மகாபாரதம் கதை வடிவில் பாகம்-2

சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

மகாபாரதம் கதை வடிவில் பாகம்-2

பாகம் 2

சந்தனுமகாராஜா தனது மகனைக் கண்டதும் அளவில்லா ஆனந்தம் அடைந்து அவனை அழைத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். சில நாட்கள் சென்ற பின் அவனுக்கு யுவராஜனா பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.

வருடங்கள் சில கழிந்தன. ஒருநாள் சந்தனுமகாராஜா யமுனை ஆற்றங்கரைக்குச் சென்றார். அங்கே மனதைக் கவரும் ரம்மியமான வாசனை வந்ததது. அப்படியான ஒரு வாசனையை அவர் இதுவரை அனுபவித்ததில்லை. அவ் வாசனை எங்கிருந்து வருகிறது என்று தேடலானார். ஆற்றங்கரையில் தேவமகளிரைப்போன்றதொரு அழகிய பெண் நின்றாள். அவளிடமிருந்தே அந்த நறுமணம் வருதை உணர்ந்து அவளின் அருகே சென்றார். அப்பெண்ணின் அழகு அவரைக் கவர்ந்தது. அதனால் அவளைத் திருமணம் செய்ய அவர் விரும்பினார்.

“பெண்ணே, நான் இந்த நாட்டின் மன்னன் சந்தனு. உனது அழகும், உன் மீதிருந்து எழுந்து இப்பிரதேசம் முழுவதையும் நிறைத்திருக்கும் நறு மணமும் என்னைக் கொள்ளை கொண்டு விட்டன. அதனால் என்னை நீ திருமணட செய்வாயா?" என்று சந்தனு கேட்டார்.

“அரசே , நான் செம்படவப்பெண். நீங்கள் எமது நாட்டின் அரசர். அதனால் எனது தந்தையோடு பேசுங்கள். அவர் சம்மதித்தால் நானும் சம்மதிப்பேன்" என்றாள்.

சந்தனு அவளின் தந்தையான அச் செம்படவனைச் சந்தித்துத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். "அரசே தாங்கள் எனது மருமகனாய் வருவதையிட்டு நான் பெருமைப்படுகின்றேன். ஆனால் நீர் எனது விருப்பத்திற்கு இணங்குதல் வேண்டும்."

“என்னென்று சொல். நீ கேட்பது நியாயமானதானால் அதற்கு நான் சம்மதிக்கிறேன்" என்றான். சந்தனு.

"எனது மகளுக்கு அரச உரிமை வழங்கவேண்டும். அத்துடன் அவளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கு முடிசூட்டி, அவனை அரசனாக்க வேண்டும்" என்றான் செம்படவன்.

அதற்குச் சந்தனு ஒப்புக்கொள்ளவில்லை. கவலையுடன் அரண்மனைக்குத் திரும்பினான். அவனால் அவளை மறக்கமுடியவில்லை. நாட்கள் செல்ல அம் மனவருத்தம் உடல் வருத்தமாக மாறியது. அதனால் அவனால் நடமாடக் கூட முடியவில்லை.

தகப்பனின் நோயைக் கண்டு பரிதவித்த தேவவிரதன்; "தந்தையே, தங்களை நான் சமீப நாட்களாக அவதானித்து வருகின்றேன். தங்களது உடல் தளர்ந்து விட்டது. மருத்துவர்கள் உங்களுக்கு மனதில் தான் வருத்தம் என்கிறார்கள். என்னவென்று சொன்னால் அதை நான் தீர்த்து வைப்பேன்" என்றான்.

“மகனே, அரசர்க்குப் பலகுமாரர்கள் இருத்தல்வேண்டும். அப்படி இருந்தால் தான் பகைவர்கள் கலங்குவார்கள். நீ நூறு பேரின் வலிமை பெற்றவன். இருப்பினும் உனக்குத் துணையாகச் சகோதரர்கள் ஒரு சிலராவது இருத்தல் வேண்டும்" என்று கூறி அச்செம்பவடப் பெண்ணின் தந்தை கூறியவற்றை விபரமாகச் சொன்னான்.

அதன் பின் தேவவிரதன் அச்செம்படவனிடஞ் சென்று தன் தந்தைக்கு அச் செம்படவனின் மகளைப் பெண்கேட்டான்.

அதற்கு அச்செம்பவடன்; "இளவரசே, உமக்கு ஏற்கனவே யுவராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. அதனால் நீரே சந்தனு மன்னனுக்குப் பின் அரசனாவீர். எனது மகள் பட்டத்தரசியாதல் வேண்டும். அத்துடன் எனது மகளுக்குப் பிறக்கும் மகனே அரசனாக வேண்டும். அது நீர் இருக்கும் வரை நடைபெறாது. அதனால் உமது தந்தைக்குப்பெண் கொடுக்க மாட்டேன்" என்று மறுத்தான்.

அதைக்கேட்ட தேவவிரதன்; "பெரியவரே, உமது மகளுக்குப் பிறக்கும் மகன் தான் அரசனாக வருவான். எனது பட்டாபிஷேகத்தை நான் தியாகஞ் செய்கிறேன்" என்றான்.

"உமது வாக்கை நான் நம்புகிறேன். ஆனால் நீர் திருமணம் செய்தால் பிறக்கும் உமது பிள்ளைகள் ராஜபரிபாலனத்தைக் கோருவர். இல்லாவிட்டால் யுத்தம் செய்ய விரும்புவர். அதனால் இதை நான் விரும்பவில்லை" என்றான் செம்படவன்.

"பெரியவரே, நீர் நினைப்பது சரியானது. அதனால் நான் என் ஆயுள் முழுவதையும் பிரம்மச்சாரி விரதம் பூண்டு கழிப்பேன். இது சத்தியம்!" என்றான்.

அந்நேரம் தேவர்கள் பூமழை பொழிந்தார்கள். வானத்தில் 'பீஷ்மன், பீஷ்மன்' என்ற அசரீரி ஒலித்தது. அதன்பின் பீஷ்மன் செம்படவனின் மகளான சத்தியவதியை அழைத்துச் சென்று தன் தந்தையிடம் ஒப்படைத்தான். அற்புதமான உலகத்தில் யாரும் செய்ய முடியாத செயலைச் செய்த தேவவிரதன் அன்று முதல் பீஷ்மன் என்று அழைக்கப்பெற்றான்.

சத்தியவதிக்கும் சந்தனு மகாராஜாவுக்கும் வெகு விமர்சையாகத் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்குச் சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்ற இரு ஆண்பிள்ளைகள் பிறந்தனர்.

தொடரும்...

பாகம் 3 பதிவேற்றப்பட்டுள்ளது அதனை படிக்க Click to See more பட்டனை கிளிக் செய்யுங்கள் 

பின்குறிப்பு:- சிறுவர்கள் வாசித்து பயன்பெறும் வகையில் மிகவும் எளிய வடிவில் முழு மகாபாரதமும் சுருக்கப்பட்டு இங்கே எழுதப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.