு செவி சாய்த்தல், ஒருவருக்கொருவர் உதவி செய்தல் போன்ற உயரிய பண்புகளைப் பேண வேண்டும். இவ்வாறான மென்திறன்களை ஒருவன் தனக்குள் வளர்த்துக் கொள்வதன் ஊடாகவே வெற்றிகரமாக தமது பணிகளை முன்னெடுக்க முடியும்.

 இவ்வாறே ஏனைய அனைத்து மென்திறன்களையும் ஒருவன் தனக்குள் வளர்த்துக் கொள்வது இன்றியமையாதது .
நேர முகமைத்துவம் , பிறருடனான தொடர்பாடலின் போது நெகிழ்வுத்  தன்மையை கடைப்பிடித்தல், நட்புறவுடன் செயல்படல், சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளல் என அனைத்து மென் திறன்களும் ஒருவனின் வெற்றிக்கு இன்றியமையாதவை ஆகும். 

இதே போல் மொழி அறிவு, சான்றிதழ்கள், செயற்திட்டங்கள், பட்டங்கள், இயந்திரங்களை இயக்கும் ஆற்றல், போன்ற திறன்களும் ஒருவரிடம் காணப்படும். இவை வன் திறன்கள் எனப்படும். எனினும் மென் திறன்கள் இன்றி வன் திறன்களை  மாத்திரம் வைத்துக் கொண்டு ஒருவரால் சமூகத்தில் வெற்றிகரமாக இயங்க முடியாது.

 எனவே எதிர்கால தொழில் உலகு என்பதே இம்மென்திறன்களை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படும் என்ற அடிப்படையிலும் எமது சமூக உறவுகளை மேம்படுத்துவதற்கான அடிப்படை என்ற வகையிலும் மென் திறன்களை எமது வாழ்வில் வளர்த்துக் கொள்வது மிக மிக இன்றி அமையாது ஒன்று ஆகும்.