மேன்மை மிக்க அகவழிபாடு

உள்ளத்தால் மெய்அன்போடு இறைவனை பூசித்து முக்தி அடைவது பற்றிய திருமூலரின் விளக்கங்கள்

மேன்மை மிக்க அகவழிபாடு

திருமூலர் இறைவனை மனத்துள்ளே வைத்துப் பூசை செய்வதையே பெரிதும் வலியுறுத்துகிறார். சிவபெருமான் ஆன்மாக்கள் தோறும் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடம் உள்ளமாகிய மனமண்டலமாகும். அவ்வுள்ளமே சிவன் உறையும் கருவறையாகும். ஊனாகிய உடம்பே கோயிலாகும். அக்கோயிலில் வள்ளலாகிய தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாசலாகும். இதனை உணர்ந்து, தெளிந்து ஞானம் அடைவதற்குச் சீவனே சிவலிங்கம். இவ்வாறு அறிந்து வழிபடுவோர்க்கு வஞ்சனை செய்யும் ஞானேந்தியங்கள் ஐந்தும் பெரிய ஒளி பொருந்திய விளக்காகும் என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதனை,

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே" (திருமந்திரம் 1823)

என்ற பாடல் காட்டுகிறது. திருமூலர் உடலினை நடமாடும் கோயிலாக உருவகிக்கிறார் (திரு.ம.1857). சைவ சமயத்தில் பூசலார் நாயனாரும் மனத்திலேயே கோயில் கட்டி வழிபாடு செய்தார். ஆழ்வார்களில் பொய்கையாழ்வார் தமது முதல் திருவந்தாதியில்,

‘வையந் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினன் சொன்மாலை இடராழி நீங்குவவே என்று’

என்றும், பூதத்தாழ்வார் தமது இரண்டாம் திருவந்தாதியில்,

‘அன்பே தகளியா யார்வமே நெய்யாக
அன்புருகுஞ் சிந்தை யிடுதிரியாய் நன்புருக்கி ஞானச் சுடர்விளக் கேற்றினன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான்’

என்றும் குறிப்பிடுவது ஈண்டு நோக்கத்தக்கது.

‘கோயிலும் குளங்களும் கும்பிடும் குலமாரே
கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே’ (திருமந்திரம். 1823) என்று தம் பாடலால் அகவழிபாட்டினை வலியுறுத்துகிறார். திருமூலர் தமது திருமந்திரத்தில் சுமார் 59 பாடல்களில் உடலை அல்லது உள்ளத்தைக் கோயிலாகக் குறித்து பாடியதாகத் தெரிகிறது.

திருமூலர், மனத்தையே கோயிலாகக் கொண்டு விளங்கும் இறைவனுக்குக் காலையிலும், மாலையிலும் பாடும் பாட்டே நிவேதனப் பொருட்களாகும் என்று குறிப்பிடுகிறார் (திரு.ம.1824). மனத்துள்ளே விளங்கும் இறைவனை வழிபட மலரையும் நீரையும் அடுத்துக் கூறுகிறார். புறத்தேயுள்ள பெருமானை வழிபட நீரும், மலரும் இன்றியமையாதன. அதுபோல அகத்தேயுள்ள பெருமானை வழிபடக் கண்களையே மலராகவும், அதில் கசிந்துவரும் கண்ணீரையே நீராகவும் கொண்டு அபிடேகம் செய்து வழிபடுதலே சிறந்த வழிபாடு (திரு.ம.1826) எனக் குறிப்பிடுகிறார். இதனை,

‘நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கலைகழல் ஈசசைக் காண அரிதாம் கனைகழல் ஈசனைக்காண்குற வல்லால் பனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே’ (திருமந்திரம். 1826) என்ற பாடல் காட்டுகிறது. இவ்வாறு மலரையும், நீரையும் உணர்ந்து சிவனுக்கு வழங்குபவர்களே புண்ணியம் செய்தவர்கள். இவ்வுண்மையை அறியாது உலகத்தார் கெடுகின்றனரே (திரு.ம.1828) என்று வருந்துகிறார்.

திருமூலர், திருக்கோயிலில் பூசைகள் செய்தல் நூறுமடங்கு உயர்ந்தது. ஆனால் தவம் செய்வாரின் உடலில் (உள்ளத்தில்) செய்யப்படும் சிவபூசை ஆயிரம் மடங்கு உயர்ந்ததாகும் (திரு.ம.1851) எனப் புறவழிபாட்டை விட அகவழிபாடு சிறந்தது என்று அகவழிபாட்டின் மேன்மையை விளக்குகிறார்