Tamil Eezha Kaatrea | Naatpadu Theral 04 | Vairamuthu | IsaiArasan | Sathyaprakash | Jeeva Mugunthan
இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத மனிதத் துயரம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை. உடலோ வெளிநாட்டில்; உயிரோ தாய்நாட்டில். புலம்பெயர் மக்களின் புலம்பல் இப்பாடல்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் திட்டம். 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள். வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்கள்.
Srilankan Team Direction : Abayan Ganesh
Assistant Director : Janakan Sivagnanam
DOP : Kavil ads , Sulaxsan mahenthirarasa , Rajinthan varatharasa
Artist : Rajeepan Harshanan (as Son) , Ithayaraj mariyathas (as Father) , Rajeepan Tharmini (asMother) , Kayal Baskaran (as Teacher)
Production : IBC TAMIL
தமிழ் ஈழக் காற்றே!
தமிழ் ஈழக் காற்றே!
விண்ணின் வழிவந்து வீசு – எங்கள்
மண்ணின் சுகம்கண்டு பேசு
* உயிரைக் கொடுத்த
அன்னை கயிறாய்க் கிடப்பாளோ?
எலும்பைக் கொடுத்த தந்தை
நரம்பாய்க் கிடப்பாரோ?
நல்லூர் முருகன் கோயில்மணியில்
நல்லசேதி வருமோ?
உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள்
உயிரும் உடலும் நலமோ?
ஓடிய வீதிகள் சுகமா – எங்கள்
ஒருதலைக் காதலி சுகமா?
பாடிய பள்ளிகள் சுகமா? – உடன்
படித்த அணில்கள் சுகமா?
ஒருமுறை வந்து சொல்லிப்போ – எங்கள்
உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ
* முல்லைத் தீவின் கதறல்
மூச்சில் வலிக்கிறதே!
நந்திக் கடலின் ஓலம்
நரம்பை அறுக்கிறதே!
பிள்ளைக் கறிகள்
சமைத்து முடித்த தீயும் மிச்சம் உள்ளதோ?
எங்கள் ஊரை எரித்து மீந்த
சாம்பல் சாட்சி உள்ளதோ?
வன்னிக் காடுகள் சுகமா?
– எங்கள் வல்வெட்டித்துறையும் சுகமா?
காய்ந்த கண்ணீர் சுகமா? – இன்னும்
காயாத குருதியும் சுகமா?
ஒருமுறை வந்து சொல்லிப்போ –
எங்கள் உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ