சமூக ஊடகம் எனும் போதை

ஆன்லைன் அடிமைகள்

Mar 16, 2023 - 19:44
 0  77
சமூக ஊடகம் எனும் போதை

“அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு “என்று ஒரு முதுமொழி உண்டு. இம் முதுமொழியையே புதுமொழியாக்கி அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கிறது இன்றைய 21ம் நூற்றாண்டு. ஆம்! இனம், மதம், மொழி, பேதங்களை கடந்து இயல்பாய் அனைவரதும் கைகளில் கைக்குழந்தை போல் தவழ்கிறது கைப்பேசி! இல்லை இல்லை!!! புதுமொழியில் கூறுவதாயின் “ஸ்மார்ட் போன் ”. தான் ஸ்மார்ட் ஆனவனாய் நாளுக்கு நாள் மாற மனிதர்கள் அடிமைகளாய் மாறுவது தான் கவலைக்குரியது!.

ஏன்? எப்படி? எதற்கு? என மூன்று விதமாக நோக்கினால், பற்பல நூற்றாண்டுகளாய் பெயர் நிலைத்திருக்கும் மண்ணின் மைந்தர்கள் கையில் காணக்கிடைக்கவில்லை செல்லிடத்தொலைபேசியை, ஆனால் அவர்கள் மட்டும் பட்டை தீட்டிய வைரம் போல் எம்மிடையே இன்றும் மங்காத புகழ் எனும் ஒளியுடன் திகழ்கிறார்கள்?? இது எப்படி என சிந்திக்க வேண்டும். அவர்கள் “புத்தகம் ”எனும் அறுசுவை உணவையும் “ நிதர்சன அனுபவம் ” எனும் ஆரோக்கிய பானத்தையும் தங்கள் அறிவுப் பசிக்கு தீனியாக போட்டனர். ஆனால் இன்று கலியுக கம்பர்களாகிய நாம் முகநூல், வாட்ஸ் அப், வைபர், லைக்குகள், கமன்ட்டுகள், ட்ரெண்டிங் என நீண்டு செல்லும் பட்டியலினுள் எம் தன்நிகரில்லா வாழ்க்கை பொக்கிஷத்தை தொலைத்து அறிவுக்கண்ணை கட்டி நவீன உலகம் எனும் மாய வலையில் மூடர்களாய் சோம்பித் திரிகிறோம்

அடுத்த படியில் எதற்காக நாம் இவ்வாறு மாறினோம்? என சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.“எவனொருவன் தனக்காக அன்றி பிறர்க்காக மாற விழைகிறானோ அவன் அக்கணத்தில் மூடானாகிறான் ”என்கிறார், தந்தை பெரியார்.. ஆம்! பிறர் பார்வையில் நாம் மகிழ்ச்சியானவர்களாய் திகழ வேண்டும், சாதனையாளர்களாய் தென்பட வேண்டும், வசதி படைத்தவர்களாய் எண்ணப்பட வேண்டும் என நினைத்து, எம்மை நாமே தொலைத்து துணிக்கடை பொம்மை போல் அடுத்தவர் பார்வைக்கு காட்சிப் பொருளாய் மாறி வருகிறோம் என்பது வேதனைக்குரியது.“செல்பி ”எனும் பதம் எப்போது அறிமுகமானதோ அப்போதே தனிநபர் அந்தரங்கம் எனும் பதம் காணாமல் ஆக்கப்பட்டது. இன்று பாரதி இருந்திருந்தால்,          “காலை எழுந்தவுடன் செல்பி ; பின்பு கனிவு கொடுக்கும் ஒரு டிக் டோக் ; மாலை முழுவதும் வாட்ஸ் அப் ; என்று வழக்கப் படுத்தி கொள் பாப்பா ” என பாடி அழுதிருப்பார். அந்தளவுக்கு மனித வாழ்வு  தனித்துவம் எனும் பண்பினை இழந்து வருகிறது.

“தருமம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்” எனும் கூறலை கேட்டிருப்போம். ஆனால் அந்த தருமமே இன்று பிறரறிய  முகநூலில் பதிவிட்ட பின்பு தான் உரியவர்க்கு சேர்கின்றமை கவலையளிக்கிறது. ஆபத்திலுள்ள ஒருவர் உயிர் காக்க முன் அதனை tag ( டாக் ) செய்து போட்டு விட்டு லைக்குகள் பெற லைவ் ஸ்ட்ரீம் செய்கிறோம்..இதுவா உண்மையான மனிதம்??? என எண்ண தோணுகிறது இவற்றை காணும் போது.

தாய் மடியில் தலை சாய்த்து அவளிடம் எம் கஷ்டங்களை கூறிய காலம் போய் இன்று தனியறையில் அமர்ந்து முகம் தெரியாதவர்களுடன் எம் முழு கஷ்டங்களையும் கூறியழுகிறோம். இறுதியில் ஏமாற்றப்படுகிறோம். கவலையாக உணர்கிறேன், மகிழ்வாக உணர்கிறேன், திருமணம் முடிந்தது, காதலில் விழுகிறேன், சேற்றில் புறழ்கிறேன் என எல்லாவற்றையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பின்பே செய்கிறோம். யாருக்காக? எதற்காக? என தெரியாமலே! இவற்றை எண்ணினால் வியப்பு! சிந்தித்தால் சிரிப்பு!என மாறி வருகிறது எம் சமூகம்.

எம்மில் பலர் தமிழிலக்கியங்களை படித்து கூட இருக்க மாட்டோம். ஆனால் தமிழன்டா!!! என முகநூல் பதிவிட்டு மறு கணமே வாட்ஸ் அப் ட்யூட்! என உலாவித் திரிகிறோம். இதுவா பாரதியும் பாரதிதாசனும் கண்ட கனவு? நினைத்தால் நிலை குலைய செய்கிறது எம்மில் பலரது நிலை. தொலைவிலுள்ளவர்களுடன் பேச அறிமுகம் செய்யப்பட்ட கண்டுபிடிப்பே தொலைபேசி, ஆனால் இன்று அருகிலுள்ளவர்களையே மறக்கச் செய்யுமளவிற்கு மாறி விட்டது அதன் பயன்பாடு. மனித மூளையில் “டோப்பமின் ” எனும் ஓமோன் ஒன்றுள்ளது. இது மனிதனொருவனது விருப்புகளை செயற்படுத்தும், அதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் நண்பன் போல் செயற்படக் கூடியது. இதற்கு நல்லவற்றை பழக்கப்படுத்தினால் நல்லவற்றை செய்யவும் தீயவற்றை பழக்கப்படுத்தினால் தீயவற்றை செய்யவும் எம்மை தூண்டி விடுவான்.

இன்று நாம் இந்த டோப்பமினையும் எம் நகரமய நவீன வாழ்க்கைக்கு அடிமைப்படுத்திவிட்டமையால் அது அதற்குரிய அபார ஆற்றலை மறந்து எம்முடன் சேர்ந்து சமூக வலைத்தள வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுவிட்டது. குழந்தையை உறங்க வைக்க தாய் தாலாட்டு பாடிய காலம் போய் இன்று அலைபேசி தாயாய் மாறி குழந்தையை உறங்க வைக்கும் காலமாய் மாறி விட்டது. பிரம்பால் அடித்து தலையில் கொட்டி பள்ளிப்பாடத்துடன் வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொடுத்த ஆசான்களும் இன்று ஆன்லைனில் பாடம் நடத்த பாதி வழி தூங்கி அவர்களையும் ஏமாற்றி நாமும் ஏமாந்து எம் அரிய வாழ்வை தொலைத்து நிற்கிறோம். ஏன்? நாம் இவ்வாறு மாறினோம் என சிந்திக்க கடமைப்படுள்ளோம்.

ஒரு காலத்தில் பிரபலங்கள் என அறியப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதித்தவர்கள், விளையாட்டு துறையில் மிளிர்ந்தவர்கள்,சினிமா துறையில் மிளிர்ந்தவர்கள், நாட்டிற்காக புகழ் தேடி தந்தவர்கள் என அறிந்தோம். ஆனால் இன்று டிக் டோக் பிரபலம், பிக் பாஸ் பிரபலம், ட்ரெண்டிங் ஹீரோ என விசித்திரமான பெயர்களால் வகைகுறிக்கிறோம். அந்தோ பரிதாபம்! என எண்ணத் தோன்றுகிறது எம்மவரின் நிலை.

அனைத்து படைப்புக்களும் ஓர் உயரிய நோக்கத்திற்காகவே கண்டுபிடிக்கப்படுகிறது. அதனை ஆறறிவு கொண்ட நாம் பகுத்தறிவினை பயன்படுத்தி அதன் மூலமாக பயனை அனுபவிக்க வேண்டுமே தவிர அதனால் எம் கிடைத்தற்கரிய அழகிய வாழ்வினை பாழாக்க கூடாது.

“எல்லா படைப்புமே நல்ல படைப்பு தான்

மண்ணிற்கு வருகையிலே – அது  

நல்லதாவதும் தீயதாவதும் பயனாளி கையினிலே! ”

எனக் கூறுவது சாலப் பொருந்தும். எம் கல்விக்கு கரமாக, தொழிலிற்கு விளம்பர ஊழியராக, அறிவிற்கு பனுவலாக மட்டும் பயன்படுத்தினால் மிகச் சிறப்பான உலகமாக எம் நவீன உலகம் மாறும் என்பதில் துளியும் ஐயமில்லை. ஆனால் அதனை விடுத்து போதை மாத்திரைகளாக அவை மாறும் போது தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.இதனை உணர நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இலக்கமுறை விளையாட்டுக்கள். சில காலங்களுக்கு முன் “நீலத் திமிங்கிலம் ”அதாவது Blue whale என எம்மனைவராலும் அறியப்பட்ட இலக்கமுறை விளையாட்டு பல பதின்ம வயதினரின் உயிரை காவு வாங்கியதுடன் அவர்களின் உளவியல் சமநிலையையும் குழப்பமுறச் செய்தது.இவ்வாறு மனித குலத்திற்கு சவாலாக இச் சாதானங்களும் செயலிகளும் மாறக் காரணம் என்ன???? என நாம் சிந்திக்க வேண்டும். சுவாமி விவேகானந்தர் தமது உரையொன்றிலே கூறுவது யாதெனில் “வாலிபப் பருவம் மிகவும் சக்தி வாய்ந்தது. அது தாவி ஓடும் குதிரை போன்றது எவனொருவான் அதனை கடிவாளமிட்டு அடகுகிறானோ அவன் சாதனைகள் பல புரியும் ஓர் மானிடனாகின்றான் ” என்கிறார். எனினும் இன்றைய இளம் தலைமுறையினர் தமது இளமை எனும் அற்புத குதிரையின் கடிவாளத்தை சமூக வலைத்தளம், இலத்திரனியல் சாதனம், போலி ஆடம்பரம், தீய நாட்டங்கள் என இவற்றின் கைகளில் கொடுத்து அவை செல்லும் பாதையில் தங்கள் வாலிபத்தை கொடுக்கின்றனர் இறுதியில் திக்கற்றோராய் தொலைந்து போகின்றனர். எத்தனை சமூக சீர்கேடுகளை தினமும் கண் முன் காண்கிறோம்???? இது மிகவும் வேதனைக்குரிய விடயம் ஒன்றாகும். 

“அண்ணனும் நோக்கினான் ; அண்ணாளும் நோக்கினால் என்று சொன்ன காலம் போய் இன்று “கண்ணும் கண்ணும் நோக்கியா ”என கையடக்க தொலைபேசிகளில் உறவுகளை தேடி அனைத்தையும் தொலைத்து நிற்கிறோம்.

 நன்மைகள் பல இருந்தும் அழுக்கினை மட்டும் தேடி உண்ணும் பன்றிகள் போல் தீயவைகளை பார்த்தும், ரசித்தும், பகிர்ந்தும் எதிர்மறையான வாழ்வொன்றினை வாழ்கிறோம். இறுதியில் எதிர்மறை சிந்தனைகளின் தாக்கத்தினால் எம் வாழ்வையே முடித்து கொள்கிறோம்.

நூல்களிலிலிருந்து நிறை அறிவை பெற்றனர் எம் முன்னோர்கள். ஆனால் இன்று நூல்கள் நிறையப் பெற்ற பல நூலகங்கள் வாசகர்கள் இன்றிய நிலையில் மூடப்படும் நிலையில் உள்ளன. இது ஒரு சமூகத்தின் பின்னடைவையே காட்டுகிறது. நல்ல நூல்கள் வாசிக்கப்படும் போது மனிதரில் தெளிந்த சிந்தை தோன்றுகிறது. அதாவது பாலிலிருந்து நீரை வேறாக்கும் அன்னம் போல் மனிதரின் அறிவுக் கண்கள் திறக்கபடுகின்றன. நூல்கள் வாசிக்கும் போது எமக்கு நல்லவை கெட்டவை பற்றிய அறிவு கிட்டும்.இவ் அறிவு எம்மை மன முதிர்வு உள்ளவர்களாய் மாற்றுவதால் இவ்வாறு அறியாமையால் விளையும் அசம்பாவிதங்கள் குறையும் என்பது என் வாதம். நவீன சாதனங்களை சரி வர கையாள தெரிந்தாலே உலகினை இவற்றை கொண்டு வெல்ல முடியும். இவ்வாறு கையாள முடியாதவர்களே கடலில் விழுந்த குன்றிமணி போல் தொலைந்து போகிறார்கள் என்றால் மறுக்க முடியாது. இதில் வேதனைக்குரிய விடயம் யாதெனில் இவ்வாறு அழிவது புது யுகம் படைக்க வேண்டிய இளம் தலைமுறையினரே,!!!

ஆண், பெண் வேறுபாடின்றி, வயது வேறுபாடுகளின்றி வன்புணர்வுகள், தற்கொலைகள், ஏமாற்றப்படல், மாணவ மாணவியர் தற்கொலைகள், தவறான உறவுகள், உளச்சிதைவுகள் என சமூக சீர்கேடுகளின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் செல்கிறது என்றால் மறுக்க முடியாது. இவ் அவல நிலை மாற நாம் செய்ய வேண்டியது ஒன்று தான் நாம் முதலாளிகளாகவும் இச் செயலிகளையும் சாதனங்களையும் பணியாளர்களாகவும் மாற்ற வேண்டும்.எம் தேவைக்கு தான் அவை தேவை எனும் மனநிலைக்கு நாம் வர வேண்டும். இவை எமது அறிவு, ஆளுமை என்பவற்றை வளர்க்கும் உரமாக மட்டும் பயன்படுத்தப் பட வேண்டும். அன்றேல் இன்னும் மோசமான ஓர் சமுதாயமே எமக்கு கிடைக்கப்பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தனி மனித சுதந்திரம் எனும் போர்வையில் நாம் நாளுக்கு நாள் மனித தன்மையை இழந்து வருகிறோம் என்பதை உணர வேண்டும்.

“தீயோரை காண்பதும் தீது ;தீயோருடன் கூடுவதும் தீதே”என கூறப்படுவதுண்டு. அதன்படி இன்றைய சமுதாயமான நாம் தீயவற்றை விலக்கி நல்லவற்றை மட்டுமே காண எம் மனங்களை பழக்கப்படுத்த வேண்டும்.குழந்தைகளுக்கு சிறுவயது முதலே நூல்கள், சான்றோர்களின் அறிவுரைகளை கூறி வளர்க்க வேண்டும். காலத்தின் கட்டாயமான இச் சாதனங்களை சரிவர கையாள அவர்களை வழிப்படுத்த வேண்டும். இவ்வாறு ஒரு குழந்தை சிறுவயது முதல் வளர்க்கப் படும் போது ஒரு சமுதாயமே சீராக்கப்படுகிறது   என்றால் மறுப்பேதுமில்லை.“மனிதனுக்கு சக மனிதன் நண்பன் ” எனும் மனோநிலையும் எம் சமூகத்தில் உண்டாகும்.

சுவாமி புதாநந்தரின் “இளைஞர் சக்தி ”எனும் நூலில் கூறப்பட்டுள்ளதை போன்று “மனதை வெல்பவன், உலகை வெல்கிறான் ”எனும் கோட்பாட்டின் பேரில் எம் மனங்களில் பகுத்தறியும் ஆற்றலை கொண்டு நண்மையானவற்றை தீமையானவற்றிலிருந்து பிரித்து எம் முன்னேற்றத்தை நாம் செதுக்க வேண்டுமே தவிர எம்மை நாமே சிதைக்க கூடாது. முற்காலங்களில் வெளிநாட்டவர்க்கு அடிமையாய் பாடுபட்ட நாம் வீரமாய் போர்கள் பல செய்து மீண்டோம் எனினும் இன்று தொட்டுணர கூட முடியாத செயலிகளுக்கு அடிமைகளாக மாறி மீள முடியாமல் பாடுபடுவது வருந்தத்தக்கது.

எனவே, நாளைய சிற்பத்தின் இன்றைய உளி கொண்ட கற்களாகிய நாம் எம்மை நாமே செதுக்கி சிறந்த சிற்பங்களாக மாறி எம்மில் மறைந்திருக்கும் திறமைகள் மூலம் பார் போற்றும் நாயகர்களாய் மாறி சிறந்த எதிர் காலமொன்றை உண்டாக்க சங்கற்ப்பம் பூணுவோமாக! 

நன்றி:- நோ. காஞ்சனா நிலுக்ஷி

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow