சந்தைப்படுத்தல் என்றால் என்ன? கட்டுரை -01
சந்தைப்படுத்தல் என்றால் என்ன? மற்றும் அதன் முக்கியத்துவங்கள் பற்றிய விளக்க கட்டுரை

சந்தைப்படுத்தல் என்றால் என்பதை அறிய முன், தற்காலத்தில் சந்தைப்படுத்தல் ஏன் அவசியம் என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.
அதாவது இன்று சந்தைப்படுத்தல் ஒரு முக்கிய கருமமாக காணப்படுவதனால் அதனைப்பற்றி சகலரும் அறிந்திருந்தல் வேண்டும். பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்பக்கல்லூரிகள், திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் என்பன வற்றினால் வழங்கப்படும் பல கற்கை நெறிகளில் சந்தைப்படுத்தல் ஒரு பாடமாக அமைகின்றது. அதனைத்தவிர பல தொழில்சார்கற்கை நெறி களிலும் கூட சந்தைப்படுத்தல் பாடத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப் பட்டுள்ளது.
வெகு அண்மைக்காலங்களில் சந்தைப்படுத்தல் தொடர்பான கற்கை நெறிகளைப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்துச் செல்வதனை அவதானிக்க முடிகின்றது. ஏன் சந்தைப்படுத்தல் பற்றி அறிந்திருத்தல் வேண்டும்? பின்வரும் காரணங்களை நியாயமாகக் கூறலாம்.
(அ) சந்தைப்படுத்தலைப் பற்றி அறிந்திருப்பதன் மூலம் வேலை வாய்ப்புக் களை சுலபமாகப் பெற முடியும். அத்துடன் சுயமாக தொழில் ஒன்றினை ஆரம்பிப்பதற்கும் சந்தைப்படுத்தல் அறிவு உதவுகின்றது.
(ஆ) நாங்கள் எல்லோரும் நுகர்வோர். சந்தைப்படுத்தல் நுகர்வோருடன் தொடர்புடையது. எனவே நுகர்வோர் ஆகிய நாங்கள் சந்தைப்படுத்தல் பற்றி அறிந்து இருத்தல் அவசியமானதாகும்.
(இ) எமது ஒவ்வொருவரின் நாளாந்த வாழ்க்கையுடன் சந்தைப்படுத்தல் தொடர்புடையது. அத்துடன் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் நாளாந்த வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்து கின்றது.
(ஈ) நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி என்பனவற்றுடன் சந்தைப்படுத்தல் தொடர்புடையது.
(உ) நீங்கள் எத்தகைய தொழிலை மேற்கொள்ளினும் அதாவது சந்தைப் படுத்தல் அல்லாத தொழில் (Non Marketing Job) மேற்கொள்ளினும் சந்தைப்படுத்தல் தொழிலில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தேவை காணப்படும். எனவே சந்தைப்படுத்தல் பற்றிய அறிவு அவசியம்.
(ஊ) நீங்கள் நுகர்வோர் என்ற வகையில் நீங்கள் பெற்றுக் கொள்ளும் பொருட்கள் சேவைகளுக்காக உங்களால் செலுத்தப்படும் ஒவ்வொரு ரூபாவிலும் 50 சதம் அவ்பொருட்கள் சேவைகள் தொடர்பானசந்தைப் படுத்தல் செலவாகக் காணப்படுகின்றது. அதாவது சந்தைப்படுத்தல் செலவு உங்கள் வாழ்க்கைச் செலவுடன் நேரடியாகத் தொடர்புடையது.
மேற்குறிப்பிட்ட ஆறு பிரதான காரணங்களுக்காக ஒவ்வொருவரும் சந்தைப்படுத்தல் பற்றி அறிந்திருப்பது விரும்பத்தக்கதும். அவசிய மானதுமாகும்.
சந்தைப்படுத்தல் என்றால் என்ன? சந்தைப்படுத்தல் எனப்படுவது நுகர்வோரின் தேவைகள் (Needs), விருப்பங்கள் (Wants) என்பனவற்றினைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் எவ்வாறு ஒரு பொருளை உற்பத்தி செய்ய லாம் என்பதிலிருந்து உற்பத்தி செய்த அப்பொருளை நுகர்வோருக்கு வசதியான ஒரு இடத்தில் கிடைக்கும் பொருட்டு மேற் கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளும் சந்தைப்படுத்தலாகும். இவ் எளிய வரைவிலக் கணத்தினை அவதானிக்கும் போது சந்தைப்படுத்தல் தொடர்பாக மூன்று அம்சங்கள் வெளிக் கொணரப்படுகின்றன.
(அ) சந்தைப்படுத்தல் நுகர்வோருடன் தொடர்புடையது.
(ஆ) சந்தைப்படுத்தல் பல கருமங்களை உள்ளடக்கிய செயற்பாடாகும்.
(இ) சந்தைப்படுத்தல் உற்பத்திக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு உற்பத்திக்கு பின்பும் தொடர்கின்றது.
ஒருவர் ஒரு தேவையினைக் கொண்டிருக்கும் போது அத்தேவையின் அடிப்படையில் அத்தேவையினைப் பூர்த்தி செய்யும் விருப்புடன் குறிப்பிட்ட பொருள் அல்லது சேவை வேண்டப்படும். இதன் அடிப்படையில் அப் பொருட்கள் சேவைகளுக்கு கேள்வி ஏற்பட்டு அவை உற்பத்தி செய்யப்படும். இதனைத் தொடர்ந்து மக்கள் தமது தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அதனைப் பெற்றுக் கொள்ளும் அடிப்படையில் பரிமாற்றம் கொடுக்கல் வாங்கல் என்பன ஏற்பட்டு அப்பொருளுக்கு ஒரு சந்தை ஏற்படும். கீழே உள்ள விளக்கப்படம் இதனை விளக்குவதாக அமையும்.
ஒரு வியாபார நிறுவனத்தினை பொறுத்தளவில் இரு பிரதான தொழிற்பாடுகளை நிறைவேற்றுதல் வேண்டும். முதலாவது பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்தல். அடுத்து இவற்றினைச் சந்தைப்படுத்துதல். உற்பத்தியில் செலுத்தப்படும் அதேயளவு கவனத்தினை சந்தைப்படுத்தலிலும் செலுத்துதல் அவசியமானதாகும். ஒரு நிறுவனம் சமூகத்தில் நிலைத்திருக்க வேண்டின் அது நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்தல் வேண்டும். அதன்பொருட்டு நுகர்வோரின் தேவையை முன்னுணர்ந்து தேவையைத் தூண்டத்தக்கவகையில் உற்பத்தி,சந்தைப்படுத்தல் கருமங்கள் மேற்கொள்ளப் படல் வேண்டும்.
சந்தைப்படுத்தல் தொழிற்பாடு நிகழ்வதற்கு ஆகக் குறைந்தது நான்கு காரணிகள் அவசியம். அவையாவன;
அ) இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வகுதியினர் (parties)காணப் படுவதுடன் அவர்கள் பூர்த்தி செய்யப்படாத தேவையினைக் கொண்டி ருப்பதும் அவசியமானதாகும்.இவ்வகுதியினர் தனிப்பட்டவர்களாகவோ அன்றி நிறுவனங்களாகவோ காணப்படலாம்.
(ஆ) ஒவ்வொரு வகுதியினரும் மற்றைய வகுதியினரின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்டிருத்தல் அவசியமானதாகும்.
(இ) இவ் ஒவ்வொரு வகுதியினரும் மற்றைய வகுதியினருடன் தொடர்பு கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பது அவசியமானதாகும்.
(ஈ) இவ் இரண்டு வகுதியினரும் பெறுமதியின் அடிப்படையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நான்கு காரணிகளும் காணப்படும்போது சந்தைப் படுத்தல் தொழிற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.
ஒரு நிறுவனம் தனது நோக்கத்தினை அடையும் பொருட்டு பயனுறுதிமிக்க முறையில் சந்தைப்படுத்தல் கருமங்களைத் திட்டமிடுதல். ஒழுங்கைமத்தல், கட்டுப் படுத்தல், வழிநடத்தல் ஆகிய முகாமைச் செய்ற்பாடுகளை உள்ளடக்கிய தொழிற்பாடு சந்தைப்படுத்தல் முகாமை (Marketing Management) என அழைக்கப்படும். சந்தைப்படுத்தல் முகாமைக்குப் பொறுப்பான முகாமையாளர் சந்தைப்படுத்தல் முகாமையாளர் என அழைக்கப்டுகின்றார்.
அடுத்த கட்டுரை
சந்தைப்படுத்தல் எண்ணக்கருக்கள் கட்டுரை -02