ஔவைக்குறளை அறிவீர்களா....? ஔவைப் பாட்டி பற்றி மறைக்கப்பட்ட தகவல்கள்.
திருக்குறளும்_ஔவைக்குறளும்_இரட்டைக்_குறள்கள்....?
அறம் பொருள் இன்பம் வீடு (வீடுபேறு)
தெய்வப் புலவர் திருவள்ளுவர் தனது திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்று அமைத்தார். இதில் வீடுபேறு (மோட்சம்) பற்றி சொல்லப்படவில்லையே என்றால், இந்த மூன்றையும் முறையோடும், நெறியோடும், அளவோடும் கைக்கொள்பவன் வீடுபேற்றை அடைவான் என்பதே கோட்பாடு. அறம், பொருள், இன்பம் என்ற இந்த மூன்றிலும் ல் தன் இயல்பு மாறாமல் வாழ்பவர் எந்த சூழ்நிலையில் பிறந்து, ,வளர்ந்தவராக இருந்தாலும் முக்தி அடைவது திண்ணம்.. இதையே வீடுபேறு (மோட்சம்) என்பார்கள். அதாவது அறத்தில் முறை, வாழ்வில் நெறி, காமத்தில் அளவு இவற்றை மேற்கொண்டு வாழ்பவர்கள், முதுமையில் எளிதில் அவற்றையும் நீக்கிப் பற்றற்ற நிலையை அடைந்து முக்தி அடைவர் என்பதே! இதன் தத்துவம்.
விநாயகர் அகவல் பாடி இறை நிலை அடைந்து ஒளியுடல் பெற்ற ஞானியாகிய ஔவை மூதாட்டி, திருவள்ளுவரின் ஞானகுருவாக விளங்கி இருக்கிறார் என்பதை நாம் அறிவோமா? அது எவ்வாறு என்பதைப் பற்றியும், திருக்குறளும், ஔவைக்குறளும் இரட்டை குறள்கள் என்ற அரிய தகவல்களைப் பற்றியும் இப்பொழுது பார்ப்போம். டாக்டர். சிவராம் கணேசமணி (புற்றுநோய் அறுவைசிகிச்சை சிறப்பு மருத்துவர்_ என் சகோதரி மகன்)
ஔவையார் ஓர் எளிய வாழ்க்கை வாழ்ந்து கூழுக்குப்பாடி என்று பெயர் பெற்ற ஒரு சாதாரண மூதாட்டி என்றும், கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி பாடிய எளிய பெண்பாற் புலவர் என்றே பலரும் நினைத்திருக்கிறோம். ஆனால் ஔவை மூதாட்டி விநாயகர் அகவல் என்ற அரிய யோக சாஸ்திரத்தை விளக்கும் நூலைப் பாடியவர் என்றும்; அவர் திருவள்ளுவருக்கே குருவாக விளங்கியவர் என்றும் அறிவோமா?
எவ்வாறு சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இரட்டைக் காப்பியங்கள் என்று நாம் கூறுகிறோமோ, அதைப் போல திருக்குறளும், ஔவைக்குறளும் இணைந்தே இரட்டைக் குறள்களாக இருவரும் இணைந்தே அமைத்தனர்! என்றும் அறிவோமா? ஔவை மூதாட்டி ஒருவர் அல்ல, வெவ்வேறு காலகட்டங்களில் நான்கு ஔவையார்கள் ஒரே பெயரில் வாழ்ந்திருக்க வேண்டும்! என்று இலக்கிய ஆராய்ச்சி யாளர்கள் என்று கூறுபவர்கள் இப்போது கூறினாலும், ஔவை மூதாட்டியைப் பற்றியோ, திருவள்ளுவரைப் பற்றியோ, அவர்கள் சரியாக எங்கே பிறந்தனர்? எந்த வருடம் எந்த நேரம் பிறந்தனர் என்றும், எந்த ஊரில் பிறந்தனர்? என்றும், எந்த இடத்தில் மறைந்தனர்? என்பதைப் பற்றியும் சரியான ஆதாரபூர்வமான தகவல்கள் ஏதுமில்லை.
ஆதி என்ற தாய்க்கும், பகவன் என்ற தந்தைக்கும் பிறந்தவர்களே ஔவையாரும், திருவள்ளுவரும் என்றும் ஒரு கதை உண்டு; இருவரும் உடன் பிறந்தவர்கள் என்பதெதெல்லாம் எந்த ஆதாரங்களும் இல்லை. இருவரும் சிறந்த நட்போடிருந்தனர் என்றும் கூறுவர். ஔவையார் விநாயகர் மற்றும் முருகப்பெருமானின் அருளைப் பெற்ற தமிழ் ஞானக்கவி மட்டுமல்ல, அவர் ஒரு சிவசித்தர்.
ஔவையார் பிறப்பு, இறப்பற்ற ஒளியுடலைப் பெற்ற சித்தர் என்கின்றனர் தமிழ் ஞான இலக்கியங்களை ஆராயும் ஆன்மீக ஞானிகள். எனவே சிவனடியாராக வாழ்ந்தத் திருவள்ளுவருக்கு இவர் குருவாக விளங்கினார்! என்கின்றனர். எனவே அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்று இந்து மதம் கூறும் நான்கில் _ அறம், பொருள், இன்பத்தைப் பற்றி திருவள்ளுவர் பாட, சிவசித்தரான ஔவையாரோ வீடுபேற்றை பற்றி ஔவைக்குறள் எனப் பாடியுள்ளார். எனவே இருவரும் இணைந்தே இரட்டை குறள்களாக திருக்குறளையும், ஔவைக்குறளையும் பாடினர்! என்று கூறுகின்றனர். ஆனால் வஞ்சகர்களின் சதியால் ஔவைக்குறள் ஒதுக்கப்பட்டு, மறைக்கப்பட்டது என்பதே உண்மை. திருவள்ளுவருக்கே குருவாகச் சித்தர் என்ற நிலையில் ஔவையார் விளங்கியிருக்கிறார்! என்பது பெண் குலத்திற்கே பெருமை தருவதாகும்.
பெண்குலத்தின் மாமணி, நற்றமிழ் வித்தகி, தமிழ் ஞானக்கவி ஔவையார் ஒரு ஞானி, சித்தர், என்பதால், சித்தர்களுக்கு பிறப்பு இறப்பு என்பது இல்லை; அவர்கள் ஒளியுடலைப் பெற்றவர்கள் என்பதால் ஒரு ஔவையாரே பல்வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு. ஆத்திச்சூடியிலேயே மறைபொருளாக உயரிய அறத்தை கூறும் கருத்துக்கள் உண்டு. ஔவையாரின் விநாயகர் அகவல் உயரிய யோகநிலையைக்கூறும் ஞானநூல். ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர், கம்பர் என அனைவரது கவி புலமையும் வென்று அக்காலத்தில் வெற்றிக்கொடி நாட்டிய ஔவையார் பெண்ணுலகம் போற்ற வேண்டிய மாபெரும் தமிழ் ஞானக்கவி. திருவள்ளுவரின் திருக்குறளைத் தமிழ்ச் சங்கத்தில் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஔவையாரே மிகவும் போராடி சங்கப் பலகையில் அதை ஏற்றி, அனைவரையும் வெற்றிக் கொண்டு, திருக்குறளை அரங்கேற்றம் செய்ய திருவள்ளுவருக்கு உதவினார். எனவே திருவள்ளுவருக்கு அனைத்து விதத்திலும் ஞானகுருவாக விளங்கி வழிகாட்டி, திருக்குறள் வெளி வருவதற்கு உதவியதே நம் தமிழ் ஞானக் கவி ஔவையார் தான். தமிழ் இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய மிகப் பெரிய மேதை ஔவையார். ஆனால் அவரை வெறும் "கூழுக்குப் பாடி" என்ற நிலையில் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம் என்பது மிகவும் துயரமானது. திருவள்ளுவரும், ஔவையாரும் இணைந்தே இரட்டை குறள்களாக திருக்குறளையும், ஔவைக்குறளையும் பாடினர்! என்றால் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற இந்து மதத்தின் அடிப்படை தத்துவங்களை இவர்கள் பாடினர் என்றால்; திருக்குறள் ஓர் இந்து சமய நூல் என்று நிலைபெற்றுவிடும்; அது நடக்கக் கூடாது! என்பதற்காக ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிட்டே ஔவைக் குறளை மறைத்திருக்கலாம். அதன் பின்வந்த ஆங்கிலேயர்களின் கைப்பாவையாக அந்நிய மதத்துக்கு வெண்சாமரம் வீசியவர்களும் திட்டமிட்டே ஔவைக்குறளை ஒதுக்கி, மறைத்து விட்டனர்! என்பதே நிதர்சனம்
ஔவைக்குறளில் "வீட்டு நெறிப்பால்", "திருவருட்பால்", "தன்பால்" _ என்ற மூன்று பிரிவுகளின் கீழ் பத்து, பத்து அதிகாரங்களும், "தன் பால்" _ என்பதில் பதினொரு அதிகாரங்களுமாக மொத்தம் 31 அதிகாரங்களும், ஒவ்வொரு அதிகாரத்திற்கு. பத்து பாடல்களுமாக ஔவைக்குறளில் மொத்தம்_ 310 பாடல்கள் உள்ளன. உயரிய வீடுபேற்றை அளிக்கும் தத்துவங்களை அதில் அவர் கூறியிருக்கிறார். ஔவைக்குறள் என ஓர் "தமிழ்ஞான இலக்கியம்' இருப்பது, பல தமிழறிஞர்களே அறியாத ஒன்று என்பதும் உண்மை. ஒரு சிலர் அதைப்பற்றி அறிந்திருக்கின்றனர், அதற்கு உரையும் எழுதியிருக்கின்றனர். ஞான மார்க்கத்தில் ஈடுபாடு உடையவர்களே ஔவைக்குறளைப் பற்றி சிந்திக்கின்றனர், அதை வெளிப்படுத்த முயலுகின்றனர் என்பதும் உண்மை. ஆனால் ஔவைக்குறளும், திருக்குறளும் இணைந்து இரட்டை குறள்கள் என்ற அளவில் புகழ் பெற்றிருக்க வேண்டியது! என்பதை எடுத்துக் கூறுவதற்கு உண்மையில் யாருக்கும் இதுவரையிலும் தைரியம் இல்லை! என்பதும் உண்மை. ஔவையார் பாடிய விநாயகர் அகவலும், ஔவைக்குறளுமே ஔவையார்_ஒரு_சிவசித்தர் என்பதை நமக்குத் தெளிவுப்படுத்தும். (இனி ஔவைக்குறளின் விளக்கங்கள் தொடர்ந்து வரும்)
ஔவைக்கு அருளிய விநாயகரே போற்றி! போற்றி! போற்றி.
என்றென்றும் அனைவரும் போற்ற வேண்டிய நம் தமிழ் ஞானக்கவி ஔவையாரே போற்றி! போற்றி! போற்றி.