உங்கள் குழந்தையை அவமானப்படுத்தும் செயல்களை செய்யாதீர்கள்.. விளைவுகள் தெரியுமா உங்களுக்கு?

உங்கள் குழந்தைகளை பப்ளிக்கில் பகிரங்கமாக அவமானப்படுத்துவது உங்கள் குழந்தையின் ஆளுமையையே ஆட்டிப்பார்த்துவிடும்.

உங்கள் குழந்தையை அவமானப்படுத்தும் செயல்களை செய்யாதீர்கள்.. விளைவுகள் தெரியுமா உங்களுக்கு?

நீங்கள் எப்போதாவது ஒரு பொது இடத்தில் உங்கள் பிள்ளையின் சில குறும்புகளுக்காகவோ அல்லது குழந்தை நடந்துகொண்ட விதத்திற்காகவோ மோசமாக திட்டியிருக்கிறீர்களா? உங்களுடைய இந்த நடத்தை ஒரு பழக்கமாகிவிட்டதா? ஆம் எனில், நீங்கள் அதை முதலில் நிறுத்த வேண்டும். உங்கள் குழந்தைகளை பப்ளிக்கில் பகிரங்கமாக அவமானப்படுத்துவது உங்கள் குழந்தையின் ஆளுமையையே ஆட்டிப்பார்த்துவிடும். 

உங்கள் சொற்கள் அவர்களை வருங்காலத்தில் ஆளுமை இல்லாத நபர்களாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் குழந்தையின் குசும்புத்தனத்தால் நீங்கள் அவர்களை அடிக்கடி கண்டித்தாலோ அல்லது அவர்களை நோக்கி சத்தம்போட்டாலோ குழந்தையும் அவர்களின் பிரண்ட்ஸ் அல்லது மற்றவர்களுடன் அதேபோல் நடந்து கொள்வர்.

குழந்தைகளை சங்கடத்திற்குள்ளாக்காதீர்கள்:

குழந்தைகள் பொதுவெளியில் என்ன செய்தாலும் அவர்களை கண்டிக்கும் போது பெற்றோர்கள் பயன்படுத்தும் வார்த்தை உண்மையில் தவிர்க்க வேண்டியதாக உள்ளது. ஏனெனில் உங்கள் வயதுடைய பிள்ளைகளின் மத்தியில் உங்கள் பிள்ளையை நீங்கள் திட்டும்போது உங்கள் பிள்ளை நிச்சயமாக தர்மசங்கடமாக உணர்வார்கள். இது அவர்களின் மன நிம்மதியை குலைத்துவிடும் இதனால் அவர்களின் படிப்பும் இதர செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம்.



நம்பிக்கை இழப்பு:

பலர் இருக்கும் சபையிலோ அல்லது பொது இடத்திலோ நீங்கள் உங்கள் குழந்தையை வாய்க்கு வந்தபடி திட்டி விட்டாலோ வேறொருவர் மேலிருக்கும் கோபத்தை உங்கள் குழந்தையின் மீது காட்டினாலோ உங்கள் குழந்தை உங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழந்து விடும். குழந்தைக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நாம் நடந்துகொள்ளவேண்டும். இல்லையென்றால் அவர்களோடு சேர்ந்துதான் நம் மானமும் போகும்.




உணர்வுகளின் பாதிப்பு:

குழந்தைகள் அனைத்து உணர்வுகளின் கலவை. நினைத்தால் அழுவார்கள், நினைத்தால் சிரிப்பார்கள். அவர்களின் உணர்வு பெற்றோர்களாகிய உங்களால் பாதிக்கப்படக்கூடாது. பொதுவெளியில் உங்கள் குழந்தைகளை நீங்கள் அவமானப்படுத்தும்போதோ அடிக்கும்போதோ அல்லது அவர்களை காயப்படுத்தினால் அவர்களால் எந்த ஒரு செயலையும் நிம்மதியாக செய்ய முடியாது. கவனச்சிதறல் ஏற்பட்டு சோர்ந்து விடுவார்கள்.

சிறிது நேரத்திற்கு பிறகு தவறை சுட்டிக்காட்டுங்கள்:


பெரும்பாலான குழந்தைகள் விளையாட்டு வாக்கில் பலவற்றைச் செய்து பொதுவெளியில் நம்மை மட்டுமல்லாது முன்பின் அறிமுகம் இல்லாதவர்களையும் கஷ்டப்படுத்த வாய்ப்புள்ளது. அதுபோன்ற நேரங்களில் அவர்களை அப்போது லேசாக திட்டி விட்டு பின்னர் வீட்டிற்கு வந்ததும் குழந்தை செய்த தவறை நீங்கள் அவர்களுக்கு உணர்த்தலாம். அதற்கான வழிமுறைகளை நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் தவறை உணர்ந்து அதை மீண்டும் செய்வதற்கு வாய்ப்பு இருக்காது. இல்லை என்றால் பொதுவெளியில் குழந்தைகளை அடித்து உதைத்தால் நிச்சயம் அவர்களால் வலியை மட்டும் தான் உணர முடியுமே தவிர செய்த தவறை உணர முடியாது.



இன்று படித்த பல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை சரியான முறையில் வளர்ப்பதில்லை. குழந்தை கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்தும் அவர்கள் தவறு செய்தால் அதிலிருந்து சரியான பாடத்தை அவர்களுக்கு புகட்ட தவறுவதும் போன்ற பல விஷயங்களை பெற்றோர்கள் சரிவர செய்வதில்லை. இதனால் குழந்தை வளர்ந்த பின்னர் அவர்களுக்கு ஏற்படும் சவால்களை அவர்களால் சகித்துக்கொள்ள முடியாமல் தவறான முடிவுகளையோ அல்லது தோல்விகளையோ மீண்டும் மீண்டும் சந்திப்பார்கள். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் சிறுவயதிலிருந்தே அவர்களை கண்ணும் கருத்துமாய் பார்த்து நல்ல ஆளுமை மிக்க நபர்களாக மாற்றுவதற்கு தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.