மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 06(பாண்டு மரணம்)
சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

பாண்டுராஜன் ஒருநாள் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றான். காட்டில் மிருகங்கள் இல்லாததால் காட்டின் உள்ளே வெகுதூரம் சென்றான். அப்போது ஒருமுனிவரும் அவரின் மனைவியும் மானாக உருமாறி விளையாடிக்கொண்டிருந்தார்கள். மானுருவில் விளையாடுபவர் முனிவர் என்று அறியாத பாண்டு அம்மானின் மீது அம்பு தொடுத்தான். அம்பு தைத்தவுடன் மானுருவில் விளையாடிய முனிவர் தனது சுய உருவைப் பெற்றார். அவருக்குக் கடுங்கோபம் வந்தது; "விளையாடும் மிருகங்களை ஈவிரக்கமின்றி கொல்ல முயன்ற பாதகனே, நீ உன் மனைவியுடன் சேர்ந்தால் மரணம் உண்டாகும்" எனச் சபித்தார்.
முனிவரின் சாபத்தால் மனமுடைந்த பாண்டு இராச்சியத்தைப் பீஷ்மனிடம் ஒப்படைத்து விட்டு மனைவியருடன் காட்டுக்குச் சென்று தவம் செய்தான்.
பாண்டுவின் நிலையைப் புரிந்து கொண்ட குந்தி, தனக்கு முன்பு துருவாசமுனிவர் உபதேசித்த மந்திரத்தைப் பற்றிக் கூறி அதை உச்சரிக்க அனுமதி கோரினாள். பாண்டு அதற்கு உடன்படக் குந்தியும் மாத்திரியும் அம் மந்திரங்களைத் தேவர்களை நினைத்து உச்சரித்துப் பஞ்ச பாண்டவர்களைப் பெற்றெடுத்தனர். அதன்பின் அவர்கள் பல காலம் காட்டில் வசித்து வந்தனர்.
ஒரு நாள் பாண்டுவும் மாத்திரியும் தனிமையில் இருந்த போது பாண்டு காமவசப்பட்டுத் தனக்கிடப்பட்ட சாபத்தை மறந்து அவளோடு கூடியிருக்கையில் அவனது உயிர் பிரிந்தது. தன்னால் தான் பாண்டு இறந்தான் எனக் கவலைப்பட்ட மாத்திரி பாண்டுவைத் தகனம் செய்த போது அச் சிதையில் விழுந்து மாண்டாள்.
பாண்டு இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட பீஷ்மர் மிகுந்ததுக்கம் அடைந்தார். விதுரனும் பீஷ்மரும் வியாச முனிவரும் திருதராட்டினனும் முறைப்படி கிரியைகளைச் செய்தனர். நாட்டு மக்கள் பெருந்துன்பங்கொண்டு அழுது புலம்பினர்.
அதன்பின் சத்தியவதி அம்பிகையையும் அம்பாலிகையையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்று தவஞ்செய்தாள்
பாகம் 7 பதிவேற்றப்பட்டுள்ளது அதனை படிக்க
Click to See more பட்டனை கிளிக் செய்யுங்கள்
பின்குறிப்பு:- சிறுவர்கள் வாசித்து பயன்பெறும் வகையில் மிகவும் எளிய வடிவில் முழு மகாபாரதமும் சுருக்கப்பட்டு இங்கே எழுதப்படுகிறது.
உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன